தேச விடுதலைக்கு வழி?

லண்டன் பொதுக் கூட்டம் ஒன்றில் காலஞ்சென்ற லாலாலஜபதி ராய் பேசியபோது, “நாங்கள் 50 வருஷகாலமாய் சுதந்தரத்துக்காகப் போராடுகிறோம். எனினும் பிரிட்டிஷார் எங்களுக்கு சுதந்தரமளிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். உடனே “கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து, “இந்தியாவின் ஜனத்தொகை என்ன?” என்று கேட்டார். “30 கோடி” என்றார் லாலா லஜபதி. “30 கோடிப் பேர் சுதந்தரப் போர் நடத்தியும் இன்னும் நீங்கள் ஏன் வெற்றிபெறவில்லை?” என்று அவர் கேட்டார். லஜபதிராய்க்கு பதிலளிக்க முடியவில்லை. வாஸ்தவத்தில் இந்தியர்கள் எல்லாம் ஏகோபித்து, சுதந்தரம் வேண்டும் என்றால் பிரிட்டிஷார் அன்றே கொடுத்துவிடுவார்கள். இந்தியர்களுக்குள்ளே ஒற்றுமையில்லாமலிருப்பதுதான் தற்காலக் குழப்பங்களுக்குக் காரணம். தற்காலம் நடப்பதாய்க் கூறப்படுவது சுதந்தரப்போரல்ல. பார்ப்பனரல்லாதாரையும் கையாலாகாத ஏழை எளியோரையும் எந்நாளும் அடிமைப்படுத்தி வைப்பதற்கான சூழ்ச்சிப்போரே இன்று நடைபெற்று வருகிறது. இந்தியாவிலே பல ஜாதி, பல மதங்கள் தோன்றி ஒற்றுமை இல்லாமலாய் விட்டது. ஜாதி மத பேதங்கள் ஒழிந்து இந்தியா உண்மையில் ஒரு “நேஷன்” ஆனால் தான் இந்தியா விடுதலையடையும். ஜாதிமத பேதங்கள் ஒழியாமல் அரசியல் சுதந்தரம் பெறுவது பகற்கனவேயாகும். மாதந்தவறாமல் ஹிந்து – முஸ்லீம் கலவரங்கள் நடைபெற்ற வண்ணமாகவே இருக்கின்றன. பம்பாய் ஹிந்து முஸ்லீம் கலவரத்துக்கு நிலைக்களனாகி விட்டது. சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் இன்னும் ஒழியவில்லை. சென்ற சனிக்கிழமை வரை 2000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எல்லைப்புறத் தொல்லை தாங்க முடியாததாயிருக்கிறது. எல்லைப்புறக் கலவரம் மாத சம்பவமாகி விட்டது. எல்லைப்புற ஆபத்தின் பேரால், இந்திய வருமானத்தில் பாதியை விழுங்கக் கூடிய ஒரு பெரிய இராணுவத்தை சாசுவதமாக வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.

மற்றும் மாதம் தவறாமல் பார்ப்பன மகாநாடு, பார்ப்பனரல்லாதார் மகாநாடு, ஆதிதிராவிட மகாநாடு, கிறிஸ்தவர் மகாநாடு, முஸ்லீம்கள் மகாநாடு எனப் பல மகாநாடுகள் நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. அம்மகாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைப் பார்த்தால் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பிற சமூகத்தாரிடம் நம்பிக்கையில்லையென்றே தோன்றுகிறது. தேசபக்தர்கள் என்றும் தேச விடுதலையில் பெரிய ஆர்வங்கொண்டவர்கள் என்றும் இந்தியர்களுக்கு வழிகாட்டப் பிறந்தவர்கள் என்றும் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களும் தனி மகாநாடுகள் கூட்டி பார்ப்பனர்களின் தனி உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். சனாதனிகள் என்போரும் தமது மத சுதந்தரங்களைப் பாதுகாக்கப் பெருமுயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய மத சுதந்தரங்களுக்குப் பாதுகாப்பளிப்பதினால் ஏனையோருக்கு பாதகம் ஏற்படாமலிருந்தால் தாராளமாகப் பாதுகாப்பளித்துவிடலாம். ஆனால் சனாதனிகளின் மத சுதந்திரப் பாதுகாப்பு ஏனையோருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவே இருக்கிறது. ஆகவே முதலில் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டுத் தீரவேண்டும். சமூகச் சீர்திருத்தம் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகள் நீங்கினாற்றான் ஏகதேச அளவிலாவது ஒற்றுமைக்கு வசதியேற்படும். சுயராஜ்யம் வந்த பிறகு எல்லாச் சீர்திருத்தமும் ஏற்பட்டுவிடுமென்று கூறுவது சுத்த “ஹம்பக்” பேச்சு. சமூக அரசியல் விடுதலைக்கு கராய்ச்சித் தீர்மானம் வழி வகுத்திருப்பதாகக் கூறப்படுவதும் ஏமாற்று வித்தையே. கராய்ச்சித் தீர்மானம் வாஸ்தவத்தில் வர்ணாச்சிரமத்துக்கு ஆதரவளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.

