கண்டன தீர்மானம்
இப்போது காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரி வேலையை ஏற்றுக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை தங்கள் முட்டாள் தனத்தினால் தவற விட்டு விட்டு மந்திரி பதவி ஏற்றுக்கொண்டவர்கள் மீது பாய்வதும் அவர்களை வைவதுமான இழிவு வேலையில் இறங்கி இருப்பதோடு ஆங்காங்குள்ள பார்ப்பனர்களையும் அடிமைகளையும் பிடித்து புது மந்திரிகளை கண்டித்து தீர்மானம் போட்டு நிறைவேற்றப்பட்டதாக விளம்பரம் செய்து பிரசுரிக்கச் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டு அந்தப்படியே பல தீர்மானங்கள் செய்வதாக பிரசுரித்தும் வருகிறார்கள். இது ஒரு இழிவான தந்திரமேயாகும். வக்கீல்கள் பெரிதும் பார்ப்பனர்களாக இருப்பதாலும் அவர்களுக்கும் பாமர மக்கள் மீது செல்வாக்கு இருப்பதாலும் உள் நாட்டு விரோதத்தால் சுலபத்தில் அடிமைகள் கிடைப்பதாலும் இம்மாதிரி காரியங்கள் செய்ய நினைக்கப் பார்ப்பனர்களுக்கு செளகரியமிருக்கிறது. ஆனபோதிலும் நாம் அதற்குப் பயப்படவில்லை.
ஆனால் பொது ஜனங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம்.
அதாவது ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கங்களும் அனுதாபிகளும் சுயமரியாதைச் சங்கக்காரர்களும், காங்கிரஸ்காரர்கள் பொய்யும் புளுகும் பேசி பாமர மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்று மெஜாரிட்டியாகியும் அரசியல் சட்டப்படி மந்திரி பதவி ஏற்க முட்டாள் தனமாக மறுத்துவிட்டு வீணாக நாட்டில் கலவரமும் காலித்தனமும் செய்து வருவதை பொது ஜனங்கள் கண்டிக்கிறார்கள் என்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றி பத்திரிகைகளுக்கு அனுப்பி வரவேண்டுமாய் விரும்புகிறோம். இதை அவசியம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள காங்கிரஸ் அல்லாதவர்கள் செய்ய வேண்டியது அவசியமாகும். இல்லாதவரை காங்கிரஸ் தொல்லை ஒழிவது கஷ்டமாகிவிடும் என்று கருதுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 09.05.1937