காங்கரசில் சதியாலோசனை
– ஊர்வம்பன்
தேதி. 41-13-107
தத்தாரி நகரம்.
சோமாரி மண்டபம்.
தேசபக்த சிகாமணிகள் கூட்டம்.
இக்கூட்டத்துக்கு பிராமணர்கள் அல்லாத தேசபக்தர்கள் மாத்திரமே ஆஜர் ஆகலாம் என்றும் “வகுப்புவாதம் பேசும் ஜஸ்டிஸ், சுயமரியாதை கட்சியை எப்படி ஒழிப்பது” என்பதற்காக இரகசிய முயற்சிகள் செய்ய திட்டம் போட கூட்டப்படுவதாகு மென்றும் இதில் பார்ப்பனர்கள் கலந்தால் விஷயம் வெளியாகிவிடும் என்றும் வெளிக்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது.
நடு ஜாமம் 6-15 மணிக்கு பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் மண்டபம் நிறைய கூடிவிட்டார்கள். வெளி கேட்டில் சரியான காலிகளை நிறுத்தி பார்ப்பனர்கள் உள்ளே பிரவேசிக்காமல் செய்யப்பட்டு விட்டது.
வந்திருந்தவர்கள் பெயரைக் குறிக்க முதலில் ஏற்பாடு செய்யப் பட்டது. அதில் கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், முஸ்லீம், பார்ப்பனரல்லாத இந்து என்பதான பிரிவுப்படி குறிக்கும்படி உத்திரவிடப்பட்டது. லிஸ்ட் முடிந்தது.
“இனி பேசலா” மென்றார் லிஸ்ட் எடுத்தவர். “தலைவர் வேண்டாமா” என்றார் ஒரு முஸ்லிம்.
“ஒரு கிறிஸ்தவரை தலைவராகப் போடுங்கள். ஏனெனில் அச்சமூகம் தான் இப்போது கழுத்தறுக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு மந்திரி வேலை கொடுக்கப்படவில்லை. ஆதலால் அவர்களுக்கு தலைமை ஸ்தானமாவது கொடுக்க வேண்டும்” என்றார் ஒரு ஆதிதிராவிடர்.
“இங்கு பேசப்படும் வார்த்தை எதுவும் வெளியாகக் கூடாது. அவரவர்கள் மனதிலேயே இருக்க வேண்டும்” என்றார் ஒரு சைவர். “அவ்வளவு பயமென்னய்யா வந்தது” என்றார் ஒரு மிராஸ்தார்.
“ஏதோ மாதம் 100 ரூபாயோ 150 ரூபாயோ சம்பளம் போடப் போகிறார்களாமே, இந்த சங்கதி வெளியானால் அதை நிறுத்திவிடுவான்களே” என்றார் ஒரு தேசபக்த தொண்டர். M.ஃ.அ.
“அப்படி பயந்து பிழைத்து அந்த 150 ரூபா காசு வாங்கி பிழைப் பதைவிட செலூன் ஒப்பன் பண்ணி பிழைக்கலாம்” என்றார் ஒரு முதலாளி.
“உங்களுக்கென்னையா? எப்படியோ சொத்து சம்பாதித்து லக்ஷாதிபதி ஆகிவிட்டீர். உமக்கு மாதம் 100 ரூபாய் செலூன் வரும் படியாகவும் லாண்டரி வரும்படியாகவும் தோன்றும். எங்களைப் போலொத் தவர்களுக்கு அது ஒரு பெரிய ரிசர்வ் பாங்கி கவர்னர் வரும்படியாகும்” என்றார் மற்றொரு போலீஸ் அடிபட்ட தொண்டர்.
“இப்படி பயந்தால் ஒரு காரியமும் நாம் நாளைக்கு செய்ய முடியாது” என்றார் ஒரு லேவா தேவிக்காரர்.
“நான் அப்போதே இந்த பணக்காரர்களை சேர்க்காதே என்று சொல்ல வில்லையா?” என்றார் ஒரு வரும்படி இல்லாத வக்கீல்.
“அப்படியானால் நீங்களே பேசிக்கொள்ளுங்கள். நாங்கள் போகிறோம் என்றார்கள் ஒரு நா. கோ. செட்டியார், ஒரு வியாபாரி முதலியார், ஒரு விவசாய ரெட்டியார் ஆகியவர்கள்.
“ஆரம்பத்திலேயே இப்படி நடந்து கொள்ளுகின்ற நாம் நாளைக்கு எப்படி இந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கப்போகிறோம்” என்றார் ஒரு கவுண்டர்.
“மெள்ளப் பேசு மெள்ளப் பேசு” என்றார் ஒரு சைவர்.
