தலைவிதி சாஸ்திரிகள் அழுகை

 

சென்னை தோழர் சி. விஸ்வநாத சாஸ்திரியார் சென்னை றெளலட் சாஸ்திரிகள் என்று உலகப் பிரசித்தப் பெயர்பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜி சி. குமாரசாமி சாஸ்திரிகளின் சகோதரர். (இவர் கூட ஒருதரம் கொஞ்சநாள் ஹைகோர்ட் ஜட்ஜி வேலை பார்த்ததாக ஞாபகம், அது எப்படியோ போகட்டும்) இவர் 20.4.37ந் தேதி “இந்து” பத்திரிகைக்கு ஒரு சேதி அனுப்பியிருக்கிறார். அதாவது கல்வி இலாக்கா காலேஜúகளில் படிக்கும் பிள்ளைகள் 100க்கு 60 பேர் பார்ப்பனர்கள் என்றும் பிள்ளைகளைச் சேர்க்கும் கமிட்டிக்கு 4 காலேஜ் கமிட்டிகளுக்கும் பார்ப்பனர்களில் ஒருவரைக்கூட சர்க்காரார் மெம்பராகப் போடவில்லை என்றும் இரட்டை ஆட்சி காலத்திலாவது (அதாவது ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலாவது) ஒவ்வொரு கமிட்டிக்கு ஒவ்வொரு பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்றும் இப்போது அதுகூட இல்லையென்றும் இப்போதுள்ள மந்திரிகள் ஜஸ்டிஸ்கட்சி மந்திரிகளாகவும் அல்லது பார்ப்பனர்களின் எதிரிகளான மந்திரிகளாகவுமே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் சூசனை என்னவென்றால் பார்ப்பனர்கள் எல்லாம் இந்த மந்திரிகளுக்கு விரோதமாக இருந்து இவர்களை ஒழிக்க முயற்சிக்க வேண்டும் என்று மெள்ள ஜாடையாய் நெருப்பு வைக்கிறார். இதே மாதிரி நெருப்பையே தான் தோழர் சி.ஆர். ஆச்சாரியாரும் வைத்தார்; வைத்துக்கொண்டும் இருக்கிறார். அதிலேயே தனது உயிரைத் தியாகம் செய்யவும் துணிந்து அளவுக்கு மேல் தலை கொழுத்துத் திரிகிறார் என்றே சொல்ல வேண்டும். இது எப்படியோ போகட்டும்; அவனவன் கர்மத்தின் பயனை அவனவன் அனுபவிக்கட்டும். (“மேல் உலகத்தில்” அல்ல, இந்த உலகத்தில்) ஆனால் இந்த கடிதத்துக்கு பதிலாக நாம் ஒன்று கேட்கின்றோம்.

அதாவது காலேஜ் வகுப்புகளில் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு மூன்று பேர்களாய் உள்ள பார்ப்பனர்களின் பிள்ளைகள் காலேஜ் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 60 பிள்ளைகள் வாசிக்கக் காரணம் என்ன? 100-க்கு 97 மக்களாய் உள்ள சமூகப் பிள்ளைகள் இவ்வளவு குறைந்து 100-க்கு 40 பேர்களாக இருக்கக் காரணம் என்ன என்பதை தோழர் சி.வி. சாஸ்திரியார் விளக்குவாரா?

பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு பணக்காரர்களா? உழைப்பாளிகளா? அவர்களுக்கு மாத்திரமே அதிக மூளையா? என்கின்ற விஷயம் தெரிந்தால்தானே இந்த 100-க்கு 60 பிள்ளைகள் பார்ப்பனப் பிள்ளைகளாய் இருப்பதற்கு நாம் திருப்தி அடைய முடியும்? அத்திருப்தி இல்லாதவரையில் அதை மாற்றி சகல மக்களும் சரிசமமாக வருவதற்கு ஏற்ற முயற்சி செய்துதானே ஆக வேண்டும்? அம் முயற்சிக்கு பார்ப்பனர்களை காலேஜ் கமிட்டிக்கு மெம்பர்களாகப் போட்டால் காரியம் நடக்குமா? இப்போதாவது சர்க்காருக்கு புத்தி வந்ததற்கு மகிழ்ச்சியடைய வேண்டாமா?

ஆகையால் இப்போது காலேஜ் கமிட்டிக்கு பார்ப்பனர்களை நீக்கி பார்ப்பனரல்லாதாரையே போட்டது போல் இனி காலேஜ் உபாத்தியாயர்கள், பரீக்ஷாதிகாரிகள், கல்வி இலாக்கா நிர்வாக மேற்பார்வை அதிகாரிகள் ஆகியவர்களையும் பூராவுக்கும் அடியோடு பார்ப்பனர்களை விலக்கி பார்ப்பனரல்லாதார்களைப் போடாவிட்டால் இம் மந்திரிகளை மாபெரும் சமூகத் துரோகிகள் என்றுதான் கூப்பிட வேண்டும் என்போம்.

