“குருகுலம்”
மறுபடியும் பார்ப்பன ஆதிக்கமே
திருநெல்வேலி ஜில்லா சேரமாதேவியில், காலஞ்சென்ற வி.வி.எஸ். அய்யரால் நடத்தப்பட்டு வந்த பரத்துவாச ஆச்சிரமம் என்றும் குருகுலம் என்றும் பெயர் வழங்கப்பட்டுவந்த ஒரு ஸ்தாபனத்தைப்பற்றிய கதைகள் பூராவும் தென் இந்திய மக்களுக்கு ஞாபகமிருக்குமென்றே கருதுகிறோம்.
இந்தக் குருகுலக் கதைதான் தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, பி. வரதராஜúலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் பார்ப்பனர்களுடைய அதிருப்திக்காளாகவும் காங்கிரசில் இருந்து விலகவும் நேர்ந்த காரணமாகும்.
காங்கிரஸ் உதவி
இந்த குருகுலமானது “தேசபக்தர்களையும் தேசிய வீரர்களையும் உற்பத்தி செய்வதற்கு” ஆரம்பிக்கப்படுகிறது என்று தோழர் வி.வி.எஸ். அய்யர் ஆரம்பித்தபோது சொன்ன காரணமாகும். அதற்கு ஆக மாகாண காங்கிரசை உதவித் தொகை கேட்டபோது மாகாண காங்கிரஸ் கமிட்டியானது ஒரே அடியாய் பத்து ஆயிர ரூபாய் சாங்கிஷன் செய்து விட்டது. ஏனெனில் அந்தக் காலத்தில் திலகர் நிதிப்பணம் ஓட்டாஞ் சல்லிபோல் குவிந்து கிடந்தது. யாராவது ஒரு பார்ப்பனர் விண்ணப்பம் போடவேண்டியதுதான் தாமதம். உடனே சாங்கிஷன் ஆகிவிடும். அந்தக்காலத்தில் தோழர்கள் ஈ.வெ.ராமசாமியும் ஒரு கே.எஸ்.சுப்பிரமணிய அய்யரும் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு காரியதரிசிகளாய் இருந்தார்கள். இப்படி இருவர் கூட்டுக் காரியதரிசிகளாய் இருந்ததில் இவர்களுக்குள் காங்கிரஸ் வேலை பிரித்துக் கொள்ளப்பட்டது. அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமிக்கு பிரசாரமும் செக்கில் கையெழுத்துபோடும் வேலையும் தோழர் சுப்பிரமணிய அய்யருக்கு மற்ற கடிதப்போக்குவரத்தும் கடிதங்களுக்கு ஆதாரங்களுக்கும் கையெழுத்துப்போடும் வேலையுமாக பிரித்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வ.வெ.சு. அய்யர் குருகுலத்துக்கு காங்கிரசானது ரூபாய் பத்து ஆயிரத்துக்கு தோழர் ஈ.வெ.ராமசாமியை செக்கு கேட்டபோது தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ரூபாய் கொடுப்பதில் குருகுல விதிகள் அடங்கிய ஆதாரமும் அந்தப்படி நடத்துவதாக ஒப்புக் கொண்ட ஆதாரமும் கொடுத்துவிட்டு செக்கு வாங்கிக்கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு தோழர் வ.வே.சு. அய்யர் அவர்கள் சம்மதித்து போனவர் ராமசாமிக்கும் தெரியாமல் கூட்டுக் காரியதரிசியிடம் 5000 ரூபாய் செக்கு வாங்கிக்கொண்டு போய்விட்டார். இந்த விபரம் 4 நாள் பொறுத்து தோழர் ஈ.வெ.ராவுக்கு தெரிய வந்த உடன் ஆபீசில் கூட்டுக் காரியதரிசிகளுக்குள் அபிப்பிராய பேதம் வந்து ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தை இல்லாத அளவுக்கு மனஸ்தாபம் வந்துவிட்டது. (இன்னமும் இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. ப-ர்)
மறு உதவி மறுத்த காரணம்
