காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது

தோழர் எம்.என்.ராய் காங்கிரசில் பிரதான புருஷர். மிகுந்த தீவிரவாதி. பதவி ஏற்கக்கூடாது என்பவர். காங்கிரஸ் பதவி ஏற்புக்காரர் சூழ்ச்சி பலிக்காமல் போனவுடன் காங்கிரசில் பிளவு ஏற்படுவது நிச்சயமென்று ஏற்பட்டவுடன் காங்கிரஸ் முதலாளி கூட்டத்தார் காங்கிரஸ் சமதர்மக்கட்சியை விலக்க முயற்சி செய்து விட்டார்கள்.

அதாவது காங்கிரஸ் சமதர்ம வாதிகளின் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான தோழர் ஜவஹர்லால் அவர்கள் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்றும் பிரிட்டன் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவை காலிசெய்து விட்டு கப்பலேற வேண்டும் என்றும் ஒரு புறம் பல்லவி பாடிக்கொண்டு இருக்கும்போதே மற்றொரு புறம் தோழர் காந்தி பளீரென்று ஜவஹர்லால் கன்னத்தில் அறைந்து பல்லுகளை உதிர்த்தினாற்போல் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு கடுகளவு மனஸ்தாபமோ அதிருப்தியோ நேருவதாய் இருந்தால் என் உயிரை விட்டு அதை தடுப்பேன் என்று சொல்லி எப்படியாவது தனது சீஷர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுக்கவும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஜெட்லெண்ட் பிரபுவை வாக்குறுதி கேட்கிறார்.. ஜெட்லண்ட் பிரபுவோ இதற்கெல்லாம் சிறிது கூட மசியவில்லை. இதை அறிந்த காங்கிரசார் கடசியாக வாக்குறுதி கேட்காமலேயே “வாக்குறுதி மறுத்ததிலேயே வாக்குறுதி அளிக்கும் வாசனை இருக்கிறது” என்று சொல்லி காங்கிரஸ்காரர்கள் வாக்குறுதி இல்லாமல் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளத்தயாராய் இருப்பதாகவும் சீக்கிரம் சட்டசபை கூட்டம் கூட்டும்படியும் கவர்னர்களுக்கு மானச விண்ணப்பம் போட்டுக் கொண்டிருப்பதை தோழர் எம்.என்.ராய் அவர்கள் உணர்ந்த உடன் அந்தப் பெருமை தனக்கே இருக்கட்டுமென்று மத்திய மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு தீர்மானம் அனுப்பிவிட்டார். அதென்னவெனில்,

“கவர்னர்கள் அழைத்தால் காங்கிரஸ்காரர்கள் உடனே போய் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்குறுதி கேட்பதில் பயனில்லை”

“ஜெட்லண்ட் பிரபு காங்கிரஸ் கேட்ட வாக்குறுதி தரமுடியாது என்று சொல்லி விட்டார்”

“காங்கிரசுக்கு அரசியல் திட்டத்தை ரத்து செய்ய ஏற்படும் நிலையை சமாளிக்க சக்தி இல்லை”

“வாக்குறுதி மறைமுகமாகத் தரப்பட்டு விட்டது. ஆகவே உடனே மந்திரிபதவி ஏற்று நடத்த வேண்டும்”

என்று முன்னுக்கு பின் முரணாய் உளறிக்கொட்டி தீர்மானங்கள் அனுப்பி இருக்கிறார்.

எனவே காங்கிரஸ்காரர்கள் நடத்தையும் வீரமும் நாணயமும் எவ்வளவு ஊழலாகவும் கேவலமானதாகவும் இருந்தாலும் காங்கிரஸ்காரர் களுக்கு புத்தி வந்து சமதர்மக்கார வீரர்கள் உள்பட அடியோடு சரணாகதி அடைந்து விட்டார்கள் என்பது விளங்குகிறது.

இனி சர்க்கார் ஒருபடி உயருவார்கள். லார்டு வில்லிங்டன் காங்கிரசிடம் ஒத்துழையாமையும், சத்தியாக்கிரகமும், சட்ட மீறுதலும் கைவிட்டு விட்டோம் என்று வாக்குறுதி தரும்படி கேட்டு எப்படி அடக்கி ஆண்டு வெற்றிபெற்றாரோ அதே போல் இப்போதும் சீர்திருத்தத்தை உடைக்கிறேன், வெள்ளைக்காரர்களை விரட்டுகிறேன் என்கின்ற பேச்சை வாப்பீஸ் வாங்கிக்கொண்டு புத்தி வந்தது என்று சொல்லுகிறவரையில் விட மாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. ஏனெனில் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரி ஆசையை ஆசை வெட்கமறியாது என்பது போல் அவ்வளவு இழிவான முறையில் காட்டிக்கொண்டார்கள். ஆகவே பொதுவுடமை, சமதர்மம், பூரண சுயராஜ்யம், ஏகாதிபத்தியத்தை ஒழித்தல், சீர்திருத்தத்தை உடைத்தல் ஆகிய எல்லாம் மந்திரி பதவிப் பிச்சை கேட்பதற்கு ஆகப் பாடின சண்டித்தனமான பாட்டாக முடிந்துவிட்டது.

குடி அரசு – தலையங்கம் – 20.06.1937

You may also like...