யார் வெள்ளைக்கார ஆட்சி  கொண்டுவந்தவர்கள்?

 

காங்கிரஸ் சுலபத்தில் பதவிக்கு வராது

காங்கிரஸ் அல்லாதவர்கள் தேசத்துரோகிகளா?

தலைவரவர்களே! தோழர்களே!!

இந்த பக்கத்துக்கு சுமார் 10, 15 வருஷங்களுக்கு முன் இரண்டு மூன்று தடவை வந்து உபன்யாசம் செய்திருக்கிறேன். அதன் பிறகு இப்போதுதான் உபன்யாசம் செய்கிறேன். அப்போதுள்ள எனது நண்பர்கள் பலரை இப்போது பார்த்து மகிழ்கிறேன். அப்போது எனக்களிக்கப்பட்ட பல வரவேற்பு பத்திரங்கள் போலவே இப்போதும் பல வரவேற்புப் பத்திரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அப்போது காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் என்னை பாராட்டிப் புகழ்ந்து பேசி வரவேற்பு வாசித்தார்கள். இப்போது பகுத்தறிவாளர்களும் சுயமரியாதைக்காரர்களும் ஆதிதிராவிட தோழர்களும் பாராட்டிப் புகழ்ந்து கூறி வரவேற்பு வாசித்தளித்திருக்கிறீர்கள்.

வரவேற்பு பத்திரங்களில் வழக்கம்போலவே என்னை வானமளாவப் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப் புகழ்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறேன். ஏனெனில் அவ்வளவு பெரும் புகழுக்கும் பாராட்டுதலுக்கும் நான் பொருத்தமுடையவன் அல்ல என்றே கருதுகிறேன். ஆனால் என் மீது உங்களுக்கு உள்ள அன்பும் என்னிடமிருந்து நீங்கள் பெறவிரும்பும் காரியங்களையும் தான் நீங்கள் அப்புகழ்ச்சி ரூபமாய் வெளியிட்டிருக்கிறீர்கள் என்று கருதி உங்கள் அன்புக்கு நன்றியும் உங்கள் விருப்பத்துக்கு நம்பிக்கையும் செலுத்துகிறேன். என்னாயுள் வரை என்னால் கூடிய அளவு தாங்கள் விரும்பும் தொண்டிற்கு உழைக்கிறேன்.

சமூக இயலும் அரசியலும்

இக்கூட்டத்தில் சமூக சீர்திருத்தம் என்பதுபற்றி பேசப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பல தோழர்கள் அரசியல் சீர்திருத்தம் என்பதுபற்றிப் பேசவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். தலைவர் இரண்டும் பற்றிப் பேச அனுமதி அளித்திருக்கிறார். இது ஒருபுறமிருந்தாலும் சமூக சீர்திருத்தம் அரசியலைவிட்டு தனித்திருக்க முடியாது. அரசியல் சீர்திருத்தம் சமூகத்தை விட்டு தனித்திருக்க முடியாது. மனித சமூகத்துக்கு ஆகத்தான் அரசியல் நடக்கிறது. அரசியல் காரியம் ஒவ்வொன்றும் சமூக நலனைப் பொருத்தே ஒழிய வேறில்லை. அரசியல் சட்டமும் பாதுகாவலும் சமூகத்துக்கு ஆகவும் சமூக நலனை அனுசரித்தும் செய்யப்பட்டதே தவிர வேறில்லை. இந்த நாட்டில் சமூக இயலும் அரசியலும் பிரிக்கப்பட்டிருப்பதாய் காணப்படுவதானது ஒரு சூழ்ச்சித்திறமே தவிர வேறில்லை. ஏனெனில் சமூக இயலில் இருந்துவரும் கொடுங்கோன்மையும் தனிப்பட்ட வகுப்பாரின் சுயநலமும் மக்கள் கவனியாமல் இருப்பதற்கு ஆகவே சமூக இயல் என்பதை துச்சமாய் கருதுவதாகவும் அரசியலே முக்கியமானது என்றும் பேசி மக்களை ஏமாற்றி ஒரு சிறு கூட்டத்தார் சமூக இயலிலும் அரசியலிலும் ஆதிக்கம் பெற்று பெரும்பான்மையான மக்களை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள். சமூக சம்மந்தமான இழிவுக்கும், வகுப்பு சம்மந்தமான அடிமைத்தனத்துக்கும் பாதுகாப்பளிக்கத்தான் இன்றைய அரசியல் கிளர்ச்சி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாகவே இன்று இந்நாட்டில் இந்திய மக்களுக்குள்ளாகவே போர் நடந்து வருகின்றது.

