புதிய மந்திரிகள்

இன்று நமது சென்னை அரசாங்கத்தில் உள்ள மந்திரிகள் அறுவரும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். இன்றும் நமது அபிப்பிராயம் அதுவேயாகும். ஆனால் அவர்களுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்றும் அவர்களால் எவ்வித காரியமும் எதிர்பார்க்க மக்களுக்கு உரிமை இல்லை என்றும் யாரும் சொல்லிவிட முடியாது. அவர்கள் நமது வரிப்பணத்தில் இருந்தே சம்பளம் பெறுகிறார்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் மக்களுக்கு எவ்வளவு பொறுப்பாளிகளோ அவர்களிடமிருந்து மக்கள் எவ்வளவு எதிர்பார்க் கிறார்களோ அவ்வளவும் இந்த மந்திரிகளிடமும் எதிர்பார்ப்பது தவறல்ல, அதனாலேயே இந்த மந்திரிகளை ஆதரிக்கவோ வரவேற்கவோ நாம் கட்டுப்பட்டவர்கள் என்று யாரும் கருதிவிடமாட்டார்கள்.

பொதுவாக நோக்குமிடத்து இம் மந்திரிகளை பதவியில் அமர்த்தக் காரணம் அரசியல் சட்டத்தில் கண்டுள்ள நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டும் அதன் கருத்துக்குக் கட்டுப்பட்டும் காங்கிரஸ் மந்திரிகள் நடந்து கொள்ளுவார்கள் என்கின்ற விஷயத்தில் சர்க்காருக்கு உள்ள அவநம்பிக்கையாலேயே அவர்கள் கேட்ட சட்டமற்ற வாக்குறுதியை சர்க்கார் மறுத்து இந்த மந்திரிகளை நியமித்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி சர்க்காரார் காங்கிரசுக்காரர்கள் மீது அவநம்பிக்கைப் பட்டதற்குக் காரணம் சிறுபான்மை வகுப்பார், பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஆகியவர்கள் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளாவிட்டால் அப்படிப்பட்ட சமயங்களில் சர்க்காருக்கு விசேஷ அதிகாரம் வேண்டுமாதலால் வாக்குறுதி கொடுக்க முடியாது என்று சொன்னார்.

ஆகையால் இன்றைய மந்திரிகள் சிறுபான்மை வகுப்பார் விஷயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் விஷயத்தில் தக்க நீதி வழங்கவும் அவர்களை முன்னேறச் செய்யவுமான காரியத்தை முக்கியமாய் கருதக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

அதுமாத்திரமல்லாமல் மந்திரிகள் பெரும்பாலோரும் சிறுபான்மை வகுப்பாரும் பிற்படுத்தப்பட்ட மக்களுமான வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய மந்திரி பதவி ஆயுள் எந்த நிமிஷத்தில் முடிந்தாலும் முடியலாம், மூன்று வருஷத்துக்குக் குறையாமல் இருந்தாலும் இருக்கலாம். மனித ஆயுள் 100 வயது என்றாலும் கர்ப்பத்திலோ அல்லது எந்தச் சமயத்திலோ வேண்டுமானாலும் முடிவடையலாம் என்பது எப்படி இயற்கையில் பட்டு விட்டதோ அதுபோல் இன்றைய மந்திரிகள் நிலையும் இருக்கிறது.

ஆதலால் இந்த “கொஞ்ச”கால வாழ்விற்குள்ளாக வேனும் ஏதாவது தக்க காரியம் செய்து மக்களுக்கு பயன் உண்டாக்க சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடவில்லை.