ஆகவே மறு 5000 ரூபாயை ஈ.வெ.ராவைக் கேட்க முகமில்லாமல் போனதாலும் நிர்வாகக் கமிட்டியில் நியாயம் கிடைக்காதென்று கருதியதாலும் தோழர் வ.வெ.சு. அய்யர் ஒரு மாகாணக் கமிட்டி கூட்டத்தில் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் வீட்டில் “முன் தீர்மானிக்கப்பட்ட 10000 ரூபாயில் 5000 ரூ. கொடுத்தது போக பாக்கி 5000 ரூ. இன்னமும் கொடுக்கப்படவில்லை” என்று புகார் கூறிய உடனே கொடுக்கும்படி உத்திரவு போடவேண்டுமாய் ஒரு தீர்மானத்தை ஒரு பார்ப்பனரைக் கொண்டு பிரேரேபணை செய்யும்படி செய்தார். அது சமயம் தோழர் ராமசாமி குருகுல நிபந்தனைகளும் அந்தப்படி நடத்திவருவதாய் உத்திரவாதமும் வந்தால் ரூபாய் கொடுக்கப்படும் என்றும் முன் வாங்கிக்கொண்ட 5000 ரூபாயே தன்தகவல் இல்லாமல் முறைக்கு மாறாகக் கொடுக்கப்பட்டு விட்டதென்றும் எடுத்துக் கூறினார். அது சமயம் கூட்டத்தில் சிறிது சமாதானம் காணப்பட்டதுடன் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் மீதும் சிலருக்கு அதிருப்தி இருப்பதாய்க் காணப்பட்டது. ஏனெனில் தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களுக்கு இப்போது அவ்வளவு செல்வாக்கு இருந்ததும் டாக்டர் ராஜன், தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் அவரிடத்தில் அவ்வளவு மரியாதை வைத்திருந்ததும் காரணமாகும்.
காங்கிரசில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி ஆரம்பம்
ஆனபோதிலும் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “நிபந்தனை இல்லாமல் முன்கொடுத்ததே தவறு” என்றும் “இப்போது மறுபடியும் கொடுக்க முடியாது” என்றும் “வேண்டுமானால் முன்போலவே வேறு ஒரு காரியதரிசி கையெழுத்துக்கொண்ட செக்கு வாங்கிக் கொள்வதில் ஆக்ஷேபணை இல்லை” யென்றும் கோபமாகச் சொல்லி உட்கார்ந்தவுடன் அந்த கூட்டத்தில் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வாசனை அப்போது தான் முதல் முதலாய் கிளம்ப ஆரம்பித்து விட்டது.
இதைப்பார்த்துக்கொண்டு இருந்த தோழர் டாக்டர் வரதராஜúலு அவர்கள் “அய்யர்வாள் குருகுலத்தில் சாப்பாட்டில் ஜாதிபேதம் பாராட்டுவதாக எனக்குப் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நான் அவற்றை “தமிழ்நாடு” (வாரப் பதிப்பு)வில் பிரசுரிக்கவில்லை” என்று சொன்னார்.
மற்றொருவர் (அதாவது குருகுலத்துக்கு தன் பிள்ளையை படிப்பிக்க அனுப்பியிருப்பவர்) எழுந்து “சாப்பாட்டில் மாத்திரம் ஜாதி வித்தியாசம் இல்லை படிப்பு சொல்லிக் கொடுப்பதிலும் காட்டப்படுகின்றது” என்றார். இவர் இப்போதும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்தில் இருக்கிறார்.
மற்றொருவர் குருகுலத்தில் வாத்தியாராய் இருப்பவர். அவர் தோழர் ஈ.வெ.ராவின் சமீபத்தில் வந்து ரகசியத்தில் கடவுள் பிரார்த்தனையில் கூட ஜாதி வித்தியாசம் காட்டப்படுகிறது என்று சொன்னார். இப்புகார்களின் விளக்கங்களாவன:-
சாப்பிட்டில் ஜாதி வித்தியாசமென்பது சாப்பிடுவதில் பார்ப்பனர்களுக்கு வேறு இடமும் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடமும் பிரிக்கப்பட்டிருந்ததாகும்.
