ஆம்பூர் ஆதிதிராவிடர் மகாநாடு காங்கிரசால் உங்களுக்கு கதிமோட்சம் கிடையாது மதம் வேண்டுமானால் இஸ்லாத்தைத் தழுவுங்கள்
தலைவரவர்களே!
தோழர்களே!
இந்த ஜில்லாவில் முதல் முதலாகக் கூட்டப்பட்ட இந்த மகா நாட்டுக்கு அழைக்கப்பட்ட எனக்கு உங்களால் வாசித்துக் கொடுக்கப் பட்ட வரவேற்புப் பத்திரத்திற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த வரவேற்பு பத்திரத்தில் என்னை அதிகமாக புகழ்ந்து கூறியிருக்கிறீர்கள். மகாநாட்டைத் திறந்து வைத்த கனம் மந்திரியார் எம்.சி. ராஜா அவர்களும் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் வக்கீல் சாமிநாயுடு அவர்களும் மிகவும் புகழ்ந்து பேசி விட்டார்கள். உண்மையில் இப்புகழ்ச்சிகளுக்கு நான் அருகனல்ல என்பதை மனப்பூர்வமாகவே தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்பால் உள்ள அன்பே அவ்வளவு மெய்மறந்து கண்மூடித்தனமாக புகழச் செய்துவிட்டது. ஆனபோதிலும் அதற்கேற்றாப்போல் உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அற்புதமான காலம்
உண்மையிலேயே நாம் ஒரு அற்புதமான காலத்தில் இருக்கின்றோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் காதில் கேட்டிராததும் மனதில் நினைத்திராததுமான பல ஆச்சரியமான காரியங்கள் வெகு சுலபத்தில் நடப்பதை நேரில் பார்க்கும் பேறு நமக்கு கிடைத்திருக்கிறது.
மனுகாலத்திலோ “ராமன்”, “கிருஷ்ணன்”, “அரிச்சந்திரன்”, பாண்டியன் நாயக்கன் காலத்திலோ ஒரு “பறையர்” என்பவர் அரசியல் மந்திரியாக வந்துவிடமுடியுமா? அல்லது எந்த ஒரு தெய்வம் என்பதுதான் ஆகட்டும் நேரிலேயே வந்து நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவதாயிருந்தாலும் பறையன் புலையன் என்பவர்கள் கோவிலுக்குள் அதுவும் குரங்குப்பிடி வைதீகமும் வர்ணாச்சிரம பைத்தியமும் கொண்ட கேரள தேசத்தில் அதுவும் பார்ப்பானுக்குப் பிறந்தால் உயர் பதவி என்று ஆணும் பெண்ணும் எண்ணிக்கொண்டு “பறையனை” கண்ணில் கண்டாலும் அவன் நிழல் மேலே பட்டாலும் அவன் பேச்சு காதில் பட்டாலும் பாவம் என்று கருதும் மக்களையும் அரசியலையும் கொண்ட கேரள தேசத்தில் கோவிலுக்குள் “பறையன்” போகவேண்டும் என்றால் இது சாத்தியப்படக்கூடியது என்று யாராவது எதிர்பார்க்கக் கூடிய காரியமா என்று பாருங்கள். இந்த காரியம் நம் காலத்தில் தான் நடந்திருக்கிறது.
இதற்கு முன்னும் கோவிலுக்குள் பறையன் போனான் என்கின்ற புராணக்கதை இருந்தாலும் அந்தப் பறையன் கோவிலுக்குள் போனதாகத் தான் கதை-கற்பனைக் கதையானாலும் கூட கதை இருக்கிறதே தவிர திரும்பி வந்ததாக இல்லை.
ஆகவே அப்பேர்ப்பட்ட அதி அற்புதமான காலத்தில் நாம் இருக்கிறோம். இது யாரால் ஆகி இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலையில்லை. அந்தக் காரியங்கள் நம் கண் முன் முடிந்து விட்டது. ஆதலால் அந்த மகிழ்ச்சியை முன்னால் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஒரு கேள்வி
தோழர்களே!
ஆதிதிராவிடர் மகாநாடென்று ஒரு மகாநாடு அவசியமா? என்று பல தேச பக்தர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். அதாவது ஆதிதிராவிடர் என்று ஒரு மனித சமூகம் இருக்க வேண்டியது அவசியமா என்று கேட்கிறேன்.
