ஒரு தொல்லை ஒழிந்தது
கடைசி சரணாகதி
காங்கிரசுக்காரர்களுக்குப் புத்தி வந்தோ அல்லது வேறு நிவர்த்தி இல்லாத நிலையில் சிக்கிக்கொண்ட நெருக்கடியால் ஞானோதயம் ஏற்பட்டோ கடைசியாக சரணாகதி அடைந்துவிட்டார்கள். இந்தப் பெருமை நமது சர்க்காருக்கே உண்டு. மகா கெட்டிக்காரத் திருடனாய் இருந்த கூளாங்காலன் என்பவனை யாராலும் பிடிக்க முடியாமல் போனவுடன் கடைசியாக அவன் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படியும் அவனைக் கண்ட இடத்தில் சுடும்படியும் உத்திரவு போட்டதாலும் அவன் சுற்றத்தார், உறவினர், அவனது ஊர்க்காரர் ஆகியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு ஏற்படுத்தியதாலும் கூளாங்காலன் தானாகவே ஓடிவந்து எப்படி சரணாகதி அடைந்து சிறைப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டானோ அது போல் சர்க்காரார் காங்கிரஸ் தொல்லையை ஒழிக்க சாதாரண முறையில் எவ்வளவோ காரியம் செய்தும் அவை காங்கிரசுக்குச் சோதிக்காமல் போய்விட்டதால் கடைசியாக ஒரு உத்திரவு போட்டது போல் – வைஸ்ராய் பிரபு காங்கிரசுக்கு இறுதிச் சேதி விட்டது போல் இவ்வளவு நாளைக்குள் வந்து தாங்களாக சரணாகதி அடைந்து அவர்களது இடத்தில் அமர்ந்துகொள்ளாதவரை அந்த இடங்களைப் பறிமுதல் செய்யப்படுமென்றும், பறிமுதல் செய்யப்பட்டுவிட்டால் அப்புறம் ஐயா என்றாலும் வராது அப்பா என்றாலும் வராது என்றும் முடிவு செய்து கடினமான முறையைக் கையாளத் துணிந்துவிட்டவுடன் தானாகவே காந்திஜீ, ஜவஹர்ஜீ முதலிய எல்லா ஜீயும் நான் முந்தி, நீ முந்தி என்பதாகப் போட்டி போட்டுக்கொண்டு நின்ற நிலையில் தொப்பென்று விழுந்து சரணாகதி அடைந்துவிட்டார்கள்.
சமதர்ம வீரர்கள் அவர்களுக்கு அடிபடாமல் இருக்க கைலாகு கொடுத்து சரணாகதிக்குப் படுக்கவைத்தார்கள். மற்ற தேசீய வீரர்கள், தேசீயவாதிகள், தேச பக்தர்கள், வாலிப சிங்கங்கள், சமதர்மவாதிகள், பொதுஉடமைப் புலிகள் என்கின்றவர்களான எல்லாக் கூட்டத்தாரும் ஒரே அடியாகத் ததாஸ்துபோட்டு சர்க்காரின் காலில் காங்கிரசின் தலை நன்றாய் படும்படியாக கெட்டியாய் பிடித்து அமுக்கி விட்டுவிட்டார்கள். காங்கிரசின் மானம் அடியோடு போய்விட்டது என்பதற்கு இனி என்ன பாக்கி இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
காங்கிரசு ஏற்பட்ட காலம் முதற்கொண்டு காங்கிரசுக்கு இப்படிப் பட்ட சரணாகதி ஒருபோதும் நேர்ந்ததில்லை என்றே சொல்லலாம்.
தோழர் காந்தியார் மகாத்மாவாகி காங்கிரசுக்குச் சர்வாதிகாரியான இந்த 17 வருஷ வாழ்வில் சுமார் 10 சரணாகதி ஏற்பட்டிருந்தாலும் இது அடியோடு காங்கிரசின் மானத்தையே போக்கடிக்கக்கூடிய சரணாகதி என்பதோடு இனி தலைதூக்க முடியாத சரணாகதி என்றுதான் சொல்லவேண்டும்.
