வேடிக்கை அல்லாத பேச்சு

– சித்திரபுத்திரன்

 

“ராஜகோபாலாச்சாரிக்கும் ஜின்னாவுக்கும் வித்தியாசமில்லை”யாம்

உண்மைதான், ஜின்னா முதலில் முஸ்லீம் சமூக நன்மை அப்புறம் தேசீயம் என்கிறார். ராஜகோபாலாச்சாரியும் முதலில் பார்ப்பன ஆதிக்கம், அப்புறம் தேசீயம் என்கிறார்.

இது தெரிந்துதான் ஜின்னா சொன்னார், ஆச்சாரியும் ஏற்றுக்கொண்டார்; தேசீயப் பத்திரிகைகளும் மேலொப்பம் செய்தன.

ராஜபக்தி கூடாது பறையனும் பார்ப்பானும்

கருப்பப் பறையன்:- ராஜ பக்திக்கு வருகிறாயா போகலாம்.

சுப்பையர்:- போன வாரம்தான் “ராஜாவையே விரட்டி விடுவது” என்ற பிரச்சினை மீது தேர்தல் நடந்து எலக்ஷனில் வெற்றிபெற்றுவிட்டோமே. இப்பொழுது வந்து ராஜபக்திக்குக் கூப்பிடுகிறாயே உனக்குப் புத்தி இல்லையா?

கரு:- அடே பைத்தியமே! ராஜாவிடம் பக்தி காட்ட நான் கூப்பிட வில்லை. “ராஜ பக்தி” என்று நம்ம ஊரில் ஒரு சினிமா நடக்கிறது உனக்குத் தெரியாதா? அதற்குக் கூப்பிட்டேன். மகா பதிவிரதை மாதிரி பேசுகிறாயே.

சுப்:- அதுகூட பார்க்கக் கூடாது. அந்தப் பேச்சே காதில் விழுகக் கூடாது தெரியுமா?

கரு:- சரி, சரி. எனக்கு இப்போதுதான் அர்த்தமாயிற்று. அதுதான் ராஜகோபாலாச்சாரியார் சத்தியமூர்த்தி எல்லோரும் நாளைக்குச் சென்னை சட்டசபை அசம்பிளி கூடும்போது நம் பிரதிநிதிகளாய் இருந்து நம் பிரதிநிதிகள் என்கின்ற முறையில் “ராஜாவுக்கும் சந்ததிக்கும் அவர்கள் சட்ட திட்டங்களுக்கும் பக்தி விஸ்வாசமாய் கட்டுப்பட்டு நடக்கிறேன்” என்று சத்தியம் செய்யப்போகிறார்களாக்கும்.

சுப்:- அதெல்லாம் ராஜ தந்திரம், சர்க்காரை ஏமாற்றுவதற்குச் சொல்லுவது. இது தெரியாதா உனக்கு?

கரு:- அப்படியானால் இதெல்லாம் பார்ப்பன தந்திரமாக்கும், மக்களை ஏமாற்றச் சொல்லுவதாக்கும்.

சுப்:- வெளிக்கு வருகிறது அவசரமாய் போகணும், குட் நைய்ட்.

குடி அரசு – உரையாடல் – 14.03.1937

~cstart

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

சென்னை ஹைக்கோர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி

~cmatter

சென்னை ஹைக்கோர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி வேண்டுமென்று பார்ப்பனப் பத்திரிகைகள் கூப்பாடு போடுகின்றன. மைலாப்பூர் பார்ப்பன வக்கீல்களும் கூப்பாடு போடுகின்றனர்.

இக்கூப்பாட்டை அரசாங்கத்தார் ஏற்றுக்கொண்டு ஒரு இந்தியரை ஹைக்கோர்ட்டுக்கு சீப் ஜட்ஜியாக்கினால் அந்தப் பதவி தோழர் ஜட்ஜி வெங்கிடசுப்பராவ் என்கின்ற பார்ப்பனரல்லாதாருக்குத்தான் கிடைக்கும். ஏனெனில் அவர்தான் இருக்கிற இந்திய ஜட்ஜிகளில் அதிக சர்விஸ் பெற்று முன்னணியில் இருப்பவர். அப்படி இருக்க பார்ப்பனர்கள் ஒரு பார்ப்பனரல்லாதார் சீப் ஜட்ஜி ஆவதற்கு இவ்வளவு ஆத்திரப்படுவார்களா என்றும் அதற்குள் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு நல்ல எண்ணமும் நல்ல புத்தியும் வந்துவிட்டதா என்றும் நம்மவர் பலர் ஆச்சரியப்படலாம். “சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்கின்ற பழமொழிக்கு ஒப்ப பார்ப்பனர்கள் நல்ல எண்ணத்தின்மீது இதற்கு பாடுபடவில்லை. அதிலும் ஒரு கெட்ட எண்ணத்தை வைத்தே இந்தத் தந்திரம் செய்திருக்கிறார்கள்.

அது என்ன கெட்ட எண்ணம் என்று அறிய பலர் ஆசைப்படக்கூடும். அதென்னவென்றால் அகில இந்திய சம்மந்தமான ஒரு பெரிய உத்தியோகத்துக்கு இப்போது அட்வகேட் ஜனரலாயிருக்கும் தோழர் சர். அல்லாடிக்கும் ஜட்ஜி தோழர் வெங்கிட சுப்பராவுக்கும் போட்டி இருந்து வருகிறது.

அதாவது இவர்களுக்குள் போட்டி இல்லாவிட்டாலும் இவர்களில் யாரைப்போடுவது என்பதில் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்குப் போக சர். அல்லாடி முயற்சி செய்து வருகிறார். அநேகமாய் ஜஸ்டிஸ் வெங்கிடசுப்பராவுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்படிக் கிடைத்து விட்டால் சர். அல்லாடி ஏமாற்றமடைய வேண்டிவரும்.

ஆதலால் ஜஸ்டிஸ் வெங்கிட சுப்பராவை சீப் ஜட்ஜி ஆக்கி இங்கேயே ஆணி அடித்துவிட்டால் சர். அல்லாடிக்கு தானாகவே அப்பதவி வந்து விடும் என்கின்ற “நல்ல எண்ணம்” அதனால் ஒரு பார்ப்பன ரல்லாதாருக்கு ஹைக்கோர்ட்டு ஜட்ஜி வேலை கிடைக்க பார்ப்பனர்கள் இவ்வளவு ஆசைப்படுகிறார்கள்.

அந்த அகில இந்திய இலாகா உத்தியோகம் என்னவென்றால் பிடரல் கோர்ட்டு ஜட்ஜி அல்லது ஆலோசனை சொல்லுபவர் என்கின்ற உத்தியோகமாகும். மற்றும் ஒன்றை கருத்தில் வைத்திருக்கிறார்கள். அவைகளுக்கு N 6000 ரூபாய்க்குக் குறையாத சம்பளமிருக்கும். அதிகாரமும் கெளரவமும் அதிகமானதாகும்.

குடி அரசு – கட்டுரை – 14.03.1937

You may also like...