தியாகப் புரட்டு

பதவியேற்ற காங்கரஸ்காரர் பெரிய தியாகம் செய்து விட்டார்களாம். பிரமாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. மந்திரிமார் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார்கள். ஆனால் சர்க்காரிடமிருந்து 6 கார்கள் சன்மானம் வாங்கத் தவறவில்லை. சென்னை மேல்சபை உதவித் தலைவர் தோழர் வெங்கடசாமி நாயுடு தமது மாதச் சம்பளத்தை வாங்கப் போவதில்லையென்று சர்க்காருக்கு எழுதிவிட்டாராம். அப்பா கம்பெனி புரோப்ரைட்டருக்கு அந்தத் தொகை எம்மாத்திரம்! எனினும் அவருடைய தியாகத்தை மேல் சபைத் தலைவர் டாக்டர் ராமராவ் “காபி” அடிப்பாரா? அவரும் பெருத்த வருமானமுடைய டாக்டர்தான். கீழ்சபை அல்லது அசம்பிளித் தலைவர் தோழர் புலுசு சாம்ப மூர்த்தி பெரிய தியாகியல்லவா? சட்டை, செருப்பு, குடைகளைக்கூட வெறுப்பவரல்லவா? அவருக்கு ஏன் மாதா மாதம் 500 ரூபாய்? தோழர் வெங்கிடசாமி நாயுடு மாதிரி புலுசுவும் அவருடைய சம்பளத்தை இழப்பாரா? அப்பால் வீராங்கனை தோழர் ருக்மணி லôமீபதிக்கு சம்பளம் எதற்கு? அவரும் தியாக ஊழியம் ஏன் செய்யக்கூடாது? குடும்பப் பொறுப்பு அவருக்கில்லை. அந்தப் பாரத்தை ஏற்க அவரது பர்த்தா இருக்கிறார். எனவே அம்மையார் தனது தேச ஊழியத்துக்குப் பிரதி பலன் பெறுவது நீதியுமாகாது; தேசீயமுமாகாது.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 01.08.1937

You may also like...