தாயார் மரணத்தை வரவேற்ற பெரியார்

இந்த காலகட்டத்தில்தான் சென்னை மாநகராட்சிக்கும், ஜில்லா போர்டுகளுக்கும் தேர்தல் நடந்தன. அடுத்து சட்டசபைக்கான தேர்தலும் வர இருந்தது. காங்கிரஸ் கட்சி, இத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கிய நிலையில் காங்கிரசுக்கு எதிரான தலையங்கங்களும் பெரியாரின் சொற்பொழிவுகளும் இத் தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. நீதிக்கட்சியைச் சார்ந்த பார்ப்பனரல்லாதார், உள்ளாட்சி தேர்தல்களில் கட்சி சார்பாக போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் சார்பில் போட்டியிடக் கூடாது என்ற கருத்தையே பெரியார் வலியுறுத்துகிறார். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் சூழலில் அகில இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்களான ஜவகர்லால் நேருவும், பட்டேலும் தமிழகம் வருவதன் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது “குடி அரசு”; காங்கிரசின் பார்ப்பன கொள்கைகளை நியாயப்படுத்த வந்த நேருவுக்கு எதிராக பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை இயக்கத்தினர், கருப்புக்கொடி புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினர். நேரு பட்டேல் வருகையை வைத்து, பெருமளவில் நிதி திரட்டும் பணிகளை காங்கிரஸ் முடுக்கி விட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் ஒரு மாத காலம் தீவிர சுற்றுப்பயணம் செய்து, காங்கிரசின் பார்ப்பன கொள்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினார் பெரியார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிய பிறகு பல்வேறு துறைகளில் பார்ப்பனரல்லாதார் முன்னேறியிருப்பதை சுட்டிக் காட்டும் பெரியார், காங்கிரசாரின் சூழ்ச்சிகள் எந்த ஒரு துறையிலும் பலிக்காமல் தடுத்து, “ராமராஜ்யம்” பேசிய காந்தியாரை மூலையில் உட்கார வைத்தது இந்த இயக்கமே என்று தமது சொற்பொழிவுகளில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சாதனைகளை மதிப்பிடுகிறார். காங்கிரசுக்கே தேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி ஏற்பட்டாலும்கூட, அவ்வெற்றிகளை எல்லாம் பார்ப்பனரல்லாதாருக்கான உரிமைகளுக்கு உரமாக்கியது, நமது ஓயாத உழைப்புதான் என்று பெரியார் கூறுவது ஆழமான சிந்தனைக்குரியது. காங்கிரசின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தமது கொள்கையை வெற்றியை நோக்கி நகர்த்தும் பெரியாரின் ஆற்றலை உணர முடிகிறது.

பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மாள் “முடிவு”க்கு பெரியார் எழுதிய இரங்கல் தலையங்கம் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. அதில் தமது வாழ்க்கை வரலாற்றையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார். “மூடநம்பிக்கைகளுக்கும் குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் விளங்கியவர் எனது தாயார்” என்று ஒளிவு மறைவின்றி குறிப்பிடும் பெரியார், “எனக்கு அவர் முடிவெய்தியைப் பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்த அம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கல்யாணம் செய்து விட்டுச் சாக வேண்டுமென்பதே. எனது கோரிக்கை எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திட வேண்டுமென்பதே. என் இஷ்டம் நிறைவேறிற்று. மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி” என்று, அந்த இரங்கல் உரை இலக்கியம் முடிவடைகிறது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மறைவுக்கு “சிதம்பரம் சிதைவு” என்று “குடி அரசு” தலையங்கம் தீட்டியது. வ.உ.சி. “சூத்திரர்” என்பதால் புறக்கணிக்கப்பட்ட அவலத்தைப் பதிவு செய்கிறது அத் தலையங்கம்.

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கக் கோரியும், “தீண்டப்படாத” மக்களுக்கு சமூகத்தில் சம சுதந்திரத்தை வலியுறுத்தியும், இந்திய சட்டசபையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த எம்.சி. ராசா இரண்டு மசோதாக்களைக் கொண்டு வந்தபோது அதை உடனடியாக ஏற்காமல் அது குறித்து ஆட்சி, பொதுமக்கள் கருத்து கேட்க முடிவு செய்ததை “குடி அரசு” வன்மையாக கண்டிக்கிறது. விருதுநகரில் நீதிக்கட்சி கூட்டத்தில் பெரியாரின் சொற்பொழிவு வட்டமேசை மாநாடுகளில் காந்தியின் அலங்கோலத்தை விரிவாக எடுத்துரைக்கிறது.

1924 இல் வைக்கத்தில் பொது வீதியில் தீண்டப்படாத மக்கள் நடக்க உரிமை கோரி பெரியார் போராடினார். அதே திருவாங்கூர் சமஸ்தானம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சமஸ்தானத்துக்குட்பட்ட அனைத்துக் கோயில் களிலும் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவரும் நுழையும் உரிமையை வழங்கியது. இது பற்றி “திருவாங்கூர் பிரகடனம்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ள தலையங்கம், திருவாங்கூரில் நிலவிய பார்ப்பனர்களின் ஆதிக்கம் பற்றிய அதிர்ச்சியான தகவல்களை முன் வைக்கிறது. வைக்கம் போராட்ட வெற்றியின் தொடர்ச்சி தான் திருவாங்கூர் பிரகடனம் என்று பெரியாரை பாராட்டும் கூட்டம் ஒன்று நடக்கிறது. அந்தப் பாராட்டுக் கூட்டத்திலேயே பேசிய பெரியார், “நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும், வைக்கம் சத்தியாகிரகம் மூலம் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறுகிறார், தீண்டாமைக்கு எதிராக, தீண்டப்படாத மக்கள் மதம் மாறத் தொடங்கியதும், அப்படி மதம் மாறக் கோரி வலியுறுத்தி, கடவுள், மதத்துக்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சாரம் தந்த நெருக்கடியுமே, இதற்குக் காரணம் என்று கூறுகிறார்.

“கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும்” என்ற மற்றொரு சிந்தனையைத் தூண்டும் தலையங்கம் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவரும், “குடி அரசு” இதழ்களில் பெருமைக்குரியவராக தொடர்ந்து பாராட்டப் பெறுபவருமான சர்.ஆர்.கே. சண்முகம், கொச்சியில் திவானாக பணியாற்றிய காலகட்டம் இது. வகுப்புவாரி உரிமையை மக்கள் தொகைக்கேற்ப நாயர், ஈழவர், புலையர், இதர சாதி இந்துக்கள், சாதி இந்துக்கள் அல்லாதவர், ரோமோ ரசியர், இலத்தீன் கத்தோலிக்கர், இதர கிறிஸ்தவர், முஸ்லீம், ஆங்கிலோ இந்தியர் என்று தனிப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை அவர் அமுல் படுத்தியதை மகிழ்ச்சியுடன் வரவேற்ற “குடி அரசு” அவருக்கு கொச்சி அரசாங்கமும், கொச்சி குடிமக்களும் தனித்தனியாக இரண்டு சிலைகளை நிறுவ வேண்டும் என்று பாராட்டுகிறது.

காங்கிரசில் நாலணா உறுப்பினர் கூட இல்லை என்று கூறி காந்தியார் விலகிக் கொள்கிறார். அதே போல் காங்கிரஸ் கமிட்டிகளிலிருந்து ராஜகோபாலாச்சாரியும் விலகுவதாக அறிவிக்கிறார். இருவரின் கபட நாடகங்களையும் “குடி அரசு” அம்பலப்படுத்துகிறது.

தன்னுடைய கொள்கை எதிரிகளை கண்டித்து எழுதும்போதுகூட அவர்களின் பெருமைகளையும் மறைக்காமல் எழுதும் உயர்ந்த பண்பு பெரியாரிடம் இருந்ததை அவரது தலையங்கங்களிலும் சொற்பொழிவுகளிலும் காண முடிகிறது. தனது கொள்கை எதிரியான இராஜகோபாலாச்சாரியாரின் தியாகத்தை வெகுவாகப் பாராட்டும் பெரியார், “அவ்வளவு பெரிய தியாகத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் முற்போக்குக்குப் பயன்படுத்தி இருந்தால், ஆச்சாரியார் புத்தரின் ஸ்தானத்தை அடைந்திருக்கக் கூடும்” என்று குறிப்பிடுகிறார்.

பெரியாரின் உற்ற நண்பர் வரதராஜுலு நாயுடு நடத்தி வந்த “தமிழ்நாடு” பத்திரிகையை அவர் காங்கிரசில் சேர்ந்த சில நாட்களிலேயே நிறுத்தப் போவதாக அறிவித்ததற்கு மிகவும் வருந்தி பெரியார் எழுதிய தலையங்கம் பார்ப்பனரல்லாதார் பத்திரிகை நடத்துவதில் தோல்வியைத் தழுவிவிட்டனர் என்று வேதனையோடு குறிப்பிடுகிறது. பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளின் இன்னல்களை பட்டியலிடுகிறது. “எத்தனை நாளைக்கு இந்த நன்றி கெட்ட சுரணை அற்ற மக்களுடன் போராடிக் கொண்டிருப்பதோடு, எத்தனை துரோகிகளின் சதிகளை சகித்துக் கொண்டிருப்பது என்கிற சலிப்பில் உயிர்வாழ வேண்டியதாய் இருக்கிறது” என்று வேதனையோடு எழுதுகிறார் பெரியார்.

நீதிக்கட்சி தலைவர்கள் சிலர் சமதர்மத்துக்கு எதிராக பேசியதை சுட்டிக் காட்டி, திரு.வி.க., பெரியாருக்கு எதிராக “நவசக்தி”யில் எழுதிய தலையங்கத்துக்கு “குடி அரசு” தந்த விளக்கமும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை கடும் சொற்களால் கேலி, கிண்டல் பேசிய காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி அய்யருக்கு பதிலடி தரும் தலையங்கங்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

சுயமரியாதை திருமணத்தின் அடிப்படையான நோக்கம் நாஸ்திகமா? பெண்ணுரிமையா? என்ற கேள்விக்கு, வேலூர், திருப்பூரில் நிகழ்த்திய சொற்பொழிவில் பெரியார் விளக்கமளித்துள்ளார்.

தமது எழுத்து பேச்சுகளில் எல்லாவற்றிலும் “வகுப்புவாதம்” என்ற சொல்லை பெரியார் எதிர்மறைக் கண்ணோட்டத்தில் குறிப்பிடவில்லை. வகுப்புரிமை என்ற சமூகநீதிக்கான குறியீடாகவே அச்சொல்லைப் பயன்படுத்துவதை குறிப்பிட வேண்டும்.

இரங்கல் தலையங்கங்களில் “மறைந்தார்” என்ற சொல்லை “குடி அரசு” பயன்படுத்தாமல் முடிவெய்தினார். சாய்ந்தார், நலிந்தார் என்ற சொற்களையே பயன்படுத்துகிறது. “மறைந்தார்” என்ற சொல்லில் “பூத உடல் மறைந்து ஆன்மா வாழ்கிறது” என்ற மதச் சிந்தனை அடங்கி இருப்பதால், அது தவிர்க்கப்பட்டுள்ளது.

126 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது இத்தொகுதி. “குடி அரசு” 12 ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காலமும் இதுதான்.

– பதிப்பாளர்

 

 

You may also like...