மந்திரிகள் செய்ய வேண்டியது

இன்று தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு உள்ள பெரும் குறை வரி அதிகமும் உத்தியோகக் குறைவும் என்பது தமிழ் மக்கள் யாவரும் ஒப்புக்கொண்ட விஷயம். காங்கிரசுக்கு வரியைப்பற்றி கவலை இல்லை என்பது உண்மையான விஷயம். ஏனென்றால் நம் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு பூமி சுடுகாட்டில் தான் உண்டே ஒழிய மற்றபடி நாட்டில் இருப்பது மிகவும் குறைந்த அளவேயாகும். ஆதலால் அவர்கள் வரி விஷயத்தை ஓட்டுபெறுவதற்கு மாத்திரம் ஓட்டர்களிடம் பேசுவதற்கு வரி குறைக்கிறோம் என்று ஏமாற்ற பயன்படுத்திக் கொள்வார்களே தவிர குறைய வேண்டுமென்று கவலைப்பட காரணமே இல்லை. உதாரணமாக சென்னை கார்ப்பரேஷனுக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வந்து 6 மாத காலமாகிறது. வரி போடுவதில் கவலையாக இருக்கிறார்களே தவிர எதைப் பிரமாதமாகக் குறைத்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.

மற்றும் காங்கிரஸ்காரர்கள் சட்டசபை தேர்தலில் அதிக மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றவுடன் தாங்களே மந்திரிகளாகி அரசாங்கத்தை நடத்தப்போகிறார்கள் என்கின்ற உறுதி ஏற்பட்டவுடன் காங்கிரஸ் பத்திரிக்கைகள் எழுதிய தலையங்கங்களைப் பார்த்தால் காங்கிரஸ்காரர்களின் புரட்டுகள் தாராளமாய் வெளியாகிவிடும்.

அதாவது “காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளானவுடன் வரிகள் குறைந்துவிடும் என்றும் வரிகள் இல்லாமல் போய்விடும் என்றும் அனேகர் கருதுகிறார்கள். பாமர மக்கள் மாத்திரம் அல்லாமல் படித்தவர்களும் அப்படியே கருதுகிறார்கள்; இது அறிவீனமாகும். வரியில்லாமல் சர்க்கார் நடக்காது” என்று எழுதினார்கள்.

மற்றும் “ஆனால் ஜஸ்டிஸ் காரர்கள் செய்ததைவிட சிறிது அதிகமான நன்மையை காங்கிரஸ்காரர்கள் செய்யக் கூடும். இவ்வளவுதான் முடியுமே ஒழிய வரி கஷ்டமே ஒழிந்து விடும் என்று கருதுவது முட்டாள் தனம்” என்றும் எழுதி இருக்கிறார்கள். ஆதாரம் வேண்டுமானால் மார்ச்சு 13ந் தேதி அல்லது 15ந் தேதி “ஜெயபாரதி”யும் மார்ச்சு முதல் வார “தினமணி”யும் “சுதேசமித்திர”னையும் பார்த்தால் விளங்கும்.

உத்தியோக விஷயத்தில் மாத்திரம் காங்கிரசுக்கு வெகு தைரியம் இருந்தது. மார்ச்சு N 30 நாளும் சர்க்கார் அதிகாரிகள் பார்ப்பனரல்லாத வக்கீல்களிடம் நடந்து கொண்ட ஆணவத்துக்கும் பேசிய அதிகப் பிரசங்கித்தனத்துக்கும் வக்கீல்களை கேட்டுப் பார்த்தால் தெரியும். மற்றும் பார்ப்பன மேலதிகாரிகள் பார்ப்பனரல்லாத குமஸ்தாக்களிடம் நடந்து கொண்ட கொடுமையை விசாரித்தாலும் தெரியும்.

