காங்கிரஸ் ஆட்சியின் பயன்

காங்கிரஸ்காரர்கள் பாமர மக்களை ஆசைகள் காட்டி ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அசாத்தியமான காரியங்களையெல்லாம் சாதித்து விடுவதாகக் கூறியவைகளை பாமர மக்கள் நம்பிவிட்டார்கள். பாமர மக்களுக்கு போதிய அரசியல் ஞானம் இல்லாததால் எது சாத்தியம் எது அசாத்தியம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனபோதிலும் காங்கிரஸ்காரர்கள் சிற்சில ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று இன்றைக்கு 2, 3 வருஷங்களாகிவிட்டன. ஒரு சிலவற்றிற்கு முழு காலாவதியும் ஆகிவிட்டன. ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்த அந்தந்த ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன? மக்கள் அடைந்த நலன் என்ன? முன்பு இருந்துவந்த நிலைக்கு இப்போது ஏற்பட்ட மாறுதல் என்ன? என்று ஒரு (பாலன்ஸ் ஷீட்) வரவு செலவு ஒரட்டு டாப்பு போட்டு பார்த்தால் பாமரமக்களுக்கு இனியாவது உண்மை விளங்கும் என்று கருதி சிலவற்றை வெளியாக்குகிறோம்.

தமிழ்நாட்டு ஸ்தல ஸ்தாபனங்களில் மிக பெரிய ஸ்தாபனம் மதுரை முனிசிபாலிட்டியாகும். இது இந்த மூன்று வருஷகாலமாக பலமான காங்கிரஸ் மெஜாரிட்டியால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. சர்க்காரோ ஜஸ்டிஸ் கட்சியோ வேறு எவ்விதமான கட்சிப் பிரதிகட்சித் தொல்லையோ இதில் பிரவேசிக்க இடம் இல்லாமல் சாமியும், பூசாரியும் ஒரே ஆளாய் இருப்பது போல் மதுரை முனிசிபாலிட்டி காங்கிரசின் ஏகபோக ஆட்சியிலேயே இருந்து வந்திருக்கிறது.

இந்த ஆட்சியில் மதுரை பொது ஜனங்களுக்கு காங்கிரஸ் குறைத்த வரி எவ்வளவு? செய்த நன்மை எவ்வளவு? என்று பார்க்கப் போனால் சென்ற இரண்டரை வருஷ காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ்காரர்கள் 29 அதிக வரி போட்டிருப்பதாய் மதுரை வரி கொடுப்போர் சங்கத்தார்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அவைகளில் ஏதாவது ஒன்று இரண்டு தவறுதலாக இருந்தாலும் இருக்கலாம். ஆனபோதிலும் ஒரு சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது என்கின்ற முறையில் அதை அடியோடு அலட்சியப்படுத்தி விடுவதற்கு இல்லை. அவ்வறிக்கை வெளிவந்து ஒரு மாதமாகியும் அதற்கு மறுப்பும் காங்கிரஸ்காரர்களால் வெளியிடப்படவுமில்லை.

அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அனேக வரிகள் ஒன்றுக்கு இரண்டாகவும் ஒன்றுக்கு பத்தாகவும் ஒன்றுக்கு ஐம்பதாகவும், உயர்த்தியும் சில புதிய வரிகள் போட்டும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஒரு விஷயத்தில் அதாவது தெருப்பக்கம் விரியும்படி வைக்கப்பட்டிருக்கும் கதவுகளுக்கு வருஷத்துக்கு 0-4-0 அணாவாக இருந்ததை வருஷம் ஒன்றுக்கு 12-0-0 ரூபாயாக ஆக்கி இருக்கிறார்களாம்.

சுடுகாட்டில் பிணம் சுடும் காவல் வெட்டியானுக்குக் கூட 8 அணாவாக இருந்த வரியை 2 ரூபாயாக ஆக்கி விட்டார்களாம்.

