இப்பொழுதாவது புரிகிறதா
பார்ப்பன மகாநாட்டுக்கு அனுமார் கொடி
தென்னாட்டு பார்ப்பனர்களால் 24-5-37-ந் தேதி கும்பகோணத்தில் கூட்டப்பட்ட பார்ப்பன ஜாதி மகாநாட்டில் அனுமார் கொடி பறக்க விட்டதாக 25-ந் தேதி “இந்து” பத்திரிகையில் மகாநாட்டு நடவடிக்கை என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்கள் காங்கிரஸ் தேர்தல்களிலும் காங்கிரஸ் சுவரொட்டி விளம்பரங்களிலும் காங்கிரஸ் துண்டு பிரசுரங்களிலும் அனுமார் – குரங்கு உருவத்தை எதற்கு ஆக பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதும் பார்ப்பனரல்லாதார் தொண்டர்களுக்கு எதற்கு ஆக அனுமார் படையென்று பெயர் கொடுத்தார்கள் என்பதும் இப்போதாவது தெரிந்ததா என்று பார்ப்பனரல்லாதாரில் மானமும் மனிதத் தன்மையும் உள்ள தோழர்களைக் கேட்கின்றோம். இந்தக் கேள்வியானது வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்விற்கும் வழி செய்து கொள்ள காங்கிரசில் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாய் திரிபவர்களையும் திரியவேண்டிய அவசியத்திலுள்ளவர்களையும் நாம் கேட்கவில்லை. உண்மையில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என்றும் சுயமரியாதையுள்ள மக்கள் என்றும் சுதந்தர புருஷர்கள் என்றும் கருதிக் கொண்டிருப்பவர்களையே கேட்கின்றோம்.
பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத சமூகத்துக்கும் எப்போதாவது போர் தொடங்கப்பட்டு விடுமானால் அப்போது பார்ப்பனரல்லாதாரை ஜெயிக்க என்ன என்ன மாதிரியாக எப்படி எப்படியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ராமாயணக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள தந்திரத்தையே வழிகாட்டியாகக்கொண்டு நடந்து வருகிறார்கள் என்று இதற்கு முன் பல தடவை குறிப்பிட்டிருக்கிறோம் அல்லவா, அந்தக் கருத்தை இந்த மகாநாட்டு அனுமக் கொடி ருஜúப்பிக்கிறது.
அந்த முறையில்தான் தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களுக்கு அனுமாராகக் கருதப்பட்டு வருகிறார். அனுமார் ராமாயணக் கதையில் சிரஞ்சீவி பதவியும் ஆழ்வார் பட்டமும் பெற்றது போலவே இன்றைய போரில் காந்தியார் சர்வாதிகாரப் பதவியும் மகாத்மா பட்டமும் பெற்று இருக்கிறார். மற்றும் அதுபோலவே முதலில் பார்ப்பனர்களுக்கு எதிரான சமூகத்திலிருந்து விட்டு பிறகு தங்கள் சுயநலத்துக்கு அதை காட்டிக்கொடுத்து பார்ப்பனர்களை தஞ்சமடைபவர்களையும் விபீஷண ஆழ்வாரென்பவருக்கு ஒப்பிட்டு பேசி பயன் படுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இவைகளை அவ்வப்போது நாம் எடுத்துக்காட்டி வருவதை சிலர் நம்பாமலும் ஒப்புக்கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் 24-5-37-ந் தேதி கும்பகோணத்தில் நடந்த பார்ப்பனர்களின் ஜாதி மகாநாட்டுக்கு அனுமக்கொடி கட்டப்பட்டது என்பதை உணர்ந்த பிறகு இப்போதாவது புரிகிறதா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 30.05.1937