படிப்பில் ஜாதி வித்தியாசமென்பது பார்ப்பனர்களுக்கு சமஸ்கிருதத்திலும் சில பாடங்களும் பார்ப்பனரல்லாதாருக்கு தமிழில் மாத்திரம் பாடமும் பாட புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.
கடவுள் பிரார்த்தனையில் ஜாதி வித்தியாசமென்றது,
பிள்ளைகள் காலை மாலை பிரார்த்தனைகள் செய்யும்போது பார்ப்பனப் பிள்ளைகள் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனைப் பாட்டுகளும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தமிழில் தேவாரம் முதலிய பாட்டுக்களும் சொல்லிக்கொண்டு பிரார்த்தனை செய்யச் செய்வதாகும்.
இவற்றை வெளிப்படுத்தியவுடன் அய்யர் அவர்களுக்கு கோபம் வந்து மீசையும் தாடியும் படபடவென நடுங்க “இவற்றையெல்லாம் ஒரு வித்தியாசமெனச் சொல்வது துவேஷங்களை கற்பிக்கும்” என்றும் “இதனால் தான் – இந்த தொல்லையால் தான் நான் சாதம் சாப்பிடாமல் நிலக்கடலைப் பருப்பும் தேங்காயும் வெல்லமும் சாப்பிடுவ”தாகவும் “குருகுலம் வைத்துள்ள இடம் மிகவும் வைதீகர்கள் இடமானதால் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று” என்றும் கோபத்தோடு சமாதானம் சொன்னார். இந்த சமாதானத்தால் இந்தப் புகார்கள் உண்மை என்று விளங்கிவிட்டவுடன் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் டாக்டர் சாஸ்திரியார் ஆகியவர்கள் அப்படியானால் அந்த இடத்தை ஏன் தெரிந்தெடுத்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள். அவ்வளவு தான் தாமதம். அங்குள்ள மற்றவர்கள் – பார்ப்பனரல்லாதார்கள் அய்யர் அவர்களை சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். வேற்றுமை உணர்ச்சி பலப்பட்டவுடன் அந்தப் பிரச்சினை அதுசமயம் மெல்ல நழுவவிடப்பட்டு விட்டது. பாக்கி 5000 ரூ கொடுக்கப்படவில்லை.
பின் விளைவு
அடுத்தாற்போல் திருச்சியிலேயே கூட்டப்பட்ட ஒரு மாகாண வருஷாந்தர கூட்டத்தில் நிர்வாகசபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப் படும்போது தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் காரியதரிசியாக இருந்து செய்த வேலையையும் கொஞ்ச நாள் இடைக்காலத் தலைவராக இருந்து செய்த வேலையையும் பாராட்டி தீர்மானம் செய்து பதிந்துவிட்டு புது வருஷத்துக்கு ஈ.வெ.ரா. அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தேர்தல் நடந்த உடன் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீது தோழர் வ.வெ.சு. அய்யர் அவர்கள் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். சென்னை முஸ்லீம் தோழர் ஒருவர் (தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் பாதுகாப்பில் இருந்தவர்) அதை ஆதரித்தார்.
திரு.வி.க. முதலியார்
உடனே தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கு கோபம் வந்து எழுந்து மிக்க படபடப்போடு அய்யர் அவர்களிடத்தில் தனக்கு அதிக மரியாதை உண்டென்றும் ஆனால் இச்செய்கையை வெறுப்பதாகவும் கூறி, ஒரு உபந்யாசம் செய்தார். அதாவது, பாழும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அய்யர் கொண்டு வந்து இன்று புகுத்தி விட்டார் என்றும், காங்கிரஸ் ஏற்பட்டு இத்தனை காலத்துக்கு இன்றுதான் ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவரானார் என்றும் அவரது நடத்தையைப் புகழ்ந்து பாராட்டி தீர்மானம் செய்து 10 நிமிஷ காலத்துக்குள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதற்கு அன்பர் ராமசாமியார் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதுதான் காரணமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்றும் அவர் போன்றவர் கதியே இப்படி ஆனால் இனி, தம் போன்றவர் கதி என்ன ஆகுமோ என்று பயப்பட வேண்டி இருக்கிறதென்றும் கூறி கூட்டத்திற்கு எச்சரிக்கை செய்தார். பிறகு அத் தீர்மானம் 100-க்கு எதிராக 10 என்கின்ற அளவில் தோல்வி அடைந்தது. அந்த 10 வீதமும் தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் சிப்பந்திகளேயாகும்.
