கைதிகள் விடுதலை
அரசியல் கைதிகளை காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை செய்கின்றது. இதற்கு பிரிட்டீஷ் அரசாங்கம் மேலொப்பம் போடுகின்றது. இதன் காரணம் என்ன என்பது மக்களுக்கு விளங்க வேண்டாமா? இதிலிருந்து பிரிட்டீஷ் அரசாங்கம் பணிந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. அப்படி நினைப்பது களிமண் தலையேயாகும். பிறத்தியாரை அந்தப்படி நம்பும்படி யாராவது எடுத்துச் சொல்வது வடிகட்டின முட்டாள்தனமோ இல்லாவிட்டால் அயோக்கியத்தனமோ ஆகும்.
ஏனெனில் காங்கிரசானது 14.7.37-ல் பிரிட்டீஷ் அரசாங்கத்தை சரணாகதி அடைந்து “அரசாங்கத்துக்கும் சட்டதிட்டத்துக்கும் அரசருக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துவருகிறேன்” என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு அரசாங்கத்தின் அபயம் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கு முன் செய்த குற்றங்களுக்கு ஆக தண்டிக்கப்பட்டவர்களை பிரிட்டீஷ் அரசாங்கம் லீ வினாடி யாவது ஜெயிலில் வைத்திருக்க அவசிய மென்ன? என்று கேட்கின்றோம்.
உப்பு சத்தியாக்கிரகத்தின்போது ஜெயில் வைக்கப்பட்ட கைதிகளை காந்தியார், இர்வின் பிரபுவிடம் “இனி உப்பு காச்சுவதில்லை, மறியல் செய்வதில்லை, உத்திரவு மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வ தில்லை” என்று வாக்குறுதி கொடுத்து கையெழுத்து போட்டுவிட்டு வந்தவுடன் (காங்கரஸ் சர்க்கார் இல்லாமலேயே) எல்லோரும் விடுதலை அடைந்து விட்டார்கள். ஆகையால் இனி அரசியல் கைதி என்பதாக ஒரு கைதி காங்கரசின் பேரால் ஜெயிலில் இருக்க இடமே இல்லை. காங்கரஸ் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்தபிறகு காங்கரஸ் ராஜத் துரோக கைதி ஜெயில் இருக்கவும் வைக்கப்படவும் இடமே இல்லை. சர்க்காரை ஆதரித்து எழுதித் தீரவேண்டிய நிலைமை காங்கரஸ் பத்திரிகை களுக்கு ஏற்பட்டு விட்டது. காங்கரஸ் பத்திரிகைகளுக்கு இனி ஜாமீன் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. வாங்கியதையும் திருப்பி கொடுத்து விட வேண்டியதுதான்.
அதுபோலவே காங்கரஸ் தொண்டர்களுக்கோ காங்கரஸ் பொதுஉடமை – அபேதவாதிகளுக்கோ சர்க்கார் சி.ஐ.டி.களும் இனி போடவேண்டிய அவசியமில்லை. எந்த சர்க்காரும் தங்களை முழு சரணாகதி அடைந்தவர்களுக்கு காவலோ நிபந்தனையோ ஏற்படுத்த மாட்டார்கள்.
ஆகையால் இதில் எவ்வித அதிசயமோ சுயேச்சை புத்தியோ கிடையாது என்பதோடு இந்த விடுதலை காரியம் பிரிட்டிஷ் சர்க்கார் அதிகாரிகளிடம் இருந்தே வெளியானதாகும் என்பதை வாசகர்கள் உணர வேண்டும். இதைபற்றிய ரகசியங்கள் இன்னும் சில பின்னால் வரும்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 25.07.1937