காங்கிரஸ்காரர்களின் சமத்துவம்
– நேரில் கண்டோன்
ஈரோடு தாலூகாவில் சென்னை சட்டசபைக்கு காங்கிரஸ் அபேட்சகராக நின்று வெற்றி பெற்ற தோழர் கே.எஸ். பெரியசாமி அவர்களுக்கு ஈரோடு காங்கிரஸ் தலைவர் ஒரு விருந்து நடத்தினார். அவ்விருந்தில் பார்ப்பனரைக் கொண்டே சமையல் செய்யப்பட்டது.
அவ்விருந்திற்கு பார்ப்பன வக்கீல்களும், சில பார்ப்பனரல்லாதார்களும் சென்றிருந்தார்கள். பார்ப்பனர்களுக்குத் தனி யிடமும், பார்ப்பனரல்லாதார் களுக்கு தனியிடமுமாக அமைத்து சாப்பாடு போடப்பட்டது. இதையறிந்த சில பார்ப்பனரல்லாத மானமுள்ள வாலிபர்கள் வெறுப்புக் கொண்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள். பின் அவர்களை சமாதானம் செய்யப்பட்டது.
மேலும் இந்த விருந்திற்கு ஒரு முஸ்லீம் தோழரும், ஒரு பார்ப்பன தோழரும் ஜோடியாகச் சேர்ந்து சென்றார்கள். விருந்து காரியங்களை கவனித்து வந்த மற்றொரு பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைவர் அந்த பார்ப்பன தோழரை நோக்கி “நீ அங்கே போய் சாப்பிடு” “நீ இங்கே போய் சாப்பிடு” என்று தனித் தனியான இடத்தைக் காண்பித்தார். அந்த முஸ்லீம் தோழர் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினரிடம் þ சம்பவத்தைப்பற்றி கூறினார். அவர் கவனிப்பதாகக் கூறினார்.
இது ஈரோடு காங்கிரஸ்காரரிடம் மாத்திரமல்ல, எங்கும் எல்லா காங்கிரஸ்காரரிடமும் இப்படித்தான் நடந்து வருகிறது. பார்ப்பனரல்லாதாருக்கு என்று சுயமரியாதை வருமோ? பார்ப்பன சுயராஜ்யம் வந்தால் இன்னம் என்ன நடக்குமோ?
குடி அரசு – செய்தி கட்டுரை – 14.03.1937