அஞ்சேல்! அஞ்சேல்!! அஞ்சேல்!!!

 

எந்த நாட்டிலும் எந்தக் கட்சியும் யுகாந்த காலம் வரை அதிகார பதவி வகித்ததில்லை. எந்தக் கட்சிக்கும் பொதுஜன கோரிக்கைகளை யெல்லாம் சரிவர நிறைவேற்றி வைக்க முடியாது. ஆகவே அதிகார பதவி வகிக்கும் கட்சி மீது பொதுஜனங்களுக்கு சில காலத்துக்குப் பிறகு அதிருப்தி ஏற்படுதல் இயல்பே. இந்நிலைமை எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதே. பிரிட்டனிலே மிகவும் முற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் தொழிற் கட்சி தோழர் ராமஸே மாக்டோனால்டு தலைமையில் அதிகார பதவி ஏற்றது. கொஞ்ச காலம் அக்கட்சி செல்வாக்குப் பெற்றும் இருந்தது. ஆனால் அந்தச் செல்வாக்கு நெடு நாள் நிலை நிற்கவில்லை. வெகு சீக்கிரம் மறுதேர்தலை நடத்தும் நிலைமை ஏற்பட்டது. தேர்தலிலே தொழிற்கட்சியார் முறியடிக்கப்பட்டார்கள். பிற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் கன்சர்வேட்டிங் கட்சியார் மெஜாரட்டி பெற்று அதிகார பதவி ஏற்றார்கள். தொழிற்கட்சித் தலைவர் தோழர் ராம்ஸே மாக்டோனால்டு தமது கட்சியை நட்டாற்றில் விட்டுவிட்டு கன்சர்வேட்டிங் கட்சியாரிடம் சரணாகதியடைந்தார். இன்று தொழிற்கட்சி மைனாரிட்டி கட்சியாகி செல்வாக்கு இழந்து நிற்கிறது. வெகு சமீபத்தில் பூர்வ நிலையை அடையுமென நம்ப முடியவில்லை. மிகுந்த கட்டுப்பாடும் அரசியல் அனுபவமும் உடைய தொழிற்கட்சி பாடே இவ்வாறிருக்கையில் நமது கட்சிக்குத் தற்காலம் ஏற்பட்டிருக்கும் தோல்வியைப் பார்த்து மனந்தளர்வது மதியீனமாகும்.

~subhead

நமது நிலை

~shend

மக்கள் மனப் போக்கு கடல் அலைகளுக்கு ஒப்பானது. இன்று பொதுஜன மதிப்பைப் பெற்று நிற்கும் ஒரு கட்சி நாளை அம்மதிப்பை இழக்கவும் கூடும். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதாயினும் நமது கட்சியின் விசேஷ நிலைமையை வாசகர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும். சமயங்களின் பேராலும் ஒரு சிறு சமூகத்தார் பெற்றிருக்கும் விசேஷ உரிமைகளையும் வசதிகளையும் பிரயோகம் செய்து எல்லாத் துறைகளிலும் நம்மவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கொடுமையை ஒழிக்கவே நமது கட்சி தோன்றிற்று. சென்ற 20 வருஷ உழைப்பினால் நம் கட்சியின் நோக்கம் ஒருவாறு வெற்றி பெற்று வருகிறது. நம்மை அடக்கியாண்டு வந்த சமூகத்தார் தமது பூர்வ பலத்தை இழந்து விட்டனர். அரசியலிலும் சமூக இயலிலும் அவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் மாய்ந்து விட்டன. ஆகவே தமது பூர்வ நிலைமையை மீண்டும் அடைய அவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். “இருப்பதா இறப்பதா?” என்ற பிரச்சினையை முடிவு செய்ய வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நேருக்கு நேர் மார்தட்டி நின்று போராட அவர்களுக்கு சுய பலமில்லை. 100க்கு 3 கொண்ட ஒரு சமூகத்தாருக்கு 100-க்கு 97 கொண்ட சமூகத்தார் முன் எவ்வாறு மார்தட்டி நின்று போர் தொடுக்க முடியும்? ஆகவே, காங்கரஸ் துணை கொண்டு நம்மவர்களை வீழ்த்த அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்.

