கட்சி மாறுதல்
இப்போது பலர் கட்சிவிட்டு கட்சி மாறுகிறார்கள். அதிலும் பல கட்சிகளை விட்டு காங்கிரசில் பலர் வேகமாய்ச் சேருகிறார்கள். உத்தியோகம் பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்தால்தான் கிடைக்கும் என்கின்ற எண்ணத்தை சிலருக்கு சமீபத்தில் நடந்த முட்டாள் தேர்தல் காட்டிவிட்டதால் அவசரத்தில் யார் யாருக்குப் பதவிகள் வேண்டுமோ அவர்களும் பதவிகள் இல்லாவிட்டால் யார் யாருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்காதோ அவர்களும் வாழ்வுக்கும் வேறு யோக்கியமான வழியில்லாதவர்களும் இப்போது வேகமாகக் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சிலர் பட்டத்தையும் விடுகிறார்கள். தரித்திரம் வந்த பல குடும்பங்கள் தங்களது உயர்ந்த விலையுள்ள பட்டுச் சேலைகளை எவ்வளவு புதிதாயும் நல்லதாயும் இருந்தாலும் பகுதி விலைக்கும் கால் விலைக்கும் விற்று குடும்பம் நடத்தத் துணிவது போல் தங்கள் பட்டங்களை இப்போது அவசர விலைக்கு விற்று வருகிறார்கள். இச்செய்கை அவரவர்களின் தரித்திர நிலைமையைக் காட்டுகிறதே தவிர இதனால் எவ்வித உயர்குணமும் ஏற்பட்டு விடவில்லை.
தோழர் சீதாராம ரெட்டியார் ராவ்பகதூர் பட்டத்தை விட்டார். எப்போது விட்டார்? போலீசார் காங்கிரஸ்காரரை அடித்த போதா? உப்புக்காய்ச்சினவர்களை புளியமாரால் விளாசி புத்தி கற்பித்த போதா? என்றால் அல்லவே அல்ல. பின்னை எப்போது என்றால் சர்க்கார் தயவில், நாமினேஷன் பலத்தில் சர்க்கார் காலில் விழுந்து சர்க்கார் இஷ்டப்படி தாளம் போட்டு ஜில்லா போர்டு தலைவராகி அஜீரணம் உண்டாகும்படி நன்றாக வயற்றை நிரப்பிக்கொண்டு, தேவஸ்தான போர்டு கமிஷனராகி மாதம் 1000 ரூபாய் வீதம் (படியும் சேர்ந்து) 5 வருஷம் கை நீட்டி வாங்கி, பிறகு மாதம் 1500 ரூபாய் வீதம் திருப்பதி தேவஸ்தான கமிஷனராக பல வருஷம் இருந்து, மறுபடியும் வேலை கொடுக்கவில்லை என்ற பின் ஜஸ்டிஸ் கட்சி மீது கோபம் வந்து சர்க்கார்மீது “வெறுப்புத்” தோன்றி “தேச பக்தி” ஏற்பட்டு பட்டம் விட்டு காங்கிரசில் சேர்ந்தார் என்றால் இவரது கட்சி மாறுதலிலும் பட்டம் விட்டதிலும் எவ்வளவு நாணையமும் யோக்கியப் பொறுப்பும் இருந்தது – இருக்கிறது என்பதை இனியும் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம்.
மற்றொரு ரெட்டியார் அவரைவிடப் பெரியவர். ஏனென்றால் முன் சொன்னவர் ராவ்பகதூர் இவர் திவான்பகதூர் அல்லவா? அவர் யாரென்றால் தோழர் எம்.கே. ரெட்டியார் ஆவார். இவர் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து சுப்பராயன் கட்சியாகி, முழுசுயமரியாதைக்காரர் ஆகி “சாமியை பூட்ஸ் காலால் உதைப்பேன்” என்று முழக்கி மறுபடியும் ஆஸ்திகராகி என்டோமெண்டு போர்டுக்கு விண்ணப்பம் போட்டு தனக்கு சாமி நம்பிக்கை இருப்பதாக மகாநாடுகளுக்கு தந்திகொடுத்து மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில் புகுந்து பிறகு “எதிரி”யாகிய சூனாம்பேட்டையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மற்றும் என்னென்னமோ செய்து பார்த்து கடசி வரை தனக்கு ஜில்லாபோர்டு கிடையாது என்று கருதியவுடன் செங்கற்பட்டு போர்டை இரண்டாகப் பிரிக்கும்படி பொப்பிலி கோவிலுக்கு காவடிதூக்கி நடந்து ஒன்றும் முடியாமல் போனபிறகு கடைசியாக சன்யாசத்துக்கு முதல்படியான காங்கிரசில் சேர்ந்து தேசபக்தராகி பட்டத்தை விட்டு “கடவுள் இருக்குமிடம் காங்கிரசுதான்” என்று கண்டு பிடித்துவெளிப்படுத்திவிட்டார்.