அய்யரின் பணவசூல்
இது இப்படியே ஒரு புறம் புகைந்து கொண்டு இருக்க, ஆச்சிரமத்துக்கும் கெட்டபேர் வளர்ந்து வருகிற நிலையில் இருக்க, அய்யர் அவர்கள் சென்னை மாகாணத்தைவிட்டு வெளி இடங்களில் பணம் வசூலிக்கச் சென்றார். அதுசமயம் பத்திரிகைகளும் அய்யர் அவர்களை வானமளாவப் புகழ்ந்து பேசி வசூலுக்கு பெருங்கொடை கொடுக்க சிபார்சு செய்தன. தினம்தோறும் 1000, 2000 ரூபாய்கள் வசூலாவதாக பத்திரிகைகளில் சேதி வந்தன.
குறிப்பாக “தமிழ் நாடு” (வாரப்பதிப்பு) பத்திரிகையும் “நவ சக்தி” பத்திரிகையும் அய்யர்வாளை அதிமாகப் புகழ்ந்து பொது ஜனங்களை பணம் கொடுக்கும்படி சிபார்சு செய்து எழுதி வந்தன. இந்த சமயத்தில் தோழர் ஈ.வெ. ராமசாமி þ இரு பத்திரிகைக்கும் இறுதிக் கடிதம் எழுதி வசூலுக்கு சிபார்சு செய்யாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டும் பயன் எற்படாமல் போனதால் தோழர் ஈ.வெ.ரா. இரண்டொரு இடங்களிலும் பேசும்போது டாக்டர் நாயுடு அவர்களைக் கண்டித்து பேசியதில் டாக்டர் நாயுடு அவர்கள் உடனே தோழர் தண்டபாணி பிள்ளை அவர்களை ஈ.வெ.ராவிடம் அனுப்பி காரணம் கேட்டு சமதானம் செய்துவரச் சொன்னார்.
டாக்டர் நாயுடு, திரு.வி.க., ஈ.வெ.ரா. ஒப்பந்தம்
அந்த சமயம் தோழர் ஈ.வெ.ராவும் தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்களும் மாயவரம் தோழர் சின்னையா பிள்ளை அவர்கள் கேசுக்காகவோ அல்லது அவர் விடுதலைக்கு ஆகவோ மாயவரம் சென்று இருந்த போது தோழர் தண்டபாணி அவர்கள் அங்கு வந்து சேர்ந்து “இம்மாதிரி சில பொதுக் கூட்டங்களிலும் சில பேச்சுக்களிலும் டாக்டர் நாயுடு அவர்களை கண்டித்துப் பேசியது நியாயமா?” என்று கேட்டார். அதற்கு தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் “தோழர் வ.வே.சு. அய்யர் அவர்கள் குருகுலம் என்கின்ற பெயரில் ஒரு ஸ்தாபனம் வைத்து காங்கிரசிடமும் பார்ப்பனரல்லாத பெருமக்களிடமும் பெருவாரியாக பணம் வசூலித்து வருணாச்சிரம போதனை செய்து வருவதை நாயுடு அவர்கள் தெரிந்து இருந்தும் எச்சரிக்கை செய்யப்பட்டும் அய்யரை ஆதரிப்பது நியாயமா?” என்று கேட்டார். அதற்கு தோழர் தண்டபாணி அவர்கள் “முதலியார்வாள் ஆதரிப்பதால் நாயுடுவாளும் ஆதரிக்கிறார்” என்றார். உடனே அருகிலிருந்த தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் “டாக்டர் நாயுடு ஆதரிப்பதால்தான் நான் ஆதரித்தேன்” என்று கூறி திருச்சியில் ஈ.வெ.ரா. பேரில் அய்யரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தான் நடந்துகொண்டதை ஞாபகப்படுத்தினார்.
