சட்டசபை மெம்பர்களும் ஓட்டர்களும்

சட்டசபை மெம்பர்கள் அதிகப்படியான ஓட்டுகளால் தெரிந்தெடுக்கப் பட்டார்கள் என்பதில் யாதொரு ஆட்சேபணையுமில்லை. ஆனால் ஓட்டர்களுக்கு மெம்பர்கள் எந்த விதத்திலாவது ஜவாப்தாரியென்றோ மெம்பர்களுக்கு ஓட்டர்கள் எந்த விதத்திலாவது ஜவாப்தாரியென்றோ சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சட்டசபைக்கு போய் நாங்கள் இன்னது செய்கிறோம் என்று எவ்வித பொறுப்புள்ள வாக்குறுதியும் மெம்பர்கள் ஓட்டர்களுக்கு கொடுக்கவில்லை. ஓட்டர்களும் சட்டசபை மெம்பர்களை இன்னது செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு ஓட்டு செய்யவில்லை. ஏதோ இருவருக்கும் புரியாததும் சாதாரணத்தில் முடியாததுமான ஆகாயக்கோட்டை போன்ற பேச்சுகளையும் மத நம்பிக்கை போன்ற மூட உபதேசங்களையும் செய்து ஓட்டர்கள் தங்கள் கடமையை உணராமல் கண்மூடித்தனமாய் நடந்துகொள்ளும் படியான பிரசார வலிமையினாலேயே ஓட்டுச்செய்திருக்கிறார்கள். புதிய அரசியலையோ சட்டசபை அதிகாரங்களையோ நன்றாய் உணர்ந்த ஓட்டர்கள் ஓட்டு செய்தவர்களில் 100க்கு ஒருவர் இருவர்கள்கூட இருக்கமாட்டார்கள். பொதுவாக நித்திய வாழ்வில் தற்கால வாழ்க்கை முறையின் பயனாக ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத “இயற்கை” கஷ்டங்கள் அடியோடு மாற்றப்பட்டு விடும் என்கின்ற பேராசையை ஓட்டர்களுக்கு உண்டாக்கி விட்டதின் பயனாய் ஓட்டர்கள் முன்பின் யோசியாமல் சாப்பாட்டு சாமான், துணிமணி சாமான் ஆகியவை உள்ள பண்டசாலையை திறந்து விட்டு தங்கள் தங்களுக்கு வேண்டியதை அள்ளிக்கொண்டு போகலாம் என்று எழுதிய ஒரு பலகையை பண்டசாலை முன்னால் கட்டித் தொங்க விட்டு விட்டால் ஜனங்கள் எவ்வளவு பேராசையுடனும் ஆத்திரத்துடனும் சாமான்களை அள்ளிக்கொண்டு போக வருவார்களோ அது போல் ஓட்டர்கள் மதிமயங்கி ஓட்டுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆதலால் மெம்பர்களுக்கு ஓட்டர்களுடைய கட்டளையோ வேண்டுகோளோ ஏதும் அடியோடு இல்லை என்றே சொல்லிவிடலாம். சட்டசபையினால் தங்களுக்கு இன்ன பலன் தான் கிடைக்கும் இவ்வளவு தான் எதிர்பார்க்கலாம் என்கின்ற அறிவு போதியஅளவு இல்லாத மக்களே பெரிதும் பொய்ப்பிரசாரத்தில் ஏமாந்து ஓட்டுச் செய்திருக்கிறார்கள். ஆகையால் மெம்பர்களுக்கு பொறுப்புள்ள கடமை எதுவும் இல்லை என்றே சொல்லுவோம். மெம்பர்களும் தங்கள் பிரசாரத்தில் பூரணசுயேச்சை சுயராஜ்ஜியம், வேலையில்லாத் திண்டாட்டத்தை அடியோடு ஒழிப்பது, எல்லா மக்களுக்கும் பட்டினியே இல்லாமல் செய்து விடுவது, புதிய அரசியலை ஒழிப்பது, முட்டுக்கட்டை போடுவது, ஆகாய கங்கை தருவிப்பது, ராமராஜ்ஜியமாக்குவது என்பன போன்ற ஒன்றுக்கொன்று முரணானதும் அர்த்தமற்றதும் மக்கள் சுலபத்தில் ஏமாறக் கூடியதுமான பேச்சுகளைப் பேசி ஓட்டு கேட்டார்களேயல்லாமல் சட்டசபைக்குப் போய் மந்திரி பதவி ஏற்பதோ அல்லது மறுப்பதோ அல்லது நிபந்தனை கேட்பதோ, கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்பதோ ஆகிய எவ்வித குறிப்பான காரியத்தைப்பற்றியும் பிரஸ்தாபிக்காமல் சட்டசபை காரியங்களையெல்லாம் தங்களுக்கே விட்டு விடும்படியும் சமயம்போல் செளகரியம் போல் தாங்கள் நடந்து கொள்ளுவதாகவும் சொல்லியே – விளக்கமாக இப்படிச் சொல்லா விட்டாலும் தங்கள் இஷ்டப்படியெல்லாம் நடப்பதற்கு இடம் வைத்துக்கொண்டே ஓட்டுவாங்கி இருக்கிறார்கள்.