ஆதிதிராவிட மகாநாடு வேண்டியதில்லை என்று சொல்லும் இந்த யோக்கியர்கள் “ஆதிதிராவிடர் என்ற ஒரு சமூகம் இருப்பதாக கதைகளில் கூட யாரும் குறிப்பிடக் கூடாது” என்று எங்காவது சட்டம் செய்தார்களா? எந்தக் கூட்டத்திலாவது தீர்மானம் கொண்டு வந்தார்களா? எந்த ஸ்தாபனத்திலாவது இதை கொள்கையாக புகுத்தினார்களா? என்று கேட்கின்றேன்.
அன்றியும் இப்படிக் கேட்கும் இந்த “தேசபக்தர்களே” பார்ப்பன மகாநாடு, ஆரியர் மகாநாடு, வர்ணாச்சிரமதர்ம மகாநாடு, பிராமண சம்மேளனம் என்றெல்லாம் கூட்டுகிறார்களா இல்லையா? மற்றும் இதுபோன்ற பல ஜாதி மத வகுப்பு மகாநாடுகள் நடப்பதில் கலந்து கொள்ளுகிறார்களா இல்லையா? அப்படியிருக்க ஆதி திராவிட மகாநாடு மாத்திரம் எப்படி அவசியமற்றதாக ஆகிவிடும்?
வகுப்புவாதப் பூச்சாண்டி
ஆதிதிராவிட மகாநாடு என்று சொல்வதாலேயே வகுப்பு பிரிவினையும் வகுப்பு உணர்ச்சியும் ஏற்படுகின்றது என்று சிலர் சொல்லு கிறார்கள். இந்த யோக்கியர்களுக்கு “பிராமணாள் காப்பி கிளப்பு” “பிராமணாள் ஓட்டல்” “பிராமணர்களுக்கு – பிராமணர்கள் அல்லாதாருக்கு” “இதுவரை பிராமணர் போகலாம், இதுவரையில் தான் மற்றவர்கள் போகலாம்” என்றெல்லாம் விளக்கி பெரிய பெரிய கொட்டை எழுத்தில் கோவிலிலும் தெருவிலும் கிணற்றிலும் எழுதி தொங்கவிட்டு இருப்பதைப் பார்க்கும்போது அதில் வகுப்புப்பிரிவும் வகுப்பு உணர்ச்சியுமுண்டாவதில்லையா? என்று கேட்கின்றேன். வேறு பல மகாநாடு கூடி ஜாதிபேதமும் உயர்வுதாழ்வும் இருக்க வேண்டும் என்று போர்டு போட்டு கீழ் ஜாதி மேல் ஜாதிக்கென்று பிரித்துக்காட்டியும் நடத்தப்படுகிற கூட்டங்கள், செய்கைகள் ஆகியவைகளை விட ஜாதி பேதம் ஒழிய வேண்டும், ஜாதி உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாதென்று பேசுவதற்கும் தீர்மானிப்பதற்கும் ஒரு மகாநாடு கூட்டினால் அதனால் எந்த தேசீயமும் கெட்டுப் போகாது என்று அவர்களுக்கு உறுதி கூறுகிறேன்.
ஜாதிபேதம் ஒழிவதாலும், மேல் ஜாதி கீழ் ஜாதி ஒழிவதாலும் ஒழியவேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசீயம் கெட்டுப்போகுமானால் – சுயராஜ்யம் வருவது தடைபட்டுப் போகுமானால் அப்படிப்பட்ட தேசீயமும் சுயராஜ்யமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல் என்று சொல்லுவேன்.
ஆதிதிராவிடர் மகாநாடு அவசியமே
அன்றியும் யாருக்கு வகுப்பு மகாநாடு இருந்தாலும் இல்லா விட்டாலும் ஆதிதிராவிடர்கள் என்கின்ற உங்களுக்கு ஒரு வகுப்பு மகாநாடு மிகமிக அவசியமாகும். ஏனெனில் நீங்கள் தான் இன்று இந்தியாவில் அதிகமான தீண்டக்கூடாத ஜாதியாய் இருக்கிறீர்கள். உங்களை தீண்டக்கூடாது என்றும் நீங்கள் கீழ் ஜாதி என்றும் சொல்லி நிலை நிறுத்த கூட்டப்படும் மகாநாடுகள் நடக்கும் போது நீங்கள் அவசியம் இம்மாதிரி ஆதிதிராவிட சமூக மகாநாடுகள் தினம் தினம் கிராமந்தோறும் வீதிதோறும் கூட்டி ஆகவேண்டும்.