~subhead

காங்கரஸ்

~shend

மிகவும் பழமையான ஸ்தாபனம். அறிவும், ஆற்றலும் மிக்க பல பெரியார்களால் தோற்றுவிக்கப்பட்டது. காங்கரசின் ஆதிகால லôயம் வேறு, தற்கால லôயம் வேறு. இந்தியர்களின் குறைபாடுகளை பிரிட்டிஷ் சர்க்காருக்கு உணர்த்தி அரசியல் உரிமைகள் பெறுவதே காங்கரசின் ஆதிகால லôயமாக இருந்தது. பிரிட்டிஷ் தொடர்பற்ற பூரண சுயராஜ்யம் பெறுவது காங்கரசின் தற்கால லôயம். “சுதந்தரம், விடுதலை” என்பன மிகவும் மனோகரமான வார்த்தைகள். இந்திய மக்களில் 100-க்கு 97 பேர் எழுத்து வாசனை யில்லாதவர்களாயிருந்தாலும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும், கலைஞானிகளும், உலக மதிப்புப் பெற்ற அரசியல்வாதிகளும் நமக்குள்ளே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் வார்த்தைகளை பாமர மக்கள் தேவ வாக்காக மதிப்பது ஆச்சரியமல்ல. காந்தி, தூய வாழ்க்கையினாலும், தியாகங்களினாலும் எப்படியோ இந்தியர் மதிப்பைப் பெற்று விட்டார். இந்தியர்களில் 100-க்கு 90 பேர் காந்தியைக் கடவுளாக வணங்கும் மனப்பான்மை யுடையவர்களாகவே இருக்கிறார்கள். ஜவஹர்லால், படேல், ராஜேந்திரா முதலியோரும் தியாகிகள் என்றும், வீரர்கள் என்றும் அமிதமாக விளம்பரம் செய்யப்பட்டு, பொது மக்கள் மனத்தைக் கவர்ந்தவர்கள். ஆகவே, சுயராஜ்யம் என்றும், ராமராஜ்யம் என்றும் அவர்கள் கூறுவதைக் கேட்டு பாமர மக்கள் மதிமயங்கி யிருப்பது ஆச்சரியமல்ல. வரிப்பளுவால் வாடும் விவசாயி வரி வசூல் செய்யாத ஒரு அரசாங்கத்தை விரும்புவது இயல்பே. கடன் பளுவால் நசுங்கும் ஏழைகள் வாங்கின கடனைக் கொடு என்று சொல்லாத ஒரு நிருவாக முறையை நாடுவதும் சகஜமே. வரப்போகும் சுயராஜ்யத்திலே – ராம ராஜ்யத்தில் குடிகள் சுவர்க்க வாழ்வு வாழ்வார்கள் என்று காங்கரஸ்காரர் கூறுகிறார்கள். இந்தியாவின் தற்காலக் கஷ்டங்களுக்கெல்லாம் பிரிட்டீஷாரே காரணமென்றும், பிரிட்டீஷாரை இந்தியாவிலிருந்து ஓட்டிவிட்டால் இந்தியர்கள் பாலும் சோறும் உண்டு சுபிக்ஷமாக வாழ முடியுமென்றும் காந்தி கோஷ்டியார் செப்புகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் அம்மாதிரி அசாத்தியமான காரியங்களைச் செய்யப்போவதாய் கூறவில்லை. மக்களில் 100-க்கு 90 பேர் எழுத்து வாசனையில்லாதவர்கள், பரம ஏழைகள் என ஏற்கனவே கூறியிருக்கிறோம். காங்கரஸ்காரர் காங்கரஸ் தோன்றி 50 வருஷங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் முதன் முதலாக அரசியல் நடத்த முன்வந்திருக் கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே என தேச மகாஜனங்கள் விரும்புவது சகஜம் தானே. தற்கால காங்கரஸ் வெற்றிக்கு காரணம் இதுவே. அரசியலை ஒப்புக்கொண்டு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றிவைக்க காங்கரஸ்காரர் தவறுவார்களாயின் இன்று அவர்களை மெஜாரட்டியாக அனுப்பும் தேச மகாஜனங்களே அடுத்த தேர்தலில் அவர்களை விளக்குமாறைக் காட்டி வெரட்டி ஓட்டுவார்கள் என்பது நிச்சயம். எனவே காங்கரஸ் வெற்றியைப் பார்த்து நாம் அஞ்சத் தேவையே இல்லை. மாறாக அடுத்த போருக்கு இப்பொழுதே ஆயத்தம் செய்ய வேண்டியதே நமது கடமை.