பால் விற்கின்ற பெண்களுக்குக் கூட ஒரு ரூபாய் வரி விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.

பால் விற்கிற வீட்டுக்கு 3 ரூ வீதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறதாம்.

மற்றும் இதன் முழு விபரங்களும் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.

சென்னை கார்ப்பரேஷனிலும் இதுபோலவே காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் வந்து நிர்வாகத்தை ஏற்று நடத்தியதில் எவ்வளவு அதிக வரி போடப்பட்டது என்றும் மக்களுக்கு எவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டன என்றும் முன்னமே பலதடவை குறிப்பிட்டிருக்கிறோம்.

ஆகவே காங்கிரஸ்காரர்கள் வரி குறைக்கும் விஷயத்திலும், புதிய வரி போடாமல் இருக்கும் விஷயத்திலும் மக்களுக்கு நன்மை செய்யும் விஷயத்திலும் முன்பு இருந்த நிருவாகத்தில் இருந்ததைவிட கடுகளவாவது அனுகூலமாய் – மக்களுக்கு நன்மையாய் செய்யும் விஷயத்திலும், மக்களுக்கு நன்மையாய் நடந்திருக்கிறார்கள் என்று சொல்ல இதுவரை ஏதாவது ஒரு சிறு ஆதாரமாவது ஏற்பட்டதா என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டுகிறோம். ஒரு சமயம் காங்கிரஸ் செய்த நன்மை நமக்குத்தான் தெரியவில்லை என்று சொல்லுவதானாலும் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்று ஆட்சிக்கு வந்த எந்த ஸ்தாபனங்களிலாவது முன் இல்லாத மாதிரியில் ஏதாவது ஒரு சிறு நன்மையாவது மக்களுக்குச் செய்ததாக – ஏற்பட்டதாக எந்த காங்கிரஸ் பத்திரிகையாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறதா என்றாவது கவனித்துப் பார்க்கவேண்டுகிறோம்.

யோக்கியமான முறையிலோ தகுதியான வழியிலோ இதுவரை நடந்து வந்த மாதிரியிலோ மக்களின் ஓட்டுகளைப் பெற அருகதையற்ற மக்கள் பாமர மக்களை ஏமாற்ற வேண்டுமென்றே அற்பத்தனமான பொய்யும் பித்தலாட்டமும் கேவலமான பழிகளும், கற்பனைக் கூற்றுகளும் சொல்லி ஏமாற்றி பதவிக்கு வர முயற்சிக்கும் இழிவான முறையே இன்று காங்கிரஸ் பிரசாரமாய் இருந்து வெற்றி பெற்று வந்திருக்கிறதே ஒழிய யோக்கியமான முறையில் ஒரு வெற்றியும் அடையவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, தென் ஆற்காடு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம் முதலிய ஜில்லா போர்டுகளில் காங்கிரஸ் பிரசிடெண்டுகள் இருந்து தக்க மெஜாரிட்டியுடன் நிர்வாகம் நடத்துகிறார்கள். இந்த பிரசிடெண்டுகளால் இந்த போர்டுகளுக்கு இதுவரை ஏற்பட்ட புது நன்மை இன்னது என்று யாராவது சொல்ல முடிந்ததா? எந்த காங்கிரஸ் பார்ப்பன பத்திரிக்கையாவது காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு போர்டுகள் வந்த பிறகு இன்ன நன்மைகள் ஏற்பட்டன என்றாவது வெளியிட முடிந்ததா? என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இவைகள் தான் போகட்டும், காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் இருந்து வேலை பார்த்த இந்திய சட்டசபையிலாவது இந்த 3 வருஷ காலத்தில் ஏதாவது ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது ஓட்டர்களுக்கு உண்டாகும்படியான வேலைகள் செய்தார்களா? அவைகளால் ஏதாவது பயன் ஏற்பட்டதா என்பதையாவது யோசித்துப் பார்க்கும்படி நினைவூட்டுகின்றோம். வெறும் கூலிக்கூப்பாடும் பார்ப்பன சூழ்ச்சியும் மற்ற கட்சிகளிலிருந்து வாலும், மூக்கும் அறுபட்டுப்போய் சரணாகதி அடைந்த நன்றி விஸ்வாசமற்ற சுயநல மக்களின் துரோகமும் சேர்ந்து பாமரமக்களை சதி செய்து விட்டதாலேயே காங்கிரஸ் மனித சமூகத்துக்கு நன்மை செய்யும் ஸ்தாபனமாக ஆகிவிடுமா? மக்கள் காங்கிரசை மதித்து விட்டார்களா என்றும் கேட்கின்றோம்.