“சரி, இதிலேயே விடிந்துபோகும்போல் இருக்கிறது. காரியம் நடக்கட்டும்” ÿமான் விக்டோரியா ரோட்ச் அவர்களை தலைவராகப் பிரேரேபிக்கிறேன்” என்றார் ஒரு சாயபு.
“சரி, அவரே இருக்கட்டும் பாவம்” என்றார் ஒரு முதலியார்.
ரோட்சையார் தலைமை வகித்தார். கைதட்டினார்கள். “இந்த எழவுக்கு கைதட்டல் வேறு வேண்டுமா” என்றார் தலைவர்.
“பயப்படாதீர்கள். 8 நாளில் கவிழ்த்து விடலாம். இந்த பார்ப்பன ராஜ்ஜியத்தை. நீங்கள் மாத்திரம் மனசை விட்டு விடாதீர்கள்” என்றார் சேலத்து முருகர்.
“நாம் மாத்திரம் உறைத்து நின்றால் 8 நாள் கூட வேண்டாம்” என்றார் திருவண்ணாமலை அருணாசலனார்.
“இவர்களை நம்பி படையெடுத்தால் என்ன கதி ஆவது?” என்றார் கோவைக் குமரன்.
“நல்லகுடி நாச்சி பேசவந்துவிட்டார். இவரை வைத்துக்கொண்டு பேசினால் கட்டாயம் இந்த சங்கதிகள் லெளட்ஸ்பீகர் வைத்தது போல் பூணூல் கூட்டத்துக்கு அவுட் ஆகிவிடும்” என்றார் விருதை மதனன்.
“இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு காரியமும் ஆகப் போவதில்லை. வீணாக பெயரைக் கெடுத்துக் கொண்டதாகத்தான் முடியப் போகிறது” என்றார் மன்னனூர் வேலன்.
“சரி, சப்தம், காரியம் ஆரம்பிக்கப்படப் போகிறது. தயவு செய்து ஒவ்வொருவராய் அமைதியாய் பொறுமையாய் பேசவேண்டும்” என்றார் தலைவர்.
அமைதி நிலவிற்று:-
ஒரு கிறிஸ்தவர்:- “மந்திரிகள் நியமித்த விஷயத்தில் ஆச்சாரியார் பார்ப்பன புத்தியை காட்டிவிட்டார். எங்கள் சமூகத்துக்கு ஒரு மந்திரி வேலை கொடுக்கப்படவில்லை. ஆதலால் கிறிஸ்தவர்கள் வெளிப்படையாய் காங்கரசை விட்டு விலக வேண்டும்”.
அருணாசலனார்:- “காங்கரசை விட்டு வெளியேறுவது என்பது மாத்திரம் கூடாது”.
முருகனார்:- “நானும் அதுதான் சொல்லுகிறேன்”.
கோவையார்:- “ரம்ப சரி”.
விருதையார்:- “விலகுவது என்பது மிகவும் ஆபத்தான காரியம்”.
ஒரு அம்மையார்:- “ஆம் ஆம் அது (விலகுவது) பேரைக் கெடுத்துவிடும்.”
ஆ-தி:- “ஆபத்தும் இல்லை, பேரையும் கொடுக்காது. N 100 ரூபாய் சம்பளத்தையும் சராசரி 75 ரூபாய் படியையும்தான் கொடுத்து விடும். அதற்கு ஆகத்தான் இவர்கள் இப்படிச் சொல்லுகிறார்கள். எனக்கும்கூட ஆபத்தும் இல்லை பேருங்கெடாது என்று தோன்றினாலும் பணம் போய் விடுமே என்றுதான் பயப்படுகிறேன். ஆதலால் பணத்துக்கு ஒரு வழி சொல்லிவிட்டு பிறகு விலகுவதைப்பற்றி பேசுங்கள்.”
ஒரு பிள்ளை, ஒரு முதலியார்:- (இருவரும் ஏககாலத்தில்) “என் கையிலிருந்து 20, 30 ஆயிரம் ரூ. செலவு செய்து வந்தேன். எனக்கு காங்கரசில் இருப்பது மானக்கேடாக தோன்றுகிறது. நீங்கள் ஒரு காசு செலவு இல்லாமல் மாப்பிள்ளை மாதிரி மெம்பர் ஆனீர்கள். உண்மையைப் பேசவேண்டுமானால் எலக்ஷனால் உங்களுக்கு பணம் மிச்சம் கூட ஆயிருக்கலாம். அப்படி இருக்க நீங்கள் வெளிவர இப்படிப் பயப்படுகிறீர்களே”.