~subhead

எதிர்கால வேலை

~shend

சுமார் 15 வருஷகாலம் அதிகார பதவி வகித்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் அளப்பரிய நன்மைகள் நாம் செய்துள்ளோமாயினும் நமது கட்சியை வளர்க்க – உறுதிப்படுத்த – அநியாயமாகத் தவறிவிட்டோ மென்பதை நாம் மிக்க வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியதாகவே இருக்கிறது. 15 வருஷகாலம் அதிகார பதவி வகித்த ஒரு கட்சிக்குப் பொது நிதியில்லை; தேவையான அளவுக்குப் பத்திரிகைகள் இல்லை; பிரசாரங்கள் இல்லை என்றால் இதைவிடப் பெரிய மானக்கேடு வேறுண்டா? 1933-ல் கனம் பொப்பிலி ராஜா அவர்கள் மட்டும் கட்சித் தலைவர் பதவி ஏற்றிருக்காவிட்டால் நமது கட்சி எவ்வளவோ காலத்துக்கு முன்னமேயே தோழர் சத்தியமூர்த்தி அபீஷ்டத்தைப் பூர்த்தி செய்திருக்கும் என்பதற்கு சந்தேகமே இல்லை. மந்திரி பதவிக்குள்ள சம்பளத்தைத் தவிர தம் சொந்த பணத்தையும் லட்சக்கணக்கில் கட்சி நலனுக்காகச் செலவு செய்யும் ஒரு தலைவரை நாம் அதிர்ஷ்டவசமாகப் பெற்றிருந்தும் ஏனைய தலைவர்களின் அலட்சிய புத்தியினால் நமது கட்சி இன்று வலியிழந்து நிற்பது மிகவும் வருந்தத் தக்கதாகும். ஒரு சமூகத்துக்குப் பத்திரிகையே நாக்கு. பத்திரிகையில்லாத சமூகம் பேச நாக்கில்லாத சமூகமேயாகும். வாரம் இரு முறையாவது தமிழர் சமூகம் பேசுவதற்கு வசதியளித்த பெருமையும், இங்கிலீஷ் தினசரி நடத்தும் பொறுப்பையும் சென்ற மூன்று நான்கு வருஷகாலமாகத் தாங்கி நிற்கும் நமது மாபெரும் தலைவருக்கே உரியது – ஏனைய தலைவர்கள் கட்சிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அந்தோ! மறந்தே விட்டார்கள். தமது நலனுக்காக உழைப்பது கட்சியின் கடமையே யன்றி கட்சி நலனுக்காக உழைப்பது தமது கடமையல்லவென அவர்கள் அசட்டுத்தனமாக நம்பியிருந்ததே நமது கட்சியின் தற்கால நிலைமைக்குக் காரணம்.

~subhead

ஜில்லாக்களின் அலôயம்

~shend

நமது கட்சிக்கு ஒவ்வொரு ஜில்லாவும் ஒவ்வொரு கோட்டையாகும். ஜில்லாக் கோட்டைகள் எல்லாம் நமது கட்சியார் வசமிருந்தும் ஜில்லாக் கோட்டைகளுக்கு தளபதிகளாயிருந்தவர்களின் அலôய பாவனையினால் நாம் ஜில்லாக் கோட்டைகளை ஒவ்வொன்றாக இழந்து விட்டோம். ஜில்லா போர்டு தலைவர்கள் தாலூகாக்கள் தோறும் மகாநாடுகள் கூட்டி பாமர மக்களும் நமது தலைவர்களும் நெருங்கிப் பழகவும் நாம் செய்துள்ள வேலைகளை பாமர மக்கள் உணரவும் சந்தர்ப்பங்கள் அளித்திருந்தால் தற்கால நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதற்கு சந்தேகமே இல்லை. சென்ற டெல்லி அசம்பிளித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய காங்கரஸ்காரர் தாலூகாக்கள் தோறும் கிராமங்கள் தோறும் மகாநாடுகள் கூட்டியும் திக் விஜயம் செய்தும் தீவிர பிரசாரம் செய்து வருவதைக் கண்டும் நமது ஜில்லாத் தலைவர்கள் தூங்கிக்கொண்டு இருந்தது மன்னிக்க முடியாத குற்றமல்லவா? மகாநாடுகள் கூட்டி நாம் செய்துள்ள வேலைகளையும், மேற்கொண்டு செய்யப்போகும் வேலைகளையும் பாமர மக்களுக்கு எடுத்துக் கூறி பாமர மக்கள் ஆதரவைக் காலாகாலத்தில் பெற்றிருந்தால், கடைசிக் காலத்து லட்சக் கணக்காகச் செலவு செய்தும் – அநாமதேயர்களால் தோற்கடிக்கப்படும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்குமா என்பதை ஜில்லாத் தலைவர்கள் இப்பொழுதாவது யோசித்துப் பார்ப்பார்களா? காங்கரஸ்காரர் பாடுபட்டார்கள்; கூலி பெற்றார்கள்; நாம் சோம்பியிருந்தோம்; தோல்வி யடைந்தோம்.

