காங்கிரஸ் பூச்சாண்டி
காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய மானங்கெட்ட பிகுவைக் காட்டிக்கொள்வதற்கு – அதாவது பொது ஜனங்களை ஏமாற்ற ஏனெனில் இதற்கு முன் பல தடவைகளில் சட்டசபைகள் “கழுதைகளும் நாய்களும் போகக்கூடியவை” என்றும் சட்ட சபைகளினால் ஒரு காரியமும் செய்ய முடியாதென்றும் கூப்பாடு போட்டுக்கொண்டு திரிந்ததோடு இரண்டு ஒரு சமயங்களில் சட்டசபையில் இருந்தே காலஞ்சென்ற மோதிலால் நேரு போன்றவர்கள் “சட்டசபைக்கு வந்ததே முட்டாள்தன” மென்றும் “இப்போதுதான் புத்தி வந்தது” என்றும் சொல்லி “வீரகர்ஜனை” செய்துவிட்டு வெளியேறி வந்தும், சமீபகாலமாக 2 வருஷத்திற்கு மேல் இந்திய சட்டசபையில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி பலம் இருந்தும் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போய் அறிவுள்ள ஓட்டர்கள் முன் தலை குனிய நேர்ந்தும் இருப்பவைகளான பல காரணங்களால் இப்போது காங்கிரசுக்காரர்கள் சட்டசபைக்குப் போனதற்கும் மந்திரி பதவி ஏற்று சம்பளம் பெற்று அதிகாரம் செய்வதற்கும் ஆசைப்பட்ட பிறகு பொதுஜனங்களுக்கு ஏதாவது ஒரு ஏமாற்றுதலான காரியம் செய்யாவிட்டால் தங்களை பழையபடி அதாவது தாங்கள் முன் சொன்னபடி கழுதைகள், நாய்கள் என்று நினனத்துவிடுவார்களே என்கின்ற கருத்தின்மீது ஒரு தந்திரம் செய்து பார்த்தார்கள். அதுதான் “நீ நோகாமல் அடி நாங்கள் ஓயாமல் ஊளையிடுகிறோம். ஆனால் உங்கள் காரியத்தை மாத்திரம் கிரமமாக நடத்திக்கொடுக்கிறோம்” என்ற ஒப்பந்தத்தில் உறுதி மொழி கேட்டதாகும்.
ஆனால் பிரிட்டிஷ் சர்க்காரானது எந்தக் காரியத்தைக் கொண்டும் எந்தக் காரணம் கொண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று ஜம்பம் பேசி மக்களை ஏமாற்ற இடம் கொடுக்கக் கூடாது என்றும் அம்மாதிரி காங்கிரசை சர்க்கார் மதித்ததாக பாமர மக்கள் நினைக்கும்படி ஏற்பட்டுவிட்டால் அந்த நினைப்பை வைத்துக்கொண்டு அயோக்கியத் தனமாகவும் நாணயக் குறைவாகவும் நடந்து மக்களுக்கு அதிகமான தொல்லை விளைவித்து ஏழை – எளிய – பலம் குறைந்த மக்களை ஏமாற்றி கஷ்டத்துக்குள்ளாக்கி விடுவார்கள் என்று கருதியே இதுவரையில் எந்தத் துறையிலும் எந்தக் காரியத்திலும் காங்கிரஸ் தலையெடுக்கவொட்டாமலும் ஒரு திட்டத்திலாவது வெற்றி பெற முடியாமலும் செய்து வந்திருக்கிறார்கள்.
உதாரணம் வேண்டுமானால் காந்தியார் காங்கிரசில் கலந்து சாதுவேஷம் போட்டு மகாத்மாவாகி ஏமாற்ற ஆரம்பித்த காலமாகிய 1919-ம் வருஷம் பஞ்சாப் கொடுமைக்கு பரிகாரம் தேட முயற்சித்த கால முதல் நிர்மாணத் திட்டம், பஹிஷ்காரம், ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு, சைமன் கமிஷன், உப்புக் காய்ச்சுதல், காந்தி இர்வின் ஒப்பந்தம் முதலாகிய எல்லாக் காரியங்களிலும் “காந்தி தொட்டது துலங்காது” என்பதாக ஏற்படும்படி தோல்வியும் தலைகுனிவும் மன்னிப்பு பெறுவதுமான காரியங்களாகவே முடியும்படியாக சர்க்கார் செய்து வந்திருப்பவைகளைப் பார்த்தாலே தெரிய வரும்.