இன்று இந்தியாவில் – நம்நாட்டில் ஏதாவது கடுகளவு முற்போக்காவது எந்தத் துறையிலாவது ஏற்பட்டிருக்குமானால் அது இப்படிப்பட்ட சமூக மகாநாடுகள் கூட்டி தங்கள் தங்கள் சமூக குறைகளைச் சொல்லி பேசி அவைகளுக்கு பரிகார மார்க்கம் தேடியதினாலேயே ஏற்பட்ட முற்போக்காகும்.
ஆகையால் இதை யாரும் வகுப்புவாதம் என்று சொல்ல முடியாது. முற்போக்கு வாதம் என்றுதான் யோக்கியர்கள் சொல்லுவார்கள். இந்தியாவின் மதமும் அரசியலும் பொருளாதாரமும் சமூக வாழ்வும் வகுப்பு பேதத்தை அடிப்படையாகக்கொண்டே இருந்து வருகிறது. அதனாலேயேதான் சமூகத்தில் சிலர் மேலாகவும் பலர் கீழாகவும் வாழவேண்டியிருப்பதுடன் மக்களுக்கு இவ்விஷயத்தில் சுயமரியாதை உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. வகுப்புபேதமே தான் இந்த நாட்டில் அந்நியர்கள் என்பவர் களுக்கு அரசும் ஆக்கமும் கொடுத்ததே அல்லாமல் இந்த நாட்டு பழங்குடி மக்களுக்கு பலமில்லாததால் அல்ல என்று நான் உறுதியாக சொல்லுவேன்.
நமது நோக்கம்
நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறை கூறுவதற்காக இம்மகாநாடு கூட்டினதாகவும் யாரையோ குறை கூறுவதாகவும் சிலர் பிதற்றுகிறார்கள். நாம் யாவரையும் குறைகூறவில்லை. நம்மைக் குறை கூறுகிறவர்களை வன்மையாய் கண்டித்து புத்தி கற்பிப்பதற்கு ஆகவே கூடி இருக்கின்றோம். “பல நாளாய் இருந்து வரும் கொடுமை நிதானமாகத்தான் போகும், அவசரப்படலாமா?” என்று சிலர் பேசுகிறார்கள். பலநாளாய் இருந்து வரும் கொடுமையை பலநாளாகவே நம் முன்னோர்கள் ஒழிக்க பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் மொண்ணை கத்தியின் மூலம் இந்த கொடுமை விருக்ஷத்தை வெட்ட முயற்சி செய்ததால் அம்மரம் இதுவரை வீழ்த்தப்பட வில்லை. அது பலநாளாக வளர்ந்து நன்றாக சேகு ஏறி நட்டத்தில் நிற்பதால் நல்ல சொணை உள்ள பதம் உள்ள பாரமான கோடாலியால் வெட்டித்தள்ள வேண்டிய அவசியத்துக்கு வந்து விட்டோம். சிறு சிரங்காய் இருந்தால் ஏதாவது ஒரு களிம்பு துடைத்துவிடலாம். பெரிய சிலந்தி புத்து மாதிரி எழுந்து உடல் சதையை அழுகச்செய்து இரத்தத்தை சீழ் ஆக்குகிறது. ஆதலால் நன்றாய் அறுத்து கரண்டிபோட்டு சீவி காரமுள்ள மருந்து போட்டு கட்டவேண்டியதாகிறது. இதை குற்றம் என்றோ, அவசரம் என்றோ யாராவது சொன்னால் நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது.
சுயராஜ்யமா? சூழ்ச்சி ராஜ்யமா?
உண்மையை சொல்லுகிறேன். காங்கிரசானது இன்று சுயராஜ்யம் என்று சொல்லிக்கொண்டு மேல் ஜாதிக்காரருக்கும் பணக்காரர்களுக்கும் பாதுகாப்பு தேடிக்கொள்ளும் சூழ்ச்சிராஜ்யம் கேட்காதிருந்தால் நமக்கு இன்று இந்த மகாநாடு வேண்டாம். நமது குறைகளை ஒரு விண்ணப்பம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் ஜாதி மத வகுப்பு நிலைகளைக் காப்பாற்றவும் சகல துறைகளிலும் அவனவன் இன்று இருக்கும் நிலைகளைக் காப்பாற்றிக்கொள்ளவும் என்று ரகசியமாகவும், வெளிப்படையாகவும் திட்டங்கள் போட்டுக்கொண்டு மேல் ஜாதிக்காரர்களும், மேல் நிலையில் உள்ளவர்களும் வேலை செய்வதால் நமக்கு இப்படிப்பட்ட மகாநாடுகளும் நமது குறைகளை விளக்கமாகவும், வேகமாகவும் எடுத்துச் சொல்லும் தன்மையும் வேண்டியிருக்கிறது.