உதாரணமாக நம் தென்நாட்டை பொருத்தவரை காங்கிரஸ் – ஜஸ்டிஸ் கிளர்ச்சிகள் என்பவை பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் போராகவும் வடநாடுகளில் பெரிதும் காங்கிரஸ் – முஸ்லீம்லீக் என்பவை இந்து முஸ்லீம் போராகவும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த போர்கள் எல்லாம் சமூக சீர்திருத்தப் போரேயாகும். சமூகங்கள் சீர்திருத்தம் பெற்றால் ஒழிய எப்படிப்பட்ட அரசியலும் இப்போர்களை தணிக்கமாட்டா. காங்கிரசின் அரசியல் கிளர்ச்சி சமூக இயலுக்கு விரோதமானதென்று கருதியே நாட்டின் பெரும்பான்மை மக்களான இவ்விரு சமூகமும் காங்கிரஸ் கிளர்ச்சியை ஒழிக்கப் பாடுபடுகின்றன. காங்கிரசுக்கு பல செளகரியங்களும் சூழ்ச்சித்திறமும் இருப்பதால் அது மற்ற கிளர்ச்சிகளை நசுக்கி அழுத்தி தலைதூக்கி வருகின்றது. என்றாலும் காங்கிரசானது கிளர்ச்சியில் மாத்திரம் விளம்பரம் பெற்று வருகிறதே ஒழிய காரியத்தில் ஒரு நாளும் வெற்றிபெற முடியாமலேயே இருந்து வருகிறது. இப்பதினைந்து இருபது வருஷகாலமாய் அது மக்களை ஏமாற்றுவதில் வெற்றி பெற்றதே ஒழிய காரியத்தில் ஒரு வெற்றியும் பெறவே இல்லை. காரணம் என்னவென்றால் காங்கிரசுக்கு புத்தி இருக்கிறதே தவிர ஒழுக்கமோ நல்ல எண்ணமோ இல்லாததுதான்.

நம்நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும் சமூக ஒற்றுமையும் உண்டாகக்கூடிய தன்மை இருக்கவேண்டும்.

நம் காட்டுமிறாண்டித் தன்மை

நம்நாட்டு பெரும்பாக மக்களின் சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால் மனிதத் தன்மையின் ஆதிநிலை என்று சொல்லப்படும் காட்டு மிறாண்டித்தனமும் சாவேஜஸ் என்னும் மிருகப்பிராயத் தன்மையும் இன்னமும் இருந்துவருவதாகத்தான் நான் காண்கின்றேன். நாம் முன்னேற்றமடைந்த மக்களானால் மதச் சண்டை, ஜாதிச் சண்டை, வகுப்புச் சண்டை, உயர்வு தாழ்வு கொடுமை பத்தாயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் இருந்தமாதிரியே இன்றும் இருந்து வரமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நம் வகுப்புகள் முன்னேற்றமடைந்த வகுப்புகளாய் இருக்குமானால் நம் வகுப்புகளில் இன்னமும் “அனுமார்கள்” தன்மை அதாவது குரங்குத் தன்மைகள் இருக்க முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். வகுப்பு இழிவு நீங்கவும் வகுப்பு சமத்துவமும் சுயமரியாதையும் பெறவும் போரிடும்படியான இந்த நல்ல சந்தர்ப்பத்தில் நம் வகுப்பை இழிவகுப்பாய் கருதி நமது முன்னேற்ற முயற்சியை ஒழிக்க கங்கணங்கட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் காலை நக்க நம் வகுப்பு மக்களே முன்னிற்பார்களா என்று யோசித்துப் பாருங்கள்.