இதுவரை இந்த 50 வருஷ காலமாக இந்த நாட்டுக்கு அல்லது இந்த நாட்டு மக்களுக்கு காங்கரசினால் இன்ன நன்மை ஏற்பட்டது என்று இதுவரை தோழர்கள் காந்தியார் முதல் உபயத்துல்லா குப்புசாமி வரை யாராவது எடுத்துக்கூறி இருக்கிறார்களா? இப்போதாவது கூற முடிகிறதா என்று கேட்கின்றோம்.

இவ்வளவும் ஒருபுறமிருக்க “உபயோகமற்ற இன்றைய அரசியல் சட்டத்தை தகர்த்தெரியவேண்டும்” என்றும் “ஏகாதிபத்தியத்தையே அழித்து இந்தியாவில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியை ஒழித்து பூரண சுயேச்சை அடையவேண்டும்” என்றும் அதற்கு ஆக போர் தொடுக்க வேண்டும் என்றும் கூறி பல தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டு இப்போது மந்திரி பதவி ஏற்க வேண்டுமென்று அலைவதும் கொஞ்சம் கொஞ்சமாய் தாங்களே கீழே இறங்கி வந்துவிட்டதாகச் சொல்லி அரசாங்கத்தை கெஞ்சுவதும் சட்டப்படி நடப்பதாக வாக்குறுதியும், பிரமாணமும் சர்க்காருக்கு செய்து கொடுப்பதும் வெளிப்படையாகவே,

“காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவிபெற்றுக்கொள்ள வேண்டு மென்பதுதான் எனது ஆசை” என்றும்,

“இதுவரையும் காங்கிரஸ்காரர்கள் தாங்களே இறங்க வேண்டிய அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்கள், இனி சர்க்கார் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி” என்றும்,

“காங்கிரஸ் கவர்னர்களை உறுதிமொழி கேட்டதின் கருத்து காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்பதை சர்க்காரார் அனுமதிக்கிறார்களா? என்பதை அறிவதற்கே ஒழிய அரசியல் சட்டத்திற்கு விரோதமாய் நடப்பதற்கு அல்ல”” என்றும்,

“பிரிட்டிஷுக்கும், இந்தியாவுக்கும் எவ்வித மனக்கசப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன்” என்றும்,

“அதற்கு ஆக உயிரையும் விடுவேன்” என்றும்,

தோழர் காந்தியார் பிரமாண வாக்குமூலம் கொடுத்தும், அரசாங்கத்தை கெஞ்சியும் சரணாகதியடைந்த காரியங்களை கவனித்தால் காங்கிரசினிடமோ அதன் தலைவர்கள் என்பவர்களிடமோ எந்த வகையிலாவது நாணையமோ யோக்கியப் பொறுப்போ மானமோ இருப்பதாகக் கருத முடிகிறதா என்று கேட்கின்றோம்.

ஆகவே, இதுவரையில் காங்கிரசின் வண்டவாளத்தை பல வழிகளிலும் உணர்ந்த மக்கள் இனி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஊகித்தறிந்துகொள்ள வேண்டுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 06.06.1937

You may also like...