காந்தியார் இறக்கம்

“உச்சாணிக்” கொம்பிலே ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த காந்தியார் படிப்படியாக இறங்கி இப்பொழுது தரை மட்டத்துக்கு வந்து விட்டார். விசேஷாதிகாரங்களை உபயோகிப்பதில்லையென்று எழுத்து மூலம் கவர்னர்கள் வாக்குறுதியளிக்க வேண்டுமென்று அவர் வகுத்த முதல் நிபந்தனை கருவிலேயே அழிந்து போயிற்று. அப்பால் கவர்னர் விசேஷாதிகாரங்களைப் பிரயோகம் செய்யமாட்டார் என்று காங்கரஸ் கட்சித்தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் போதுமென்று காந்தி நிபந்தனை மாற்றமடைந்தது. கவர்னர்கள் அதையும் லôயம் செய்யவில்லை. மூன்றாவதாக வாக்குறுதிப் பிரச்சினையை பஞ்சாயத்தார் முடிவுக்கு விடவேண்டுமென்று காந்தியார் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதையும் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உடனே அவருக்குச் சிறிது அலுப்புத் தட்டிற்று. “விசேஷ நிபந்தனை எதுவும் வேண்டாம். மந்திரிமாருக்கும் கவர்னர்களுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டால் கவர்னர்கள் மந்திரிமாரை “டிஸ்மிஸ்” செய்து விடட்டும்” என்றார். அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. கடைசியாக அவர் சோர்வடைந்து “டிஸ்மிஸ் செய்யவேண்டாம். ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று மந்திரிமாரைக் கேட்டுக்கொண்டால் போதும்” என தமது நிபந்தனையைக் கரைத்துக்கொண்டு விட்டார். அம்மட்டோ பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் மனக்கசப்பு ஏற்படாமல் தடுக்க தன் உயிரைக்கூட விடத் தயாரென்றும் அவர் கூறுகிறார். “சாத்தான் சர்க்கார்” மீது காந்தியாருக்கு இவ்வளவு காதல் ஏற்பட்டிருப்பது ஒரு பெரிய அதிசயமல்லவா? ஆனால் இவ்வளவு தூரம் அவர் கீழே இறங்கி வந்த பிறகும் பிரிட்டிஷார் அசையவே இல்லை. காந்தியாரின் கடைசிப் பேச்சில் “பார்லிமெண்டின் உத்தேசத்தை அநுசரித்த யோசனை எதுவும் காணப்படவில்லை என்று ஒரு குட்டி அதிகாரி பார்லிமெண்டிலே கண்டிப்பாகக் கூறிவிட்டார். தமிழ்நாடு காங்கரஸ் கட்சித் தலைவர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் சர்க்காரை குல்லாய் போட தம்மாலான ஜாலவித்தைகள் எல்லாம் செய்கிறார். “முட்டுக்கட்டை போட வாக்குறுதி கேட்கவில்லையே. சர்க்காரோடு ஒத்துழைக்கவும் நல்லெண்ணத்தைப் பெறவும் தானே வாக்குறுதி கேட்கிறோம்” என்று கூட அவர் பச்சையாகச் சொல்லிக்காட்டிவிட்டார். ஆனால் சர்க்கார் அசையவில்லை. இந்த லக்ஷணத்தில் காந்தி பேச்சும் ஆச்சாரியார் பேச்சும் காங்கரஸ்வாதிகள் பலருக்கு மிக்க அதிருப்தியைக் கொடுக்கத் தொடங்கிவிட்டன. பொறுப்பு வாய்ந்த தலைவரான ராஜகோபாலாச்சாரியார் கவர்னர்களுக்கு ஆலோசனை கூறும் முறையில் பேசுவது காங்கரஸ் கொள்கைக்கு முரணானதென்று தோழர் ராபி அகமத் கித்வாய் கூறுகிறார். சீர்திருத்தத்தை எதிர்த்துத் தோற்கடிக்கும் பேச்சைக் காற்றுவாக்கில் பறக்க விட்டு விட்டு சர்க்காரோடு சமரசம் பேச காந்தியும் ஆச்சாரியாரும் துடித்துக் கொண்டு இருப்பது சரியல்லவென்றும் அவர் கூறுகிறார். தோழர் மாசானிக்கும் காந்தியார் போக்கு மிக்க ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கிறது. சீர்திருத்தத்தை நிறுத்திவைப்பது மூலம் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் மனக்கசப்பும் துவேஷமும் உண்டாவதைத் தடுக்கப் பிராணத் தியாகம் செய்யவும் தயார் என்று காந்தியார் கூறுவதைத் தோழர் மாசானி வன்மையாகக் கண்டிக்கிறார். “சீர்திருத்தத்தை ஒழிப்பதுதானே காங்கிரசின் லôயம். எனவே அதைத் தடுக்க காந்தியார் ஏன் பிராணத் தியாகம் செய்யவேண்டும்?” எனத் தோழர் மாசானி ஆணித்தரமாகக் கேட்கிறார். காங்கரஸ் வேண்டுவது அதிகாரமேயன்றி சர்க்காரோடு சமரசமல்ல வென்றும் அவர் கூறுகிறார். இவ்வாறாகக் காங்கரஸ்காரருக்குள்ளேயே லடாய் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இந்தக் குழப்பத்தில் தோழர் பட்டாபி சீதாராமையாவும் ஒரு கதைகட்டி விட்டிருக்கிறார். காந்தியாரின் கடைசி நிபந்தனையை சர்க்கார் ஒப்புக்கொள்ளாவிட்டால் காந்தியார் உண்ணாவிரதமிருக்கக்கூடுமென்று தோழர் பட்டாபி கூறுகிறார். தனது சம்பந்தியான ஆச்சாரியாருக்கு உதவி புரிவதற்காக காந்தியார் ஒரு கால் பட்டினி கிடக்கவும் கூடும். ஆனால் அப்பட்டினி கிடக்கப்போவது சாத்தான் சர்க்காரைக் கவிழ்ப்பதற்காக அல்ல வென்பதையும் சாத்தான் சர்க்காரோடு சமரசம் செய்து கொள்வதற்காகவே என்பதையும் தோழர்கள் முக்கியமாக ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.06.1937

You may also like...