தோழர் காந்தியார்தான் ஆகட்டும், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தான் ஆகட்டும், தங்கள் சக்தியைக்கொண்டோ அல்லது புத்திசாலித்தனத்தையும் நாணயத்தையும் கொண்டோ அல்லது அனுபவ ஞானம், அரசியல் ஞானம் என்பவையான நிபுணத்துவத்தைக் கொண்டோ காங்கிரசை நடத்தாமல் மூட மக்களிடம் ஏமாற்றுப் பிரசாரத்தில் பணத்தை வசூலித்துக்கொண்டு காலிகளுக்கும் கூலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்பு பத்திரிக்கைகளுக்கும் சுயநல வகுப்பு ஆதிக்கப் பத்திரிக்கைகளுக்கும் பணமும் ஆதரவும் கொடுத்து, யோக்கியதையின் மூலம் பதவிபெற தகுதியற்ற சோம்பேறி வஞ்சகக் கூட்டத்தை ஆதரித்துக்கொண்டு அவற்றின் மூலம் மலத்தை மாப்பணியாரம் ஆக்கி மக்களை நம்பும்படி செய்து ஏமாற்றிவரும் தந்திர ஜாலத்தின் மூலமே காங்கிரஸ் நடத்தப்பட்டு வருவதாலும் அறிவுள்ள மக்கள் இதை நன்றாய் அறிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை சர்க்கார் தெரிந்திருப்பதால் காங்கிரசின் நடவடிக்கைகளையோ அதை பாமர மக்கள் கண்மூடித்தனமாய் நம்பி அடி உதை படுவதையோ கோயில் குளம் போல் கருதி முட்டாள் பக்தி செலுத்துவதையோ சிறிதும் லòயம் செய்யாமல் நாட்டு ஆட்சியின் முழுப்பொறுப்பும் தங்கள் மீது இருப்பதாகக் கருதி – நாட்டு நலனுக்கு காங்கிரஸ் எதிரியாகக் கருதி காங்கிரஸ் வெற்றி பெறாமல் இருக்கும்படியான வேலையை வெகு கவனமாக நடத்தி வருகிறார்கள். காங்கிரசுக்கு வெற்றி ஏற்பட்டு நாட்டின் ஆட்சி காங்கிரசின் கைக்கு போனால் இன்றைய ஸ்பெயின் படும்பாடு தான் இந்தியா படும் என்பது சர்க்காருக்கு மாத்திர மல்லாமல் பல அறிஞர்களுக்கும் தெரிந்து இருப்பதாலேயே காங்கிரசுக்கு உண்மையில் ஒரு மதிப்பும் மரியாதையும் இல்லாமல் அது ஒரு வக்கீல் சந்தையாகவும் வயிற்றுப் பிழைப்பாளர்களின் ஊட்டுப்புரையாகவும் பாமர மக்களை ஏமாற்றும் ஜால ஸ்தாபனமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவுதான் அர்த்தமற்றதும் பயனற்றதும் சீர்திருத்த சட்டத்தை சிறிதும் அசைக்கக்கூடாததும் சர்க்கார் நலத்திற்கோ பிரிட்டிஷாரின் சுயநலத்துக்கோ சிறிதும் பாதகமோ அசெளகரியமோ விளைவிக்கக் கூடாததுமான “வாக்குறுதி”யை கேட்டாலும் கூட சர்க்காரார் மற்றவைகளுக்கு சொன்ன ஒரே பதிலையே அதாவது முடியாது என்பதையே சொல்லி வருகிறார்கள்.
