காங்கிரஸ் சாதித்தது

– வம்பளப்போன்

காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போன பிறகு எவ்வளவு வரியைக் குறைத்தார்கள், என்ன காரியம் சாதித்தார்கள் என்பதை ஓட்டர்கள் அறிந்திருந்தால் அல்லது ஓட்டர்களுக்கு அறியும் சக்தி இருந்திருந்தால் அல்லது ஓட்டர்கள் அறியும்படி யாராவது செய்திருந்தால் சமீப தேர்தலில் பெரும்பான்மை ஓட்டர்கள் இம்மாதிரி தேசத்துக்குக் கேடு சூழத்தக்கதும் முட்டாள் தனமானதுமான காரியத்தைச் செய்திருக்கமாட்டார்கள். எப்படியோ மோசம் போய் விட்டார்கள். அயோக்கியர்களாலும், காலிகளாலும், கூலிகளாலும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதில் பயனில்லை.

காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போனபின்பு வரிகள் மொத்தத்தில் பல துறைகளில் அதிகப்படுத்தப்பட்டதே தவிர காங்கிரஸ்காரர்களால் குறைவு படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு ஆதரவு இல்லை. சென்ற முந்தின வருஷங்களுக்கு அரிசி முதலிய உணவுப் பொருள்களுக்கு வரி போட்டது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க இப்போதும் தபால் இலாக்காவில் சில அய்ட்டங்களில் வரிகள் ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் அதிகப்படுத்தப்பட்டு விட்டது.

அதாவது பர்மாவுக்கு – ரங்கூன் முதலிய ஊர்களுக்கு முன் கார்டுக்கு முக்காலணாவும் கவருக்கு ஒரு அணாவும் தந்திக்கு ஒன்பது அணாவும் இருந்து வந்தது. இப்போது காங்கிரஸ்காரர்கள் போனபிறகு அந்த ஊர்களுக்கு ஏப்ரல் முதல் தேதி முதல் கார்டுக்கு 2 அணா, கவருக்கு 2லீ அணா, தந்திக்கு ரூ-1-2-0 என்பதாக ஏற்பட்டு விட்டது. பார்சல்களுக்கும் 2 அணாவாக இருந்தது. இப்போது எல்லா ஊர்களுக்குமே 4 அணாவாக உயர்த்தப்பட்டு விட்டது. போன வருஷம் அரிசிக்கு வரி போட்டது தவிர இவ்வருஷம் சர்க்கரைக்கு அந்தர் ஒன்றுக்கு வரி 1-5-0 ஆக இருந்ததை இப்போது அந்தர் 1க்கு 2 ரூ. ஆக செய்யப்பட்டு விட்டார்கள். இறக்குமதி ஆகும் வெள்ளிக்கு 2லீ ரூ. தூக்கத்துக்கு 2 அணாவாக இருந்ததை 3 அணாவாக செய்யப்பட்டு விட்டது.

போன வருஷத்தைவிட இந்த வருஷம் வரியில் மொத்தம் ஒன்றரைக்கோடி ரூபாய்க்கு மேல் 2 கோடிவரை உயர்த்தப்பட்டு விட்டது. ஆகவே இனி மாகாண சட்டசபையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்கப்போகிறீர்கள். உங்களுக்கு நன்மை 0 தான்.

குடி அரசு – கட்டுரை – 14.03.1937

You may also like...