காங்கிரஸ்காரர்கள் அரசியல் ஞானம்

காங்கிரஸ்காரர்களுக்கு காலித்தனம்தான் தெரியுமே ஒழிய – பொய்யும் பித்தலாட்டமும் கூறி தேர்தலில் வெற்றி பெறத்தான் தெரியுமே ஒழிய – தேர்தல்களில் தந்திரமாய் பார்ப்பனர்களை 100க்கு 40, 50 வீதம் புகுத்திக்கொள்ளத்தான் தெரியுமே ஒழிய அவர்களுக்கு அரசியல் ஞானமோ பொதுஜன நன்மை பொறுப்போ சிறிதும் கிடையாது என்று பல தடவை எழுதி வந்திருக்கிறோம். அதற்கு உதாரணங்களும் அவ்வப்போது எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். இப்போது மற்றுமொரு உதாரணம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம்.

அதாவது சென்னை கார்ப்பரேஷனுக்கு தேர்தல் நடந்து கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர்கள் அமர்ந்து இன்றைக்கு 6, 7 மாத காலமாகிறது. அப்படி இருந்தும் இதுவரை காங்கிரஸ்காரர்கள் எவருக்கும் கார்ப்பரேஷன் வரவு செலவு கணக்கே இன்னதென்று தெரியவில்லை என்பதும் அவர்களில் எவரும் தெரிந்து கொள்ள இதுவரை ஆசைப்பட வில்லை என்பதும் காங்கிரஸ் பத்திரிகைகளாலேயே தெரியவருகிறது.

அதாவது கார்ப்பரேஷனுக்கு 2 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் வட்டி நட்டப்படும்படியான பணம் சும்மா தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்த விஷயம் இப்போதுதான் அதாவது ஒரு காங்கிரஸ் மெம்பர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில் மூலம் தெரியவந்தது என்றும் 3-5-37ந் தேதி “தினமணி” தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதோடு அது நிற்காமல் இதற்கு பழி ஜஸ்டிஸ் கட்சி மீது சுமத்துகிறது. ஜஸ்டிஸ் கட்சிமீது குற்றம் இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். இத்தனை வருஷமாக இந்த 10, 15 வருஷமாக காங்கிரஸ்காரர்கள் பலர் கார்ப்பரேஷனில் இருந்து கொண்டு வந்தார்களே அவர்கள் ஏன் இதுவரை கவனித்திருக்கக் கூடாது என்பதோடு 100க்கு 75 மெஜாரிட்டியுடன் கார்ப்பரேஷன் நிர்வாகத்தில் ஆதிக்கம் பெற்று இருப்பதாய்ப் பெருமை பேசிக்கொண்டு இருக்கும் காங்கிரஸ்காரர்கள் இந்த 6, 7 மாதங்களாய் கார்ப்பரேஷன் பொருளாதார நிலைமையைப் பற்றிக் கவனிக்காமல் வேறு என்ன வேலை செய்துகொண்டு இருந்தார்கள்? அவர்களது கையும், வாயும், மனமும் வேறு என்ன வேலையில் ஈடுபட்டு இருந்தன என்று கேட்கின்றோம்.

ஒரு ஸ்தாபனத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளுபவர்கள் எவ்வளவு முட்டாள்களாய் இருந்தாலும் அந்த ஸ்தாபனத்தின் பொருளாதார நிலை என்ன என்பதை அறிந்து கொண்டுதான் வேறு எந்தக் காரியத்தையும் கவனிக்கத் தொடங்குவார்கள். அப்படி இருக்க, இப்போது காங்கிரஸ்காரர்கள் ஆòக்கு வந்துவருஷம் 7000 ரூ. வட்டி நட்டம் அடைந்து வரும்படியான ஒரு சேதியை இப்போது மே N 2ந் தேதிதான் கண்டு பிடித்தார்கள் என்றால் அதுவும் அகஸ்மாத்தாய் வெளியானதில் இருந்து தெரிந்துகொண்டார்கள் என்றால் இந்த 7 மாதத்துக்கு 3000 ரூபாய் நட்டத்திற்கு யார் ஜவாப்தாரி என்று கேட்கிறோம். மற்றும் þ 2 கோடி ரூபாய் கடனில் சில தொகைக்கு 100க்கு 7 ரூ. வட்டி வீதம் வட்டி கொடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு அழுகிறார். இவற்றையெல்லாம் கவனிக்காமல் காங்கிரஸ்காரர்கள் அங்கு வேறு என்ன வேலை செய்து வருகிறார்கள் என்று கேட்கிறோம். ஓட்டு கேட்கும்போது காங்கிரசுதான் மக்களுக்கு நன்மை செய்யும் என்றும் காங்கிரசுக்கு தான் நன்மை செய்யத் தெரியும் என்றும் பெருமை அடித்து ஆப்பக்காரியையும், தோசைக்காரியையும், குடிகாரர்களையும், வெறிகாரர்களையும் ஏமாற்றி ஓட்டுப் பெறுவதும் ஓட்டுக் கிடைத்த பின்பு கலகமும் காலித்தனமும் செய்வதில் காலத்தைக் கடத்துவதும் கடைசியில் தங்களின் முட்டாள் தனத்திற்கு சமாதானம் முன் இருந்தவர்களின் மீது பழி போடுவதுமான இழிதொழில் செய்து தப்பித்துக்கொள்ளப் பார்ப்பதென்றால் காங்கிரஸ்காரர்களுக்கு அறிவோ, பொறுப்போ, அனுபவமோ, கண்ணியமோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.05.1937

You may also like...