ஈரோடு சந்தைப்பேட்டை  அபாய சம்பவம் உண்மை விபரம்

 

“எதிர்பாராத அபாயம்” என்னும் தலைப்பில் சென்ற வாரம் ஈரோடு சந்தைப்பேட்டையில் வேலை முடியாத கொட்டகையில் ஜனங்கள் புகுந்து தூண்களில் சாய்ந்ததால் கொட்டகை சாய்ந்து ஆபத்து ஏற்பட்டதைப்பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய உண்மையை சரிவர விசாரித்ததில் கீழ்க்கண்ட சரியான புள்ளி விபரம் கிடைத்திருக்கிறது.

அதாவது சந்தைப்பேட்டையில் கொட்டகை சாய்ந்ததில் அதற்குள் சிக்கி காயப்பட்டவர்கள் மொத்தம் 55 பேர்கள் என்றும், காங்கிரஸ்காரர் களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்த விஷமப்பிரசாரப்படி 200 பேர்கள் அல்ல என்றும், மற்றும் அந்த இடத்தில் மடிந்தவர்கள் 4 பேர்களே ஆவார்கள் என்றும், காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்யும் குறும்புத்தனப் பிரசாரப்படி 20 பேர்கள் அல்ல என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொண்டவர்கள் 35 பேர்கள் என்றும் மீதிபேர்கள் தாங்கள் சொந்த சிகிச்சை செய்து கொள்ளுகிறார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் 4 பேர்கள் தான் இறந்தவர்கள் என்றும், அடிபட்டு வெளியூருக்குப் போய்விட்டவர்களில் சுமார் 4 அல்லது 5 பேர்களே இறந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

மொத்தம் இறந்தவர்களின் தொகை எவ்வளவு தாராளமாய் கணக்குப் பார்த்தாலும் 13 பேர் 15 பேர்களுக்கு அதிகமாக இல்லை என்பது சர்க்காருடையவும் காங்கிரஸ்காரர்கள் பின்னால் வெளியிட்ட அறிக்கைகளினுடையவும் கணக்காக விளங்குகிறது. இதில் ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 35 பேர்களில் 9 பேர்கள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.

விஷயம் இப்படி இருக்க இந்த சம்பவங்களை வேண்டுமென்றே மிகைப்படுத்தி அடுத்து வரும் முனிசிபல் எலக்ஷனுக்கு நிற்க காத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்களும் டாக்டர்களும் இவர்களது பார்ப்பனரல்லாத தொண்டர்களும் தப்பும் தவறுமாகவும் மனமார விஷமத்தனமாகவும் பிரசாரம் செய்து பல மீட்டிங்குகளும் 10, 12 துண்டு நோட்டீசுகளும் போட்டு பொறுப்பற்ற முறையில் பொய்யும் புளுகும் நிரப்பி சிலவற்றில் கடைசி வாக்கியமாக “முனிசிபாலிட்டியை காங்கிரஸ்காரர்கள் கைப்பற்ற வேண்டும்” என்று முடித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இவற்றுள் சர்க்கார் டாக்டரைக் குறைகூறி எழுதிய துண்டு பிரசுரங்களுக்கு ஆக அதில் கையொப்பமிட்டவர் டாக்டர் மீது பொய்யாக வெளியிட்ட நோட்டீசை வாபஸ் வாங்கிக்கொள்வதாகப் பொறுப்புவாய்ந்த உத்தியோகஸ்தர்களின் முன்னிலையில் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டரிடம் மன்னிப்புக் கேட்டார். டாக்டர் தன்மீது எப்படி பொய்யான விஷயங்களை நோட்டீஸ் மூலமாக வெளியிட்டீரோ அதன்படி நோட்டீஸ்மூலம் மன்னிப்பு வெளியிடவேண்டுமென்று கூறினார். அதன்படி þயார் ஒப்புக்கொண்டு சென்றார். பின் சில பார்ப்பன வக்கீல்களின் தூண்டுதலால் மன்னிப்புக் கேட்டால் காங்கிரசிற்கு மதிப்பில்லாமல் போய்விடுமென்று கருதி சும்மா இருந்துவிட்டார். அதன்பின் இதுவிஷயமாக டாக்டர் மேலதிகாரிகளுக்கு அறிவித்திருக்கிறதாகத் தெரிகிறது.

மற்றும் பொய்க்கணக்குகள் பிரசுரித்த நோட்டீசுக்கு ஆக சிலரைக் கண்டித்ததின் மீது சரியான கணக்குகளை வெளிப்படுத்தி நோட்டீசு போட ஒப்புக்கொண்டு விட்டதாய் தெரிகிறது. அதன்படி சரியான புள்ளிகளுடன் நோட்டீஸ் வெளியிடப்பட்டுமாய் விட்டது. சில பத்திரிகைகளும் தவறுதலாகப் பிரசுரித்து விட்டன. இப்போது அடிபட்டவர்களுக்கு ஆக சகாய நிதி வசூலிக்க 2, 3 தொகுதியாக முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிகிறது.