இந்த விஷயம் நன்றாய் காங்கிரஸ்காரர்கள் அறிந்திருந்தும் இந்த மாதிரி இடுக்கில் மாட்டிக்கொண்டதற்கு காரணம் ஏமாந்ததனமே தவிர வேறில்லை என்றுதான் சொல்லுவோம். நாம் முன் பல தடவைகளில் குறிப்பிட்டதுபோல் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் கேட்கும் வாக்குறுதி கிடைக்குமென்று கருதியே ஆக்ஷேபிக்க சிறிதும் காரணமில்லாதபடி “நிபந்தனை” அதாவது அடிமை முறிகொடுத்து வாக்குறுதி கேட்டார்கள். இதை 29.4.37ந் தேதி “சுதேசமித்திர”னும் தலையங்கத்தில் ஒப்புக்கொள்ளுகிறது.
“உறுதிமொழி கேட்ட காலத்தில் கவர்னர்கள் உறுதிமொழி கொடுத்து விடுவார்கள் என்றும் மந்திரி பதவிகளை ஏற்பது சாத்தியமாகிவிடுமென்றும் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் திடீரென்று இந்தியா மந்திரி குறுக்கிட்டு கவர்னர்கள் உறுதிமொழி கொடுக்கக்கூடாது என்று தாக்கீது பிறப்பித்து விட்டார்” என்று எழுதி மாரடித்துக்கொண்டு அழுகிறது.
இதன் பின் என்ன நடந்தது என்று பார்த்தால் காங்கிரஸ் கேட்ட உறுதிமொழியில் சர்க்காருக்கோ, சீர்திருத்த சட்டத்துக்கோ, கவர்னர்களுக்கோ சிறிதும் அசெளகரியம் கிடையாது என்றும் உறுதிமொழியினால் எவ்வித சங்கடமும் சர்க்காருக்கு நேராமல் பார்த்துக்கொள்ள முடிவு செய்தே உறுதி மொழி கேட்கப்பட்டது என்றும் காங்கிரஸ்காரர்களால் சொல்லப்பட்ட பிறகும் கூட சர்க்காரார் “உறுதிமொழி மாத்திரம் கொடுக்கமுடியாது. ஆனால் காங்கிரசுக்காரர்கள் சொல்லுகிறபடி சட்டத்திற்கு அடங்கி கவர்ன்மெண்டிற்கு அசெளகரியமில்லாமல் நடப்பதானால் சட்டத்திலேயே உறுதிமொழி இருக்கிறது” என்றும் “அந்தக் கருத்தின் மீது தான் அச்சட்டம் செய்யப்பட்டிருக்கிறது” என்றும் சொல்லிவிட்டார்கள்.
இந்த மத்தியில் சட்ட சம்மந்தமான பிரச்சினைக்கு இதில் இடமே இல்லை. காங்கிரசின் பொய் வெட்கம் தான் குறுக்கிடுகிறது. சட்ட சம்மந்தமான காரியத்தைப் பற்றி பேசுவதாயிருந்தாலும் காங்கிரஸ் வாக்குறுதி கேட்கும் தீர்மானம் நிறைவேற்றிய உடனே தோழர்கள் ஜயகர், சாப்ரு, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரி முதலியவர்கள் உறுதிமொழி கொடுப்பது சட்டத்திற்கு விரோதமென்று சொன்ன பிறகு ஏதோ நேற்று முளைத்த காளான்களை விளம்பரப்படுத்திக்கொண்டும் லண்டனில் எதிர்க்கட்சியில் இருக்கும் வெள்ளையர்களுக்கு விளம்பரம் கொடுத்துக்கொண்டும் இதுவரை கேட்டிராத – காங்கிரஸ்காரர்களாலும் மதித்திராத ஆள்கள் பேரைச்சொல்லி அவர்கள் பேரால் சட்டத்தில் இடமிருக்கிறது என்று சொன்னால் அதில் என்ன யோக்கியப்பொறுப்பு இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ்காரர்களின் சட்டசபைப் பிரவேசத்துக்கு வெளிப்படையாய் சொல்லப்பட்ட காரணம் சீர்திருத்த சட்டத்தை ஒழிப்பது என்பதாகும்.
