மும்மூர்த்திகள் கண்டனம்

அகில இந்திய முஸ்லிம் தலைவர் ஜனாப் ஜின்னாவும், முஸ்லீம் மிதவாதத் தலைவர் ஸர். முகமது யாகூபும், ஆதிதிராவிடர் தலைவர் திவான் பகதூர் ஆர். ÿநிவாஸனும் வெளியிட்டுள்ள மூன்று அறிக்கைகள் இன்றையப் பத்திரிகையில் வெளிவருகின்றன. அம்மூன்று அறிக்கைகளையும் முஸ்லீம்களும் பார்ப்பனரல்லாத ஹிந்துக்களும், ஒடுக்கப்பட்டவர்களும், கிறிஸ்தவர்களும் ஊன்றிப் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். காங்கரஸ் – இந்திய விடுதலையின் பேரால் – இந்தியாவுக்கும் மைனாரட்டி சமூகங்களுக்கும் செய்துவரும் தீமைகளை அம்மூன்று அறிக்கைகளும் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. அரசியல் விஷயங்கள் பலவற்றில் அம்மூன்று தலைவர்களும் மாறுபட்ட அபிப்பிராய முடையவர்களா யிருந்தும் காங்கரஸ் விஷயத்தில் அம்மூவரும் ஒற்றுமையான அபிப்பிராய முடையவர்களாயிருப்பது முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம்.

காந்தி காங்கிரசில் ஆதிக்கம் பெற்றது முதல் காங்கிரஸ் ஒரு ஹிந்து ஸ்தாபனம் ஆகிவிட்டதென்று ஸர். முகமது யாக்கூப் கூறுகிறார். தென்னாட்டைப் பொறுத்த வரையில் காங்கரஸ் ஒரு பார்ப்பன அக்கிரகாரமாக இருப்பது வெளிப்படை. பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால் விடுதலை பெற்ற சமூகங்களை காங்கரஸ் பேரால் பார்ப்பனர்களுக்கு அடிமைப்படுத்துவதே தற்கால காங்கரசின் நோக்கமாகும். வடநாட்டிலே ஹிந்துக்கள் காங்கரசில் ஆதிக்கம் பெற்று முஸ்லீம்களை நசுக்க முயற்சி செய்து வருவதுபோல் தென்னாட்டிலே பார்ப்பனர் காங்கிரஸில் ஆதிக்கம்பெற்று பார்ப்பனரல்லாதாரை அடிமைப்படுத்த முயல்கின்றனர். காங்கரசுக்குத் தற்காலம் இருந்துவரும் போலிச் செல்வாக்கைக் கண்டு மதிமயங்கி நம்மவர்களில் சிலரும் காங்கிரசில் சரணாகதியடைந்து வருகின்றனர். எனவே, தாம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டதாகப் பார்ப்பனர்கள் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள். தென்னாடே பார்ப்பன அக்கிரகாரமாக மாறிவிட்டதாய் அவர்கள் பாவித்துக் கொண்டிருக்கின்றனர். ஸர். முகமது யாகூப் கூறுவது போல் காங்கரசுக்கு ஏராளமான பத்திரிகை பலமிருப்பதினால் காங்கரஸ்காரர் பாமர மக்களை ஏமாற்றுவதில் வெற்றியடைந்து வருகிறார்கள். தென்னாட்டிலே காங்கரசுக்கு இரண்டு இங்கிலீஷ் தினசரிகளும், மூன்று தமிழ் தினசரிகளும் டஜன் கணக்கான வாரப்பத்திரிகைகளும் இருக்கின்றன. அவை செய்துவரும் பொய்ப்பிரசாரங்களைக் கண்டிக்க “ஜஸ்டிஸ்” தினசரி ஒன்றுதான் இருந்து வருகிறது. தமிழ் தினசரி இல்லவே இல்லை. பீப்பில்ஸ் பார்ட்டி தோன்றிய நோக்கம், கொள்கை, வேலைத்திட்டம் முதலியன எவ்வாறிருப்பினும் சரி, காங்கரஸ் அட்டூழியங்களையும் அயோக்கியத்தனங் களையும் வெட்ட வெளிச்சமாக்க அக்கட்சி தினசரிகளான “பீப்பில்ஸ் வாய்சு”ம், “ஜனநாயக”மும் பெரிதும் உதவி புரிந்து வந்தன. ஆகவே, அப்பத்திரிகைகள் மறைந்தது காங்கரஸ்காரர் அல்லாதாருக்குப் பெரிய நஷ்டமாகும். தமிழ்ப் பத்திரிகை உலகத்திலே இனி, காங்கரஸ் பத்திரிகைகளே சர்வாதிகாரி தர்பார் நடத்தப்போகின்றன. இந்நிலமையில் மாற்றமேற்படாவிட்டால் காங்கரஸ்காரர் அல்லாதார் தலை தூக்க முடியாது.