பதவி ஏற்பு விஷயத்திலும் கூட ஒரு கூட்டத்தில் ஒருவர் பதவி ஏற்கக் கூடாது என்றும் மற்றொருவர் ஒருபதவி ஏற்போம் என்றும் பேசியும், ஒரு தீர்மானம் பதவி ஏற்கக்கூடாது என்றும் மற்றொரு தீர்மானம் ஏற்கவேண்டும் என்றும் பிரரேபித்துக் கொண்டும் அந்தப்படியே பல மகாநாடுகளிலும் தீர்மானங்கள் செய்து கொண்டும் வந்தார்களே ஒழிய பதவி ஏற்பதற்கு ஏதாவது நிபந்தனை கேட்போம் என்றோ அது எப்படிப்பட்ட நிபந்தனையாய் இருக்கும் என்றோ, அந்த நிபந்தனை கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ன செய்வோம் என்றோ காங்கிரஸ்காரர்கள் யாரும் எப்போதும் எந்த ஓட்டருக்கும் எடுத்துச் சொன்னதே இல்லை. அவ்வளவு மாத்திரம்தானா என்று பார்த்தால் இப்படிப்பட்ட விஷயத்தைப்பற்றி அதாவது நிபந்தனை உத்திரவாதம் என்பவைகளைப்பற்றி காங்கிரஸ்காரர்களே காந்தியார் சொல்லும் வரை கனவில் கூட நினைத்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினை எழுந்ததே ஓட்டர்களுக்கு மெம்பர்கள் ஜவாப்தாரிகள் என்கின்ற நிலை சிறிதுகூட இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களில் தோழர் ஜவஹர்லாலுக்கும் ராஜகோபாலாச்சாரிக்கும் உள்ள அபிப்பிராய பேதத்தை அதாவது பதவி ஏற்கக்கூடாது என்றும் பதவி ஏற்க வேண்டும் என்றும் உள்ள வாதத்தை எப்படியாவது ராஜிப்படுத்தி காங்கிரசில் பிளவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியத்துக்கும் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் ஜஸ்டிஸ் கட்சியால் ஆட்டம் கொடுக்கப்பட்டு விட்டதை மறுபடியும் பலப்படுத்திக் கொடுப்பதற்கு ஆகவும் தோழர் காந்தியாரால் அதுவும் “காங்கிரஸ் நடவடிக்கைகளில் எனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை; எவ்வித அபிப்பிராயமும் கொடுப்பதற்கு நான் தகுதி உடையவனல்ல; அப்படி ஏதாவது அபிப்பிராயம் கொடுப்பது சத்தியத்துக்கும் நாணையத்துக்கும் விரோதம்” என்று சொல்லியவரும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலோ பிரசாரத்திலோ வேலைத்திட்டத்திலோ ஓட்டர்களிடம் காங்கிரஸ்காரர்கள் நடந்துகொண்டதிலோ சிறிதும் சம்மந்தமில்லாதவருமான காந்தியாரால் திடீரென்று சொல்லப்பட்ட ஒரு கற்பனை நிபந்தனையாகும். இந்த நிபந்தனையை ஓட்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றோ, இந்த நிபந்தனைப்படி செய்யாத காரியத்தையோ, பதவி ஏற்பையோ ஓட்டர்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள் என்றோ யாரும் சொல்லிவிட முடியாது.

