கவர்னர் பிரபு நடத்தை கண்டனம்
9.5.37ந்தேதி சென்னையில் நடந்த ஜஸ்டிஸ்கட்சி நிர்வாக சபைக் கூட்டத்தில் சென்னை கவர்னரின் நடத்தையை கண்டித்து ஒரு தீர்மானம் போடப்பட்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். இதன் காரணம் மந்திரிசபை அமைப்பதில் கவர்னர் நடந்து கொண்ட மாதிரியேயாகும்.
இவ்விஷயத்தைப்பற்றி சென்ற மாதத்திலேயே நாம் கண்டித்து எழுதியிருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதை கவனித்து ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபையானது கவர்னர் பிரபு நடத்தையைக் கண்டித்து தீர்மானம் செய்ததை நாம் மனப்பூர்வமாகப் பாராட்டி வரவேற்கிறோம்.
உண்மையிலேயே எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள், கெட்ட பெயர்கள், வீண் பழிகள், எதிரிகளின் விஷமப் பிரசாரம் ஆகியவைகளுக்கு ஆளாகிக்கொண்டும் இரட்டை ஆòயில் சர்க்கார் மெம்பர்களின் தொல்லைகளை சமாளித்துக்கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் நிர்வாகத்தை நடத்தி வந்ததற்கு வேலை முடிவில் அரசாங்க தலைமை அதிகாரியான கவர்னர் பிரபு நடந்துகொண்ட மாதிரியானது மிகவும் வருந்தக் கூடியது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
இந்தியாவில் உள்ள இதர 10 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாகாணங்கள் 5. அவ்வைந்து மாகாணங்களிலும் உள்ள கவர்னர்களில் ஒருவராவது மந்திரிசபை அமைக்கச் செய்ததில் இம்மாதிரி நடந்து கொள்ளவேயில்லை என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம். ஒவ்வொரு கவர்னரும் எதிர்க்கட்சி தலைவரையும் அல்லது சட்டசபை தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களையும் தான் அழைத்து மந்திரிசபை அமைக்கச் செய்திருக்கிறாரே ஒழிய தனிப்பட்ட நபரை அழைக்கவே இல்லை. ஒழுங்கு முறையாகச் சொல்லவேண்டுமானாலும் வெற்றி பெற்ற மெஜாரிட்டி கட்சியார் மந்திரி பதவி ஏற்றுக் கொள்ள எந்தக் காரணத்தாலாவது முடியாமல் போனால் நாகரீக ஒழுங்கு முறைப்படி அடுத்த மெஜாரிட்டி கட்சியாரை அழைத்து யோசனை கேட்க வேண்டியது முறையாகும். இன்னமும் பேசப்போனால் அதிகாரத்தில் – பதவியில் இருந்து வரும் கட்சி தோல்வி அடைந்துவிட்ட போதிலும் கூட அக்கட்சி தலைவரை முதலில் கலந்து பேசியே மேலால் மற்ற கட்சி தலைவர்களுடன் பேசவேண்டியது கிரமமான பொறுப்புடையவர்கள் செய்கையாகும் என்று கூடச் சொல்லலாம். ஜஸ்டிஸ் கட்சி தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வரை அவர் முதல் மந்திரியாய் இருந்து வந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும் போது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க முடியாமல் போனவுடன் 29-ந் தேதியில் கவர்னர் பிரபு முதல் மந்திரியை கலக்காமலும் ஆக்டிங் கவர்னர் வேலை பார்த்தவரும் நிர்வாகசபை வைஸ்பிரசிடெண்டுமான சர்.கே.வி. ரெட்டி நாயுடுவை கலக்காமலும் கனம் சீனிவாச சாஸ்திரியாரை அதுவும் தேர்தலில் நிற்காதவரும், தன் கட்சி பேரால் தேர்தலுக்கு ஒரு ஆளைக்கூட நிறுத்தாதவரும், தன்னை பின்பற்ற சட்ட சபையில் ஒருவர் கூட இல்லாதவருமான சீனிவாச சாஸ்திரியாரை, அதுவும் ஜஸ்டிஸ் கட்சியை சதா வைது கொண்டு இருந்தவரும், காங்கிரசை சதா ஆதரித்துக் கொண்டு இருந்தவருமான சீனிவாச சாஸ்திரியாரை கவர்னர் அழைத்தாரென்றால் இந்த நடத்தை எப்படி நியாயமானதாகும் என்பது நமக்குப் புலனாகவில்லை. ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் “ஒழுங்கு முறை நாசமாய் போனாலும் பரவாயில்லை. ஜஸ்டிஸ் கட்சியை அவமானப்படுத்த வேண்டும் அதன் தலைவரை அவமானப்படுத்த வேண்டும்” என்று கருதித்தான் அக்கட்சியின் எதிரியைத் தேடிப்பிடித்து கூப்பிட்டிருக்க வேண்டும் என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாதார் சமூக நன்மைக்கு ஆக உழைத்து வருவதும் தோழர் சாஸ்திரியார் கட்சி (ஏதாவதிருந்திருந்தால்) அது பார்ப்பனர்களின் நன்மைக்கு ஆகவே உழைத்து வருவது என்பதும் பல உதாரணங்களால் சர்க்கார் உணர்ந்திருந்தும், பார்ப்பனர்கள் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் முதல் காங்கிரசுக்கு ஆதரவளித்து இருந்தும் ஒரு கவர்னர் பிரபு பார்ப்பனரையே கூப்பிட்டு மந்திரி சபை அமைக்கும்படி வேண்டியதானது கோஷன் பிரபு கவர்னராய் இருக்கும் போது ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்தவுடன் நடந்துகொண்ட மாதிரியைப் பின்பற்றினார் என்று தான் கருத வேண்டி இருக்கிறது.