ஆ-தி:- “நானும் உண்மையை சொல்லுகிறேன். நீங்கள் மந்திரி ஆகலாம் என்று வந்தீர்கள். அது ஆகவில்லை போகிறேன் என்கிறீர்கள். நாங்கள் படி வந்தால் நமக்கு சோத்துக்கு ஆகும் என்று வந்தவர்கள். இப்போது சம்பவம் வேறே N 100 ரூ.150 ரூபாய் போகிறது. நாங்கள் ஏன் காங்கரசில் இருந்து விலகுவோம்.”
ஒரு “ரெட்டியார்:- பணம் தானா காரணம்? நம்ம சமூக நலன்களை கவனிக்க வேண்டாமா?”
கோவையார்:- “சமூக நலன்கள் ஞாபகம் தங்களுக்கு இப்போது தான் வந்ததோ. ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பட்டம், பதவி, 10 வருஷம் உத்தியோகம் இவ்வளவும் அனுபவித்து ஒரு மாசம் கூட பொறுத்துப் பார்க்காமல் வந்து நேற்று சேர்ந்துவிட்டு இன்றைக்கு மந்திரி கேட்டுக் கொடுக்காமல் போனால் சமூக நலன் போச்சு என்கிறீர்களே. உங்களை விடவா நாங்கள் சமூகத்தை காட்டிக் கொடுத்து பிழைக்க வந்துவிட்டோம். மற்றவர்கள் சங்கதிதான் என்ன? தேவர், பிள்ளை, செட்டியார் எல்லோரையும் சொல்லுகிறேனே.
சேலம் செட்டியார்:- கோவையார் அப்படி ஒரே அடியாய் எல்லா செட்டியாரையும் சேர்த்து பேசக்கூடாது. நான் ஆரம்ப காலம் முதல் காங்கரஸ் காரன். என்னையும் தான் க்ஷவரம் செய்துவிட்டார்கள் பார்ப்பனர்கள்.
கோவையார்:- “தங்கள் சங்கதி வேறு. அப்படி இருந்தாலும் தாங்கள் சேர்மென் ஆனீர்கள். 2 லக்ஷ ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. பிள்ளை குட்டிகள் பெண்கள் உள்பட படித்து இருக்கிறீர்கள். நாங்கள் இதை விட்டுப்போனால் எங்களை யார் சட்டை பண்ணுவார்கள்.”
ஒரு கவுண்டர்:- “நாம் இன்று கூடிய நேரம் சரியில்லை. வீண் கலகம் ஆரம்பமாய் விட்டது. இனி யொரு நாளைக்கு கூடுவாம். அதற்குள் பணக்கஷ்டமுடையவர்களுக்கு பணத்துக்கு காங்கிரசில் கிடைப்பதில் பகுதிக்கு அதாவது நாம் ஒரு ஏற்பாடு செய்து கொண்டு கூட்டம் கூட்டுவோம். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. இப்பொழுது மேல்கொண்டு பேசுவதால் நம் யோக்கியதைகள் தான் வெளியாகும். பார்ப்பனர் சங்கதி பந்தோபஸ்தாகிவிடும். ஆகையால் நான் இக்கூட்டத்தை ஒரு மாதம் ஒத்திப்போடலாம் என்று பிரேரேபிக்கிறேன்.”
குடி அரசு – உரையாடல் – 01.08.1937
இரண்டு அய்யங்கார் மந்திரிகள் கூற்று
பார்ப்பன ஆதிக்கம் வந்தால் தமிழ் மக்களுக்கு என்னென்ன கெடுதல்கள் வரும் என்று எதிர்பார்த்தோமோ அவைகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கிவிட்டன.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் தோழர் டி.எஸ். எஸ். ராஜன் அய்யங்கார் அவர்களும் பார்ப்பன அய்யங்கார் மந்திரிகள். அவர்கள் கொள்கை எப்படியாவது தமிழ் மக்களை அடிமைப்படுத்தி பார்ப்பன ஆதிக்கம் தலைசிறந்து விளங்குவதற்கு வேண்டிய காரியங்கள் செய்ய வேண்டியதே யாகும். இதையறிந்து நாம் இந்த 20 வருஷகாலமாக தொண்டை கிழியவும் கை ஒடியவும் கத்தியும் எழுதியும் வந்திருக்கிறோம்.
இதை இந்த நாட்டு தமிழ் மக்கள் 100-க்கு 100 பேரும் உணர்வார்கள். இன்றும் இவ்வய்யங்கார் கோஷ்டிக்கு வால் பிடித்துத் திரியும் தமிழ் மக்கள் பூராவும் தோழர் சுப்பராயன் அவர்கள் முதல் தோழர்கள் குப்புசாமி அண்ணாமலை உபயதுல்லா கம்பெனிவரை சகல மக்களும் உணர்ந்தவர்களேயாவார்கள். மற்றும் அவ்வப்போது இவ்வபிப்பிராயங்களைப் பல வழிகளிலும் தெரிவித்தவர்களுமாவார்கள். அப்படி இருந்தும் நம்மக்களின் ஒற்றுமையின்மையாலும் சுயநலங்களாலும், வறுமையாலும் எப்போதும், ஒரு கூட்ட தமிழ் மக்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து குலாம் களாகி சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விபூஷணன் கதை போலவும், அனுமார் கதை போலவும் நடந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவியும் ஆக்கமும் அளித்து வருகிறார்கள்.