“ராமாயண” காலத்தில் நம் மக்கள் எவ்வளவு காட்டு மிறாண்டி களாகவும் இழிவு புத்தி உள்ளவர்களாகவும் இருந்து பார்ப்பனர்களுக்கு உதவி புரிந்தார்களோ அதே நிலையில்தான் தமிழ் மக்களில் பலர் இன்றுமிருக்கிறார்கள். இந்த இழி பிறப்பு மக்கள் அன்று இருந்த மாதிரி தான் இன்றும் இருக்கிறார்கள். பார்ப்பான் பின் திரிவதும் அவர்களை ஆதரிப்பதும் அவர்கள் சூழ்ச்சிக்கு உடந்தையாய் இருப்பதும் அவமானம் என்று கருதாத தமிழ் மக்களை சாவேஜ் (குச்திச்ஞ்ஞு) பிறவி என்று சொல்வதில் குற்றமோ தவறோ இருப்பதாக நான் கருதவில்லை. காட்டுமிறாண்டித் தன்மை என்பதற்கு அருத்தமே மனிதனுக்கு மானத்தில் கவலை இல்லை என்பதுதான். கடுகளவு மானம் இருந்தாலும் ஒரு தமிழ் மகன் – பார்ப்பனரல்லாதவன் பார்ப்பனன் பின் திரியமாட்டான். பார்ப்பனனின் கொள்கை என்ன? அவர்கள் யாராயிருந்தாலும் சரி சங்கராச்சாரியோ, ராஜகோபாலாச்சாரியோ, சத்தியமூர்த்தியோ, சீனிவாச – வெங்கிடராம முதலிய சாஸ்திரியோ யாராய் இருந்தாலும் தன் ஜாதி, தன் பிறவி உயர்வு, மற்ற மக்கள் ஜாதி பிறவி தாழ்வு என்பதல்லாமல் வேறு என்ன கருத்துடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களது பூணூல் எதைக்குறிக்கிறது? அவர்களது வேதசாஸ்திர புராணங்களும் எதைக் குறிக்கின்றன? அவர்களது தர்ம சாஸ்திரங்களான மனுதர்ம சாஸ்திரமும் கீதையும் எதைக் குறிக்கின்றன? இவைகளை அறிந்திருந்தும் இவைகளைக் காப்பாற்றி வருவது தான் பூரண சுயராஜ்யத்தின் திட்டம் என்று காங்கிரசில் குறிக்கப்பட்டிருந்தும் இவற்றை அறிந்த ஒரு தமிழ் மகன் இந்தப் பார்ப்பனர்கள் பின் திரிவானானால் இப்படிப்பட்ட சுயராஜ்யத்தில் பங்கெடுத்துக்கொண்டு இதற்காதாரமான காங்கிரசில் அங்கத்தினராயிருக்கின்றான் என்றால் இப்படிப்பட்டவனை ஆதிமனித சுபாவத்திலிருந்து மாற்ற மடைந்தவன் என்று யார் தான் சொல்லிக்கொள்ள முடியும்? இந்த லக்ஷணத்தில் வெள்ளைக்காரர்களைப் பற்றி பேசுவதும் ஏகாதிபத்தியத்தைப்பற்றி பேசுவதும் எவ்வளவு பித்தலாட்டமானதும் எவ்வளவு இழிவழியில் வயிறு பிழைப்பதான ஈனத்தனம் கொண்டதுமான பேச்சு என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்கள் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் சம்மந்தமோ ரத்தக்கலப்போ உடையவர்கள் அல்ல என்பதை நான் தைரியமாய் கூறுவேன். வெள்ளைக்காரனை தமிழ் மகன் எவனும் ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் நான் தைரியமாய் கூறுவேன். ஆனால் பார்ப்பனர்கள் நிலை அப்படி அல்ல, வெள்ளைக்காரர்களும் பார்ப்பனர்களும் ஒரு குடிமக்களே யாவார்கள். இருவர் மூதாதைகளும் ஒரு சமூகமேயாகும்.

யார் வெள்ளைக்கார ஆட்சியைகொண்டு வந்தவர்கள்?