ஆகையால் இவ்விரண்டு விஷயங்களிலும் இன்றைய அனாமத்மந்திரிகள் பார்ப்பனர்கள் போல் நடக்காமல் நிலவரியில், 100க்கு 25 வீதமாவது எப்படியாவது குறைத்து பாமர மக்களை திருப்தி செய்து விட்டு உத்தியோக முறையில் இப்போது இருக்கும் வகுப்பு வாரி வினியோக திட்டமாகிய 12ல் பார்ப்பனருக்கு 2 என்றிருப்பதை 16ல் பார்ப்பனருக்கு 2 என்று ஆக்கி மீதியை வினியோகிப்பதில் கூடுமானவரை ஜனசங்கை கணக்குப்படி பிரித்து திட்டம் ஏற்படுத்துவதுடன் இந்த விகிதாச்சாரம் சகல உத்தியோகங்களிலும் குறிப்பிட்ட சகல வகுப்புகளுக்கும் எண்ணிக்கை விகிதம் சரியாய் வரும்வரை அதிகப்படியாய் அனுபவிக்கும் வகுப்பாருக்கு உத்தியோகம் வழங்குவதை நிறுத்தி வைப்பது என்றும் செய்வதானால் இந்த மந்திரிகள் மக்களுக்கு நீதியும் ஒழுங்கும் செய்தவர்களாவார்கள். மக்கள் பாராட்டப் படுவதற்கும் உரியவர்களேயாவார்கள். இதை அநியாயம் என்றோ அக்கிரமம் என்றோ யார் தான் சொல்ல முடியும்? சென்ற மாதம் எஸ்.ஐ.ஆர். கம்பெனிக்காரர் 216 ஸ்தானங்கள் தேவை இருந்ததற்கு 6 ஸ்தானங்களே பார்ப்பனர்களுக்கு அளித்தார்கள். இதற்கு காரணம் என்னவெனில் ஏற்கனவே பார்ப்பனர்கள் ரயில் இலாக்காவில் ஏராளமான பேர்கள் அமர்ந்திருப்பதும் ரயிலுக்கு வருமானம் வருவதெல்லாம் 100க்கு 99 பாகம் பார்ப்பனரல்லாதார்களிடமிருந்தே வருவதுமாகும். இன்னமும் பல உத்தியோகங்களுக்கு விளம்பரம் செய்கையில் ஆதிதிராவிடர்களே வேண்டுமென்றும் முஸ்லீம்களே வேண்டுமென்றும் கிறிஸ்தவர்களே வேண்டுமென்றும் விளம்பரம் செய்வதின் காரணமெல்லாம் அந்த சமூகத்தார் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அவ்வுத்தியோகங்களில் இல்லை என்பதேயாகும். மற்றும் ஐ.சி.எஸ். இந்தியர்களுக்கு கொடுப்பது என்று ஏற்பட்டவுடன் அனேகமாய் எல்லோரும் பார்ப்பனர்களாகவே வந்து விட்டார்கள். அதிலும் பிரவேசித்து பார்ப்பனர்கள் 100க்கு 3 வீதம் வரும்வரை பார்ப்பனர்களை ஐ.சி.எஸ்-க்கு எடுக்காமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு சரியாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகையால் இப்போதைய மந்திரிகள் தங்களை பொது பிரதிநிதிகள் என்றோ நியாயம் செய்ய அப்பதவியை ஏற்றுக் கொண்டவர்கள் என்றோ உரிமை கொண்டாடிக்கொள்ள வேண்டுமானால் இம்மாதிரியான காரியங்களை செய்வதினால் தான் ஏற்படலாமே ஒழிய வீண் ஆடம்பரத்தாலோ அறிக்கைமேல் அறிக்கைகள் வெளியிடுவதாலேயோ எவ்வித பெருமையும் ஏற்பட்டு விடாது.

மற்றும் இம்மந்திரிகள் இக்காரியம் செய்யவேண்டுமென்று கருதினால் அரசாங்கமும் குறுக்கிடாதென்றே கருதுகிறோம். ஏனெனில் இம்மந்திரிகளை இந்தியா மந்திரியும் இந்தியா உதவி மந்திரியும் வைஸ்ராய் பிரபுவும் கவர்னர்களும் பாராட்டி இருப்பதோடு “நல்ல சந்தர்ப்பத்தில் உதவி செய்ததற்கு ஆக” நன்றி செலுத்துவதாகவும் வெளிப்படையாய் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் இம்மந்திரிகளின் இம்மாதிரி செய்கைகளை அரசாங்கத்தார் ஆதரித்தே தீருவார்கள் – ஆதலால் என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பதோடு இக்காரியங்கள் செய்த பிறகே இவர்கள் பொது மக்களின் பாராட்டுதலுக்கும் இம்மந்திரிகள் அருகராவார்கள் என்பதோடு இவர்களுடைய பெயரும் என்றென்றும் விளங்கும். மற்றபடி அதுவரை இம்மந்திரிகள் எந்தக் கட்சியாரிடமிருந்தும் சிறிது கூட ஆதரவு பெற அருகதையற்றவர்கள் என்று கூறுவோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 18.04.1937

You may also like...