முதல் மந்திரி மாய அழுகை!
சம்பளம் குறையாவிடில் ஏழைகளுக்கு சோறில்லையாம்!
இவருக்கு மாதம் ரூபாய் 800 எதற்கு?
சென்னை, ஒய்.எம்.சி.எ. தேகப்பயிற்சி கல்லூரியின் ஆரம்ப விழாவில் 12-8-37ல் சென்னை சரணாகதி முதல் மந்திரி ஆச்சாரியார் பிரசங்கம் செய்ததில் ஒரு பாகம் வருமாறு:-
வீண் மாய அழுகை ஏன்?
“ஏழை மக்கட்கு அன்னமளிக்கவேண்டி மிக அதிகச் சம்பளங்களைக் குறைக்க வேண்டியது அவசியமாகின்றது. சர்க்கார் செலவைக் குறைக்க வேண்டும். தாங்களாகவே ஒவ்வொருவரும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டது. இதற்கு வந்திருக்கும் பதில்கள் ஏமாற்றமளிக் கின்றன. தாங்களாகவே சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுகிறார்களோ இல்லையோ? சர்க்கார் செலவைக் குறைக்காவிட்டால் ஏழைகட்கு சோறில்லை. எல்லா ஜனங்கட்கும் உணவளிக்க வேண்டுமென்றே நான் கேட்கிறேன்.”
என்று வழக்கம்போல் மாய அழுகை அழுகிறார். இந்த வீண் மாய அழுகை எதற்காக?
இவருக்கு என்ன செலவு?
சென்னை சரணாகதி முதல் மந்திரி ராஜகோபாலாச்சாரியார் அவர்கட்கு மாதச் சம்பளம் ரூ. 500 படிச்செலவு மாதம் ரூ. 300 ஆக ரூ. 800 வாங்குகிறார். இது தவிர சர்க்கார் செலவில் 18000 ரூபாயில் 6 மோட்டார் கார்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இவருக்கு மாதம் ரூ. 800க்கு என்ன செலவிருக்கின்றது? இதுதானா சிக்கனம்? இந்தியரின் சராசரி தினசரி வரும்படி 0-1-9 என்று வறுமையை வர்ணிக்கின்றோம். இந்திய மக்கள் பட்டினியாலும் வேலையில்லாக் கஷ்டத்தாலும் வரிப்பளுவாலும் துயரப் படுகின்றார்கள் என்று ஆச்சாரியார் பொது மேடைகளில் மாய அழுகை அழுகிறார். சென்னை சரணாகதி முதல் மந்திரியார் ஆச்சாரியார் அவர்களுக்கு மாதச் செலவிற்கு ரூபாய் ஐம்பது இருந்தால் அதுவே அதிகம். அவர் சிக்கனமாக நடக்க பொது ஜனங்கட்கு வழிகாட்டக் கூடியவர். உதாரணமாக தனது வேஷ்டியை தானே தோய்த்து சுத்தம் செய்து கொள்கிறார். தனது வீட்டுக் கக்கூசையும் தானே எடுத்து சுத்தப்படுத்தி விடுகிறார். சாப்பாட்டு விஷயத்திலும் கீரை, தண்டு, காய் முதலிய எளிய உணவே அவருக்கு போதுமானதாகும். அவருடைய உடைகள் சம்பந்தமாகவும் அதிகச் செலவு கிடையாது. மற்றும் சென்னை நகரில் தனி சொந்தக் கார் கூட வேண்டியதில்லை. எங்கும் தாராளமாக பஸ் சர்வீஸ் இருக்கின்றது. குதிரை வண்டி, மாட்டு வண்டிகட்கு நகரத்தில் பஞ்சமே கிடையாது. வேறு களியாட்டங்கட்கும் கிளப்புகளுக்கும் சென்று ஆச்சாரியார் அதிகப் பொருள் செலவு செய்து விட மாட்டார் என்பது உறுதி. மற்றும் விளம்பரங்கள், மாலைகள், வரவேற்புகள் உபசாரங்கள் விரும்பினால் அதுவும் நகரசபை ஜில்லா போர்டு பொது ஸ்தாபனங்கள் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. வெளியூர்கட்கு பந்து மித்திரர்களைப் பார்க்கப் போக வேண்டுமானால் தனி சலூன் தயாராக இருக்கின்றது. முதல் வகுப்பு வேண்டாமென்றால் (பொது ஜனங்களை ஏமாற்ற மூன்றாம் வகுப்பு முழுதும் ரிசர்வ் செய்து உல்லாசமாகப் பிரயாணம் செய்யலாம். சரணாகதி முதல் மாதிரி பதவி பெறுவதற்கு முன் மாதம் ரூ. 