அந்தப் பிரச்சினையின்மீது வெற்றி பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இன்று சீர்திருத்த சட்டத்தை நடத்திக்கொடுக்க கவர்னர்கள் வசதி செய்து கொடுக்கும்படி கேட்கிறார்கள் என்றால் அதாவது “சீர்திருத்தத்தைக்கொண்டு மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டு மென்றால் அப்படி செய்யப்படுபவைகளில் கவர்னர் பிரவேசிப்பதில்லை என்று உறுதிமொழி கொடுக்கவேண்டுமென்றும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதாயும் சொல்ல வேண்டும்” என்றால் இதற்கு என்ன அருத்தம் என்று கேட்கின்றோம்.
இந்த உறுதிமொழி காந்தி இர்வின் ஒப்பந்தம் போலவே இருக்கிறது. அதாவது “காங்கிரஸ்காரர்கள் இனிமேல் மறியல் செய்வதில்லை, சட்டமறுப்பு செய்வதில்லை, ஒத்துழையாமை செய்வதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்று ஒப்புக்கொள்ளுவது, சர்க்காரார் (அப்படியானால்) அரஸ்டு செய்வதில்லை, அரஸ்டு செய்து ஜெயிலில் வைத்திருப்பவர்களை விடுதலை செய்து விடுவது” என்பதாகும். இதைத்தான் காங்கிரசுக்கு ஒரு வெற்றி என்று சொன்னார்கள் அனேக மூடர்கள். அதுபோலவே இப்போதும் கேட்கிறார்கள். இந்த பொய் வீம்புக்கு சர்க்கார் இடம் கொடுக்க மறுக்கிறார்கள். இதுதான் இன்றைய “நெருக்கடி” என்பதாகும்.
இந்த நிலையில் அலஹாபாத்தில் காரியக் கமிட்டி கூடி தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டது. என்னவென்று பார்ப்போமானால் அவை இவ்வளவையும் விட வெட்கக்கேடான காரியம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
“அதாவது லார்ட் ஜெட்லண்டும் மிஸ்டர் பட்லரும் பேசியிருப்பது காங்கிரசினிடம் அவமரியாதையைக் காட்டுவதாக இருக்கிறது” என்றும்,
“கவர்னருக்கும் மந்திரிகளுக்கும் கடுமையான அபிப்பிராய பேத மேற்படும்பொழுது மந்திரிகளை நீக்கவோ, சட்டசபையை கலைக்கவோ கவர்னருக்குள்ள அதிகாரத்தை பிரயோகிக்காமலிருக்க வேண்டுமென்கின்ற கருத்து உறுதிமொழியில் இல்லை” என்றும் தீர்மானித்திருக்கிறது.
இந்த தீர்மானமானது அனாவசியமாய் எங்களை அடித்துவிட்டீர்கள். நாங்கள் ஒன்றும் குற்றம் செய்யவில்லையே என்று அழுவதுபோல் இருக்கிறதேயல்லாமல் இதில் வேறு நாணயமோ புத்திசாலித்தனமோ வீரமோ ஒன்றுமே காணமுடியவில்லை.
ஆனால் சாராம்சத்தில் சர்க்காரிடம் காங்கிரஸ் ராஜி செய்துகொள்ள முயற்சிப்பதாகவே பேச்சுவார்த்தைகளால் காணப்படுகின்றது. இந்தியா மந்திரியும் உதவி மந்திரியும் காங்கிரஸ் கோரிக்கையை “அலòயம் செய்து அவமரியாதையாய்” பேசிய பிறகுகூட சர்க்காரோடு ராஜி செய்து கொள்ள காங்கிரஸ் இவ்வளவு ஆத்திரப்படுவானேன்? இதுதான் “தேசீய காங்கிரஸ்தான் எல்லாவற்றிலும் பெரிதும் பலம் பொருந்தியதும் சுயமரியாதை உள்ளதுமான ஸ்தாபனம்” என்று சொல்லுவதற்கு அறிகுறியா என்று கேட்கிறோம்.