ஒரு உதாரணம்
உங்களுக்கு ஒரு உதாரணம் எடுத்துக்காட்டுகிறேன்.
1920-ல் காங்கிரசானது தனக்கு “சுயராஜ்யம் இப்போது வேண்டியதில்லை” யென்றும் “இந்து முஸ்லீம் வேற்றுமை ஒழிந்து தீண்டாமை ஒழிந்து மக்கள் யாவரும் ஒற்றுமையும், சமமும் ஆன பிறகே சுயராஜ்யம் கேட்கப்படும்” என்றும், “அதற்கு முன் சுயராஜ்யம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என்றும் முடிவு செய்தது. காந்தியார் இதையேதான் எங்கும் முழக்கி மக்களை வசப்படுத்தினார். என் போன்றவர்களெல்லாம் இதனாலேயே காங்கிரசில் ஈடுபட்டோம். இன்று என்னவாயிற்று? இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பட்டினி விரதம் இருந்து நம்மை நம்பச் செய்தவரும், தீண்டாமை ஒழிய வேலை செய்வதற்காக வென்று பட்டினி விரதமிருந்து சர்க்காரை நம்பச்செய்து ஜெயிலிலிருந்து விடுதலையாகி வெளிவந்தவருமான தோழர் காந்தியார் இன்று என்ன சொல்லுகிறார். “சுயராஜ்யம் வந்தாலொழிய தீண்டாமை விலகாது, இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாது” என்று சொல்லிவிட்டாரா இல்லையா? என்று பாருங்கள்.
காந்தியார் பட்டினி மர்மம்
மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு அரசாங்கம் கொடுத்த தனித்தொகுதி பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்குத்தான் தோழர் காந்தியார் பட்டினி விரதமிருந்து ஏமாற்றி கையெழுத்து வாங்கப்பட்டதே ஒழிய தீண்டாமை ஒழிய பட்டினி விரதமிருக்கப் பட்டதையெல்லாம் காந்தியார் தடுத்தே வந்திருக்கிறார்.
இதுவரை தீண்டாமை விலக்கு சம்மந்தமாகவும் தீண்டாதார் என்பவருக்கு இருந்து வரும் கொடுமைகள் ஒழிப்பு சம்மந்தமாகவும் ஏற்பட்டுள்ள காரியங்கள் அவ்வளவும் உங்கள் சமூகத் தலைவர்களாலும், பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தாராலும் காங்கிரஸ் அல்லாத ஸ்தாபனங் களிலும் அவரவர்கள் ஸ்தாபனங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டு சர்க்கார் தயவாலும் நடந்த காரியங்களே தவிர வேறு ஏதாவது யாராலாவது நடந்ததுண்டா என்ற யோசித்துப்பாருங்கள். உங்களைப்பற்றி காங்கிரஸ் எப்போதாவது ஒரு தீர்மானமாவது கொண்டு வந்து கேட்டு சர்க்காரில் வலியுறுத்தி இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள்.
பிரிட்டன் மூலமே கதி மோஷம்
ஆகவே தோழர்களே! உங்கள் இழிவும் நீங்கள் அனுபவிக்கும் கொடுமையும் நீங்கவேண்டுமானால் நீங்கள் சர்க்காரோடு பிணங்கிக் கொள்ளக் கூடாது. சர்க்காருக்கு எதிர்ப்பு என்று சொல்லிக்கொள்ளக்கூடிய எந்த ஸ்தாபனத்திலும் தலையிட்டுக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு இரòப்பும் மனிதத் தன்மையும் மானமும் அளித்து வந்தவர்கள் – அளித்து வருகிறவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரேயாகும்.
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!
வேண்டுமானால் இனியும் கொஞ்சகாலம் பொறுத்து உங்களிலும் பார்ப்பனர்கள்போல் 100க்கு 100 படித்தவர்களாகவும் பார்ப்பனர்கள் போல் 100க்கு 90 பேர் சர்க்கார் உத்தியோகஸ்தர்களாகவும் மற்ற மேல் ஜாதிக்காரர்கள் போல் விகிதாச்சாரம் பணக்காரர்களாகவும் முதலாளிகளாகவும் மிராசுதாரர்களாகவும் ஆன பிறகு “இது சைத்தான் சர்க்கார்” என்றும் “சர்க்காரை வெட்டிப் புதைக்க வேண்டும்” என்றும் வாய்ச்சவடால் வீரம் பேசுவதும் காரியத்தில் கக்கூசு சந்து வழியில் புகுந்து பிரிட்டீஷ் சர்க்கார் கால் கழுவின தண்ணீரை தீர்த்தமாக அருந்துவதுமான அரசியல் அயோக்கியத்தனத்தில் பிரவேசியுங்கள். அதற்கு முன் பிரவேசித்தால் நசுங்குண்டு போவீர்கள். ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று முக்காலும் எச்சரிக்கிறேன்.