இவை ஒருபுறம் நிற்க, இச்சம்பவத்தை கவனித்து அதிகாரிகள் பலர் வந்து விசாரித்து போகிறார்கள். கொட்டகை சர்க்கார் மாதிரி (டைப் டிசைன்) பிரகாரம் அனுசரித்து போடப்பட்டது என்பதோடு பிளான் எஸ்டிமேட்டுகள் அந்தந்த இலாக்கா நிபுணர்களின் கவனிப்பும் சம்மதமும் பெற்றே வேலை செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. அதாவது பிளானும் எஸ்டிமேட்டும் டிப்டி சேனிடரி இன்ஜினீயர் சாங்கிஷன் மீது தான் கண்டிறாக்ட் விடப்பட்டு வேலை துவக்கப்பட்டிருக்கிறது என்பதோடு யோக்கியதாம்சமுள்ள அதிகாரிகளின் நெருங்கிய மேற்பார்வையிலே கட்டிடம் நடந்திருக்கிறது. கட்டிடம் பூராவும் 3 அடி அஸ்திவாரம் பரித்து சட்டு கண்டு காங்கிரிட் போட்டு 1 அடி பேஸ்மட்டத்தின்மீது கருங்கல் போட்டு கட்டப்பட்டிருக்கிறது. இது விஷயத்தில் ஏதாவது குறை கூற வேண்டுமானால் முடிவு பெறாத கட்டிடத்திற்குள் ஜனங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்பதேயாகும். ஆனால் யாரும் வேண்டுமென்று அனுமதிக்கப்படவில்லை. சாதாரண நிலையில் ஜனங்கள் அதில் அதிகமாக பிரவேசிக்கவுமில்லை. சந்தைப்பேட்டை காலி இடம் சுமார் 10, 12 ஏக்ரா இருக்கலாம். அதில் தாராளமாக இடம் இருக்கிறது என்பதோடு புது கட்டிடம் ஓடு பூராவும் மேயாமல் இருப்பதாலும் வெய்யிலும் மழையும் உள்ளே படும்படியான நிலையில் இருந்ததாலும் ஜனங்கள் அதற்குள் போகமாட்டார்கள் என்றும் போய் உட்காருவதாலேயே கொட்டகை விழுந்துவிடுமா என்றும் சாதாரணமாய் மேல் பார்வை ஆள்கள் கருதி அபாய அறிவிப்புப் போடாமல் இருந்து இருக்கலாம்.

அன்றியும் முனிசிபல் அதிகாரிகள் அதை கவனிக்க சந்தர்ப்பம் இருக்க இடமில்லாமல் போனதற்குக் காரணம் அக்கட்டிடம் இன்னமும் கண்டிறாக்டர் வசத்தில் இருந்து வருவதாலும் கண்டிறாக்டர் தக்க ஜாக்கிரதையாய் இருப்பார் என்று கருதிவிட்டதினாலுமாக இருந்தாலும் இருக்கலாம். கட்டிடத்தின் கூரை மேல் ஓடு குவித்து நிழலாக இருந்த பக்கம் மாத்திரம் இரண்டொரு இலை வியாபாரப் பெண்களும் மற்றும் இரண்டொருவரும் நிழலடியில் தங்கி இருந்திருப்பதாய் சொல்லப்படுகிறது. இந்த ஆட்கள் சாதாரண முறையில் கட்டிடம் விழ ஆரம்பித்த பிறகுகூட வெளியேறி விடக்கூடும். ஆனால் காற்றடிக்க ஆரம்பித்து பெரு மழை பெய்யும் அவசர அறிகுறியும் தோன்றியவுடன் ஜனங்கள் பலர் பெருங்கூட்டமாக அவசர அவசரமாக தங்கள் சாமான்களை தூக்கிக்கொண்டு கொட்டகைக்கு ஓடியதில் கொட்டகைக்குப் பக்கத்தில் போனவுடன் கொட்டகைத் தூண்களைப் பிடித்துப்பிடித்து மேலே ஏறும் போதும் ஆதரவுக்காக அதன் மீது மக்கள் நெருக்கடியில் சாயும்போதும் சரி சமமாக பாரமில்லாத கொட்டகை சுலபத்தில் தூண்கள் சரியவும் ஆட்டம் கொள்ளவும் ஏற்பட்டதால் ஓடுகள் ஏற்றிப் பாரமாகவுள்ள பக்கம் இழுத்துக்கொண்டு சாய்ந்துவிட்டதால் அதனடியில் சிக்கினவர்களே ஆபத்துக்காளாகிவிட்டார்கள் என்று சொல்லவேண்டி இருக்கிறது. அப்படிக்கில்லாமல் கொட்டகை பூராவும் ஜனங்கள் இருந்து கொட்டகை சாய்ந்திருக்குமானால் சுமார் 200 அடி நீளமும் 10 அடி அகலமும் உள்ள கொட்டகை சாய்ந்து இருந்தால் சுமார் 50 அல்லது 60 பேர்கள் மாத்திரம் காயமடைந்திருக்கவும் சுமார் 10, 12 பேர்கள் மாத்திரமே மரணமடைந்திருக்கவும் முடியாது. பல நூற்றுக்கணக்கான பேர்கள் அபாயத்துக்குள்ளாகியும் இறந்தும் இருப்பார்கள்.