பண்டித ஜவஹர்லாலின் சர்வாதிகாரப் போக்கை ஜனாப் ஜின்னா மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். வங்காளம் பாஞ்சாலம், மத்திய மாகாணம், பீகார், எல்லைப்புற மாகாணம் முதலிய இடங்களில் முஸ்லீம் மந்திரிகள் தோன்றி தேச நிருவாகம் நடத்த முன் வந்திருப்பது வட நாட்டு ஹிந்துக்களுக்கு வயிற்றெரிச்சலை யுண்டு பண்ணியிருக்கிறது. ஆகவே முஸ்லீம்களையும் காங்கிரசுக்குள் இழுத்து இந்தியா பூராவையும் ஹிந்து மயமாக்க பண்டித ஜவர்லால் துவஜாரோ கணம் செய்து விட்டார். “தினமணி” அளித்த ராஷ்டிரபதிப் பட்டத்தை அவர் இறுகப் பிடித்துக் கொண்டு இந்தியாவின் முடிசூடா மன்னரைப் போலவே நாடகமாடி வருகிறார். அவருக்கு எவருமே லôயமில்லை. ஜின்னா, முகமது யாகூப் போன்ற பிரபல முஸ்லீம் தலைவர்களை அவர் புல்லாக மதித்தே பேசி வருகிறார். அரசியல் அதிகாரம் கையில் கிடைக்கு முன்னமேயே இம்மாதிரி அட்டகாசம் செய்பவர் அரசியல் அதிகாரம் கிடைத்த பிறகு ஏனையோரை லôயம் செய்வாரா என்பதை முஸ்லீம்களும், ஏனைய மைனாரட்டி சமூகங்களும் சிந்தனை செய்து பார்க்கவேண்டும். காங்கரஸ்காரரின் பசப்பு வார்த்தை களினால் மயங்காமல் முஸ்லீம் சகோதரர்கள் ஜின்னா கொடிக்கீழ் நின்று திட சித்தத்துடன் உழைக்க வேண்டும்.

புனா ஒப்பந்தத்தினால் ஆதி திராவிடர்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகளை திவான்பகதூர் ஆர். ÿநிவாஸன் தெள்ளத் தெளிய விளக்கிக் கூறியிருக்கிறார். நாம் ஏற்கெனவே கூறியுள்ளதுபோல் புனா ஒப்பந்தம் அமலில் இருக்கும்வரை ஒடுக்கப்பட்டோருக்கு விமோசனமே கிடையாது. ஒடுக்கப்பட்டவர்கள் எந்நாளும் ஜாதி ஹிந்துக்களின் அடிமைகளாகவே இருக்க நேரும். ஆகவே, புனா ஒப்பந்தத்தை ஒழிக்கத் தீவிரமான கிளர்ச்சி செய்யவேண்டும். புனா ஒப்பந்தத்தை ஒழிக்க வெகு சீக்கிரம் கிளர்ச்சி தொடங்கப்படும் என திவான்பகதூர் ஆர். ÿநிவாசன் கூறுவது நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. அக் கிளர்ச்சியை வெகு சீக்கிரம் தொடங்க வேண்டுமென்று நாம் திவான் பகதூர் ÿநிவாசனைக் கேட்டுக் கொள்கிறோம்.

05.05.1937 -“விடுதலை”

குடி அரசு (மறு பிரசுரம்) – கட்டுரை – 09.05.1937

You may also like...