நிர்மாணத்திட்ட சரணாகதி 1
ஒத்துழையாமை சரணாகதி 2
பகிஷ்கார சரணாகதி 3
சர்க்கார் உத்திரவு மீறுதல் சரணாகதி 4
மறியல் சரணாகதி 5
சத்தியாக்கிரக சரணாகதி 6
சைமன் கமிஷன் பஹிஷ்கார சரணாகதி 7
உப்பு காய்ச்சுதல் சரணாகதி 8
காந்தி இர்வின் ராஜி சரணாகதி 9
வட்டமேஜை சரணாகதி 10
நான்கு அணா மெம்பராகக் கூட இல்லாமல் காங்கிரசை விட்டும், காங்கிரஸ் நிர்வாக காரியத்தை விட்டும் வெளியில் போன சரணாகதி 11
இப்படியும் இது போன்றவுமான முக்கியமான சரணாகதிகள் பல இருந்தாலும் கடைசியாக வெளிப்படையாக பச்சையாக தலைவணங்கி கோட்டைக்குள் சென்று சத்தியம் செய்து கொடுத்து, ராஜபக்தி காட்டி பிரமாணம் செய்துகொடுத்து, சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியும் பக்தி காட்டி சர்க்காரை நடத்திக்கொடுக்கும் சேவக வேலைக்கு போகவேண்டிய நிலைமை ஏற்பட்ட சரணாகதி விலைமதிக்க முடியாததாகும்.
மற்றும் இதன் முழு விஷயங்களையும் தெளிவாய் உணரவேண்டு மென்று விரும்புகிறவர்கள் பதவி ஏற்பது விஷயமாய் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்த தீர்மானத்தை முதலில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது,
“மந்திரிமார்கள் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் காரியங்களில் கவர்னர்கள் தங்களது விசேஷ அதிகாரங்களை பிரயோகிப்பதில்லை என்பதாக சந்தேகமற்ற முறையில் வெளிப் படையாக தெரிவித்தாலொழிய மந்திரி பதவிகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்பதாக தீர்மானித்து இருக்கிறது.
இந்த தீர்மானமே சுயமரியாதை அற்ற தீர்மான மென்றும் அடிமை முறித் தீர்மான மென்றும் சுயராஜ்யத்தை ஒழித்து அந்நிய ராஜ்யத்தை நிலை நிறுத்தும் தீர்மானமென்றும் இன்னும் பலவாறாக காங்கிரஸ் பக்தர்கள் பலர் கண்டித்து பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.
அப்படி இருக்க இப்போது காரியக்கமிட்டி செய்த தீர்மானத்தில்,
“பிரதம மந்திரி, கவர்னர்கள், வைசிராய் பிரபு ஆகியவர்கள் அறிக்கைகளை கவனமாய் படித்து பார்த்ததில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானப்படி கேட்கப்பட்ட உறுதி மொழி தரப்படவில்லை” என்று வியக்தமாக தீர்மானித்துவிட்டது. இதன் பேரில் பதவி ஏற்கக்கூடிய நிலை காங்கிரசுக்கு எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை.
ஆனால் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்கு காரியக்கமிட்டி செய்துள்ள தீர்மானம் மிக மிக வெட்கக்கேடாக இருக்கிறது என்பதை அதன் வாசகத்தைப் படிக்கும் யாரும் உணரலாம். அதாவது,
“இதுவரை நடந்த சம்பவங்களையும், அவைகளால் ஏற்பட்ட நிலைமையையும் பார்த்தால் கவர்னர்கள் சுலபத்தில் விசேஷாதி காரங்களை உபயோகிக்கமாட்டார்கள் என்று தெரிவதோடு சட்டசபை மெம்பர்களுடையவும் காங்கிரஸ்காரர்களுடையவும் அபிப்பிராயத்தை கவனித்ததிலும் காங்கிரஸ்காரர்கள் அழைக்கிற இடங்களில் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள அனுமதியளிக்கிறது”
என்று தீர்மானித்திருக்கிறது. கவர்னர்கள், இந்தியா மந்திரிகள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை எடுத்துச்சொன்ன காலத்திலேயே காங்கிரஸ்காரர்கள் அவற்றை கவனித்துப் பார்த்து அதில் வாக்குறுதி இல்லை என்றும் காங்கிரசை – காந்தியாரை அலôயப்படுத்தி பேசப்பட்டிருக்கிற தென்றும் எல்லா காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் சொல்லிவிட்டு இப்போது வைசிராய் மிரட்டியவுடன் இந்தியா மந்திரி அறிக்கையும் கவர்னர்கள் பேச்சும் காரியக்கமிட்டிக்கு எப்படி நம்பிக்கை கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது என்பதும் விளங்கவில்லை.
