பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை
தேவேந்திரன் – தேவர்கள் சம்பாஷணை
– சித்திரபுத்திரன்
தேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள்.
தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழுந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான்.
தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள்.
தேவேந்திரன்:- தேவர்களே! உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா?
தேவர்கள்:- ஆமாம் பிரபு! எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன குறை ஏற்படப் போகிறது?
தே-ன்:- சபாஷ்! நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல் எவன் இருக்கப்போகிறான்? எவனை இருக்க விடுவேன் நான்?
ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது?
தே-ர்:- பிரபூ! தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது. என்றாலும்,
தே-ன்:- உம் என்ன, சங்கதியைச் சொல்லுங்கள்.
தே-ர்:- சொல்லுகிறோம். அதற்கு ஆகவே இன்று தேவரீர் ராஜ சபையை நாடி வந்திருக்கிறோம்.
யுகாந்திர காலமாக தேவர்களாகிய நாங்கள் தங்கள் ஆòயின் கீழ் யாதொரு குற்றமின்றி கவலையற்று உயிர் வாழ்ந்து வந்தோம்.
அவ்வப்போது ஏதாவது ராக்ஷதர்களாலும் அசுரர்களாலும் எங்களுக்கு ஏதாவது சங்கடங்களோ தொல்லைகளோ ஏற்படுமானால் தங்களுடைய உதவியினால் அவர்கள் அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஊழி, ஊழி காலத்துக்கும் தலை எடுக்கவொட்டாமல் செய்து மிகவும் கவலையற்று வாழ்வோம். ஆனால் இந்த காலத்தில் தலை கீழாக மாறிவிட்டது. தர்மம் குன்றிவிட்டது. வர்ணமுறை கெட்டுவிட்டது. தேவர்கள் அசுரர்கள் என்கின்ற பேதம் அழிக்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்வது என்பது தெரியவில்லை. ராக்ஷதர்கள் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டார்கள். தேவதாசி முறைகளை கூட ஒழித்து விட்டார்கள் என்றால் வேறு என்ன கொடுமை வேண்டும் பிரபு?
தே-ன்:- அப்படியா? அவர்களை ஒழிக்க நீங்கள் தவம் செய்யக்கூடாதா? யாகம் செய்யக் கூடாதா? கடுமையான சாபங்கள் கொடுக்கும் படியான உங்கள் தவ மகிமை என்ன ஆயிற்று? மித்திர தந்திர சக்தி என்ன ஆயிற்று? கேட்பதற்கே ஆச்சரியமாய் இருக்கிறதே உங்கள் குறைகள்!
தே-ர்:- தேவேந்திர பூபதியே! கலி பிறந்தது என்று கருதி அதை ஒழிக்க ஏதோதோ காரியங்கள் செய்து மனுதர்ம சாஸ்திரம் செய்து புராண இதிகாசங்கள் கற்பித்து அசுரர்களை ஏய்த்து அடக்கி ஒடுக்கி வந்தோம். அசுரர்களில் செல்வர்களாய் இருப்பவர்களின் பொருளை கோவில், குளம், உற்சவம், திதி திவசம், சடங்கு முதலிய காரியங்களால் அவைகளைக் கறந்து அடக்கி அடிமைப்படுத்தி வந்தோம். அவைகளை எல்லாம் ஒழிக்க சுயமரியாதை ராக்ஷதன் தோன்றி மூர்ச்சையாகும்படி செய்து விட்டான். இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம், எப்படி வாழப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களையே சரண் அடைகின்றோம்.
தே-ன்:- உங்கள் குறைகளைக் கேட்க நானும் பயப்பட வேண்டிய வனாய் விட்டேன். என்கதி என்ன ஆகும் என்பதும் கவலைப்படத் தக்கதாக வல்லவா இருக்கிறது?
தே-ர்:- ஆமாம் பிரபு! சுயமரியாதை இராக்ஷதன் தங்கள் வேகத்தையே அழித்து விட்டான். தங்கள் இருப்பையும் ஒழிக்க ஆரம்பித்து அரைவாசி இடித்தெறிந்து விட்டான்.
