காந்தியார் தலைமை ஏலத்துக்கு வந்து விட்டது அபேதவாதிகள் அதிருப்தி

 

உலகப் பெரியாரான காந்தியாரின் தலைமைப்பதவி ஏலங்கூற வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. நந்தியாலில் நடைபெற்ற ஆந்திர மாகாண மகாநாட்டு நடவடிக்கைகளைப் பார்ப்பவர்களுக்கு ஆந்திர தேசத்திலே காந்தியின் மதிப்புக் குறைந்து வரும் உண்மை புலனாகும்.

காந்தியின் தலைமையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாகச் சொல்லும் காரணம் மிகவும் விநோதமாக இருக்கிறது.

காங்கரஸ் மிதவாதிகளுக்கும் அமிதவாதிகளுக்கும் பிளவை உண்டுபண்ண எதிரிகள் முயற்சி செய்கிறார்களாம். எதிரிகள் முயற்சி பலிக்கக்கூடாதாம். அதற்காக யாராவது ஒரு தலைவரின் கீழ் நின்றுகொண்டு ஒற்றுமையாக உழைக்க வேண்டுமாம். காந்திதான் இந்தியாவின் ஏகபிரதிநிதியாம்; இந்திய அபிலாøைகளின் பிரதி புருஷனாம். ஆகவே அவரைத் தலைவராகக்கொண்டு தீர வேண்டுமாம்.

இவ்வாறு கூறுவோரின் உட்கருத்தென்ன? எதிரிகளை ஏய்ப்பதற்காக காந்தியாரை இந்தியர்கள் தலைவராக ஒப்புக்கொண்டு தீர வேண்டுமென்பது தான் கருத்து. உலகப் பழிப்புக்கு பயந்து, விபசாரிகளான மனைவிமாரைப் பல கணவன்மார்கள் பத்தினிகளாகப் பாவிப்பதற்கும் இந்தக் கருத்துக்கும் எத்தகைய வித்தியாசமுமில்லை. நந்தியால் மகாநாட்டில் காந்தியை எதிர்த்துப் பேசியோர் வார்த்தைகளில் சிலவற்றை மாதிரிக்காக கீழே தருகின்றோம்.

ஸி. ஜகந்நாதன்

“லார்டு வில்லிங்டனைப் பேட்டி காண காந்தி விரும்பியபோது “நான் முழங்காற்படியிட்டுமன்றாடுகிறேன். எனக்கு பேட்டி கொடும்” என்று கெஞ்சினார். ஆனால் பிரிட்டிஷார் மசியவில்லை. மிதவாதிகளான காங்கரஸ்காரர் போக்கும் காந்தியாரின் விட்டுக் கொடுப்பும் காங்கரஸ் லôயத்தையே கீழ் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது.”

ஆஞ்சநேயலு

“காந்தியைத் தலைமைப்பதவியிலிருந்து நீக்க அபேதவாதிகள் விரும்பவில்லை. அபேதவாதிகளுக்கு காந்தியிடம் நம்பிக்கை இல்லாமலு மில்லை. அவ்வாறு கூறுவது தப்பாகும். சமீபத்தில் காந்தியார் வெளியிட்ட அபிப்பிராயங்களினால் காங்கரஸ் நிபந்தனைத் தீர்மானம் கரைந்துபோய் விட்டது. இதை பட்டாபியே ஒப்புக்கொண்டிருக்கிறார். பெஸ்ய்பூர் தீர்மானம் மாற்றமடையாதிருக்கும்வரை காங்கரசுக்கு ஜலுகை காட்ட முடியாதென்று லார்டு ஜெட்லண்டே கூறியிருக்கிறார். ஆகவே டெல்லித் தீர்மானத்தை முறுகப்பிடித்துக்கொண்டிருப்பதே மேல்”

வி.வி. சிவய்யா

“காந்திக்கு காங்கரசிலே சர்வாதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் “நான் ஒரு நாலணா மெம்பர் கூட இல்லை” என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அவர் ஒரு காங்கரஸ் மெம்பராக இல்லாதிருந்தும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறார். மந்திரி பதவிவேட்டைக்காரர்கள் காந்தியின் பேரால் வியாபாரம் செய்யப் பார்க்கிறார்கள்.”

அன்னபூர்ணய்யா

“காந்தி எப்பொழுதும் பணிந்துகொடுத்துக்கொண்டே இருக்கிறார். அவர் ஒருபொழுதும் வெற்றியடையவில்லை (இல்லை இல்லை என்ற கூச்சல்.) நான் இந்தக் கூச்சலால் பயப்படப்போவதில்லை. நான் சொன்னதையே திருப்பிச் சொல்லுகிறேன். பிரியும் உரிமையுடன் குடியேற்ற நாட்டந்தஸ்து இந்தியாவுக்குக் கிடைத்தால் போதுமென்று அவர் போலக்குக்கு எழுதவில்லையா? எதிரியை அன்பால் வெல்லும் காந்தி உபதேசத்தை நான் ஆதரிக்கவில்லை. நாங்கள் காங்கரசுக்குக் கட்டுப்பட்டு நடப்போம். காந்தி காங்கரஸை விட பெரியவரல்ல.”

கடைசியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வோட்டுக்கு விடப்பட்ட போது 40 பேர் ஆதரவாகவும் 90 பேர் எதிராகவும் வோட்டுக் கொடுத்ததினால் தோல்வியடைந்ததாம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 27.06.1937

You may also like...