பார்ப்பனர்களே வெள்ளைக்கார ஆòயை கொண்டுவந்தவர்கள் – நிலை நிறுத்தியவர்கள் – அவர்களை நிலை நிறுத்தி அவர்கள் ஆòக்கு தூண்களாய் இருந்து வருபவர்களாய் இருக்கிறார்கள். இதை சரித்திர உண்மையோடும் புள்ளிவிவரங்களோடும் எங்கு வேண்டுமானாலும் ருஜúசெய்ய என்னால் முடியும். இப்படி இருக்க சில அயோக்கியர்களும் பார்ப்பனர்கள் காலை நக்கிப் பிழைக்கும் இழி பிறப்பு மக்களும் நம்மை வெள்ளைக்காரர்களுக்கு அடிமை என்றும் வெள்ளையர்கள் தாசர்கள் என்றும் சொல்லுகிறார்கள் என்றால் தாங்கள் பார்ப்பனர்களுக்கு கூலியாய் இருக்கும் இழிவை நினைத்துப் பார்க்காமலும் அதனால் தாங்கள் அடையும் அவமானத்தை லôயம் செய்யாமலும் இருக்கும் ஆதி மனிதப் பிறப்புதன்மையே ஒழிய வேறில்லை என்று சொல்லுவேன். நம்மை வெள்ளைகாரர்களுக்கு அடிமை என்று சொல்லும் யோக்கியர்களை ஒன்று கேட்கின்றேன். ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்ட சபைகளிலும் பார்ப்பனர்களும் காங்கரஸ் காலிகளும் அவர்களுடன் கொடி தூக்கித்திரியும் தமிழ் மக்களும் “பிரிட்டீஷ் அரசருக்கும் அவர் சந்ததிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் அவரது சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துகொள்ளுகிறேன்” என்று பிரமாணம் செய்து கொடுக்கிறார்களே இது அடிமைஅல்லவா? இவர்களது சந்ததிகள் வெள்ளைக்காரரிடம் சேவை செய்கிறார்களே, இவர்களே வெள்ளைக்காரர்கள் கோர்ட்டுகளில் நின்று பிதாவே கடவுளே சீமானே என்று இரண்டு கையேந்தி கூவுகிறார்களே இதெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையா அல்லது அவர்கள் மேல் எஜமானத்துவம் நடத்துவதா என்று கேட்கின்றேன். ஒரு வேளைச் சோற்றுக்கு மானத்தை விற்று உயிர் வாழும் அற்ப புத்தியில்லாத எவனாவது நம்மையோ நம் இயக்கங்களையோ வெள்ளைக்காரர்களுக்கு அடிமை என்று சொல்ல முன் வர முடியுமா? என்று கேட்கின்றேன்.

எது சர்க்காரை ஆதரிப்பது?

ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதைக் கட்சி வெள்ளைக்காரர்களை ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் கட்சி என்று கூறுகிறார்கள் சில பார்ப்பனக் கூலிகள். இதைக் கேட்டு அயோக்கியப் பார்ப்பனர்கள் சிரித்து மகிழ்ந்து அப்படிக் கூறுகிறவர்களுக்கு எலும்பு போடுகிறார்கள். எந்த விதத்தில் ஜஸ்டிஸ் கட்சி அடிமைக்கட்சி என்று சொல்ல முடியும்? அறிவற்ற பாமர மக்களை பொய்யும் புளுகும் பேசி ஏமாற்ற முடிந்ததாலேயே ஏமாற்றாதவர்கள் வெள்ளைக்கார அடிமைகள் ஆகிவிடுவார்களா? என்று கேட்கின்றேன். கள்ள நாணையத்தைக் கொடுத்து சாமான் வாங்குவதுபோல் பாமர மக்களிடம் அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று கூறி வயிற்றுச்சோற்றுக்கு மார்க்கமற்ற கூலிகளை விட்டு கண்டபடி வையவும் காலித்தனம் செய்யவும் ஏவி விட்டு பார்ப்பன அதிகாரிகளை சூழ்ச்சி செய்யத் தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றிபெற்று விட்டதினாலே தங்கள் நிலை நியாயமானதென்றும் மேலானதென்றும் சொல்லிக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றேன். இந்திய தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி என்றே சொல்லுவேன். மொத்த மாகாணங்கள் 11-ல் அசம்பளியில் 6 மாகாணங்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் மேல் சபை தேர்தலில் மெஜாரிட்டி மாகாணங்களில் நல்ல தோல்வி அடைந்திருக்கிறது. மொத்தத்திலும் 5-ந் தேதி பத்திரிக்கை ஆகிய இன்று வந்த சுதேசமித்திரன் பத்திரிகை கணக்குபடியே மொத்த மெம்பர்கள் 1810-ல் காங்கிரசுக்கு 761 ஸ்தானங்களும் காங்கிரசல்லாதவர்களுக்கு 1049-ஸ்தானங்களும் கிடைத்திருக்கின்றதாய் வெளியாகி இருக்கிறது. ஆகவே காங்கிரசைவிட காங்கிரஸ் எதிரிகளே 250 ஸ்தானங்கள் அதிகம் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டதாக எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?