நமது முயற்சி
இதற்காக ஒரு தனிப்பட்ட தமிழ் மகனை குற்றம் சொல்ல நாம் முன்வரவில்லை. தமிழ் மக்களில் இப்படி ஒரு கூட்டம் புராண காலம் – சரித்திரகாலம் முதற்கொண்டே இருந்து வந்திருக்கிறது. இக்கூட்டத்தை அடியோடு இல்லாமல் செய்து விடமுடியும் என்று நாம் எப்போதும் நினைத்து விடவில்லை. ஆனாலும் சுயநலமற்ற – சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துத் தீரவேண்டிய அவசியமற்ற பொது மக்களும் சிறப்பாக பாமர மக்களும் இக்குலாம் கூட்டத்தின் பேச்சைக்கேட்டு ஏமாறாமல் இருப்பதற்காகவே நாம் முயற்சிக்கிறோம்.
நம் முயற்சி வீண் முயற்சி என்றோ நாம் சிறிதும் வெற்றி அடைய மாட்டோம் என்றோ சிறிதும் அதைரியம் கொள்ளவுமில்லை. ஏனெனில் இவ்விருபது முப்பது வருஷகாலங்களில் நமக்கு முன்னிருந்த அதிதீவிர வாலிபர்களும் கூட மனதினால் நினைத்திருக்கவும் முடியாத பல காரியங்கள் இன்று சர்வசாதாரணமாகி மக்கள் பலர் பின்பற்றவும் பல பலமான அமைப்புகள் இடிபடவும் பல அதி ஆச்சரியமான காரியங்கள் அமுலில் நடந்தேறவுமான காரியங்கள் நடந்து விட்டன.
அதுவும் பார்ப்பன எதிர்ப்பையும் அவர்களுடைய அடிமைகளான குலாம்களான பல தமிழ் மக்களின் எதிர்ப்பையும் தொல்லைகளையும் சமாளித்தும் வெற்றி பெற்றிருக்கின்றன.
நம் ஆசை
நம்முடைய முக்கியமான ஆசை – கொள்கை – ஆயுளுள்ள வரை ஈடுபட்டு தீருவது என முடிவு செய்துகொண்ட விஷயம் என்னவென்றால் ஒரே ஒரு காரியமாகும். அதாவது மனித சமுதாய அமைப்பை தலை கீழாக மாற்றுவது அல்லது உடைத்தெறிவது என்பதேயாகும்.
இதைத் தவிர அரசியலைப் பற்றியோ பொருளாதாரத்தைப் பற்றியோ நமக்கு சிறிதும் கவலை இல்லை. ஏனெனில் அரசியலும் பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிர தனித் தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ எப்படி உடைத் தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும்.
ஒரு மாறுதல்
இன்றைய தினம் நமது சமூக அமைப்பில் ஒரு பெரிய மாறுதலை காண்கின்றோம். இது யாரால் ஏற்பட்டிருந்தாலும் சரி, ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது தோழர்கள் காந்தியாருக்கும் ராஜகோபாலாச்சாரியாருக்கும் சத்தியமூர்த்தியாருக்கும் எதிராகவும் மற்றும் தோழர்கள் முத்துரங்க முதலியார், வெள்ளியங்கிரிகவுண்டர், சீர்காழி சிதம்பரநாத முதலியார் ஆகியவர்களின் இஷ்டத்துக்கும் முயற்சிக்கும் எதிர்ப்புக்கும் விரோதமாகவும் அவர்களது விரோதங்களை சமாளித்துக்கொண்டு நடந்த காரியம் என்றே சொல்லுவோம்.