வைசிராய் பிரபு பேச்சு நடந்த உடனும் காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் “வைசிராய் பேச்சில் பழய புராணம்தான். அதாவது இந்தியா மந்திரியும் கவர்னர்களும் பேசிய பேச்சில் என்ன கருத்து இருந்ததோ அதுதான் வேறு வார்த்தைகளால் உறுதிப்படுத்தப் பட்டு விட்டது என்பதோடு அவர் காங்கிரசை மிரட்டுகிறார்” என்றும் சொல்லிவிட்ட பிறகு அப்புறம் எப்படி அவர்கள் பேச்சில் “காங்கிரஸ் கோரிக்கையை திருப்தி செய்ய விருப்பம் காட்டப்பட்டிருக்கிறது” என்றும் “சுலபத்தில் விசேஷாதிகாரங்களை பிரயோகிக்க மாட்டார் என்று காணப்படுகிறது” என்றும் காரியக் கமிட்டி தீர்மானிக்கிறது என்பதும் நமக்கு விளங்கவில்லை. தவிரவும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியானது “கவர்னர்கள் விசேஷாதிகாரங்களை உபயோகிக்கமாட்டார்கள் என்று பகிரங்கமாக தெளிவாகத் தெரியப்படுத்தினாலொழிய பதவி ஏற்கக்கூடாது” என்று செய்த தீர்மானத்தின் யோக்கியதை என்ன ஆயிற்று என்று யோசிக்கும் படி பொது ஜனங்களை வேண்டுகிறோம்.
“பின்னர் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்களினாலும் சில சம்பவங் களினாலும்” என்றால் அதன் அருத்தம் என்ன என்பது விளங்கவில்லை.
பின்னர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் பல தடவை சென்னை கவர்னரைப் போய் பார்த்தார் என்பதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களும், சம்பவங்களும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடுவதற்கு முன் என்ன சந்தர்ப்பம், என்ன சம்பவம் ஏற்பட்டு இருந்ததோ அவை தானே ஒழிய புதிதாக ஏதாவது ஏற்பட்டுவிட்டதென்று யாராவது சொல்ல முடியுமா?
ஆகவே முன் மார்ச்சு மாதம் 18ந் தேதி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூடி செய்த தீர்மானம் முட்டாள்தனமானது என்று தலைவர்கள் என்பவர்களாலேயே கருதும்படி ஏற்பட்டதல்லாமல் வேறு சம்பவம் என்ன நடந்துவிட்டது என்று கேட்கிறோம். மற்றும் மறுபடியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டி இது விஷயமாய் யோசிக்க நேரமில்லையென்றும் இதே சமயத்தில் ஒரு முடிவுக்கு வராவிட்டால் நாட்டிற்கு கெடுதியாக முடியும் என்றும் பதவி ஏற்க தீர்மானம் செய்யாவிட்டால் “பொது ஜனங்களிடையே குழப்பம் ஏற்படும்” என்றும் காரியக் கமிட்டி தீர்மானிக்கவேண்டிய காரியம் என்ன என்று கூர்மையாய் யோசித்துப் பார்ப்போமானால் முதலாவது, காரியக் கமிட்டியிடம் வேலைக் கமிட்டிக்கு நம்பிக்கை இல்லையென்பது ஒன்று, நம்பிக்கை இருந்தாலும் காங்கிரஸ் கமிட்டி கூடினால் காங்கிரசின் சாயமும் காங்கிரஸ் தலைவர்களின் நாணயமும் அதாவது பதவி ஆத்திரமும் வெறுத்துப்போகுமே என்கின்ற பயம் இரண்டு; இதைத் தவிர வேறு காரணம் இல்லை. அல்லது மிக அவசரம் நெருக்கடி என்றும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்றும் காரியக் கமிட்டி கருதியது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் என்ன அவசரம்? எப்படிப்பட்ட நெருக்கடி? என்ன குழப்பம் ஏற்படும்? என்பதை அவர்கள் விளக்கவில்லை. ஆனாலும் நாம் யோசித்துப் பார்த்தால் காங்கிரஸ் தீர்மானத்திற்கு நாட்டில் செல்வாக்கில்லை என்பதும் பொது ஜனங்கள் கட்டுப்படமாட்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் காங்கிரசின் பேரால் நின்று வெற்றி பெற்ற சட்டசபை மெம்பர்களே கலைந்து காங்கிரசை விட்டு ஓடிப் போய் பதவி ஏற்றுக் கொள்ளுவார்கள் என்பதும் உறுதி என்று வேலைக் கமிட்டியார் தீர்மானித்துக் கொண்டார்கள் என்பதுதான் புலப்படும். மற்றும் சிறிது “தாமதத்திலும் தேச நலத்துக்கு கேடு உண்டாகிவிடும்” என்றும் தீர்மானித்திருக்கிறதைப் பார்த்தால் தேசத்தாருக்கும் தேச நலத்துக்கும் தேவையில்லாத வாக்குறுதியைக் கேட்டு காங்கிரஸ் முட்டாள் தனமாக நெருக்கடியில் சிக்கிக் கொண்டதை நன்றாய் விளக்குகிறது.