ஆதியிலே வருஷந்தோறும் காங்கிரஸ் மகாநாட்டுடன் காங்கிரஸ் மகாநாட்டுப் பந்தலிலேயே சமூகச்சீர்திருத்த மகாநாடும் நடத்தப்பட்டு வந்தது. அந்த மகாநாட்டு மூலம் சமூகச் சீர்திருத்தஉணர்ச்சியும் வலுப்பெற்று வந்தது. பின்னணியில் நிற்கும் சமூகங்கள் தமது குறைபாடுகளை உணரவும், அவைகளைப் பரிகரிக்க வழிதேடவும் வசதி ஏற்பட்டது. இது பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. பாமர மக்கள் விழிப்படைந்தால் தமது வர்ணாச்சிரமக் கோட்டை தவிடு பொடியாகிவிடுமென அவர்கள் உணர்ந்து சமூகச் சீர்திருத்த மகாநாட்டையே ஒழித்துவிட்டனர். இப்பொழுது காங்கிரஸ் சமூகச் சீர்திருத்த விஷயங்களையே கவனிப்பதில்லை. ஹரிஜன சேவா சங்கம், தீண்டாமை யொழிப்புச் சங்கம் முதலியன காங்கிரசுக்குப் புறம்பான ஸ்தாபனங்களாகவே இருந்து வருகின்றன. அந்த ஸ்தாபனங்கள் காங்கரசுக்குப் புறம்பானவைகளாயிருந்தாலும் அந்த ஸ்தாபனப் பணத்தையும் தொண்டர்களையும் காங்கரஸ் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? காங்கரஸ் தற்காலம் ஒரு பார்ப்பன ஸ்தாபனமாக இருந்து வருவதே எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம். ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டால்தான் சுயராஜ்யம் வரும் என்று முதலில் காந்தி சொன்னார். அப்பால் தீண்டாமை ஒழிய வேண்டும் என்றார். ஆனால் இந்த இரண்டும் உண்டாக உருப்படியான வேலைகள் செய்யப்படவே இல்லை. தோழர் ஜின்னாவின் 14 நிபந்தனைகளையும் காங்கரஸ் ஒப்புக்கொண்டால் ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டுவிடும். தென்னாட்டிலே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிரச்சினைகளும் முடிவு பெற்றுவிடும். தீண்டாமை ஒழிவதற்கு அனுகூலமான சட்டங்கள் ஏற்படுத்தினால் தீண்டாமையும் ஒழிந்து விடும். தேச விடுதலையில் காங்கரஸ்காரருக்கு உண்மையிலே ஆவலிருந்தால் இந்த மூன்று காரியங்களையும் செய்ய காங்கிரஸ் ஏன் முன்வரக்கூடாது? வாஸ்தவத்தில் இந்த மூன்று பிரச்சினை களையும் முடிவு செய்யாமல் அரசியல் சுதந்திரம் பெறும் முயற்சி வெற்றி பெறவே செய்யாது.

குடி அரசு – தலையங்கம் – 13.06.1937

You may also like...