பறைய மந்திரி
அதாவது ஒரு “பறையனை” அரசியல் மந்திரியாக இன்று கண்டு விட்டோம். பறையன் என்று கூப்பிடுவது சட்ட விரோதமான காரியம் என்பதை அரசியல் ஆதாரத்தில் பார்த்துவிட்டோம். அவனவன் குலத்தொழில் பார்க்கும்படி செய்வது தான் சுயராஜ்யத்தின் முக்கிய தத்துவம் என்ற கீதைத் தத்துவத்தையும் மனு தத்துவத்தையும் இருக்குமிடம் தெரியாமல் கொளுத்திவிட்டோம். இவைகளை ஏன் தனியாக எடுத்துக் காட்டுகிறோம் என்றால் மேற்குறிப்பிட்ட கூட்ட மக்கள் இந்நிலை ஏற்படாமலிருப்பதற்காக பாடுபட்டார்கள், எதிர்ப்பை உபதேசித்தார்கள், இதற்கு மாறு ஏற்படாமல் இருக்கும்படி வைசிராய் இடம் தூது சென்றார்கள். இவ்வளவையும் சமாளித்தோம். மற்றும் சமூகத்துறையில் மதத்தின் பேரால் ஒதுக்கித்தள்ளி சமூகத்தின் பேரால் வெறுக்கச் செய்து தொடுவதற்கு அசூயைப்படத்தக்க முஸ்லீம் சமூகம் இன்று முற்போக்கு சமூகமாக இருக்கக் காண்கின்றோம்.
இந்த நிலை இனி ஒரு 15 வருஷங்களுக்கு கெடாமல் இருக்குமானால் அதற்கு அடுத்த பதினைந்து வருஷங்களில் இன்றுள்ள ஆட்சி பாடு பட்டுழைக்கும் மக்கள் அரசியலாக மாறிவிடும் என்பதில் நமக்கு ஆட்சேபணையில்லை.
பார்ப்பனச் சூழ்ச்சி
அப்படிப்பட்ட ஒரு நிலைமை நாட்டில் உண்டாகாமல் இருப்பதற்கு ஆகவும் உள்ள நிலைமையையும் கெடுப்பதற்கு ஆகவுமே இன்று அரசியலின் பேரால் பார்ப்பனர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கே தோழர் காந்தியாரையும் சில சமூகத்துரோகிகளையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். அதுதான் இன்றைய காங்கரஸ் சூழ்ச்சியாகவும் மாகாண ஆட்சியாகவும் சுயராஜ்ய முயற்சியாகவும் இருந்து வருகிறது.
காங்கிரசின் பேரால் அரசியல் ஆதிக்கம் பெற்றுத் தலைமை ஸ்தானத்தில் பார்ப்பனர்கள் அமர்த்தவும் அவர்களது கண்ணோட்டம் எங்கே போயிற்று என்பதையும் விழிகளுக்குள் அடைந்து கிடந்து வெளிப்பட்ட ஆசை என்ன என்பதையும் தமிழ் மக்களை சற்று சிந்தித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.
தோழர் ஆச்சாரியார் பட்டத்துக்கு வந்த 10 நாளில் இந்தியா பூராவும், தமிழ்நாடும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றார்.
இதை காங்கிரசிலுள்ள ஒரு தமிழ் மகனாவது கண்டிக்கவே இல்லை. ஒரு தமிழ்ப் பண்டிதனாவது ஆட்சேபிக்கவே இல்லை.
தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் எதற்கு ஆக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதைப்பற்றிக் கூட எந்தத் தமிழனும் சிந்தித்ததாகவும் தெரியவில்லை.
தங்கள் பெண்ஜாதியின் துகிலை சபையில் ஒருவன் பலாத்காரமாய் அவிழ்ப்பதை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறும் காட்டு மிராண்டித் தனமான கதைக்கு நிகராகவே இருக்கிறது இந்த சம்பவம்.
உண்மைத் தமிழருண்டா?
ஒரு பார்ப்பனர் தமிழ்மக்கள் பேரால் ஆட்சி பெற்று அரசியல் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களைப் பார்த்து “நீங்கள் எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று சொன்னால் அவரது நெஞ்சுத் துணிவு எவ்வளவாய் இருக்க வேண்டும்? இதையும் மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பது என்று சொன்னால் இந்நாட்டில் உண்மைத் தமிழ்மக்கள் யாராவது இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? “தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து மனிதனைக் கடிக்க வந்து விட்டது” என்ற பழமொழிப்படி “ஜாதிப் பேச்சு கூடாது” “வகுப்பு பேச்சு கூடாது” “பாஷைப் பேச்சு கூடாது” என்றெல்லாம் ஞானோபதேசம் செய்துவிட்டு அந்தப்படி யாராவது பேசினால் அது துவேஷப் பேச்சாகுமென்றும் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு இப்போது தைரியமாய் தலைமை அதிகாரி பதவியில் இருந்து கொண்டு “எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று ஆக்கினை இடுகிறார். இதன் அவசியத்துக்கு காரணம் என்னவென்றால் சமஸ்கிருதம் படிப்பதன் மூலம்தான் மக்கள் புராண கால ஒழுக்கத்துக்கு போகமுடியும் என்று விளக்கிக் கூறுகிறார். தமிழ்மக்கள் எல்லோரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இவர்களால் சூழ்ச்சி செய்யப்பட்ட காலத்திலேயே நாம் இதை எடுத்துக் காட்டினோம். ஹிந்தி என்பதும் சமஸ்கிருத பாஷையே யாகும். இதை சுமார் 75 வருஷங்களுக்கு முன்பாகவே சரித்திரபுத்தகம் எழுதிய பாதிரிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதாவது ஒரு பிரஞ்சு இந்திய பூமி சாஸ்திர புத்தகத்தில் இந்தியாவைப்பற்றி 70 வருஷத்துக்கு முன் எழுதும் போது,
ஸம்ஸ்கிருத யோக்கியதை
“இந்தியாவானது முற்காலத்தில் அநேகவிதமான கலைகளுக்கும் அற்புதமான அறிவு பெருக்கத்துக்கும் இருப்பிடமாய் இருந்தது. நல்ல கல்வி சாஸ்திரங்கள் இருந்து வந்தன.
