மன்னர் முடிசூட்டு விழா
காங்கிரஸ்காரர்கள் இந்திய மக்கள் மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வது தேசாபிமானத்துக்கு விரோதமானதென்று கூறி இந்திய மக்கள் எவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி யிருந்தும் தமிழ் நாட்டில் ஏறக்குறைய ஒவ்வொரு நகரங்களிலும் முடிசூட்டு விழாக்கள் விமரிசையாகவே நடந்திருப்பதாகச் சேதிகள் கிடைத்திருக்கின்றன. பல இடங்களில் காங்கிரஸ் மெம்பர்களும் கலந்து நடத்தியிருப்பதாகவும் சேதி வந்திருக்கிறது.
காங்கிரஸ்காரர்கள் மன்னரைப்பற்றி யாதொரு குறையும் கூறுவதில்லை. மன்னருக்கும் மன்னர் அரசாங்கத்திற்கும் அரசியல் சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதாக பிரமாணம் செய்வதிலும் தவறுவதில்லை. பலர் முடிசூட்டில் கலந்து கொண்டதிலும் குறைவில்லை. ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப் பவர்களாம் தேச பக்தர்கள் அல்லாதவர்களாம். என்னே பித்தலாட்டம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.05.1937