மற்றும் காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் மக்களிடம் பொய்யும் பித்தலாட்டமும் பேசி ஏமாற்றி ஓட்டுகள் பெற்றதினாலேயே அவர் ஜெயித்த மாகாணங்களிலும் அவர்கள் பதவி வகிக்க முடியாமல் ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ்காரர்கள் பிரசங்கங்களை சர்க்கார் அறிந்திருக்கமாட்டார்களா? தேர்தலில் பார்ப்பன அதிகாரிகள் நடந்து கொண்ட நடத்தை சர்க்காருக்கு எட்டியிருக்காது என்று சொல்ல முடியுமா? இந்த நடத்தையில் வெற்றிபெற்றவர்கள் பதவி வகிக்க அருகர்கள் ஆகிவிட்டால் இதைவிட கையில் வலுத்தவன் பதவி வகிப்பதே மேல் என்போம். ஏனெனில் தந்திரத்தில் வலுத்தவனை விட கையில் வலுத்தவனே அதிக யோக்கியனாய் இருக்கக்கூடும். நம் நாட்டில் எவ்வளவுதான் காங்கிரசானது விளம்பரத்திலும் தந்திரத்திலும் மேலான நிலையை அடைந்திருந்தாலும் அதைப்பற்றி நாம் யாரும் கவலைப்படவோ கலங்கவோ வேண்டியதில்லை என்றே சொல்லுவேன். அதற்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது. அதனிடம் இருந்த பொய் பித்தலாட்டங்கள் எல்லாம் காலியாகிவிட்டது. இனி புதிதாக ஏமாற்ற அதனிடம் சரக்கு கிடையாது. அதிகாரத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு காங்கிரசை சரணாகதி அடைந்த நமது ஆள்களுக்கும் புத்தி வந்துவிட்டது என்றே கருதுகிறேன். காங்கிரஸ்காரர்களின் – பார்ப்பனர்களின் தலைக்கொழுப்பையும் ஆணவத்தையும் கூட பார்ப்பனர்களிடம் கூலிகளாய் அமர்ந்த தோழர்கள் பலர் இப்போது உணர்ந்து வருகிறார்கள் என்றே கருதுகிறேன்.

காங்கிரஸ் சுலபத்தில் பதவிக்கு வராது

இனி சுலபத்தில் பார்ப்பனர்கள் அதிகாரத்துக்கு வந்துவிடுவார்கள் என்று கருதிவிடாதீர்கள். சர்க்காரை மன்னிப்பு கேட்டுக்கொண்டால் ஒழிய காங்கிரசுக்கு மந்திரி பதவி இல்லை என்பதை உணருங்கள். அதாவது வாக்குறுதியும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். நாங்கள் இனி சட்டப்படி நடந்து கொள்ளுகிறோம் என்று பிரமாணம் செய்து கொடுப்பதின் மூலம் தங்கள் தவறுதலுக்குப் பரிகாரம் செய்தாலொழிய உள்ளே விட மாட்டார்கள். இந்த நிலையில் பார்ப்பனர்கள் மந்திரி பதவி ஏற்றாலும் செய்யப்போகும் காரியமும் அவ்வளவுதான். தோழர் ஜவஹர்லால் சொன்னதுபோல் “காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்பது அரசாங்கத்துக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுப்பதாகும்” என்கின்ற நிலைதான் ஏற்படும். இந்த 10 வருஷகாலமாய் ஜஸ்டிஸ் சுயமரியாதை கòகளால் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அரசியலிலும் சமூக இயலிலும் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு ஆக காங்கிரஸ் – பார்ப்பனர்கள் தேர்தலுக்கு நின்றார்களே ஒழிய வேறில்லை. அதனால் தான் சகல பார்ப்பனரும் ஆட்டுக்கல் முண்டச்சி முதல் ஹைகோர்ட் ஜட்ஜி, ரிவனியூ போர்ட் மெம்பர் பார்ப்பனர் வரை ஒன்றுகூடி ஒரு கை பார்த்தார்கள். கடைசியில் அணாவுக்கு 12 தம்பிடியாக இருந்தது ரூபாய்க்கு 192- தம்பிடியாக ஆகி விட்டது. இப்போது எல்லோரும் பழயகாலப் புதுப்பெண்கள் போல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு திரிகிறார்கள். சிலர் மரியாதை ராமனைப் போல் தலையை மூடி போட்டு மறைத்துக்கொண்டு திரிகிறார்கள். இந்த வெற்றி பெற்ற வீரர்கள் – ஏப்ரல் முதல் தேதி புதிய உலகத்தை சிருஷ்டிப்பதாக கூறி ஓட்டுப்பெற்ற வீரர்கள் “அதற்கு இடம் கொடாமல்” மடக்கி அடித்த சர்க்காரைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மந்திரிகளைப்பற்றி குலைப்பது என்றால் இதற்கு எதை உதாரணமாய்ச் சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை.