ஆனால் பிற்காலத்தில் பிராமணர் மதம் வந்து புகுந்தது. நிச்சயமுள்ள கல்வி அறிவு சாஸ்திரங்களுக்கும் உண்மை சம்பவங் களுக்கும் பதிலாக கட்டுக்கதைகளையும் மட்டுக்கடங்கா அபத்தங் களையும் புனைந்த சாஸ்திரங்களை புராணங்களை சமஸ்கிருதமாகிய ஹிந்திபாஷையில் ஏற்படுத்தி இந்த தேச மக்களை அஞ்ஞான – அறியாமை அந்தகாரத்தில் அமிழ்த்தினார்கள்.
ஆதலால் அது முதல் இதுவரை நல்லொழுக்கத்திலும், வித்தை, அறிவு, கல்வி, சாஸ்திரங்களிலும் யாதோர் விருத்தியும் காணாமல் தாழ்வும், அதிக மூடத்தனமுள்ள அபத்தங்களின் நிலைமையும் மாத்திரமே காணப்படுகிறது.
ஆகவே மேல்கண்ட அஞ்ஞானமும் மெளடீகத்தனமும் மக்களுக்குள் வளர்ந்துவருவதற்கு ஆதாரமான புராணம், இதிகாசம், விதி நூல் ஆகியவைகளை கொண்ட சமஸ்கிருதத்தை இந்த 20-வது நூற்றாண்டில் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் உள்ள மனிதன் படிக்க வேண்டுமென்று ஆட்சிதலைவர் ஆக்கினை இடுவாரானால் மக்களை பழயகால காட்டு மிராண்டித் தனமான வாழ்க்கைக்கு போகும்படி விரட்டி அடிக்கிறார் என்று தானே அருத்தம்?
சமஸ்கிருத பாஷையின் முக்கிய தத்துவம் வருணாச்சிரம தர்மமாகும். அதாவது வருணாச்சிரம தர்மத்துக்கு ஏற்ற கதை புராணம், சரித்திரம் “வேதவாக்கு” விதிநூல் ஆகியவைகளேயாகும். வருணாச்சிரம தர்மத்தின் முக்கியத் தத்துவம் பார்ப்பான் பிராமண ஜாதியை சேர்ந்தவன். மற்றவர்கள் சூத்திர (அடிமை) ஜாதியைச் சேர்ந்தவர்கள். முன்னையவனுக்கு பின்னைய வனுடைய சொத்து, பெண்டு பிள்ளை, சரீரம் ஆகியவை கட்டுப்பட்டவை களாகும் என்பதுதான். ஆகவே இந்த நிலையை மறுபடியும் ஏற்படுத்தப் பார்ப்பனர்கள் முயற்சியேதான் “தமிழ் மக்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று ஆக்கினை இடுவதாகும்.
முஸ்லீம் ஆதிக்கத்துக்கு உலை
ஹிந்தி பாஷையை வளர்த்ததின் மூலம் ஒரு அளவுக்கு முஸ்லீம் ஆதிக்கத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்தாய்விட்டது என்பதை மந்திரி யாயிருந்த தோழர் கலிபுல்லா சாஹிப் அவர்கள் வெகு நன்றாய் விளக்கி இருக்கிறார்.
ஆகவே இக்காரியங்களை பார்ப்பனர்கள் செய்வதானது இதுவரை குறிப்பாக இந்த 20 வருஷ காலமாக பார்ப்பனரல்லாத சமூக தலைவர்களும் சுமார் 35 வருஷங்களாக முஸ்லீம் தலைவர்களும் சமூக முன்னேற்றத்தில் செய்து வந்திருக்கும் அரிய வேலையையும் அதன் பயனையும் பாழ்படுத்தவும் இடித்தெறியவும் செய்யப்படும் சூழ்ச்சியேயாகும்.
