அனாமத் மந்திரிகள் வேலைத் திட்டம்
தற்கால மந்திரி சபையை நாம் அனாமத் மந்திரி சபை என்று ஏன் சொல்லுகிறோம் என்பது வாசகர்கள் அறிந்ததே யாகும். ஏனெனில் இவர்களுக்கு ஆயுள் இவ்வளவு என்று குறிக்கப்படவில்லை. மேலும் இவர்கள் பொது ஜனங்களின் பொது நன்மைகள் என்று பொதுவாய் சொல்லப்படுபவைகளைத் தவிர ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட எந்த கொள்கையையோ ஏற்கனவே உள்ள எந்தக் கò சார்பையோ உடையவர்கள் அல்ல. தாங்களாகவே ஒரு நெருக்கடியை சமாளிக்க ஒப்புக்கொண்டவர்கள் என்பதைத் தவிர எவ்வித வேறு கவலைகொண்டும் நியாயம் கொண்டும் அப்பதவிகளை ஒப்புக்கொண்டவர்களும் அல்ல. அதோடு கவர்னர் பிரபு எந்த நிமிஷத்தில் 6 பேர்களையும் கூப்பிட்டு ரைட் எபவுட்டர்ன் மார்ச் – (பின்னால் பக்கம் திரும்பி நட) என்றால் பேசாமல் வெளியில் நடக்க வேண்டியவர்களே. ஆதலால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு நிர்ப்பந்தம் இல்லாமல் அனாமத்தாய் இருந்தாலும் இம்மந்திரிகளுக்கு பொது நாணையத்தை உத்தேசித்து பொறுப்பு இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இஷ்டப்பட்டால் இவர்களால் நன்மையான காரியம் எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லிவிட முடியாது. இந்த மந்திரிகள் சாமார்த்தியசாலிகளாய் இருந்தால் கò முறையில் செய்யும் காரியங்களை விட தனிப்பட்ட முறையில் பல நன்மைகளைச் செய்யவும் கூடும் என்றும் சொல்லலாம்.
இன்றைய அனாமத் மந்திரிகள் அனேகர் தனிப்பட்ட முறையில் தகுதியுடையவர்களும் மிக்க கெட்டிக்காரர்களும் அனுபவமுள்ளவர்களும் ஆவார்கள் என்பதை அவர்கள் எதிரிகளும் மறுக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட தன்மையில் ஏற்றுக்கொண்ட நிருவாகத்தில் நல்ல காரியங்களைச் செய்து பொது மக்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்று கருதுவதும் இயற்கையேயாகும். இந்த முறையில் இந்தியா பூராவும் பல மந்திரிகள் அதாவது மெஜாரிட்டி கட்சியாரால் தாங்களாகவே மந்திரியான மந்திரிகளைப் பார்க்கிலும் சர்க்காரால் மைனாரிட்டியில் இருந்து பொறுக்கி எடுத்து தற்காலிகமாக நியமிக்கப்பட்ட மந்திரிகள் பல நல்ல காரியங்களை செய்ய திட்டம் போடுகிறார்கள், போட்டும் கொண்டார்கள். இத்திட்டங்கள் முடியுமோ முடியாதோ என்பது ஒருபுறமிருந்தாலும் தைரியமாக திட்டம்போட்டுக் கொண்டு காரியத்தில் செய்ய முன்வந்திருப்பது பாராட்டத்தக்கதேயாகும்.
பம்பாய் மந்திரிகள் சாவுவரி போட்டு பணக்காரனிடம் பணம் வசூலித்து ஏழை வரிகளைக் குறைத்து பல நல்ல காரியம் செய்ய திட்டம் போட்டு விட்டார்கள். இது நடைபெற்றால் இந்தியாவுக்கு ஒரு பெரிய நன்மை ஏற்பட்டதாகும்.
சென்னை மந்திரிகள் நிலவரியில் 100-க்கு 25 வீதம் குறைக்க தீர்மானித்துக் கொண்டார்கள்.
- மறு பைசலில் வரி உயர்த்தப்படுவதையும் நிறுத்த முடிவு செய்து கொண்டார்கள்.