சர்க்காரார் இப்படி ஆத்திரமூட்டக்கூடிய மாதிரியிலும் அவமரியாதை யாயும் பேசியதாக தீர்மானித்துக்கொண்ட பிறகுகூட சில பத்திரிக்கைகள் சிறிதும் வெட்கம் மானமின்றி தங்களுக்கு இனியும் மந்திரி பதவி ஏற்கக்கூடும் என்ற நம்பிக்கை இருக்கிறதென்றும் காங்கிரஸ் கட்டாயம் பதவிக்கு வரப்போகிறதென்றும் இப்போதே சர்க்கார் கீழே இறங்கி வந்து விட்டதென்றும் பித்தலாட்டப் பேச்சுப்பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது அரசியல் அயோக்கியத்தனம் தவிர வேறில்லை. இதன் கருத்து மந்திரி பதவி கொடுப்பதாய் ஏமாற்றி சேர்க்கப்பட்ட ஆட்கள் காங்கிரசை விட்டு ஓடாமலிருக்கவே ஒழிய வேறல்ல. இந்தப்படி ஒரு கூட்டம் பத்திரிகைகள் பதவி ஆசை பிடித்து இதோ பதவிக்கு வரப்போகிறோம் அதோ பதவிக்கு வரப்போகிறோம் என்று கூறிக்கொண்டிருக்க, மற்ற ஒரு கூட்டம் இந்த கவர்ன்மெண்டை ஆட்டுவிக்கப் போகிறோம். காந்தியார் அபாரமான – தீவிரமான திட்டம் வகுத்து சர்க்காரை நடுங்கும்படி செய்யப்போகிறார் என்றும், காந்தியார் எல்லோருக்கும் சமாதானம் சொல்லி அடக்கிவைத்து இருக்கிறார், இல்லாவிட்டால் பிரிட்டிஷ் ஆட்சி உரலைக் கட்டிக்கொண்டு ஆகாயத்தில் பறந்துவிடும் என்றும் பலவிதமாக கூப்பாடு போட்டு பாமர மக்களை ஏமாற்றுவது மற்றொரு அயோக்கியத்தனமேயாகும்.
இன்றைய அரசியல் நிலை இன்னது என்பதை மக்கள் உணருவதற்கே இல்லாமல் காங்கிரசு செய்து வருகிறது.
காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்பதில் நமக்கு சிறிதும் ஆக்ஷேபணை யில்லை. அவர்கள் பதவி ஏற்றுச் செய்யப்போகும் காரியம் இன்னது என்பதையும் அவர்கள் அடையப்போகும் பஹிஷ்காரம், கருப்புக் கொடிமரியாதை, அவர்களை பஹிஷ்கரிப்பது மூலம் பலர் ஜெயிலுக்கு செல்லுதல் முதலிய கவுரவம் ஆகியவைகளைப் பார்க்கத்தான் காத்திருக்கிறோமே ஒழிய காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்கக்கூடாது என்கின்ற எண்ணம் நமக்கு சிறிதும் கிடையாது. எப்படியாவது சுடுகாடு போன பிணம் சுட்டுத்தான் தீரவேண்டும், திரும்பிக் கொண்டு வந்தால் நாற்ற மெடுத்துப்போகும் என்பது நமக்குத் தெரியும். ஆதலால் இப்போது இருக்கும் மந்திரிகளைக்கொண்டே நாடு கரை ஏறிவிடும் என்று யாரும் நம்பவேண்டியதில்லை. அவர்கள் எவ்வளவு நன்மையான காரியங்களைச் செய்வதானாலும் காங்கிரஸ் தொல்லை முதலில் ஒழிந்தாக வேண்டும். அப்படி ஒழிவதற்கு காங்கிரசு எப்படியாவது மந்திரி பதவி ஏற்கவேண்டும். பொய் வெட்கத்தையும் போலி மரியாதையையும் காட்டிக்கொண்டு இன்னமும் நாள் கடத்தாமல் “வார்ப்பதை வாரம்மா வள்ளித்தாயே” என்று மரியாதையாய் முக்காடு போட்டு பதவிக்கு வரட்டும் என்று அறை கூவி அழைக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 02.05.1937