மற்றொரு அய்யங்கார் சூழ்ச்சி
இந்த நம் அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த மற்றொரு அய்யங்கார் பார்ப்பன மந்திரி தோழர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் மற்றொரு மாணவர்கள் கூட்டத்தில் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயத்தைக் கொண்டு உணரலாம்.
அதாவது,
“இந்த மாகாணத்தில் துரதிஷ்டவசமாக பொது வாழ்வில் வகுப்புவாத முறை வளர்ந்து வருகிறது. அவர்கள் அதிகாரத்தில் இருந்த பொழுது ஜாதியையே ஒழிக்க வேண்டுமென்று பேசிக்கொண்டு ஜாதியை சட்டபூர்வமாக நிரந்திரமாக்கி இருக்கிறார்கள். இருந்தாலும் நாம் இனி பயப்பட வேண்டியதில்லை”
என்று சென்ற ஜüலை மாதம் 31ந் தேதி வைத்திய மாணவர்கள் வகுப்பில் பேசி இருக்கிறார். இது “இந்து” பத்திரிகையில் காணப்படுகிறது. (மேற்கண்ட வாசகத்தில் அவர்கள் என்பது ஜஸ்டிஸ் கட்சியைக் குறிக்கிறது. ப-ர்)
இவரது ஆணவத்தைப் பாருங்கள், வகுப்பு வாரி முறையைப்பற்றி இனி பயப்பட வேண்டியதில்லையாம். அப்படி என்றால் என்ன? அதை தாங்கள் அடியோடு அழித்து விடப்போகிறோம் என்பதுதானே? எதற்கு ஆக அதை அழிப்பது?
வகுப்புவாத முறையை ஜஸ்டிஸ் கட்சியார் ஒழிக்க வேண்டு மென்று சொல்லிக்கொண்டு அதை ஒழிப்பதற்கு அனுகூலமாக வகுப்பு வாதம் உள்ள வரை வகுப்பு உரிமை கொடுத்து வந்தால் எதற்கு ஆக ஆதியில் வகுப்புவாதம் (யாரால் கற்பிக்கப்பட்டிருந்தாலும்) ஏற்பட்டதோ அந்த காரியம் அழிவதன் மூலம் வகுப்பு இல்லாமல் போய்விடும் என்று கருதியே வகுப்புரிமை அளித்திருக்கிறார்கள். தோழர் ராஜன் அய்யங்கார் சொல்வதையே ஒப்புக்கொள்வதானாலும் அதாவது ஜஸ்டிஸ் கòயார் வகுப்பு முறை அல்லது ஜாதி முறையை சட்ட பூர்வமாக நிலைக்கச் செய்துவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்வதானாலும்
வேத சாஸ்திர வகுப்பு வாதத்தை ஒழிக்க வழியுண்டா?
இப்பார்ப்பனர்கள் அதாவது தோழர்கள் ராஜன் அய்யங்கார், ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார் ஆகியவர்களின் முன்னோர்கள் இதே ஜாதி முறையை – வகுப்புமுறையை – வருணமுறையை மதத்தில் வேதத்தில் சாஸ்திரத்தில் புராணத்தில் ஏன்? “கடவுள்” வாக்கில் “கடவுள் சிருஷ்டியில்” உற்பத்தி செய்து நிரந்தரமாக்கி இருக்கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம். ஜஸ்டிஸ் கòயார் செய்த சட்டத்தை நாளைக்கு ஒரு அன்னக்காவடியோ தகரப்போகணியோ சட்டசபை அதிகார ஆசனத்தில் உட்கார்ந்து அழித்துவிடலாம். அதில் ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் இந்த அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரியார் கூட்டம் செய்த வேத சாஸ்திர கடவுள் வாக்கு ஆகியவைகள் மூலம் செய்யப்பட்ட கொடுமையான ஜாதிமுறையை எப்படி ஒழிப்பது? எந்தக் காலத்துக்கு யாரால் அழிப்பது? என்று கேட்கிறோம்.
ஹிந்தியை சமஸ்கிருதத்தைப் பாராட்டுவதேன்?