25ல் 50ல் சிக்கனமாக வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால் இப்பொழுது ஆச்சாரியாருக்கு மாதம் ரூபாய் 800-க்கு எவ்வித செலவும் கிடையாது. ஏதாகிலும் வேறு செலவுகளிருந்தாலும் “ஏழைகள் பசியைப்போக்க” பிறருக்கு உபதேசம் செய்யும் ஆச்சாரியார் தனது மாதச் சம்பளத்தையும் படிச் செலவையும் குறைத்து மாதம் 50 அல்லது ரூ. 100 மட்டும் ஏன் பெற்றுக்கொள்ளக் கூடாது? இவர் சகபாடி சரணாகதி மந்திரிகளையும் ஏன் மாதம் ரூ. 50 அல்லது ரூ. 100 பெற்று கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது? சட்டசபை அங்கத்தினர் கட்கு மாதச் சம்பளம் ரூ. 100 எதற்கும் மாதம் ரூ. 10க்கும் 15க்கும் வழியின்றி கூப்பாடு போட்டு காங்கரஸ் தியாகிகட்கும் எளிய வாழ்க்கையில் மோகமுடைய தேசபக்தர்களுக்கும், “ஜெயிலில் மோரில்லாக் கஞ்சியும், உப்பில்லாக் கஞ்சியும், பூச்சி புழுக்களுடைய குழம்பும்” அரைவயிறு உண்டு பழகிய உண்மைத் தொண்டர்கட்கும், உத்தம தேசீய தலைவர்கட்கும், மாதம் ரூ. 100 சம்பளமும் 500 ரூபாய் சம்பளமும் 300 ரூபாய் படிச் செலவும் எதற்காக? இந்த அக்கிரமச் சம்பளங்களைக் குறைத்து ஏழை மக்களின் பசிப் பிணியை நீக்கலாகாதா? ஆச்சாரியார் முதலில் தனது சம்பளத்தைக் குறைத்து வழிகாட்டுவாரா?
எப்படி முடியும்?
மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் தாங்களாகவே சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமாம்! இது எப்படி முடியும்? ஊருக்கு சிக்கன உபதேசம் செய்யும் ஏழை பங்காளருக்கு மாதம் 50, 75-ல் பிழைத்தவருக்கு மாதம் ரூபாய் 800 முதல் 1000 ரூபாய் வரை செலவிருந்தால் தினசரி ஆடம்பரமாகவும் செளகரியமாகவும் காலமெல்லாம் வாழ்ந்துவந்த பெரிய உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்தால் அது எப்படி நியாயமாகும்?
தங்கள் கையிலிருந்த சொத்துக்களையெல்லாம் விற்றும் கடன் வாங்கியும் படித்துவிட்டு பிறகு உத்தியோகத்தின் மூலம் தனது குடும்பத்தைக் காப்பாற்றவும் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கவும் பழைய கடன்களை கொடுக்கவும் பட்டினியின்றி காலம் கடத்தவும் மற்ற இதர செலவுகட்கும் போதாமல் கஷ்டப்படும் வகையில் தங்கள் குடும்பச் செலவுகளை அமைத்துக்கொண்டு அவதிப்படுகிறவர்கள் எப்படி தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன் வருவார்கள்? அவர்கட்கு எளிய வாழ்வில் இன்பம் எப்படி ஏற்படும்?
இவர் வழி காட்டுவாரா?
சரணாகதி முதல் மந்திரி ஆச்சாரியார் முதலில் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு மற்ற சகபாடிகளான சரணாகதி மந்திரிகளையும் தாமதியாமல் உடனே சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளச் செய்து எல்லா மந்திரிகளும் உடனே பொது இடத்தில் பொது செலவில் எளிய முறையில் நித்திய வாழ்க்கையை நடத்திக் காட்டி ஆடம்பரம், விளம்பரம், வீண் செலவு களைக் குறைத்துக் கொண்டு பிறகு பெரிய சம்பள உத்தியோகஸ்தர்களுக்கு புத்தி கூறட்டும். முதலில் ஆச்சாரியார் வழிகாட்டுவாரா? அல்லது மாதம் ரூ. 800, 1000 சம்பளம், படிச்செலவு பெற்றுகொண்டு ஊருக்கு உபதேசமும், ஏழை பொது மக்கட்கு “பசிக்கொடுமையை யொழிக்க மருந்து சம்பளத்தைக் குறைக்க வேண்டும்” என்று மாய அழுகை அழுது கொண்டு பாமர மக்களை ஏமாற்றப் போகின்றாரா?
குடி அரசு – கட்டுரை – 15.08.1937