இந்த நிலையில் உள்ள காங்கிரசுக்காரர்கள் ஒத்துழையாமை, பூரண சுயேச்சை, சீர்திருத்த உடைப்பு, சமதர்மம், ஜேப்பிலேயே ராஜிநாமா கடிதம் போட்டுக்கொண்டு போவது, சீர்திருத்தத்தில் யாதொரு பயனும் இல்லை என்றெல்லாம் பேசினது என்ன ஆயிற்று என்று கேட்கிறோம்.
காங்கிரசுக்கு சீர்திருத்தத்தை உடைப்பது உண்மையான, நாணைய மான கருத்தா யிருந்திருக்குமானால் சீர்திருத்தம் உடைபட இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் எப்போதாவது கிடைக்குமென்று எந்த முட்டாளாவது எதிர்பார்கக முடியுமா என்று கேட்கின்றோம். வைசிராய் பிரபுவே கண்டிப்பாய் சொல்லி விட்டார். அதாவது, காங்கரஸ்காரர்கள் சரணாகதி அடையவில்லையானால் “சீர்திருத்தம் உடைந்துபோகும். அதுவும் பிறகு சுலபத்தில் சீர்திருத்த முடியாத மாதிரி உடைபட்டுப் போகும்” என்று சொன்ன பிறகும் காங்கரசுக்காரர்கள் சீர்திருத்தம் தானாகவே உடைவதைப் பார்த்துவிட்டு அந்தப்படி அது உடைந்த உடன் 1000 தேங்காயை “பிள்ளையாருக்கு” உடைத்து பிரார்த்தனை செலுத்தாமல் சரணாகதி அடைந்தாவது சீர்திருத்தம் உடைபடாமல் காப்பாற்றிக் கொடுக்க வேண்டிய அவசரம் காங்கரசுக்காரருக்கு ஏன் வந்தது என்பதை யோசித்துப்பார்க்கும்படி பொது ஜனங்களை கேட்டுக்கொள்கிறோம்.
ஆகவே இவைகளையெல்லாம் பற்றி மனம்விட்டு உண்மையை பேசவேண்டுமானால்
- அகில இந்திய காங்கரஸ்கமிட்டியில் கவர்னர்களை வாக்குறுதி கேட்கச் செய்த தீர்மானம் தோழர் ராஜகோபாலாச்சாரியர் சென்னை கவர்னரின் பேச்சைக் கேட்டு ஏமாந்துபோன முட்டாள்தனமேயாகும்.
- வாக்குறுதி என்ற பிரச்சினையை கிளப்பிய தோழர் காந்தியார், தோழர் ஜவஹர்லாலை ஏய்க்க கண்டுபிடித்த சூழ்ச்சியே யாகும்.
- பதவி ஏற்க அவசரப்பட்ட சத்தியமூர்த்தியார் போன்ற காங்கரஸ் காரர்கள் இதற்கு தலையாட்டியதின் காரணம் காங்கிரசு சும்மா சரணாகதி அடையவில்லை என்றும் ஒரு நிபந்தனை கேட்டு சர்க்காரைப் பணியச் செய்த பிறகுதான் பதவி ஒப்புக்கொண்டது என்றும் சொல்லி ஒரு பொய் சமாதானம் தேடிக்கொள்ள உதவியாயிருக்குமே என்றும் கருதி பதவி வேட்டைக்காரர்களும் தலையை அசைத்தார்கள் என்பதேயாகும்.