உடனே அங்கு ஒரு ஒப்பந்தம் நடந்தது. அதாவது இனி யாரும் குருகுல வசூலை ஆதரிக்கக்கூடாது என்றும் வசூல் செய்வதை கண்டித்து எழுத வேண்டும் என்றும் ஒப்பந்தம் நடந்தது.
குருகுலத்துக்கு பணம் கொடுப்பது தேசீய பாவம்
அந்தப்படியே வஞ்சனையில்லாமல் டாக்டர் நாயுடு அவர்கள் உடனே குருகுல விஷயமாய் தனக்கு வந்திருந்த இரண்டு மூன்று இந்திய கடிதங்களையும் இரண்டொரு மலேயா நாட்டு கடிதங்களையும் குறிப்பிட்டு “தமிழ்நாடு” (வாரப்பதிப்பு) பத்திரிகையில் ஒரு தலையங்கம் எழுதி “குருகுலத்திற்கு பணம் உதவுவது தேசீய பாவம்” என்று எழுதிவிட்டார். அதை பார்த்த பின் தோழர் முதலியார் அவர்கள் “நவசக்தி”யில் வழக்கம்போல் அதாவது முதல் இரண்டு எழுத்தை இரண்டுதரம் சேர்த்துச்சொல்லுவது போல் ஒரு தலையங்கம் எழுதினார்.
ஆனால் அதன் கருத்து அய்யரின் குருகுலத்தில் ஜாதி வித்தியாசம் இருக்கிறது என்றும் இவ்வித்தியாசம் ஒழிக்கப்படாமல் அய்யர்வாள் பணம் வசூல் செய்வது ஆதரிக்கத்தக்கதல்லவென்றும் விளங்கக் கூடியதாகும். இவ்வளவுதான் நடந்தது. உடனே “தமிழ்நாடு” ஆபீசுக்கும் “நவசக்தி” ஆபீசுக்கும் பார்ப்பனக் கூட்டம் போவதும் வருவதும் மிரட்டுவதும் கெஞ்சுவதுமாய் இருந்தது. தோழர் திரு.வி.க. முதலியார்வாள் பயந்துவிட்டார். நல்லதுமில்லாமல் கெட்டதுமில்லாமல் நாயுடு அவர்களைப் போர் முகத்தில் தள்ளிவிட்டு ஜாடையாய் ஒதுங்கிக்கொண்டார்.
நாயுடு வெற்றி
டாக்டர் நாயுடுவாளுடைய இத்தலையங்கத்தைப் பார்த்தபின் அவருக்கு அனேக பாராட்டு கடிதங்கள் வந்து குவிந்த வண்ணமாய் இருந்தன. தோழர்கள் தண்டபாணி பிள்ளை அவர்களும் பவானி சிங்கு அவர்களும் நன்றாய் சாவி கொடுத்தார்கள். டாக்டர் நாயுடுவும் தமிழ்நாடு முழுவதும் சரியானபடி இரவு பகலாய் அலைந்து திரிந்து ஒரு பெரும் புரட்சியை உண்டுபண்ணினார். இதனால் குருகுலத்துக்கு என்று மலாய் நாட்டில் வசூலித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30000 ரூபாய் வரையில் அய்யருக்குக் கொடுபடாமல் நின்று விட்டது.