~subhead

போனதெல்லாம் போகட்டும்

~shend

சென்றன சென்றன. நிகழ்ந்து போனதை எண்ணி வருந்துவதில் பயனில்லை. பிப்ரவரி தேர்தலோடு நமது வாழ்நாள் முடிவுபெற்றுவிடவில்லை. அரசியல் வாழ்வில் இறங்கினால் வெற்றியும், தோல்வியும் உண்டாகத்தான் செய்யும். தோல்வியுறுவது மானக் கேடுமல்ல; தோல்விக்கஞ்சி ஓடுவதுதான் மானக்கேடு. அதிர்ஷ்டவசமாக நாம் ஒரு இணையற்ற தலைவரைப் பெற்றிருக்கிறோம். அவரது கொடிக்கீழ் நின்று நாமெல்லாம் ஒற்றுமையோடு உழைத்தால் வெகு சீக்கிரத்தில் நாம் வெற்றிக் கொடி நாட்டிவிடலாம். நமது குறைபாடுகளை கட்சித் தலைவர்கள் உள்பட எல்லாரும் அறிந்துதான் இருக்கிறார்கள். எனவே, நாம் மீண்டும் விளக்கிக்கூற விரும்பவில்லை. பணமும், தொண்டர்களும், பத்திரிகைகளும் உண்டானால் காங்கிரஸ்காரரோடு போராடி வெற்றிக் கொடி நாட்டலாமென்பது நிச்சயம். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய தேச பாஷைத் தினசரிகள் கட்டாயம் வெளிவந்து தீர வேண்டும். மலையாளியான டாக்டர் நாயர் தோற்றுவித்த இயக்கத்தை மலையாளிகள் முற்றிலும் மறந்தே விட்டார்கள். 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் நூற்றுக்கணக்கான மலையாளி வாலிபர்கள் கும்பல் கும்பலாகச் சென்று மஞ்சள் பெட்டியில் வோட்டுப்போட முயல்வதை நாம் கண்ணாரக் கண்டபோது நமது இரத்தம் கொதித்தது. என் செய்வது? மலையாளப் பத்திரிகை இல்லாத குறையினால் நாம் மலையாளிகள் ஆதரவை இழந்து விட்டோம். தெலுங்குப் பத்திரிகை இல்லாத குறையினால் ஆந்திர நாட்டு ஆதரவையும் அநேகமாக இழந்து விட்டோம். இன்னும் 6 மாதத்துக்குள் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நெருக்கடி ஏற்படுமென்ற உணர்ச்சி நமக்கு எப்படியோ இருந்து கொண்டு இருக்கிறது. அதற்கு முன் நாம் நம்மவர்களை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டுமென்று நம்மவர்களை நாம் வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