மற்றொரு ரெட்டியார் வேண்டுமானால் மந்திரி ரெட்டியாரைத் தான் சொல்லவேண்டும். அவர் இப்படி இல்லை. துறவி ஆகி விட்டார். மந்திரி ரெட்டியார் பப்ளிக் பிராசிக்யூட்டராகி ஜில்லா போர்டு பிரசிடெண்டாகி மறுபடி கிடைக்காதென்றவுடன் முழுத் துறவியாகி அஞ்ஞாத வாசத்துக்குப் போய்விட்டார். இவரது ஜில்லாவானது மிகவும் “மேன்மைபெற்ற நன்றி விஸ்வாசமுள்ள” ஜில்லாவாகும். அந்த ஜில்லாக்காரருக்கு ஜஸ்டிஸ் கட்சி மீது கோபம் வரவும் காங்கிரசில் சேரவும் வேண்டியது மிகவும் அவசியமேயாகும். ஏனெனில் திருநெல்வேலிக்காரருக்கு 2 மந்திரி வேலை, 2 தேவஸ்தான போர்ட் கமிஷனர் வேலை, 1 ஹைகோர்ட்டு ஜட்ஜú வேலை, பல முன்சீப்பு, பல ஜட்ஜிகள், பல டிப்டி கலெக்ட்டர்கள், பல தாசில், பல மேஜிஸ்திரேட் மாகாணமெல்லாம் திருநெல்வேலியே கண் உருத்தும்படியான அவ்வளவு உத்தியோகம், பதவி, பட்டம், பண வருவாய், சலுகை ஆகியவைகள் பெற்ற ஜில்லா இது. தான் கடமையைச் செய்ய வேண்டும் என்கிற முறையில் தளவாய் அவர்கள் காங்கிரசில் சேர்ந்தார். இனியும் சேரப்போகிறவர்கள் இதுபோன்றவர்களே சிலர் இருக்கிறார்கள் என்றாலும் தோழர் டானியல் தாமஸ் சேர்ந்து விட்டார். இவராலேயே அந்த ஜில்லா பாழடைந்தது. இவருக்கு சேர்மென் ஜில்லாபோர்டு வைஸ்பிரசிடெண்ட், கல்வி கமிட்டி பிரசிடெண்ட் இவ்வளவும் கட்சி பேரால் அனுபவித்தும் இப்போது கட்சி கசந்து விட்டது. மற்ற இடங்களிலும் இந்த மோஸ்தர் சிலர் இருக்கக்கூடும் இதைப்பற்றி நாம் வருந்துவதா மகிழ்ச்சி அடைவதா என்பது ஒரு பிரச்சினைதான். நாம் மகிழ்ச்சி அடையவேண்டியதுதான் கிரமம் என்பது நமது அபிப்பிராயம். யார் யார் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்ததாலும் அவர்கள் பட்டம், பதவி பெற்று நிர்வாகம் நடத்தியதாலும் கட்சிக்கு கெட்ட பேரும் தேர்தல்களில் தோல்வியும் ஏற்படுவதற்கு காரணஸ்தர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் தள்ளுவதற்கு முடியாமல் இருக்கிற காலத்தில் அவர்களாக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஜஸ்டிஸ்கட்சி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? மற்றும் நன்மை என்பதற்கு நம்மைப் பிடித்த “பொல்லாத கிரகங்கள்” மாறி காங்கிரசைப்பற்றுகின்றன என்றால் நாம் இரண்டு விதத்தில் மகிழ்ச்சியடையக் கடமைப்பட்டிருக்கிறோம். என்னவென்றால் ஒன்று நம்மை விட்டுப்பிரிந்தது, மற்றொன்று இந்த உபத்திரவங்கள் நம் எதிரிகளைப் போய் பற்றினது. இன்னும் சிலர் நம்மைவிட்டுப் போக வேண்டியவர்கள் நமக்குள் இருக்கிறார்கள். அவர்களும் போய்விடுவார்களேயானால் ஜஸ்டிஸ் கட்சிக்கு மிகவும் நன்மை செய்தவர்களாவதோடு கட்சியின் நன்றிக்கும் பாத்திரமானவர்களாவார்கள். மற்றொரு விஷயம் என்னவென்றால் இதுவரை நாம் விசனப்படத்தக்கவர்கள் யாரும் காங்கிரசுக்கு போய்சேரவில்லை. ஆதலால் இதே சமயத்தில் காங்கிரசுக்கு ஒரு வழியில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அதாவது இம்மாதிரியான குடியிருந்த வீட்டுக்கு தீ வைத்துக் கொண்டிருக்கும் குணமுள்ள ஆட்களுக்கு ஒரு போக்கிடமில்லா விட்டால் சதா ஒரே வீடு வெந்து கொண்டே இருக்கும். ஆகையால் அப்படிப்பட்டவர்கள் வேறு வீட்டுக்கும் போக சவுகரியமாயிருந்தால் பழய வீடுகள் வெந்தது போக மீதியாவது வேகாமல் இருக்கும். ஆகையால் இப்படிப்பட்ட ஆட்களுக்குப் புகலிடமாய் காங்கிரஸ் இருப்பதுபற்றி இதற்கு ஆகவும் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்த வேண்டியது கடமையாகும். எனவே இன்றைக்கு காங்கிரசில் அடிப்படி முதல் தலைப்படிவரையில் இப்படிப்பட்ட ஆட்களே கூடி இருப்பதானது மற்றக் கட்சிகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் செய்தது நன்மை என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே இன்னும் சிலரும் உடனே செல்வார்களாக.
குடி அரசு – கட்டுரை – 25.04.1937