ஆகையால் எதிர்பாராத அபாயம் என்று சொல்லவேண்டியதைத் தவிர அதிலும் கெட்ட சம்பவத்திலும் சிறிது நல்ல சம்பவம் என்று சொல்லவேண்டியதைத்தவிர இதில் வேண்டுமென்று நடந்ததாகவோ அல்லது ஆணவமான அஜாக்கிரதையாலோ கட்டிடத்தின் பலவீனத்தாலோ என்று சொல்வதற்கில்லை என்பதே நமதபிப்பிராயம்.

நிற்க, காயமடைந்தவர்களில் இப்போது ஆஸ்பத்திரியிலிருப்பவர்கள் 35 பேர்கள். இதுவரை ஆஸ்பத்திரியில் இறந்தவர்கள் 4 பேர்கள். மீதி பேர்களில் ஒரு நபர் மாத்திரம் அபாயத்திலிருப்பதாகத் தெரிகிறது. பாக்கி பேர்கள் குணமடைந்து வருகிறார்கள். காயமடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரி டாக்டர் மிக்க கவனமெடுத்து அன்பாய் கவனித்து வருகிறார்.

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அந்த டாக்டர் 2 நாள் பூராவும் சாப்பாடு இல்லாமலும் தூக்கமில்லாமலும் தொடர்ந்து சிகிச்சை செய்து வந்தார் என்றும் ஆரஞ்சு ரசத்தை வேறு ஒரு ஆளைக் கொண்டு தன் வாயில் ஊற்றும்படி செய்து ஆகாரமாக்கிக்கொண்டு வேலை செய்து வந்தார் என்றும் தெரிகிறது. இரவெல்லாம் அடிக்கடி கவனித்து வருவதாகவும் தெரிகிறது.

ஜில்லா டாக்டரிடம் சில காங்கிரஸ்காரர்கள் இந்த டாக்டர் மீது புகார் கூறியதை ஜில்லா டாக்டர் கவனிக்க உடனே வந்து பார்த்ததில் சகல சங்கதிகளையும் நேரில் பார்த்துப்போய் ஸ்தல டாக்டரைப் பாராட்டி எழுதியிருக்கிறதாகத் தெரிகிறது.

டாக்டர் செய்த பெரிய குற்றம் என்னவென்றால் நோயாளிகளுக்குப் பொது ஜனங்கள் செய்யும் உதவியைத் தனக்குக் காட்டிவிட்டுச் செய்யும்படி சொன்னதேயாகும். அப்படிச் சொல்ல நேரிட்டதற்குக் காரணம் டாக்டர் ஒரு நோயாளியின் தன்மைக்குத் தலைகணி வைக்கப்படாது என்று கருதி தலைகணியில்லாமல் படுக்க வைத்திருந்ததால் ஒரு காங்கிரஸ்காரர் நேரே போய் நோயாளியின் தலையை அசைத்துத் தூக்கி தலைகணி வைத்ததாகவும், ஒரு நோயாளி தூங்குவதற்காக ஆஸ்பத்திரி டாக்டர் ஒரு மருந்து கொடுத்து இருக்கையில் ஒரு வெளி டாக்டர் அந்நோயாளிக்கு காப்பி குடிக்க வைத்ததும் இன்னும் இது போன்ற நோயாளிக்குக் கெடுதி உண்டாகும்படியான பல காரியங்கள் செய்யப்பட்டதுதான் என்று தெரிய வருகிறது.

ஊரில் கேட்பதற்கு எல்லாம் பணம் கொடுக்க சில வியாபாரிகளும், அடுத்தாற்போல் கவுன்சில் எலக்ஷனில் நிற்க சில நபர்களும் இருப்பதால் இந்த சம்பவத்தை முனிசிபாலிட்டி மீது துவேஷப்பிரசாரம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள செளகரியமாய் இருக்கிறதுபோலும்.

இந்த விஷமப்பிரசாரம் பெரிதும் கமிஷனர், சேர்மென், முனிசிபல் கவுன்சிலர், டாக்டர் ஆகியவர்களின் மீதே செய்யப்பட்டு வருகிறது என்பதற்கு காங்கிரஸ்காரர்கள் வெளியாக்கின பல துண்டுப் பிரசுரங்களே போதிய ருஜúவாகும்.

அபாயத்தின் காரணத்தை விசாரிப்பதற்கென்று ஒரு கமிட்டி போட்டுக் கொண்டதாய் பேர் செய்து கொண்டு அதில் மூன்று வக்கீல் பார்ப்பனர்கள் தங்கள் பெயர்களை விளம்பரம் செய்து கொண்டு அடுத்த எலக்ஷனுக்கு தயாராய் வருகிறார்கள். அது போலவே பண்டு வசூலிக்க கமிட்டி போடப்பட்டிருக்கிறது. இதில் பார்ப்பனர்கள் பெயர் இருந்தால் பணம் வசூலாகதென்ற கருத்தில் வர்த்தகர்களாகவே போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

குடி அரசு – செய்திக்கட்டுரை – 02.05.1937

You may also like...