தே-ன்:- அப்படியா? ஆனால் நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே நாம் எல்லோரும் யோசித்து ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும். என்னவென்றால் அசுரர்களிலேயே ஒருவனைப் பிடித்து தேவனாக்கி – ஏன்? தேவேந்திரனாகவே ஆக்கி நாம் எல்லோரும் வியாதிக்கு மருந்து சாப்பிடுவது போல் அவன் அடிபணிந்து நானுள்பட எல்லோரும் அவனுக்கு பல்லக்கு சுமந்து அவனையே தேவேந்திரனாக்கி அவன் மூலமாகவே அசுரர்களைக் கொன்று அழித்து விடலாம் கொண்டு வாருங்கள்; ஒரு நல்ல அடிமையான அசுரனைப் பிடித்து அவனுக்கு தேவேந்திர பட்டம் சூட்டுவதாகத் தெரிவித்துக்கொண்டு வாருங்கள். ஏன் என்றால் முள்ளை முள்ளினால் குத்தித்தான் எடுக்க வேண்டும். அதுபோல் அசுரர்களை அசுரர்களால் தான் ஒழிக்க வேண்டும். இந்த மாதிரிப் போர்களும் தொல்லைகளும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. யுகாந்திரகாலம் தொட்டு இது மாதிரியே அசுரர்கள் செய்து வந்ததாகவும் அதற்கு இதுபோன்ற முறையை கையாடி வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. போய் ஒரு அசுரனைப் பிடித்து வாருங்கள்.
தே-ர்:- இதோ பிடித்து வந்து விட்டோம். சரியான அடிமை; சற் சூத்திரர். தங்கள் இஷ்டம் போல் இந்த அசுர அடிமையை பயன் படுத்தலாம்.
தே-ன்:- ஏ அசுரனே! நீ உங்கள் சமூகத்தை விட்டு நம்மிடம் சரணடைந்ததாக இந்த தேவர் குழாங்கள் சொல்லுகிறார்கள். உண்மைதானா? பரிசுத்தமான அடிமையாய் இருப்பாயானால் உன்னை மகாத்மாவாக்கி தெய்வீகத்தனம் பொருந்தியவன் என்று சொல்லும்படியாக ஆக்கி 33 கோடி தேவர்களையும் உன்னைப் பணியும்படி ஆக்குவேன். நன்றி விஸ்வாசத்தோடு நம்பிக்கைத்துரோகம் செய்யாமல் நடந்துகொள்வாயா?
அசுரன்:- அப்படியே செய்வேன்.
தே-ன்:- பிரமாணமாக சத்தியமாக சொல்லு.
அ-ன்:- சத்தியமாக நான் நிபந்தனை இல்லாத அடிமையாக இருந்து இந்த தேவர்களுக்கு ஆயுள் காலமெல்லாம் தொண்டுசெய்து வருகிறேன்.
தே-ன்:- சரி, இன்று முதல் இந்த அடிமையை நாம் ஏற்றுக் கொண்டோம். இவனுக்கு மகாத்மா பட்டமளித்து இருக்கிறோம். இன்று முதல் மகாத்மா என்று அழைக்கப்படவேண்டியது. இந்த அடிமையை ஆயுதமாககொண்டு அசுரக் கூட்டங்களை அழித்து நமது மநு ஆòயை புனருத்தாரணம் செய்யக் கடவீர்கள். நான் சென்று வருகிறேன்.
தே-ர்:- பிரபு இனியும் பலர் இப்படிப் பட்டவர்கள் வேண்டுமா?
தே-ன்:- தேவலோகம் பூராவுக்கும் இவனை நியமித்துள்ளோம். மற்றபடி அவரவர்கள் எல்லைக்கு அவரவர்கள் நியமித்துக்கொள்ள வேண்டியது. அந்தப்படி நீங்கள் நியமித்துக்கொள்பவர்களை விபீஷணர் போல் கருதி தேசியவாதிகள் என்னும் பட்டம் கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தே-ர்:- இப்படிப்பட்ட இவர்கள் தவிர ஆங்காங்கு வீதிவீதியாய் சுற்றி தேவரீருக்கும் எங்களுக்கும் ஜே போடவும் விருதுகள் பிடிக்கவும் ஆள்கள் வேண்டுமே.
