ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து விசாரணைக் கமிட்டி முடிவு எங்கே? பார்ப்பன சூழ்ச்சியில் ஏமாந்து விடாதீர்கள்

 

– ஓட்டாண்டி

வந்துவிட்டது! வந்துவிட்டது!! என்ன? என்ன?? அதுதான் கமிட்டியின் முடிவு! எங்கே? அதோ! இதோ!! என்ன கயிறு என்கிறீர்களா? அப்படி ஒன்றுமில்லை, எல்லாம் பச்சை உண்மை. உங்கள் மனதில் அது படாவிட்டால் நான் ஜவாப்தாரி அல்ல. கோபிக்க வேண்டாம். சமாசாரத்தைச் சொல்லி விடுகிறேன். ஈரோடு சந்தைப்பேட்டை விபத்தைப்பற்றி விசாரிக்க இரண்டு கமிட்டி இங்கே நியமிக்கப்பட்டதல்லவா? பணம் சேகரிக்கப் பார்ப்பனரல்லாதாரடங்கிய கமிட்டியும் காரணத்தை விசாரிக்கப் பார்ப்பனர் அடங்கிய கமிட்டியும் கற்பித்தார்கள் அல்லவா? எங்கே அவர்களின் முடிவு என்று கேட்கிறீர்களா? அதுதான் வந்து விட்டது. எங்கே இன்னும் வெளியில் காணோமே என்கிறீர்களா? இது பயித்தியகார உலகம். நீங்களும் அதில் தானே குடி இருக்கிறீர்கள். அதனாலேதான் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு தெரிந்ததைச் சொல்லிவிடுகிறேன்.

விபத்திற்கு ஆளானவர்களுக்கு உதவிசெய்வது என்பது இரண்டாம் பக்ஷம். முதலாவது என்ன என்று தெரியுமா? அதுதான் அடுத்து வரும் தேர்தல் போட்டி. எப்படி என்றால் கமிட்டிகளின் முடிவை இப்பொழுதே சொல்லிவிட்டால் பொதுஜனங்கள் கேட்டுச் சீக்கிரத்தில் மறந்து விடுவார்கள். ஆறின கஞ்சி பழங்கஞ்சி, ஆகிற காரியம் நடக்காது. அதற்காகத்தான் இப்படியே விஷயத்தை இழுக்கப் போட்டுத் தேர்தல் கிட்ட சொன்னால் காரியம் கைகூடும். கறுப்புக்கோழியும் வெள்ளை முட்டையேதான் இட்டுக்கொண்டிருக்கும். பொது ஜனங்கள் விஷயத்தை ஏனோ தானோ என்று மறந்து விடவும் கூடாது. அதுதான் சூழ்ச்சியென்று என்னமோ எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் உங்கள் இஷ்டம். யோசனை மதியுள்ளோர் பிழைக்கட்டும். மயங்கினவன் உறங்கட்டும்.

இன்னொரு காரணங்கூட என் மனதில் பட்டது. அது என்ன தெரியுமா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பது. அதற்கு எது நேர்ந்தாலும் போதும். வெறும் வாய்க்கு அவல் ஆப்பிட்ட மாதிரி. தும்பினாற் போதும். பொய்ப்பிரசாரந்தான். கேட்கத்தான் மண்டூகங்கள் மந்தையாய் வருமே. சேர்மன் ஒரு சாயபு, கமிஷனர் பாதத்தில் பிறந்தவர். இது போதாதா? அவர்களை ஒழித்துவிடவேண்டும். அப்புறம் நூல் எல்லாம் ஏக போகமாய் அநுபவிக்கலாமல்லவா?

கமிட்டி முடிவு கூட யானை குட்டிபோட்ட சமாச்சாரமாய்த்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் என்று தெரியுமா? பார்ப்பானை விட்டுக்கொடுப்பார்களா? மாட்டார்கள். ஓவர்சீயர் ஒரு பார்ப்பனர். கண்டிராக்டர் ஒரு பார்ப்பனர். அப்புறம் கேட்பானேன்? முடிவு எப்படி இருக்குமென்று.

ஆகையினால் தான் வந்து விட்டது! என்றும், இதோ! அதோ! என்றும் ஊரைப் புரளி பண்ணுகிறார்கள். தர்மஞ்செய்கிறவன் எப்பொழுதும் ஓசைப்படாமல் செய்வான். நானும் இதை ரகசியமாய்ப் பகிரங்கப்படுத்திப் போட்டேன்.

குடி அரசு – கட்டுரை – 13.06.1937

You may also like...