எந்த சர்க்காரானாலும் சரி
எனக்கு இந்த சர்க்காரைப்பற்றி கவலை இல்லை. வேறு எந்த சர்க்கார் வந்தாலும் கவலையில்லை. காந்தியார் சொல்லுவது போல் ராமராஜ்யம் வந்து ஒரு ஜதை செருப்பு (செருப்பின் பேரால்) 14 வருஷம் மாத்திரமல்ல, 50 M ஆண்டாலும் கவலையில்லை. ஆனால் உங்களைப் போல் இழிவும் கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்த பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கிப் போகக் கூடாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறேன்.
உங்கள் சமூக வாழ்வில் சமத்துவம் வேண்டுமானால் நீங்கள் இந்த க்ஷணமே இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் பறையர் சண்டாளர் ஆகி தீண்டப்படாதவர்கள் என்று ஆனதற்கு இந்து மதம்தான் காரணம். இந்து மதம் என்றால் பறையன், சூத்திரன், பிராமணன் இருக்க வேண்டும் என்பதுதான் கருத்து. இந்தப்பிரிவுகளை நிலை நிறுத்துவது தான் இந்து மதத்தின் கொள்கையும் வேலைத்திட்டமும் ஆகும்.
இந்து மதம் விடுங்கள்
உங்களைப் பொறுத்த வரையில் அம்மதத்தில் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இதை உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு இஸ்லாம் மதத்தை சிபார்சு செய்கிறேன். பெளத்தர்களையும் பற பெளத்தர்கள் என்றும் பெளத்த பறையர்கள் என்றும் மற்றவர்கள் சொல்லுகிறார்கள். பல பெளத்தர்கள் ஆதிதிராவிடர்களாகத்தான் இன்னும் கருதப்படுகிறார்கள்.
கிறிஸ்தவர்களிலும் பறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாதிரிகளே அப்படி கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஆள் எண்ணிக்கைதான் கவலையே தவிர சுயமரியாதையில் கவலை கிடையாது.
கிறிஸ்தவத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் சுயமரியாதை வேண்டுமானால் அதை விட்டு இஸ்லாம்களாகுங்கள் என்று தான் சொல்லி வருகிறேன். மற்றபடி “மோட்சத்திலோ”, “பாப மன்னிப்பிலோ” எந்த மதம் எப்படி இருந்தாலும் மனிதத்தன்மையில் ஆதிதிராவிடர் களுக்கு இஸ்லாம் மதந்தான் பறைத்தன்மையை ஒழிக்கின்றது. இஸ்லாமியர்களுக்குள் பறைத் துலுக்கன், பறை முகமதியர் கிடையாது. பார்ப்பார முஸ்லீம் கிடையாது. மனித முஸ்லீம்தான் உண்டு. நீங்கள் அதில் விழுந்தாலொழிய 100 வருஷமானாலும் உங்கள் பறைத்தன்மை போகாது. அன்றியும் நீங்கள் உண்மையில் நிரந்தர முஸ்லீம்கள் ஆகாவிட்டாலும் வேஷத்துக்காவது ஒரு 1000 பேர்கள் முஸ்லீம்களானால் உங்களுக்குள்ள பல குறைகள் உடனே நீக்கப்பட்டுவிடும்; இந்துக்களே முன்வந்து நீக்குவார்கள். அவ்வேஷத்துக்கு இந்துக்கள் அவ்வளவு மதிப்புக்கொடுக்கிறார்கள்.
திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைபட்டு திறக்கப்பட்டது? அங்குள்ள பலர் முஸ்லீம்களானார்கள். அதன்பேரில் தான் சர்க்காரும் மேல் ஜாதியாரும் நடுநடுங்கி கோவில் கதவை திறந்துவிட்டார்கள். அதுபோல் இங்கும் நடக்கும். தோழர்களே! இவை என் அபிப்பிராயம். இவற்றைக் கேட்ட நீங்கள் உங்கள் புத்திகொண்டு யோசித்து உங்களுக்கு சரி என்று பட்டபடி நடவுங்கள்.
குறிப்பு: 04.07.1937 இல் ஆம்பூரில் நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர்கள் முதலாவது மாநாட்டில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 18.07.1937