காங்கிரஸ்காரர்கள் பக்தி விசுவாசப் பிரமாணங்கள்

 

சட்ட சபைகளுக்கு வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர்கள் இரண்டு பிரமாணங்கள் செய்ய வேண்டியதாக ஏற்படும் போல் இருக்கிறது.

அதாவது:-

  1. தேசபக்திக்கும் காங்கிரஸ் கட்டுதிட்ட பக்திக்கும் ஒரு பிரமாணம் டெல்லியில் கூடப் போகும் கன்வென்ஷன் என்பதில் செய்ய வேண்டுமாம்.
  2. ராஜாவுக்கும் ராஜ சந்ததிக்கும் அரசாங்கத்திற்கும் அரசாங்க சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துகொள்ளுவதாக ஒரு பிரமாணம் சர்க்கார் கோட்டைக்குள் சென்று செய்யவேண்டுமாம்.

ஆகவே இந்த இரண்டு பிரமாணமும் ஒன்றுக்கொன்று முரணானதாகும். இரண்டையும் காங்கிரஸ்காரர்கள் செய்வதாய் இருந்தால் எதாவது ஒன்றை “சும்மா வெறும் சத்தியம்” – “பொய் சத்தியம்” – “மனதுக்குள் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு ஏமாற்றுவதற்கு ஆக செய்யப்பட்ட சத்தியம்” என்று (சைவப் பெரியார்களில் சுந்தரமூர்த்தி செய்தது போல்) கருதி செய்யப் போகிறார்களோ என்னமோ தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் ஒரு சத்தியம் மாத்திரம் உண்மையானதும் உறுதியானதுமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதாவது சர்க்காரையும் ஏமாற்றி காங்கிரசையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி தேசத்தையும் காட்டிக் கொடுத்து சமயம் போல் நடந்து தங்கள் சுயநலத்தையே கண்ணும் கருத்துமாய் கவனித்து அதற்கு பக்தி விசுவாசமாய் நடந்து கொள்வது என்பதில் சந்தேகமில்லை. இவர்களுக்குள் பார்ப்பனர்களாய் இருப்பவர்கள் எல்லோரையும் ஏமாற்றி தங்கள் ஜாதி உயர்வுக்கும் தங்கள் வாழ்க்கை உயர்வுக்கும் மாத்திரம் பக்தி விசுவாசமாய் நடந்து கொள்ளுவதாய் சத்தியம் செய்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி 3ம் நெம்பர் 4ம் நெம்பர் பொக்கிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. பார்ப்பனர்களுக்கு பக்தி விசுவாசமாய் இருந்து வயிறு வளர்த்துக்கொள்ளுவது என்று சத்தியம் செய்து கொள்ளுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. அக்கூட்டத்தில் 100க்கு 90 பேர்கள் போல் இந்த சத்தியம்தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இதற்கு வழிகாட்டியாக காங்கிரஸே நாளைக்கு ஒரு பொய்ச் சத்தியம் செய்ய உத்திரவு கொடுக்கப் போகிறது.

அதாவது “மனதில் பூரண சுயேச்சை என்கின்ற எண்ணம் வைத்துக்கொண்டு ராஜாவுக்கும் சந்ததிக்கும் சட்ட திட்டத்துக்கும் கட்டுப்பட்டு பக்தி விஸ்வாசமாய் நடப்பதாக பிரமாணம் செய்யலாம்” என்பதாக அனுமதி அளிக்கப்போகிறது. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு காரியத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாமல்லவா? அது தானே இப்போது பார்ப்பனர்கள் செய்யும் தேசபக்தி நாடகமும். அவர்கள் மனதில் பார்ப்பன பக்தி இருந்தால் போதும், வெளி வேஷத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் என்று நடந்து கொண்டார்கள். இதற்கு ராமாயணமும் வழிகாட்டி இருக்கிறது.

அதாவது ராமன் சீதையை ராவணன் அனுபவித்து இருப்பான் என்று சந்தேகப்பட்டு “அந்நியன் வீட்டில் இருந்தவளை எப்படி சேர்த்துக்கொள்ளுவது” என்று கேட்டபோது சீதை “என் சரீரம் தானே ராவணன் வசப்பட்டு இருந்தது? நான் பெண் ஆனதால் சரீரத்தை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆனால் என் மனம் மாத்திரம் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தது” என்று சொன்னாளாம். அது போல் காங்கிரஸ்காரர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ள காங்கிரசும் சமயமும் சமயப் புராணங்களும் ராமாயணமும் ஜாதி புத்திகளும் இடம் கொடுக்கின்றன. ஆதலால் அதைப்பற்றி கவனிப்பது வீண்வேலையாகும்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 14.03.1937

You may also like...