காங்கிரஸ் அல்லாதவர்கள் தேசத்துரோகிகளா?

காங்கிரஸ்காரர்கள் ஏதாவது ஒரு பதவியை ஏற்றுக்கொள்ளுவதில்லை என்று சொல்லி விட்டால் மற்றவர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது சட்டமா என்று கேட்கின்றேன். காங்கிரஸ்காரர்கள் ஜெயிலுக்கு போன காலத்தில் இந்தியாவில் 100-க்கு 99 பேர் போகவில்லை. இதனாலேயே எல்லா மக்களும் தேசத்துரோகிகளோ சர்க்கார் தாசர்களோ பதவிபட்டம் வாழ்க்கை ஆசைப் பிடித்தவர்களோ ஆக ஆகிவிட்டார்களா என்று கேட்கின்றேன்.

காங்கிரஸ்காரர் வெற்றி பெற்றும் சட்டப்படி பதவி ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் சட்டத்திற்கு மீறியவர்கள் என்று தானே அருத்தம்.

ஆகவே சட்டங்களை மீறுபவர்களோ சீர்திருத்த சட்டத்தை நடக்கவொட்டாமல் செய்பவர்களோ தவிர மற்றவர்கள் மந்திரி பதவி ஏற்பதில் என்ன தடை என்று கேட்கின்றேன். தோழர் ரெட்டி நாயுடு அவர்களோ மற்ற மந்திரிகளோ ஒரு நாளும் தங்களை ஒத்துழையாமைக்காரர்கள் என்றோ சட்டம் ஒழுங்கு முறைக்கு கட்டுப்படாதவர்கள் என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை அந்தப்படி சொல்லி ஒருவரிடமும் ஓட்டு வாங்கவும் இல்லை அல்லது காங்கிரசை ஒப்புக் கொண்டதும் இல்லை. இப்படி இருக்க தங்களுக்கு மந்திரி வேலையோ வாக்குறுதியோ கொடுக்காத சர்க்காரைப்பற்றி பேசாமல் தோழர் ரெட்டி நாயுடுவைப்பற்றியே பேசுவது எவ்வளவு பயங்காளித்தனமும் இழிவான காரியமும் ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் கவர்னரைப் பாராட்டுகிறார். கவர்னர் பிரபு ராஜகோபாலாச்சாரியாரைப் பாராட்டுகிறார். தோழர் ராஜகோபாலாச்சாரியார் தனிப்பட்ட முறையில் பல தடவை கவர்னர் வீட்டுக்கு ரகசியமாய் போய் வந்திருக்கிறார்; அவரோடு கூட விருந்துண்டு இருக்கிறார். இந்த லக்ஷணத்தில் தோழர் ரெட்டியாரையும் மற்ற மந்திரிமாரையும் கள்ளுக்கடை, சாராயக் கடை, மீன்கடை, சாக்கனாக்கடை பாஷையில் வைகிறார். மற்ற பார்ப்பன கூலிகளும் குலைக்கின்றன. இதுதானா தேசியம் என்று கேட்கின்றேன். இப்படிப்பட்ட கூலிகள்தானா தேசிய வீரர்கள் – தேச பக்தர்கள் என்று கேட்கின்றேன்.