இவைகளை மேலும்மேலும் நிலைநிறுத்தத்தானே தோழர் ஆச்சாரியார் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் படியுங்கள் என்று இன்று மாணவர்களுக்கு ஆக்கினையிடுகிறார். இந்தப் பார்ப்பனர்கள் “மனித வாழ்வில் ஒரே ஒரு ஜாதிதான் இக”பர”ங்களில் சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியும்” என்றும் அந்த ஒரு ஜாதிக்குத்தான் சுதந்திரமுண்டு என்றும் மற்ற ஜாதிகள் அந்த ஒரு ஜாதிக்கு அடிமையாய்த்தான் இருக்க வேண்டும் என்றும் இருந்து வந்த கொடுமையை ஜஸ்டிஸ் கட்சி ஒழிக்கத்தான் வகுப்பு உரிமை அதாவது சகல வகுப்புக்கும் சம உரிமை உண்டு என்பதை அமுலில் கொண்டு வரச்செய்ததே தவிர மற்றபடி ஜஸ்டிஸ்காரர் செய்த வகுப்பு முறையிலோ வகுப்பு உரிமை முறையிலோ எந்த ஜாதியையும் மேல் என்றோ கீழ் என்றோ எந்த ஜாதிக்கும் எந்த ஜாதியும் அடிமை என்றோ சட்டம் செய்யவில்லை. ஆகவே – ஜஸ்டிஸ்காரர் செய்த சட்டத்தைப் பற்றி பயப்படப்போவதில்லையென்றும் அதை அழிக்கவே தாங்கள் கங்கணங் கட்டிக்கொண்டு வந்திருப்பதாகவும் வீரப் பிரதாபம் கூறும் டாக்டர் ராஜன் அய்யங்கார் அவர்கள் வகுப்புரிமை, வகுப்புப் பிரிவு ஆகிய முறையைப்பற்றி உண்மையில் வருந்துபவராயிருந்தால் அவர் ஒரு காரியம் செய்வாரா என்று கேட்கின்றோம்.
எல்லாரும் அர்ச்சகராக இருக்கச் சட்டம் செய்வாரா?
அதாவது அவரது பதவி ஆதித்கத்திலுள்ள வகுப்பு முறை சுதந்திரத்தை ஒழிக்கிறாரா என்று கேட்கின்றோம் என்ன வென்றால் இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாக்கா மந்திரியாயிருக்கிறார். அவர் ஆதீனத்தில் தான் இந்நாட்டுக் கோவில்களின் “தலையெழுத்து” பூராவும் இருக்கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட்டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ, காங்கரசே சர்க்கார் – சர்க்காரே காங்கரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக்கொள்ளும் படியான நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில்களுக் கெல்லாம் பார்ப்பானே மணி அடிக்கவேண்டும், பார்ப்பானே சோறு பொங்க வேண்டும், பார்ப்பானே வேதம் ஓத வேண்டும் என்பவை ஆன – பார்ப்பானே செய்யவேண்டும் என்கின்ற காரியங்களை மாற்றி “வகுப்பு வாதம் புரிகின்ற” ஜஸ்டிஸ் கòயார் உள்பட தனித்தொகுதி கேட்பதும் இந்து மதத்தை விட்டுப் போவதும் ஆபத்து என்று கூறி தடுக்கப்படும் ஷெடியூல் வகுப்பார் வரை உள்ள எல்லா இந்துக்களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்திரவோ செய்து வகுப்பு வாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்கமாய் கேட்கின்றோம்.
இதாவது நாளைக்கு செய்யட்டும். இன்றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு ஜாதி என்கின்ற வித்தியாச முறை இல்லாமல் “சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வ தயாபரமும் உள்ளவரான பகவானை தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப்படும்” என்று உத்திரவு போடட்டுமே என்று தான் கேட்கிறோம்.
ஹோட்டல்களின் “பஞ்சம” போர்டை ஒழிப்பாரா?
இதாவது கொஞ்சம் தாமதிக்கட்டும். அதைவிட அவசரமாக இனிமேல் எந்தப் பார்ப்பானும் ஓட்டல்களிலோ, காப்பிக் கடைகளிலோ பிராமணாள் காப்பிக் கடை – பிராமணாள் ஓட்டல் – பிராமணாளுக்கு மாத்திரம் – பிராமணாளுக்கு இங்கே சூத்திராளுக்கு இங்கே – பஞ்சமன் நாய் பெரு வியாதிக்காரர்கள் ஆகியவர்கள் பிரவேசிக்கக் கூடாது – என்பன போன்ற போர்டு – போடக்கூடாது என்று உத்திரவுகள் போடட்டுமே பார்ப்போம். எனவே இத்தியாதி காரியங்கள் செய்ய அதிகாரமும் அவசியமும் செளகரியமும் இருந்தும் இவற்றை செய்யாமல் வகுப்பு ஆதிக்கக் கொடுமையையும் வகுப்பு முறை துன்பங்களையும் வைத்துக்கொண்டு “ஜஸ்டிஸ்கò வகுப்பு வகுப்புவாத முறை ஏற்படுத்தி விட்டது. நான் அதை ஒழிக்கப்போகின்றேன். பயப்பட வேண்டாம்” என்றால் என்ன அர்த்த மென்று கேட்கின்றோம். ஆகவே இந்தமாதிரிப் பேச்சுக்கள் எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியே கொடுங்கோன்மை ஆட்சிமுறைப் பேச்சென்றே வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.
குடி அரசு – தலையங்கம் – 08.08.1937