தினசரி பத்திரிகை
பார்ப்பனரல்லாதாருக்குத் தினசரிப் பத்திரிகை இல்லை என்பதைப்பற்றி சென்றவாரம் நாம் “குடி அரசில்” தலையங்கம் எழுதி இருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதில் குறிப்பிடப்பட்டது போலவே சென்னையில் 9-5-37ல் கூடிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபை கூட்டத்தில் இதுபற்றி யோசிக்கப்பட்டு இப்போது சென்னையில் வாரம் இரு முறையாக நடக்கும் “விடுதலை” பத்திரிகையை ஈரோட்டுக்கு மாற்றி ஈரோட்டிலேயே தினசரியாக நடத்துவதென்றும் அதன் நஷ்டத்திற்கு ஆக ஒரு குறிப்பிட்ட தொகையை தனிப்பட்ட முறையில் சில கனவான்கள் உதவி வருவதென்றும் மேல் கொண்டு வேண்டியிருக்கும் தொகையை மற்றும் பல கனவான்களிடமிருந்து தோழர் ஈ.வெ. ராமசாமி வசூலித்துக்கொள்ள வேண்டியது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.
அதன்படி “விடுதலை” பத்திரிகையை தினசரியாக நடத்த ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கலக்டர் அவர்களுக்கும் அனுமதி அளிக்கும்படி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது.
அனேகமாய் இந்த தடவை தினசரி விஷயம் வெற்றி பெறலாம் என்றே கருதுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.05.1937