ஆகவே இந்த காரணங்கள் அ.இ.கா.க. தீர்மானத்துக்கு காரணங் களாக இருந்தாலும் இவ்வளவு பேர்களின் திருப்தியிலும் பிரிட்டிஷ் சர்க்கார் பெட்றோல் விட்டு நெருப்பு வைத்துவிட்டு லார்ட் வில்லிங்டன் துரை எப்படி 1933ல் காங்கிரசை மிரட்டி பணியச் செய்தாரோ அதேபோல் 1937ல் லார்டு லின்லித்தோ துரைமகனார் காங்கிரசை மிரட்டி இனி என்றும் வீரம் பேசாதபடி சரணாகதி அடையச் செய்து விட்டார். தோழர் ஜவஹர்லால் உள்பட சில காங்கிரஸ்காரர்கள் இதற்கு சம்மதிக்காமல் சற்று கிளர்ச்சி காட்டி இருப்பார்கள் என்பது உண்மையாய் இருக்கலாம். ஆனால் வைஸ்ராய் சொன்னபடி அதாவது 10 நாளில் மந்திரி பதவி ஏற்காவிட்டால் ஒழிந்தீர்கள் என்று மிரட்டியது போல் காங்கிரசு இது சமயம் மந்திரி பதவி ஏற்காவிட்டால் பின்னர் அதன் கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பார்த்தால் ஜவஹர்லால் அடங்கிவிட்டதின் காரணம் விளங்கும்.
- அதாவது காங்கிரசுக்கு வேறு திட்டம் என்ன இருக்கிறது?
- காந்தியார் நிலை என்ன ஆவது?
- அப்புறம் ஜவஹர்லால் எங்கே போய் என்ன பிரசங்கம் செய்வது?
- காங்கிரசையே தங்கள் இன்பவேலையாயும் சாதனமாயும் கொண்ட காங்கிரஸ் பக்தர் – காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேலை என்ன?
- þயார்களுக்கு சாப்பாட்டுக்கு வழி என்ன?
- சட்டசபை மெம்பர்கள் பலர் தாங்கள் சட்டசபை மெம்பர்கள் ஆனதற்கே கஷ்டப்படுகிறார்கள். ஏனெனில் எம்.எல்.ஏ. என்கிற மாதிரிக்குத் தகுந்த துணி, சாப்பாடு, வீடு, போக்குவரத்து வசதிக்கு மிக மிக கஷ்டப்படவேண்டியிருக்கிறது. எலக்ஷன் பிரசார வேலையும் இல்லாததால் பலர்களுக்கு (எம்.எல்.ஏக்கு) முன் இருந்த நிலைமையில் கூட இருக்க முடியாமல் கஷ்டப்படும்படி செய்து விட்டது.
- காங்கரசில் சேர்ந்து பட்டம் பதவி பெறலாம் என்ற சமயோசித வாதிகள் நிலை மரணாவஸ்தையாய் போய் விட்டது.
- இக்கூட்டத்தார் புதுக்கட்சி ஏற்படுத்த துணிந்து விட்டார்கள்.
- இவ்வளவும் ஒரு புறமிருக்க, காங்கிரசுக்கும் தேர்தலுக்கும் வேலை செய்த உத்தியோகஸ்தர் ஜட்ஜி பார்ப்பனர் முதல் காப்பிக்கடை டமரா பார்ப்பனர் வரை சதா சர்வ காலம் வயிறு வெந்து இளைத்து வருகிறார்கள்.
- ஜஸ்டிஸ் கட்சியின் பயனாகவும் சுயமரியாதை இயக்கத்தின் பயனாகவும் தங்கள் உத்தியோகமும் மதிப்பும் போய் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரண்டு நாள்களுக்கு ஒரு சமயல் செய்யவும் பெண்களின் ஒழுக்க யீனமாக நடவடிக்கை மூலம் வயிறு வளர்க்கவும் சிலருக்கு இடம் ஏற்பட்டு விட்டதே என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் அடியோடு ஒழித்து ஆயிரம் கஜ ஆழத்தில் புதைத்து விடலாம் எனத் துணிந்து காங்கிரசுக்கு வேலை செய்த பார்ப்பனர்கள் ஒருபுறம், காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்காவிட்டால் தங்களுக்கு முன்னிலும் அதிகமான கஷ்டம் வந்துவிடுமே எனப் பயந்து சதா சர்வகாலம் தோழர் ஆச்சாரியாரை அவரது இயற்கையை வருணித்து வருணித்து வசவுமாலை சூட்டுவது ஒருபுறம் தொல்லைப் படுத்தியது.