~subhead

ஒரு வார்த்தை

~shend

நாம் முன்னேற வேண்டுமானால், நமது பூர்வ நிலையை அடைய வேண்டுமானால் நம்மவர்களின் தற்கால மனப்போக்கு அடியோடு மாற வேண்டும். பத்திரிகை, பிரசாரம் என்றால் நம்மவர்களுக்கு விளக்கெண்ணெய், வேப்பங்காய் மாதிரி இருக்கிறது. அந்த மனோ நிலை மாறினாற்றான் நமக்கு எதிர்காலத்து வாழ்வுண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பாஷைகளில் நான்கு தினசரிகள் வெகு சீக்கிரம் வெளிவந்து தீரவேண்டும். தொழில் பழக்க முடையவர்கள் துணைகொண்டு வர்த்தக முறையில் பத்திரிகைகள் நடத்தினால் கை நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஒருகால், ஆரம்ப காலத்தில் சிறிது நஷ்ட மேற்பட்டாலும் நான்கோ, ஐந்தோ ஆயிரத்துக்குமேல் போகாது. இந்தச் சிறு நஷ்டத்தை சமாளிக்க நமக்கு சக்தியில்லையா? நமக்குள்ளே ஜமீன்தார்கள் இல்லையா! மிராசுதார்கள் இல்லையா? மிட்டாதார்கள் இல்லையா? ஆலை முதலாளிகள் இல்லையா? பாங்கர்கள் இல்லையா? லக்ஷாதிபதிகள் இல்லையா? இவர்கள் எல்லாம் நினைத்தால் பத்திரிகைப் பிரச்சினை வெகு சுளுவில் முடிவடையாதா? தேர்தல் காலத்தில் லக்ஷக்கணக்கில் செலவு செய்கிறவர்கள் ஆதியில் கட்சியை வலுப்படுத்த சிறிது செலவு செய்தால் கடைசிக் காலத்தில் பணம் பாழ்படுவது கட்டாயம் தடைபடத்தான் செய்யும். பணத்தைச் செலவு செய்தாலும் போதாது; கால மறிந்து இடமறிந்து செலவு செய்ய வேண்டும். நமது லôயம் உயர்வானது; நமது கொள்கைகள் உத்தமமானவை; நாம் செய்துள்ள வேலைகளோ அபாரமானவை; மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளும் மலைபோல் இருக்கின்றன. நமது லôயம் கொள்கை, சேவை காரணமாக நாம் எக்கட்சிக்கும் தலை குனியத் தேவையில்லை. காலப்போக்குக்கு அநுகுணமான சாதனங்கள் இல்லாமையினாலேயே நாம் தற்காலம் தலைகுனியும்படி நேர்ந்திருக்கிறது. “ஜஸ்டிஸ்” பத்திரிகை கூறுகிறபடி நாம் அபிசீனியர் நிலையிலும், நமது எதிரிகள் இத்தாலியர் நிலையிலும் இருந்து வருவது உண்மையே. நியாய பலம் அபிசீனியர் பக்கம் இருந்தாலும் பிரம்மாண்டமான படை வலியினால் இத்தாலியர் அபிசீனியரை நசுக்கி வருவதுபோல், நியாயபலம் நம் பக்கம் இருந்தும் அமோகமான பத்திரிகைகள், பிரசாரகர்கள் முதலிய சாதனங்களின் உதவியினால் விஷமப் பிரசாரம் செய்தும், காலித்தனம் செய்தும் காங்கரஸ்காரர் நம்மை முறியடித்து வருகிறார்கள். “துஷ்டரைக் கண்டால் தூரத் தூரே” என்ற பழமொழிப்படி நாமும் பின் மாறும்படி நேர்ந்திருக்கிறது. நமது பலத்தை நாம் உணர்கின்றோமில்லை. நமக்கு எவ்வளவு ஆற்றலுண்டென்பதை யறியவும் நமக்கு மதியில்லை. பல்லாயிர வருஷ காலமாக மதத்தின் பேராலும், சாஸ்திரங்களின் பேராலும், நம்மை யடக்கியாண்டு வந்த ஒரு சக்தி வாய்ந்த சமூகத்தை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற தியாகர், நாயர், ராயர் திருவுருவங்களை தினமொருமுறை நினைத்துப்பார்த்தாலும் நாம் ஒவ்வொருவரும் ஆண்சிங்கம் ஆகமாட்டோமா! மலையினும் பெரிய வலி பெறமாட்டோமா!! தலைவர்களே!! தொண்டர்களே!!! ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள். தளராத வெற்றிக்கொடி நாட்டி நிற்க ஆற்றலுடைய – வசதியுடைய நாம் நமது மதியீனத்தினாலன்றோ ஒரு சிறுகுடி மக்கள் முன் தலை குனிய வேண்டியிருக்கிறது. நமது திராவிட வீரம் எங்கு போயிற்று? இமயத்தில் புலிக்கொடி நாட்டிய சக்தி எங்கு போயிற்று? தற்கால நாகரிக மக்கள் வனவிலங்கனையராய் பொந்திலும், புதரிலும் வாழ்ந்த காலத்து சாம்ராஜ்யங்கள் கண்டு திரைகடலோடி திரவியம் தேடி, திராவிட நாகரிகத்தை உலக முழுதும் பரப்பிய நமது பேராற்றல் எங்கு போயிற்று? தலைவர்களே!! தொண்டர்களே!!! சகோதரர்களே! நமது பூர்வ நிலைமையை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! நமது முன்னோர் ஆற்றலை – வீரத்தை – ஆண்மையை – சிறிது உன்னிப்பாருங்கள்! அடுத்த போருக்கு தயாராகுங்கள்!!!

– “விடுதலை”

குடி அரசு (மறு பிரசுரம்) – கட்டுரை – 07.03.1937

You may also like...