தோழர் சின்னயா பிள்ளை காங்கிரசிலிருந்து ஏன் விலகினார்?

– ஒரு நிருபர்

 

தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசின் கட்டுப்பாட்டுக்கு விரோதமாய் காங்கிரசு அல்லாதவர்களுக்கு ஓட்டுப்பிரசாரம் செய்ததால் தனக்கு காங்கிரசில் இருக்க பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிவிட்டார்.

ஆச்சாரியார் தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாருக்கு ஒரு ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்தார். காங்கிரசுக்கு மாறாக வேறு பல அபேட்சகர்கள் நிற்கும் போது காங்கிரஸ் ஓட்டு வேறு அபேட்சகரை பலப்படுத்தினால் காங்கிரஸ் அபேட்சகர் பலவீனமடைய முடியாதா என்று கேட்டார். ஒவ்வொருவருக்கு மேல் சபைக்கு மூன்று ஓட்டுகள் இருந்தாலும் அந்த மூன்றையும் காங்கிரசு அபேட்சகரில் யார் பலவீனமானவர்களோ அவருக்கு ஒரு ஓட்டு அதிகமாய் போடும்படி செய்யாமல் அதை சாஸ்திரியாருக்கு போடும்படி சொன்னால் வேறு அபேட்சகரான தோழர் சாமியப்ப முதலியார் அவர்கள் மூன்று ஓட்டுகளும் தனக்கே போடும்படி சிலரைப் பிடித்து சரி செய்து கொண்டால் தனது சொந்த ஓட்டுக்களுடன் காங்கிரஸ் ஓட்டும் சேர்ந்து சாஸ்திரியார் வெற்றி பெறுவதுதான் நிச்சயமாகுமே தவிர மற்ற காங்கிரஸ் அபேட்சகரில் ஒருவர் தோல்வி அடைந்துதான் தீரவேண்டும். இது ஆச்சாரியாருக்கு தெரியாது என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்டார். இந்நிலையில் தஞ்சை ஜில்லா குற்றாலத்தில் தோழர் ஆச்சாரியார் பேசும்போது ஒரு காங்கிரஸ் தொண்டர் ஆச்சாரியாரை இதைப் பற்றி கேள்விகேட்டார். அதற்கு ஆச்சாரியார் பதில் சொல்லாமல் தோழர் சின்னையா பிள்ளை பதில் சொல்லுவார் என்று சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டார். தோழர் சின்னையா பிள்ளை அவர்கள் எழுந்து மொண்டிக் காலுக்கு தப்பை கட்டுவது போல் ஏதோ சமாதானம் சொன்னார். இது பொதுஜனங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் மனம் நொந்த தோழர் சின்னையா பிள்ளை அவர்கள் உடனே தனது காங்கிரஸ் மெம்பர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு தோழர் முத்தையா முதலியாருக்கு அனுகூலமாக வேலைசெய்கிறார்.

குடி அரசு – கட்டுரை – 14.02.1937

You may also like...