இந்த நாட்டில் சமூக சம்மந்தமாக மத விஷயத்திலும் ஜாதி வகுப்பு விஷயத்திலும் ஒரு ஒற்றுமையும் சமரசமும் ஏற்படாத பக்ஷம் கண்டிப்பாய் ஒரு கடுகளவு காரியமும் எந்தக் கòயாராலும் பொது முறையில் செய்து கொள்ள முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

இன்றுள்ள நிலையில் காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒற்றுமை ஆக இடமில்லை. 1000 ஜின்னாக்கள் காங்கிரசில் சேர்ந்தாலும் சரி மற்றும் 1000, 1000 படே படே முஸ்லீம் ஆசாமிகளும் மெளலானாக்களும் காங்கிரசில் சேர்ந்தாலும் சரி, ஒரு சனாதன இந்து அல்லது மகாத்மா இந்தியன் இருக்கிறவரை முஸ்லீம் லீக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். அதுபோலவே ஒரு உச்சிக்குடுமி பூணூல் பார்ப்பான் இருக்கும் வரை ஜஸ்டிஸ் கò இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னும் லக்ஷக்கணக்கான பார்ப்பனரல்லாத கூலிகளையும் பதவி ஆசைப் பிண்டங்களையும் காங்கிரசில் சேர்த்து “விபூஷண”னாக்கிலும் சரி, “ராமனாக”வே ஆக்கிவிட்டாலும் சரி. ஜஸ்டிஸ் கò ஒழிக்கப்பட்டுவிடும் என்று கருதுவது முட்டாள்தனமேயாகும். ஜஸ்டிஸ் கò ஒழிந்துவிட்டதாக ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் மற்ற கூலிகளும் கூப்பாடுபோட்டார்கள். ஆனால் ஆச்சாரியாருக்கு சதா சர்வகாலம் ஜஸ்டிஸ் கò தான் வாக்கிலும் மனதிலும் இருந்து வருகிறது. சத்தியமூர்த்தியாருக்கோ தன் நிழலே ஜஸ்டிஸ் கòயாகத் தோன்றுகிறது. தூக்கத்தில் ஜஸ்டிஸ் கò பூதமே வந்து ஆடுவதாகப் பயந்து உளறுகிறார். மற்ற கூலிகளைப்பற்றி கேட்கவே வேண்டியதில்லை. விடாமல் ஜஸ்டிஸ் கòயைப் பற்றி கண்டபடி குலைத்தாலும் மனதில் “இப்படி ஒரு கட்சி இருப்பதால் தானே இந்தப் பார்ப்பான்கள் நம்மை சேர்த்துக்கொண்டு ஏதோ கஞ்சிக்கு கொடுத்து வருகிறார்கள், இது இல்லாவிட்டால் நம்ம கதி என்ன ஆவது?” என்றே கருதிவருகிறார்கள். ஆதலால் கட்சி போய் விட்டதே போய் விடுமே என்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை. மந்திரி பதவி கொஞ்ச காலத்துக்கு பார்ப்பனர்கள் கைக்கு போகலாம். அதுவும் சுலபத்தில் முடிந்துவிடாது. மானம், வெட்கம் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு நிர்வாணமாகப் போய் உட்கார்ந்தால் தான் உட்காரமுடியும். ஏனெனில் அவ்வளவு பொய் பித்தலாட்டம் பேசி ஜெயித்து இருக்கிறார்கள். அப்படித்தான் போய் உட்கார்ந்தாலும் நமக்கு கெடுதி ஒன்றுமில்லை. இவர்கள் யோக்கியதையை அந்தத் துறையிலும் ஜனங்கள் அறிய உதவியாயிருக்கும்.

ஆதலால் இன்றைய சமூக இயலும் அரசியலும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்.

யார் வகுப்புவாதி?