- கடைசியாக காந்தியார் காங்கிரஸ் பதவி ஏற்க தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்காவிட்டால் அவரது முக்கிய சிஷ்யர்கள் என்பவர்களிலேயே பலர் சர்க்காருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வக்கீல் வேலைக்குப் போகவோ அல்லது பொது வாழ்விலிருந்து விலகி “ரமணரிஷி” ஆகவோ தீர்மானித்து கொண்டதாக காந்தியாரை மிரட்டியது.
- மகாத்மா பட்டமே காற்றில் பறந்துவிடக்கூடிய நிலைமை ஏற்பட்டு விடுமே என்கிற பயம், ஆகிய இப்படிப்பட்ட இன்னும் பல காரியங்கள் காங்கிரசை சர்க்காரிடம் சரணாகதி அடையும்படி செய்துவிட்டது.
எப்படியோ ஆகட்டும், நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.
நமது தோழரும் உண்மையிலேயே நமது மரியாதைக்கு பாத்திரமான வருமான அன்பர் சி. ராஜகோபாலாச்சாரியார் முதல் மந்திரியாவதையும் அரசாங்க நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவதையும்பற்றி மனப் பூர்வமாகவே மகிழ்ச்சி அடைகிறோம்.
ஏன்? அவர் தகுதியுடையவர்; உரிமையுடையவர்; அதற்கு ஆக தகுந்த விலை கொடுத்தவர். அவர் மந்திரி பதவி ஏற்றால் மந்திரி பதவிக்கு லாபமே ஒழிய அவருக்கு சொந்தத்துக்கு லாபமில்லை. மற்றும் ஜஸ்டிஸ் மந்திரிகளில் சிலரை விட ஆச்சாரியார் மேம்பட்டவர். ஜஸ்டிஸ் மந்திரிகள் சிலர் தங்களுக்காகவே வாழ்ந்தார்கள்; சிலர் தங்களுக்காகக்கூட வாழாமல் தங்களையும் பதவியையும் பாழாக்கிக்கொண்டார்கள். சிலர் தாங்கள் எப்படி மந்திரியானோம், ஏன் மந்திரி ஆனோம் என்றுகூட கருதாமல் காலம் கழித்துக்கொண்டிருந்தார்கள்.
இப்படியெல்லாம் இருந்தாலும் ஜஸ்டிஸ் இயக்கம் பல நன்மைகளை இந்த மந்திரிகளாலேயே செய்யச் செய்து இருக்கிறது. அதை எதிரிகளே ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆனால் ஆச்சாரியாரோ தனக்காகவோ தன் பெண்டுபிள்ளைகளுக்காகவோ என்று மந்திரி வேலை பார்ப்பவரல்ல, பிறருக்காகத்தான் பார்ப்பார். பணத்தை ஒரு நாளும் மூட்டைகட்ட மாட்டார்.
ஆனால் தன் காலத்திலேயே பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு பார்ப்பனரல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்றும் தலை எடுக்காமல் போகச் செய்யக் கூடியதையெல்லாம் செய்ய முழு முயற்சியும் செய்து பார்த்துவிடுவார்.
ஆகவே இவரது ஆட்சி காலம் பார்ப்பனரல்லாதார்களுக்கு கொடுமையானதாகவே இருக்குமென்று கருதுகிறோம். அப்படிப்பட்ட ஆட்சியின் கீழ் இருப்பதை ஒரு அவமானமாகக் கூட கருதுகிறோம்.
ஏன்? ஆச்சாரியாருடைய தன்மையைக் கருதி அல்ல. அவரது கொள்கைகளைப் பொறுத்தே இப்படிக் கூறுகிறோம். அவரது ஆட்சி அசல் புரோகித ஆட்சியாயும் அசல் பார்ப்பன ஆட்சியாயுமே இருக்கும் என்றே நினைக்கிறோம். அதற்கு அனுகூலமாக காரியங்களையும் சாதித்துக்கொள்ள பொதுமக்களுக்கு ஏதேதோ சாதித்து விட்டதாக தந்திரம் செய்யக்கூடும்.
இதற்கு அனுகூலமாக தங்கள் வாழ்க்கைக்கு வேறு வழியில்லாமல் அவரைப்போய் சரணாகதி அடைந்த பார்ப்பனரல்லாத பலர் அதை ஆதரித்து விளம்பரம் செய்து பொது மக்கள் கண்களில் மண்ணைப் போட முயற்சிக்கலாம். எப்படி ஆனாலும் எல்லாவற்றையும் பொறுத்துப் பார்த்தே மேலால் நமது கடமை என்ன என்பதை தீர்மானிக்கப் போகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 11.07.1937