பார்ப்பனர்கள் தங்கள் கையில் ஆட்சி இருக்கும் இடங்களில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்தால் நமது பார்ப்பனரல்லாத மந்திரிகளும் உத்தியோகஸ்தர்களும் சமூகத்துரோகிகள் என்றே அழைக்கப்படத்தக்கவர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களும் காங்கிரஸ் தலைவர்கள் என்னும் பார்ப்பனர்களும் இப்போதுள்ள மந்திரிகளை அரசியல் காரணங்களுக்கு ஆக ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் நாமும் கூடவே இருந்து ஒழிப்பதற்கு முயற்சி செய்யலாம். அல்லது கவர்னர் நடந்து கொண்ட நன்றியற்ற- நியாயமற்ற – முறையற்ற காரியத்துக்கு ஆக இம்மந்திரிகளை ஒழிக்கவேண்டும் என்று சொன்னாலும் நாம்கூடச் சேர்ந்து ஒழிக்கத் தயாராய் இருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட பொறுப்புள்ள பார்ப்பனர்கள் மந்திரிகளை பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவி புரியவில்லை என்றும் மற்ற சில மானங்கெட்ட – குலநலமற்ற – பார்ப்பனரல்லாதார் – மந்திரிகள் ஆகியவர்களைப் போல் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவில்லை என்றும் கருதி ஒழிக்க முயற்சிப்பார்களேயானால் அந்த அயோக்கியத்தனத்தை ஒழிக்க நாம் இன்றைய மந்திரிகளுடன் சேருவதுமாத்திரமல்லாமல் தோழர்கள் பிரகாசம், ராஜகோபாலாச்சாரியார் கூறுவதுபோல் அதாவது பார்ப்பனரல்லாத கட்சி மந்திரிகளைவிட வெள்ளைக்கார சர்க்கார் மந்திரிகளே மேல் என்பதுபோல் இன்னம் ஒருபடி மேலே போய், பார்ப்பனர், காங்கிரஸ், கவர்மெண்ட், ஜஸ்டிஸ் ஆகிய மந்திரிகளை விட இந்த அனாமத் மந்திரிகளே மேல் என்று சொல்ல முற்பட்டுவிடுவோம் என்பதை தைரியத்தோடும் வலிமையோடும் கூறுவோம். தோழர்கள் சர். சிவசாமி அய்யர், வெங்கிட்டராம சாஸ்திரியார், சீனிவாச சாஸ்திரியார், அல்லாடி அய்யர் ஆகிய “பிரமுகர்கள்” ஆதிக்கத்தில் உள்ள மைலாப்பூர் இந்து ஹைஸ்கூல் என்பதில் தோழர் குஞ்சிதம் அம்மாள் உபாத்தியாயராய் இருந்ததை சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு பண்டு இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்பிவிட்டு அதைவிட அதிக செலவில் அதை பூர்த்திசெய்து கொண்டிருக்கும் போது இருக்கிற பார்ப்பனர்களை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாமல் இனி நியமிக்கப்போகும் கமிட்டிக்கும் உத்தியோகத்துக்கும் பார்ப்பனர்களைச் சேர்க்காமல் போனதால் அது மகா பாதகமான காரியமா என்று கேட்கின்றோம்.