தே-ன்:- இதற்குத்தானா ஆள் கிடையாது? தெருவில் சோமாறியாய் திரியும் சோற்றுக்கில்லாத ஆள்களைப் பிடித்து அவர்களுக்கு தேசிய வீரர்கள், ஆஞ்சனேய வீரர்கள் என்று பட்டம் கொடுத்து கையில் கொடி விருதுகள் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தே-ர்:- தாங்கள் சொன்ன யோசனைகள் மிகவும் தங்கமான யோசனைகள். அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு குறையை எப்படி நிவர்த்திப்பது? எங்களுக்கு தெரியவில்லையே.
தே-ன்:- என்ன சொல்லுங்கள் அதற்கு தகுந்த உபாயம் சொல்லுகிறேன்.
தே-ர்:- பிரபு! சோமாறி கூட்டங்களை தேசிய வீரர்கள் ஆக்கச்சொன்னீர்கள். ஆனால் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி?
தே-ன்:- இதுதானா கஷ்டம்? நம் சபையில் உள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய பெண்களை விட்டு ஆடவும் பாடவும் செய்து அதற்கு ஆக டிக்கட் போட்டு வசூல் செய்யுங்கள். மற்றும் நமது ஸ்பரிசம் பட்டாலே மோக்ஷம் கிடைக்கும் என்று கருதி இருக்கும் நடனப் பெண்கள் அடியார் பெண்கள் ஆகியவர்களை அழைத்துக்காட்டி, அவர்கள் மூலமும் பணம் வசூல் செய்யுங்கள். இவர்களை யாராவது இழிவாய்ப் பேசினால் தேவர்கள் வீட்டு நங்கையர்களை ஆடவும் பாடவும் செய்து வசூல் செய்யுங்கள் – இவ்வளவும் போராவிட்டால் தேவர்களிலேயே உள்ள சங்கீத சிகாமணிகளைக் கொண்டு பாடச்செய்து பணம் வசூல் செய்யுங்கள். இவைகூடவா உங்களுக்கு தெரியாது?
தே-ர்:- பிரபு! இந்தக் கூட்டத்துக்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது?
தே-ன்:- இதுதானா மகா கஷ்டம்? வைரக் கற்கள் பதித்த தங்கப் பதக்கம் (மெடல்) தருவதாய் கூப்பிட்டு பாடச் செய்து பிறகு பித்தளைக்கு முலாம் பூசிக்கொடுத்து விரட்டி விடுங்கள்.
தே-ர்:- சரி பிரபுவே! அவன் கூப்பாடு போட்டால் என்ன செய்வது?
தே-ன்:- எவனாவது கூப்பாடு போட்டால் அவனை ஒழிக்கத்தானா தெரியாது. நம்மிடமுள்ள வஜ்ஜிராயுமாகிய “தேசத் துரோகி” என்கின்ற பட்ட ஆயுதம் இருக்கிறதே அதைக்கொண்டு அவர்களை ஒழித்து விடுங்கள்.
தே-ர்:- சரி, பிரபு அப்படியே செய்கிறோம். இன்னும் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதையும் தெரிவித்து பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் நித்திய கர்ம அனுஷ்டானங்களுக்கு நேரமாய்விட்டது. மறுபடியும் வருகிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்,
தே-ன்:- நல்லது போய்வாருங்கள். அசுரர்களை ஒழிக்க – அழிக்க அவர்களைக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும். ஆதலால் நீங்கள் நேரில் கலந்து கொள்ளாதீர்கள் போய் வாருங்கள்.
முதல் காò முடிந்தது. அடுத்த காò ஒரு நாளைக்கு வரும்.
குடி அரசு – உரையாடல் – 25.07.1937