நாயுடு – “நாயக்கர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
“டாக்டர் நாயுடு அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராயும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயும் இருந்து கொண்டு இம்மாதிரி கிளர்ச்சி செய்வது தவறு” என்று பார்ப்பனர்கள் இவர்கள் மீது கமிட்டியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சித்தார்கள். முதலில் நாயுடுகார் மீது கொண்டு வந்தார்கள். டாக்டர் ராஜன் அவர்களும் தோழர் சி.ஆர். ஆச்சாரியாரும் அத்தீர்மானத்தின் மீது பேசினார்கள். அது தோழர் ஈ.வெ.ராவால் எதிர்க்கப்பட்டு தோல்வி அடைந்தது. அதன் பின் டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருப்பதாய் ஒரு தீர்மானம் அக்கூட்டத்திலேயே ஈ.வெ.ராவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இவ்விரு தீர்மானங்களிலும் பெரிதும் பார்ப்பனர் ஒருபுறமும் பார்ப்பனரல்லாதார் ஒருபுறமுமாக ஓட்டுக்கொடுத்தார்கள்.
டாக்டர் ராஜன் ராஜகோபாலாச்சாரி ராஜிநாமா
மற்றும் குருகுல நடத்தையைக் கண்டித்தும் தீண்டாமை ஒழிய வேண்டியதுடன் ஜாதி பேதமும் ஒழிய வேண்டுமென்றும் குருகுலத்தில் காட்டப்படும் ஜாதி வித்தியாசத்தை உடனே நிறுத்திவிட வேண்டுமென்று அய்யரைக் கேட்டுக்கொள்வதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிமிஷத்திலேயே தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், டாக்டர் சாஸ்திரியார், கே. சந்தானம், என்.எஸ். வரதாச்சாரியார் முதலிய 10 பார்ப்பனர்கள் ராஜிநாமா கொடுத்து விட்டார்கள்.
அதன் பின் அய்யர் அவர்கள் எதிர்பாராத விதமாக கால் தவறி பாபனாசம் மடுவில் வீழ்ந்து தன் மகளுடன் இறந்துபோனார். பிறகு குருகுல விஷயமாய் பார்ப்பனரல்லாதார் கமிட்டி ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நியமித்து விசாரித்து குருகுலத்தைக் கைப்பற்ற ஏற்பாடு செய்தது. அது பலிக்கவில்லை. அக்கமிட்டியில், ஈ.வெ.ரா., டாக்டர் நாயுடு, எஸ். ராமநாதன், டாக்டர் ஆரியா, ராய சொக்கலிங்கம், சொ. முருகப்பா, வைசு. ஷண்முகம், தியாகராஜா முதலியவர்கள் வேலை செய்தார்கள். அக்கமிட்டி தோழர் தூத்துக்குடி மகாதேவையருடன் போர் நடத்தி காந்தியார் வரை இவ்விஷயம் போய் அவர்களும் வழவழ என்று சமாதானம் சொல்லிவிட்டார். அதாவது ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்று கேட்பதும் தீர்மானம் செய்வதும் குற்றமல்லவென்றும் அவரவர் இஷ்டமென்றும் பொருள்படும்படி சொல்லிவிட்டார்.
அன்று முதல் நாயுடுகார் மீது பார்ப்பனர்கள் பாடாகப் போர் தொடுத்து அவர் தலையில் கையை வைத்துவிட்டார்கள். தோழர் ஈ.வெ.ராவிடம் செல்ல முடியவில்லை. அவரும் காங்கிரசைவிட்டு வெளிப்படையாய் வெளியில் வந்துவிட்டார். டாக்டர் நாயுடு வெளிவர முடியாமல் தேசியம் பேசிக்கொண்டு அவர்களுக்குள்ளாக இருந்ததால் பார்ப்பனர்கள் சுலபத்தில் அவருக்கு தொல்லை கொடுக்க முடிந்தது. அவரை தேர்தலிலும் பலமாகத் தோற்கடித்தார்கள். அவரது பத்திரிக்கைகளையும் நிறுத்தும்படி செய்து விட்டார்கள். பாவம்! முதலியார் அவர்களோ டாக்டர் நாயுடு அவர்கள் நிலையை படிப்பினையாகக் கொண்டு வெகு ஜாக்கிரதையாகப் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்து வருகிறார்.
