அட்ஹாக் கமிட்டிப் புரட்டு

எந்த இயக்கத்துக்கும் ஸ்தாபனத்துக்கும் சட்ட திட்டங்களும் கட்டுப்பாடும் அவசியமே. சட்டதிட்டங்களும் கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும் ஸ்தாபனங்களும் விருத்தியடையவே மாட்டா. ஆனால் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளின் பேரால் சூழ்ச்சிகள் நடைபெற்றால் அந்தச் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் ஒழித்து ஒழுங்கு முறையை நிலைநாட்ட வேண்டியது முக்கியமாகும். சட்ட சபை, ஜில்லாபோர்டு, நகரசபை, பஞ்சாயத்து போர்டு முதலிய ஸ்தாபனங்களுக்கு பிரதிநிதி களைக் பொறுக்கியெடுக்க காங்கரசிலே அகில இந்திய அட்ஹாக் கமிட்டியும் ஜில்லா அட்ஹாக் கமிட்டிகளும் நகர, கிராம அட்ஹாக் கமிட்டிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே காங்கரஸ் காரியங்கள் எல்லாம் ஒழுங்காக நடைபெறுவதாக சாமானிய ஜனங்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கிரியாம்சையில் நடப்பதென்ன?

அட்ஹாக் கமிட்டிகளில் எல்லாம் சூழ்ச்சிகளும் பித்தலாட்டங்களுமே தாண்டவமாடுகின்றன. உதாரணமாக பம்பாயை எடுத்துக்கொள்ளுவோம். பம்பாய் சட்டசபை காங்கரஸ் கட்சிக்கு காங்கரஸ் நியாயப்படி தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவரும் பம்பாய் முதன் மந்திரி ஆக வேண்டியவரும் தோழர் நரிமன் ஆகும். அவரே இப்பொழுது பம்பாய் மாகாண காங்கரஸ் கமிட்டித் தலைவராயிருந்து வருகிறார். ஆனால் அகில இந்திய பார்லிமெண்டரி கமிட்டித் தலைவர் சர்தார் படேல் சூழ்ச்சியினால் நரிமன் அலôயம் செய்யப்பட்டு விட்டார். சட்டசபை காங்கரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கு முன் தினம் வரை அநாமதேயராய் இருந்த ஒரு தெக்காணத்துப் பார்ப்பனர் பம்பாய் காங்கரஸ் சட்டசபைக் கட்சித் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு முதன் மந்திரியாகவும் நியமனம் பெற்றுவிட்டார். சென்னை மாகாணத்திலே தமிழ் நாடு காங்கரஸ் கமிட்டித் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அலôயம் செய்யப்பட்டதையும் காங்கரசை விட்டு ஓடிப்போன தோழர் ராஜகோபாலாச்சாரியார் சட்டசபை கட்சித் தலைவராகி முதன் மந்திரியானதையும் எல்லோரும் அறிவர். தமிழ்நாட்டு அட்ஹாக் கமிட்டிகளின் போக்கை நுட்பமாகக் கவனித்தால் பார்ப்பனரல்லாதாரை நசுக்கும் பொருட்டே அந்த அட்ஹாக் கமிட்டிகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறதாகத் தோன்றுகிறது. தோழர்கள் ராமலிங்கம் செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், ரத்னவேலுத் தேவர் ஆகிய பார்ப்பனரல்லாதார் மதிப்பிழந்ததற்கும் இந்த அட்ஹாக் கமிட்டிகளின் திருவிளையாடல்களே காரணம். பார்ப்பனர்களுக்கு வேண்டியவர்களை ஆதரிப்பதும் வேண்டாதவர்களை அலôயம் செய்வதும் இந்த அட்ஹாக் கமிட்டிகளின் வாடிக்கையாக இருந்து வருகின்றது. இந்த அட்ஹாக் கமிட்டிகளின் அட்டூழியங்களை உணர்ந்த காங்கரஸ் வாதிகள் ஒழுங்கு நடவடிக்கை களுக்கு பயந்து வாயை மூடிக்கொண்டு இருக்கும்படி நேர்ந்திருக்கிறது. ஆகவே இந்த அட்ஹாக் கமிட்டிகளின் ஏமாற்றத்துக்கு ஆளாகாமலிருக்க தேவையானவை களைச் செய்ய வேண்டியது பொது ஜன க்ஷேமத்தை விரும்புவோர் கடமையாகும்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 15.08.1937

You may also like...