ஆகையால் நிபந்தனை ஏற்றுக்கொள்ளவோ வாக்குறுதி கொடுக்கவோ சர்க்காரார் மறுத்தால் அதை ஓட்டர்களுடைய அபிப்பிராயத்தை சர்க்காரார் நிராகரித்துவிட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. சர்க்காரார் இந்திய அரசியல் சம்மந்தமாக ஒரு திட்டம் அல்லது ஒரு சட்டம் வெளிப்படுத்தி மக்களுக்கு தெரியும்படி வினியோகித்தாய் விட்டது. அந்த சட்டத்தை ஆதரவாக வைத்தே கோடிக்கணக்கான பேர் ஓட்டுக்கொடுத்தாய் விட்டது. அவ்வோட்டின் பேரிலேயே ஆயிரக்கணக்கான மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாய் விட்டது. 11 மாகாணங்களில் ஏதோ 5, 6 மாகாணங்களில் காங்கிரஸ்காரர்கள் மெஜாராட்டியாய் வந்துவிட்டார்கள் என்பதற்கு ஆகவே குரங்கு கையில் கிடைத்த பூமாலை போலவும் தகுதி அற்றவனுக்கும் எதிர் பாராதவனுக்கும் வந்து விட்ட பவிசு போலவும் கருதிக்கொண்டு தாங்கள் வாயில் வந்ததெல்லாம் சட்டம் என்றும் அதற்கு கட்டுப்பட்டுத்தான் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்றும் தலைகொழுத்துத் திரிந்தால் அது இந்த 20வது நூற்றாண்டில் செல்லுமா? என்று கேட்கின்றோம்.

மற்றும் காந்தியார் ஜெட்லெண்ட் பிரபு அறிக்கைக்கு விடுத்த பதிலில் கவர்னர்களை வாக்குறுதி கேட்பது சட்டப்படி செல்லத்தக்கதா என்பது தனக்கு தெரியாதென்றும் சில காங்கிரஸ் வக்கீல்கள் வாக்குறுதி கேட்பது சட்டப்படி செல்லுமென்று அபிப்பிராயம் சொன்னார்கள் என்றும் அதன் பேரிலேயே தான் வாக்குறுதி கேட்டதாகவும் சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார்.

ஆகவே இதிலிருந்து காங்கிரஸ்காரர்களுக்கும் காந்தியாருக்கும் திட்டம் இல்லை என்பதும் அரசியலை ஏற்று நடத்தும்படியான அரசியல் ஞானமும் அரசியல் சட்ட ஞானமும் இல்லை என்பதும் அவர்களுக்குள் கட்டுப்பாடோ யோக்கியப் பொறுப்போ இல்லை என்பதும் பச்சையாய் தெரிவதுடன் பாமர மக்களிடம் காந்தியாருக்கு உள்ள முட்டாள் செல்வாக்கைக்கொண்டு வெறும் குழப்பமும் தொல்லையும் விளைவித்து விளம்பரம் பெறுவதைத்தான் காங்கிரஸ் திட்டமாய் கொண்டிருக்கிறார்கள் என்றும் கருத வேண்டியிருக்கிறது.

காங்கிரசுக்காரர்கள் என்பவர்களின் உள் அந்தரங்க எண்ணம் என்ன என்பதைக் கண்டுபிடித்தால் இந்த மாதிரியான போக்கடாத்தனத்திற்கு காரணம் என்ன என்பது விளங்கும்.