தவிர இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் நம்மை வகுப்பு வாதிகள் என்று குறை கூறுகிறார்கள். யார் வகுப்புவாதிகள்? பார்ப்பனர்களா? நாமா? என்பதை யோசித்துப் பாருங்கள். வகுப்பு பேதங்கள் ஏற்பட்டதே பார்ப்பனர்களாலேயே ஒழிய நம்மாலல்ல. வகுப்பு பேதங்களால் பயன் அனுபவிப்பவர்கள் பார்ப்பனர்களே. வகுப்பு பேதத்தால் இழிவும் நட்டமும் அடைபவர்கள் நாமே ஒழிய பார்ப்பனர்கள் அல்ல. இன்று நீங்கள் கடைத் தெருவழியே போனால் “பிராமணாள் காபி கிளப்பு”, “பிராமணாள் ஓட்டல்”, “பிராமணாளுக்கு மட்டும் சாப்பாடு போடப்படும்” என்றெல்லாம் நோட்டீஸ் போர்டு போட்டிருப்பதை பார்ப்பீர்கள். இது வகுப்புவாதம் அல்லவா? ஓட்டல்களிலும் காப்பி கடைகளிலும் கோவில்களிலும் குளங்களிலும் பிராமணாள் -பிராமணரல்லாதார் என்று இடம் பிரித்திருக்கிறதே அது ஏன்? அது வகுப்பு வாதமல்லவா? மைலாப்பூர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்ப்பனர்கள் வீடுகளில் “பிராமின்ஸ் ஒன்லி” என்று எழுதித் தொங்கவிட்டிருக்கின்றதே இது ஏன்? பஞ்சமர்கள், நாய்கள், பெருவியாதிக்காரர்கள் பிரவேசிக்கக் கூடாது என்று சென்னை ஓட்டல்களில் போர்டு பலகைகள் போடப்பட்டிருக்கின்றதே இது ஏன்? முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடம் இல்லை என்று எழுதித் தொங்க விட்டிருக்கிறதே இது ஏன்? இவையெல்லாம் வகுப்புவாதமல்லவா? வகுப்பு பிரிவினையை காட்டவில்லையா? நம்மில் நாலு வகையற்ற கூலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு பார்ப்பன அடிமையாகி நம்மைக்கண்டு குலைப்பதாலேயே பார்ப்பான் செய்யும் அயோக்கியத்தனங்கள் மறைக்கப்பட்டு போய் விடுமா? எதற்கு ஆக நம்மை வைவதற்கு இந்த பார்ப்பனர்கள் கூலிகளை அமர்த்தி ஏவிவிட வேண்டும்? இந்த வசவினால் என்ன காரியம் சாதித்து விட முடியும்? அந்தக் கூலி நாம் கொடுத்து அவர்களையே பார்ப்பனர்கள் மீது ஏவி விட வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியமாகி விடுமா?

இம்மாதிரி வைவதாலும் குலைப்பதாலும் என்ன நன்மை ஏற்பட்டுவிடும்? வகுப்பு உரிமையை விட்டுவிடுவோமா? அல்லது வெள்ளைக்காரன்தான் ஆகட்டும் இந்த காலித்தனமான வசவுக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிவிடுவானா? ஒவ்வொரு காலித்தனமும் வெள்ளைக்காரனையும் அவனது ஆòயையும் இந்தியாவில் நிலை நிறுத்தி ஆணிவைத்து அடிப்பதாகும். ஒவ்வொரு வசவும் காலித்தனமும் வகுப்புவாதத்தை கிளப்பிவிடுவதாகுமே தவிர சிறிதும் குறைப்பதாக ஆகாது. கூலிகளை அமர்த்தி காலித்தனத்திலும் வசவிலும் வெற்றிபெறவோ வகுப்பு உரிமையை ஒழிக்கவோ முடியும் என்று பார்ப்பனர்கள் கருதுவது அவர்களை ஏமாற்றிக் கொள்வதேயாகும். இவைகளுக்காக ஒருநாளும் நாம் பயந்து கொள்ள முடியாது. வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டுத்தான் வேறு வேலை பார்க்கச் செய்யும். இன்று இதோ பாருங்கள். (காவேரிப்பட்டணத்தில்) “திரும்பிப் போடா நாயுடு நாயே” என்று இந்த சுவரில் எழுதப்பட்டு இருக்கிறது. இதன் கருத்து என்ன? பார்ப்பானின் ஆத்திரம் இவ்வளவு இருக்கிறது, அவனது கூலியின் குலைக்கும் தன்மை அவ்வளவுதூரம் போய்விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.

வகுப்புவாதம் இல்லாதவர்கள் நாயுடு நாயே என்று ஏன் எழுத வேண்டும்?

ஆகவே தோழர்களே நான் சொல்பவைகளை அப்படியே நம்பிவிடாமல் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

குறிப்பு: 06.05.1937 இல் தர்மபுரி யூனியன் மைதானத்திலும் 07.05.1937 இல் காவேரிப்பட்டணம் யூனியன் சத்திரத்திலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 16.05.1937

You may also like...