அதாவது 1926-ல் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்த உடன் இப்போது எர்ஸ்கின் பிரபு தோழர் ராஜகோபாலாச்சாரியாரிடம் வைத்திருக்கும் அன்பு போலவே கோஷன் பிரபு சர்.சி.பி. ராமசாமி அய்யரிடம் அன்பு வைத்து ஜஸ்டிஸ் கட்சிக்கு தொல்லை உண்டாகும்படி செய்தார். அப்போதைய அரசாங்கத்தில் பார்ப்பனர்களுக்கே 100-க்கு 100 பிரைஸ் விழுந்து வந்தது. ஜஸ்டிஸ் இயக்கத் தலைவராயிருந்த பனகால் அரசரை இதுபோலவே அலட்சியம் செய்து அகெளரவப் படுத்தினர். ஆனால் காலம் கோஷன் பிரபுவுக்கும் சர்.சி.பி.அய்யருக்கும் அனுகூலமாக இல்லாமல் போய்விட்டது. கோஷன் பிரபு மீது ஜஸ்டிஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின் கடைசியாக பிரபு வழிக்குவந்தார். இதே “மெயில்” பத்திரிகையும் அதுசமயம் பார்ப்பனர்களை நம்பக் கூடாது என்று தலையங்கம் எழுதிற்று. அதன் பின்புதான் பார்ப்பனர்களால் பிடித்து வைக்கப்பட்ட மந்திரிகளும் (ஜஸ்டிஸ் கò தேர்தலில் தோற்று இருந்தாலும் கூட மந்திரிகள்) ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளாகவே இருந்து வந்தார்கள். ஆகவே அது போன்ற சம்பவத்தையே இப்போதும் எர்ஸ்கின் பிரபுவும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று கருதி மகிழ்ச்சி அடைகின்றோம்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பற்றி யார் என்ன குறை கூறிய போதிலும் அதன் பார்லிமெண்டரி முறையானது உலகின் மதிப்பிற்கு உரியது என்று எவரும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் நமது மாகாணத் தலைவர் இப்படி ஒழுங்கை அலட்சியம் செய்து நடந்து கொண்டதை நாம் அலட்சியமாய் கருதிவிட முடியாது. ஏனெனில் இந்த மனப்பான்மை இனியும் என்ன என்ன செய்யக்கூடுமோ என்பது பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது. அதனாலேயே இக்கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டியதாயிற்று.
நிற்க, சர்க்கார் உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர்கள் அத்தனை பேரும் காங்கிரசுக்கு ஓட்டு செய்திருக்கிறார்கள் என்பதை சர்க்காரார் ஆதாரத்துடன் தெரிந்து இருந்தும் உத்தியோக நியமன விஷயத்தில் பார்ப்பனர்களுக்கு இன்னமும் சலுகை காட்டிக் கொண்டு வருகிறது என்றால் சர்க்காராரே காங்கிரஸை விரும்புகிறார்களா என்பதும் யோசிக்கத் தகுந்த விஷயமாய் இருந்து வருகிறது. பார்ப்பனர்கள் மொத்த ஜன சங்கையில் 100-க்கு 3 பேர்களே இருக்கிறார்கள். இன்று ஏறக்குறைய அநேக பெரிய உத்தியோகங்களில் 100-க்கு 50க்கு மேலாகவும் ஐ.சி.எஸ். ஜúடிஷல் ஆகியவைகளில் இன்னும் அதிகமாகவும் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்க இப்போதைய சர்க்கார் உத்திரவு பார்ப்பனர்களுக்கு 100-க்கு 16 வீதம் உத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும் என்று இருக்கிறது. இந்த உத்திரவு இனியும் இருக்கவேண்டுமா என்று கேட்கின்றோம்.
நமது கவர்னர் பிரபு அவர்கள் காங்கிரசை ஆதரிக்காதவராய் இருப்பார்களேயானால் காங்கிரசை ஆதரித்த உத்தியோகஸ்தர்கள் ஜாதியான பார்ப்பனர்களுக்கு ஏன் 100-க்கு 300, 400, 500 பங்கு அதிகமாக உத்தியோகங்கள் வழங்க வேண்டும் என்று கேட்கின்றோம். வகுப்புரிமையை காப்பாற்றுவதற்கு ஆகவே உறுதி மொழி கொடுக்கவில்லை என்று இந்திய மந்திரி அவர்கள் சொன்னதின் கருத்து இதுதானா என்று கேட்கின்றோம். வகுப்புரிமையை காப்பாற்றுவதை முதல் கொள்கையாகக் கொண்ட மந்திரிகளின் தன்மையும் இதுதானா என்று கேட்கின்றோம். உத்தியோகம் ஏற்றுக்கொண்டு இன்றைக்கு ஒன்றரை மாதகாலமாகியும் இம்மந்திரிகள் இது விஷயத்தில் இன்னமும் ஒன்றும் செய்யாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க காரியமாகும். நிலவரியை 100-க்கு 75 வீதமாகக் குறைக்க இருந்த சாவகாசமும் ஊக்கமும் அவசரமும் இந்த உத்தியோகக் கொள்ளை விஷயத்தில் கவனம் வைத்து நீதி செலுத்த இடம் கொடுக்கவில்லையா என்று கேட்கின்றோம். மற்றும் இம்மந்திரிகளுக்கு ஜனங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவேண்டும் என்கின்ற கவலை கூட இல்லையா? என்றும் கேட்கின்றோம்.
ஆதலால் கவர்னர் பிரபு அவர்களும் கனம் மந்திரிகளும் இனியாவது கவனித்து தங்களது தவறுதல்களைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பார்களாக.
குடி அரசு – தலையங்கம் – 16.05.1937