மறுபடியும் பார்ப்பன ஆட்சி
இந்த மாதிரி நிலையில் குருகுலம் நிறுத்தப்பட்டதோடு அதன் சொத்துக்கள் தோழர் காந்தியார்வசம் ஒப்புவிக்கப்பட்டு விட்டது. தோழர் காந்தியார் மறுபடியும் ஆச்சிரமத்தையும் சொத்துக்களையும் டாக்டர் ராஜன் என்கின்ற ஒரு பார்ப்பனர் ஆதிக்கத்திலேயே விட்டுவிட்டார். டாக்டர் ராஜன் அதை இப்பொழுது மற்றொரு சென்னை பார்ப்பனரின் சர்வாதிகாரத்தில் விட்டு இருக்கிறார். அதைப் பொறுக்கமாட்டாத ஒரு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் அதாவது தோழர் சாவடி கூத்தநயினார் பிள்ளை குருகுலத்தின் நன்மையை உத்தேசித்து குருகுலத்தின் பழைய கதைகளை ஞாபகமூட்டி இப்போதாவது பார்ப்பனரல்லாதார் இடமாவது அல்லது பார்ப்பனரல்லாதாரும் கலந்த கமிட்டி இடமாவது குருகுலத்தை ஒப்புவிக்க கூடாதா? இவ்வளவு கலகம் நடந்தும் இனியும் பார்ப்பனரிடம்தானா ஒப்புவிக்க வேண்டும்” என்று கேட்டு விட்டார். தோழர் திருநெல்வேலி கூத்தநயினார்பிள்ளை உண்மை காங்கிரஸ்வாதி. வயிற்றுப்பிழைப்புக்கோ பதவி மோகத்துக்கோ காங்கிரசுக்கு வந்தவர் அல்ல. தன் காலில் நிற்கக்கூடிய செளகரியம் உடையவர். அப்படியிருந்தும் அவரை இப்போது காங்கிரஸ் பார்ப்பனர்கள் உடனே வகுப்புவாதி என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதற்குச் சமாதானம் சொல்லித் தப்பித்துக் கொள்ள வேண்டிய நிலைமை தோழர் சாவடி கூத்தநயினார்பிள்ளைக்கு வந்துவிட்டது. அந்த சமாதானத்தில் அவர் சொல்லுவதாவது:-
குருகுலத்தின் பழய சரித்திரத்தை முன்னிட்டு இந்த ஆச்சிரமத்திற்கு ஒரு பார்ப்பனரல்லாதாரை நியமிப்பது நல்லது என்று பொதுவாகக் கருதப்படுகிறது என்று நான் கூறினேன்.” இதனால் நான் வகுப்புவாதி ஆய்விட்டேனா? என்று அழுகிறார்.
அது எப்படியோ போகட்டும். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் 100க்கு 97 பாகம் பார்ப்பனரல்லாதார் இடம் வசூலித்த பணத்தில் ஏற்படுத்தப்பட்ட குருகுலம் பார்ப்பனர் – அல்லாதார் என்கின்ற பேதத்தாலே தமிழ்நாட்டில் ஒரு பெருத்த புரட்சியை உண்டாக்கிவிட்டு அதனாலேயே அழிபட்ட ஒரு குருகுலத்தை மறுபடியும் புனருத்தாரணம் செய்ய முயற்சிக்கும்போது மறுபடியும் ஒரு பார்ப்பனரே சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவதென்றால் பார்ப்பனர்களின் தைரியம் எப்படிப்பட்டது என்பதை பொது ஜனங்கள் யோசித்துப்பார்க்க வேண்டுமென்று விரும்பியே பழய கதைகளுடன் இவ்விஷயத்தை வெளிப்படுத்துகிறோம். ஆகவே எப்படிப்பட்ட சுயமரியாதையும் வீரமும் உள்ள பார்ப்பனரல்லாதாரானாலும் வயிறு வளர்த்துக் கொள்ளவும் பதவி பெறவும் மாத்திரம்தான் காங்கிரசில் இருக்க முடியுமே ஒழிய கலப்படமில்லாத ரத்த ஓட்டமிருந்தால் அரை வினாடி கூட காங்கிரசில் இருக்க முடியாது என்பதை இச்சம்பவம் ருஜúப்பிக்கிறது.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.06.1937