துறையூரில் சுயமரியாதைப் பிரசாரம் கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்
~cmatter
எந்தவிதமான கேள்விக்கும் பதில் சொல்லி பொதுமக்களை திருப்திப்படுத்தத்தான் வந்திருக்கிறோம் என்றும், காங்கிரஸ்காரர்களைப் போன்று பதில் சொல்லாது கூட்டத்தை கலைத்துவிட்டுப் போக வரவில்லை என்றும், தேசபக்தி என்பது தற்கால காங்கிரஸ் நவீன பக்தர்களுக்கு மட்டும் சொந்தமல்லவென்றும், ராஜகோபாலாச்சாரியார் கூட்டம் நாளைய தினம் சுயராஜ்யம் வருகிறது என்றால் நான் இன்றைய தினமே சுயராஜ்யம் வரவேண்டும் என்று சொல்லுகிறேன் என்றும், ஆனால் இன்று சுயராஜ்யம் கிடைக்குமானால் பார்ப்பனரல்லாதாரின் உரிமைக்கு யார் உத்திரவாதி என்றும், இன்று மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் ஆதிக்கம் செலுத்தும் பிராமணக் கூட்டம் காங்கிரசின் பேரால் நம்மீது ஆதிக்கம் வகிக்க சட்டசபையில் 160 ஸ்தானங்களைக் கொண்ட கட்சியில் 49 பார்ப்பனர்கள் ஆதிக்கம் வகிக்கவும் 40 ஸ்தானங்களைக் கொண்ட சென்னை கார்ப்பரேஷனில் 11-பார்ப்பனர்கள் ஆதிக்கம் வகிக்கிறார்கள் என்றும் பதவி ஏற்று மக்களுக்கு நன்மை செய்வதாக ஓட்டுப்பெற்று இப்பொழுது உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்திகள் போன்று விழிக்கிறார்கள் என்றும், திரும்பவும் தேர்தல் வந்தால் மக்களை ஏய்க்க சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும், இப்பொழுது புதிதாய் ஏற்பட்டுள்ள மந்திரிகள் தங்கள் கட்சி அல்லவானாலும் ஏதோ நல்ல காரியம் செய்ய திட்டம் போட்டு கவர்னர் அங்கீகாரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களென்றும் மதத்தின் பேராலும் சுயராஜ்யத்தின் பேராலும் ஒரு கூட்டம் மட்டும் ஆதிக்கம் வகிக்க இனி முடியாது என்றும் சொற்பொழிவாற்றினதோடு ஏற்கனவே கொடுக்கப்பட்ட அநாமத் கேள்விகளுக்கும் கேள்வி கேட்பவர்கள் வெட்கப்படுமாறும் குறுகிய நோக்கத்தோடு கேள்வி கேட்பவர்கள் திருந்தும் முறையிலும் சுமார் 3-மணி நேரம் உணர்ச்சியோடும் ஆணித்தரமாகவும் சுயமரியாதைக் கட்சியில் நன்மை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து ஜஸ்டிஸ் சுயமரியாதை கொள்கைகளையும் குறிப்பாக துறையூர் சுயமரியாதை சங்கத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் பேசி முடித்தார்.
குறிப்பு: 25.04.1937 ஆம் நாள் துறையூர் சிவன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற சுயமரியாதைப் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசியதின் சுருக்கம்.
குடி அரசு – சொற்பொழிவு – 02.05.1937