இப்போதைய மந்திரிகளுக்கும் நாம் ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். அதாவது இந்த மந்திரிகள் உத்தியோகம் அடுத்த நொடி நேரத்தில் காலியாவதானாலும் சரி, சிவகங்கை தோழர் ராமச்சந்திரன் சேர்வை அவர்களும் ஒரு காலத்தில் திருச்சி தேவரும் சொன்னது போல் அதாவது “இந்தக் கையைக்கொண்டு ஒரு பார்ப்பனனுக்கு நான் ஓர் வேலை போடமாட்டேன்” என்று சொன்னது போல் இந்த மந்திரிகளும் நிர்ணயம் செய்து கொண்டு தங்கள் தங்கள் மந்திரி வேலையைச் செய்வார்களானால் இந்த மந்திரிகள் பனகால் மந்திரியைவிட பொப்பிலி மந்திரியைவிட 500 பங்கு 1000 பங்கு மேம்பட்டவர்களாவார்கள் என்றும் அப்பொழுதுதான் இந்த மந்திரிகள் தங்கள் பின் சந்ததியார் மாத்திரமல்லாமல் மற்ற பார்ப்பனரல்லாதவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த மந்திரிகளின் பெயர்களை வைக்கவேண்டுமென்று கருதத்தக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் கூறுவோம். இந்த கருத்தை நாம் மந்திரிகளுக்கு மாத்திரம் சொல்லவரவில்லை. நம் தமிழ் நாட்டில் ஜில்லா போர்ட், முனிசிபாலிட்டி முதலாகிய ஸ்தாபனங்களில் இருப்பவர்கள் கூட, விபீஷணர்கள் ஆகி பதவி பெற்றவர்கள் கூட தங்கள் சரீரத்தில் கலப்படமில்லாத ரத்த ஓட்டமுடையவர்களாய் இருந்தால் அவர்களும் இதே மாதிரி சங்கற்பம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால் தோழர் முத்தையா முதலியார் அவர்களைப் போல் தங்கள் பதவிபோவதாய் இருந்தால் சிறிதும் பயப்படாமல் உத்தியோகத்தை உதறித்தள்ளிவிட்டு வெளியேறிவிடலாம். உத்தியோகம் பெரிது என்று கருதி அதற்கு ஆக பார்ப்பனர்களுக்கு பிள்ளையாய் பிறந்ததுபோல் அவர்கள் சமூகத்துக்கே உழைப்பதை விட இந்தக் காரியத்துக்கு ஆக சர்வீசிலிருந்து டிஸ்மிஸ் ஆகி வெளியேறிவந்தால் கூட மேல் என்று கூறுவோம். ஏன் என்றால் இன்று பார்ப்பனர்கள் செய்யும் கொடுமை அவ்வளவு சகிக்க முடியாததாய் இருக்கிறது. தோழர்கள் ராஜகோபாலாச்சாரி, பிரகாசம், காளேஸ்வரராவ், பாஷியம், வரதாச்சாரி, சந்தானம், சீனிவாசன் ஆகிய பார்ப்பனர்கள், தோழர்கள் ராமநாதன், முத்துரங்கம், அண்ணாமலை, சுப்பையா போன்ற ஆட்களை கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்ச்சென்று பேசுவதென்ன? செய்வது என்ன? தேர்தல் காலங்களில் அவர்கள் செய்தவை என்ன என்கின்ற காரியங்களைக் கவனித்தால் இவ்வளவு எழுதுவதுபோதும் இதன்படி செய்வதும் போதுமா என்பது விளங்கும். பார்ப்பனர்கள் எவ்வளவுதான் தனிப்பட்ட முறையிலும் தொழில் முறையிலும் நம்மிடம் பயன் பெற்று நன்றி காட்டக் கடமைப்பட்டிருந்தாலும் சமயம் நேர்ந்தவுடன் கழுத்தறுத்து விடுகிறார்கள் என்பதை யாரே மறுக்க முடியும்? பொப்பிலி, பெரிய ஜமீன்தார்கள், ராஜா சர் போன்ற பிரபுக்களும் பட்டக்காரர் போன்ற காட்டு ராஜாக்களும் பார்ப்பனர்களையே சகல காரியத்துக்கும் அமர்த்தி தங்கள் தங்கள் வீட்டு கல்யாணம், கருமாந்திரம் ஆகியவைகளுக்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி எவ்வளவோ அழுது வந்தும், அந்தப் பார்ப்பனர்களின் கல்யாணம், கருமாந்திரம், கல்நாட்டு – எட்டு எழவு ஆகியவைகளுக்கெல்லாம் பைபையாக பணம் அழுதும் வக்கீல் முறையில், டாக்டர் முறையில் வருஷத்துக்கு 1000, 10000, 100000 என்பதாகக் கொட்டிக் கொடுத்தும் சமயம் வந்தபோது எல்லோரும் அந்த பணத்தில் ஊறிப்பிறந்த பிள்ளைகள் உள்பட வம்சத்தோடு ஒன்று சேர்ந்து தலையில் கல்லைப்போட்டார்கள்; போடக் காத்திருக்கிறார்கள் என்றால் இனி எதற்கு ஆக இவர்கள் பார்ப்பனர்கள் விஷயத்தில் தயவு தாட்சண்யம் காட்டுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

தோழர் ராஜா சர். அண்ணாமலை செட்டியாருக்கு சரீரத்தின் தோல் சிறிது மொத்தம் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. அவருடைய செல்வத்தைப்பற்றி நமக்கு (சமதர்மவாதி என்கின்றவன் அல்லாத முறையில்) சிறிதும் பொறாமை கிடையாது. அவர் புத்தி சக்தி ஆகியவைகளைப் பற்றி நமக்கு எவ்வளவோ பாராட்டுதல் உண்டு. அவர் தனது சுயநலத்தை பிரதானமாய் கருதுகிறார் என்கிற விஷயத்தையும் இயற்கைவாதி என்கின்ற முறையில் ஒப்புக்கொள்வோம்.