அதாவது இந்தியாவில் கொஞ்ச காலத்துக்கு முன் அரசியல் வாழ்வு, அதிகாரம், பதவி ஆதிக்கம் ஆகியவைகள் ஒரு குறிப்பிட்ட வகுப்பார் கையில் சிக்குண்டு வந்தன. அதனால் அந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பார்கள் பயனடைந்து வந்தார்கள். இப்போது சகல வகுப்பாரும் கண் விழித்துக்கொண்டார்கள். அவர்கள் வகுப்புக்கு தனித்தனி முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட்டு அவர்கள் தனித்தனியாக முன்னேற்றமடைய முயற்சிப்பதில் அரசியல், பதவி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவைகளில் பங்கு பெற்று தங்கள் சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அரசாங்கமும் தங்கள் கையில் இருக்கும் அதிகாரம் மக்கள் கைக்கு கொடுக்கப்படுவதாய் இருந்தால் எல்லா வகுப்பாருக்கும் அது பயன்படும்படியாயும் ஒரு வகுப்பை ஒரு வகுப்பு அழுத்தி ஆதிக்கம் செலுத்தாமலும் இருக்கத்தக்க மாதிரியில் அதிகாரத்தையும் ஆட்சி ஆதிக்கத்தையும் மாற்றிக் கொடுக்க வேண்டியவர்களானதால் கூடுமானவரை சகல வகுப்பு நன்மைகளையும் கவனித்து அதிகாரத்தை மாற்றுவதாயிருப்பதால் காங்கிரசில் ஆதிக்கமிருக்கும் வகுப்பாருக்கு இப்போது அது கஷ்டமாய் இருந்து வருகிறது.

ஏனெனில் சகல வகுப்புக்கும் அதிகாரமும் ஆòயும் சம்மந்தமும் பரவி விட்டால் வருணாச்சிரம் ஒழிந்து விடும், பரம்பரை ஆதிக்க பாத்தியம் அழிந்துவிடும், பார்ப்பான் உயர்வு பறையன் மட்டம் என்பதும் இந்து மதம் சிரேஷ்டமானது, இஸ்லாம் மதம் கிறிஸ்தவ மதம் மிலேச்சத் தன்மை என்பதும் இந்திய இந்துக்களுக்கே தவிர அந்நியர்களுக்கு சம்மந்தமில்லை என்பதும் அடிமாய்ந்து போய்விடும். ஆதலால் இன்றைய காங்கிரஸ்காரர்களின் தொல்லையானதும் உண்மையிலேயே முழுவதும் ஜாதி, வகுப்பு, மதம், வருணாச்சிரம தர்மம் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அரசியல் தத்துவமோ தேசிய தத்துவமோ அதில் கடுகளவும் இல்லை என்பதை வாசகர்கள் உணர்வார்களாக.

இதற்கு ஆதாரம் வேண்டுமானால் காந்தியார், ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தியார் ஆகியவர்களின் பேச்சுக்களை எடுத்து புடைத்துத் தரித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். தலைவர் பண்டிதநேரு அவர்கள் “இந்து” பத்திராதிபர், “சுதேசமித்திரன்” பத்திராதிபர் ஆகியவர்கள் எழுதியது போல் தனக்கும் புத்தியில்லை, சொல்லுகிறவர்கள் பேச்சையும் கேட்காத ஆணவம் படைத்தவர் என்பதற்கு இலக்கானவர் ஆதலால் அவர் பேச்சு கவைக்குதவாத பேச்சே தவிர மற்றொன்றும் சொல்ல முடியாததாகும்.

ஆதலால் இன்று காங்கிரஸ்காரர்கள் சர்க்காரோடு சண்டை போடுவதாய்ச்சொல்லிக் கொண்டு தொல்லை கொடுப்பதும் ஜனங்களுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பதாய்ச் சொல்லிக்கொண்டு மக்களை அலைக்கழிப்பதும் துன்பத்துக்குள்ளாக்குவதும் வெறும் பித்தலாட்டமும் வகுப்பு ஆதிக்க வகுப்பு வாதமுமே அல்லாமல் வேறு ஓட்டர்கள் நலனுக்கோ நாட்டு நலனுக்கோ நன்மையானது ஒன்றும் இல்லை என்பதை உணர்வார்களாக.

குடி அரசு – தலையங்கம் – 18.04.1937

You may also like...