- கிராம விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் உதவி கடன் பளுவை குறைக்கவும்,
- மதுபான விருத்தியை தடுக்கவும் சிறு வயதுடையவர்கள் பழகாமல் தடுக்கவும் பொது சுகாதார வசதி செய்யவும்,
- கிராமங்கள் பூராவுக்கும் கட்டாய இலவசக் கல்வி பரப்பவும்,
- கல்வி முறையில் திருத்தம் செய்யவும்,
- விவசாய சப் கமிட்டியார் ஏற்படுத்திய 5 ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றி வைக்கவும்,
- கால்நடை ஆஸ்பத்திரிகள் அதிகப்படுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்யவும்,
- விவசாய பொருள் உற்பத்தியை ஐக்கிய சங்கங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும்,
- விவசாயத்துக்கு அனுகூலமான நீர்ப்பாசன வசதிகள் செய்யவும்,
- தொழில் சாலைகள் அதிகப்படுத்தவும்,
- மின்சார சக்தியை நாடெங்கும் பரப்பவும்,
- கிராம சீர்திருத்தத்திற்கு இன்னும் அதிகப் பணம் ஒதுக்கி வைக்கவும்,
- மேச்சல், விறகு செளகரியம் முதலிய காட்டு வசதிகளும் செய்வது என்றும்,
- உத்தியோகஸ்தர்கள் சம்பள விகிதங்களைக் குறைக்கவும்,
துணிந்து தீர்மானித்து திட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த மந்திரிகள் போட்ட திட்டங்களில் ஏதாவது குறைசொல்ல வேண்டுமானால் பொதுவுடமை, சமதர்மம், பூரண சுயேச்சை, ராமராஜ்யம், வெள்ளைக்காரர்களை மூட்டை கட்டிக்கொள்ளக் கூட நேரமில்லாமல் விரட்டுவது என்பன போன்ற இன்று அனுபவ சாத்தியமற்றதும் முட்டாள் தனமானதும் அர்த்தமில்லாமல் பொறுப்பில்லாமல் வேண்டுமென்றே ஏமாற்றக் கூடிய புரட்டுத்தனமானதுமான தீர்மானங்கள் எதையும் போடவில்லை என்பதாகும். அவைகளை ஜவஹர்லாலுக்கும் காந்திக்கும் சத்தியமூர்த்திக்கும் ஆச்சாரிக்கும் அவர் போன்ற ஜாலவித்தைக்காரர்களுக்கு விட்டுவிட்டு இன்றைய மந்திரிகள் போட்டிருப்பதையாவது இந்த மந்திரிகள் செய்கின்றார்களா என்று பார்ப்போம். முதலாவதாக இந்த திட்டங்கள் நடக்கிறதோ இல்லையோ என்பது ஒருபுறமிருந்தாலும் இவைகளை காதால் கேட்ட மாத்திரத்திலேயே காங்கிரஸ்காரர்கள் காலோடு மலபாதைக்கு இருந்து கொண்டார்கள். எக்காரணம் கொண்டாவது இத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்க சகல முட்டுக் கட்டையையும் போட ஆரம்பித்து விட்டார்கள்.
காரணம் என்னவென்றால் புது மந்திரிகள் இவைகளைச் செய்துவிட்டால் தங்கள் கதி என்ன ஆவது என்கிற பயமேயாகும். இதுவரை காங்கிரஸ்காரர்கள் எந்தக் காரியமும் செய்ய விடாமல் தாங்களும் ஏதும் செய்யாமல் வெறும் குழப்பத்திலும் குறும்பிலும் காலித்தனத்திலுமே கவனத்தை செலுத்தி மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்கள் பேச்சுகளும் முன்னுக்குப்பின் முரணானவைகளாகவே இருந்து வந்தன. வேறு கட்சியாரை – ஜஸ்டிஸ் கட்சியார் போன்றவர்களையும் இவ்விஷயங்களை செய்வதற்கு பூரண வசதி இல்லாமல் இரட்டையாட்சி தடைப்படுத்தி வந்தது. இப்போது இரட்டை ஆட்சி ஒழிந்து பணப்பை ஒரு அளவுக்கு மந்திரிகள் கையில் கிடைத்திருக்கிறது. சட்ட புது சட்டப்படி சபை அடிக்கடி கூட்டப்படுவதன் மூலம் காங்கிரஸ்காரர்கள் தொல்லையும் காலித்தனமும் நேரத்தையும் பணத்தையும் பாழ் செய்யும் அயோக்கியத்தனமும் கொஞ்ச காலத்துக்கு ஆவது நடைபெறுவதற்கில்லாமல் இந்தியா மந்திரியால் ஒழிக்கப்பட்டு விட்டது.
சர்க்காரார்களும் தங்களின் யோக்கியதையே நிலைநிறுத்தி சீர்திருத்த சட்டத்தின் நாணயத்தை காப்பாற்ற சில விஷயங்களில் மந்திரிகளுக்கு இணங்கி ஆகவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. மந்திரிகளும் தங்கள் சுயமரியாதையை ஞாபகப்படுத்திக்கொண்டு கவர்னர்கள் தங்களுக்கு இணங்கி வராவிட்டால் ராஜினாமா கொடுத்து விடுகிறேன் என்று மிரட்டவும் கூடும். ஆகையால் இந்த நல்ல வசதியில் பல நன்மைகள் ஏற்பட இடமிருக்கிறது என்றே கருதுகிறோம். எல்லாவற்றையும் விட ஒரு நல்ல காரியம் என்னவென்றால் காங்கிரஸ்காரர்கள் தொல்லை விளைவிப்பவர்களும் காலித்தனம் செய்கின்றவர்களுமே ஒழிய யோக்கியமான – நிர்மாணமான காரியம் செய்யும் சக்தியோ ஒரு நல்ல வேலைத் திட்டமோ அரசியல் ஞானமோ உடையவர்கள் அல்ல என்பதை பட்டப்பகல் போல் வெளியாக்கப்பட்டு விட்டது என்பதேயாகும்.
ஆகையால் இது சமயம் பொதுமக்கள் ஏமாற்றமடைவதற்கு இல்லாமல் பொறுமையோடு கவனித்து வரத்தக்க சமயம் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லுவோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 25.04.1937