ஆனால் சுயமரியாதைக்காரன் என்கின்ற முறையில் ராஜா சர். அவர்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கத் தகுந்த உருவாகத்தான் மதிக்க வேண்டி இருக்கிறது. ஏன்? இந்தப் பார்ப்பனர்கள் – அவரிடம் பிடுங்கித்தின்று கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் – இன்றும் 1000, 10000 பெறும் பார்ப்பனர்கள், அவருக்கு செய்த கொடுமைகளைக் கண்டும் அதனால் பல தொல்லைகள் அடைந்த பின்பும் அவரது யுனிவர்சிட்டி காலேஜúக்கு தோழர் சீனிவாச சாஸ்திரியார் வைஸ்சான்சலர், அவர் மூன்று மாதம் ஊரில் இல்லாவிட்டால் அந்த ஸ்தானத்துக்கு தோழர் வெங்கிட்டராம சாஸ்திரி என்கின்ற மற்றொரு பார்ப்பனர், மறுபடி கனம் சாஸ்திரி வந்துவிட்டால் உடனே அவருக்கே கொடுப்பது, அண்ணாமலை யுனிவர்சிட்டி சிப்பந்திகளில் வாசல் கூட்டுபவன், கக்கூசுக்காரன் நீங்கலாக மற்றவர்கள் 100க்கு 90 பேர் பார்ப்பனர்களும் ஆஸ்டலிலும் பள்ளியிலும் உதவித்தொகை சலுகை ஆகியவைகள் பெரிதும் பார்ப்பனப் பிள்ளைகளுக்கும் கொடுப்பதோடு உபாத்தியாயர்களும் 100க்கு 97 பார்ப்பனர்களுக்கும் கொடுக்கப்பட்டால் ராஜா சர். குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும் என்று எந்த மடையன்தான் ஆசைப்பட முடியும் என்று கேட்கின்றோம். அதுபோலவே பொப்பிலி ராஜாவும் இன்னமும் தனது ஜமீனில் 100க்கணக்கான பார்ப்பனர்களை வைத்துக்கொண்டிருக்கிறார் என்றால் இவருக்கு மந்திரி பதவி போனதற்காக மக்கள் பிரியாணி சாப்பிடமாட்டார்களா என்று கேட்கின்றோம். பட்டக்காரரும் உதைத்த காலுக்கு முத்தமிடுவது போல் பார்ப்பன வக்கீல் வீட்டுக்கே நடப்பாரானால் இவர் தோல்வியடைந்தது ஞாயம் என்பதோடு இனியும் தோல்வி அடைய ஆசைப்படமாட்டார்களா? எது எப்படியோ போனாலும் யார் எப்படி நடந்து கொண்டாலும் இப்போதுள்ள மந்திரிகள் தோழர் விஸ்வநாதசாஸ்திரிகள் சொன்னதுபோல் தங்களை எந்தக் கட்சிபேராலும் சொல்லிக் கொள்ளாமல் பார்ப்பன எதிரி மந்திரிகள் அதாவது அணtடி ஆணூச்டட்டிண Mடிணடிண்tஞுணூண் (ஆண்டி பிராமின் மினிஸ்டர்ஸ்) என்று தைரியமாய் சொல்லிக் கொண்டு அதன்படியே வேலை செய்வார்களானால் அதாவது இனி நியமனம் செய்யும் எல்லா உத்தியோகம் கமிட்டி ஆகியவைகளுக்கும் பார்ப்பனர் 100-க்கு 3 வீதம் வந்து சேரும் வரை அவர்களை நியமிக்காமல் விட்டு விடும்படி பப்ளிக் சர்விஸ் கமிஷனுக்கு உத்திரவு போடுவார்களானால் “எவ்வளவு பாவம் செய்தாலும் ஒரு தரம் சிவா என்றால் எல்லாம் பஸ்மீகரமாய் போய்விடும்” என்பதுபோல் வேறு வழியில் இவர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் அப்பாவங்கள் மன்னிக்கப்பட்டு மக்களின் நன்றிக்கு பாத்திரமாவது திண்ணம் என்றும் மக்களின் மகிழ்ச்சியான “மோக்ஷம்” அடைய உரிமையுடையவர்களாகி விடுவார்கள் என்றும் கூறுவோம்.

வெளிப்படையாகப் பார்ப்பனர்கள் போருக்கு துணிந்துவிட்ட சேதியை தோழர் பாஷ்யம் அய்யங்கார் கடலூரில் பேசிய பேச்சிலிருந்தும் அதை “இந்து” “சுதேசமித்திரன்” ஆதரித்திருப்பதிலிருந்தும் உணரலாம். இது ஏப்ரல் 17ந் தேதி “ஜனநாய”கத்தில் இருக்கிறது.

குடி அரசு – தலையங்கம் – 25.04.1937

You may also like...