நல்ல சந்தர்ப்பம் வீணாக்கப்பட்டது
காங்கிரஸ்காரர்கள் மந்திரி சபையை ஏற்று சீர்திருத்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதின் மூலம் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யக்கூடும் என்பதையும் கவர்னர்கள் தங்கள் விசேஷாதிகாரங்களைச் செலுத்துவதில்லை என்று வாக்குறுதி கொடுத்துவிட்டதினாலேயே காங்கிரஸ்காரர்கள் என்ன செய்ய முடிந்துவிடும் என்பதையும் காங்கிரஸ்காரர்களிடம் குடிகளின் நன்மைக்கு என்று அனுபவத்தில் செய்வதற்கு ஏதாவது கொள்கைகள் இருக்கிறதா என்றும் பார்ப்பதற்கு இருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வீணாகிவிட்டது.
அதாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்காமல் தப்பித்துக்கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கவலை கொண்டு பார்ப்பதாயிருந்தால் காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க முடியாமல் போனது பற்றி பார்ப்பனர்களுக்கு துக்கமும் பார்ப்பனரல்லாதாருக்கு மகிழ்ச்சியுமாய்த்தான் இருக்கும். இதன் உண்மை அறிய வேண்டியவர்கள் எந்த ஊரிலாவது அக்கிராஹார வழி நடந்து பார்த்தால் ஒவ்வொரு பார்ப்பனர் முகத்திலும் அன்று தாலியறுத்த விதவைக் களை ஜொலிப்பதைப் பார்க்கலாம். அது போலவே பார்ப்பனரல்லாதார் தெருக்களைப் பார்த்தால் பண்டிகை போல் காணப்படுவதும் விளங்கும். இக்காட்சி நமக்கு முக்கியமானதல்ல நமக்கு அனுகூலமானதுமல்ல.
பாமர மக்கள் பார்ப்பனத் தொல்லையில் இருந்தும் அவர்களது கூலிகளின் கூப்பாடுகளிலிருந்தும் விடுபடும்படியான ஒரு அரிய சந்தர்ப்பம் வீணாகி விட்டதே என்பதுதான் நமக்கு முக்கியமானதாகவும் வருத்தப்பட வேண்டியதாகவுமாகி விட்டது.
சென்னை மாகாண காங்கிரஸ் வாதிகள் எப்படியாவது தாங்கள் மந்திரிபதவி அடைந்து விடக்கூடும் என்று கருதியே எவ்வளவோ சிரமப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் சொன்ன பொய்க்கும் செய்த சூழ்ச்சிக்கும் பார்ப்பன அதிகாரிகள் நடந்து கொண்ட ஞாயமற்ற காரியத்துக்கும் அளவே இல்லை. கடைசியாக “காத்திருந்தவன் பெண்டை நேற்று வந்தவன் அடித்துக்கொண்டு போனான்” என்பதற்கிணங்க மந்திரி பதவிகளை ஏதோ அனாமத் நபர்கள் கைப்பற்றும் படியாக ஆகிவிட்டது. ஜனங்களுக்கும் பாமர மக்களுக்கும் பொறுப்பில்லாமல் சர்க்காருக்கு மாத்திரம் பொறுப்பானவர்கள் என்கின்ற நபர்களே கைப்பற்ற வேண்டியதாகி விட்டது. எப்படி எனில் இந்த மந்திரிகள் 6 பேரும் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு அவர்களுக்கு சுதாவில் எவ்வித திட்டமும் இல்லை என்று சொல்லத்தக்கவர்களாக இருக்கிறார்கள். இந்த மாதிரி மந்திரி சபை நீடித்திருக்குமானால் நமது போர் வளர்ந்து கொண்டே போகக்கூடியதாகி விடும். எப்படியாவது எல்லாக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இம்மந்திரி சபையை முறித்து காங்கிரஸ்காரர்களை மந்திரி பதவி ஏற்கச் செய்து அவர்களின் யோக்கியதை இன்னது என்பதை உலகுக்கு வெளிப்படுத்தி அவர்களது தொல்லையில் இருந்து நாட்டையும் மக்களையும் பூராவாய் விடுவிக்க வேண்டியது நமது கடமையாகும். அரசாங்கத்துக்கு இருந்துவரும் பொறுப்பற்றதும் விஸ்வாசமற்றதுமான தன்மையையும் ஒழிக்க மக்கள் பாடுபடவேண்டியது அவசியமாகும். குறிப்பாகக் கூற வேண்டுமானால் நமது அரசாங்கத்துக்கு நாணையமும் நன்றியும் இல்லையென்றே சொல்ல வேண்டும். பார்ப்பனர்களைவிட மிக மோசமான குணம் படைத்தவர்கள், சமயம்போல் பார்த்துக்கொள்கிறவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சமீப தேர்தலானது அவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்திருக்கிறது. அரசாங்க அதிகாரிகளும் சிப்பந்திகளும் 100க்கு 90 பேர்கள் தேர்தல் நாணையமாய் நடப்பதற்கு உதவி செய்யாமல் பாரபக்ஷத்திற்கே உதவி செய்திருக்கிறார்கள்.
இம்மாதிரி பார்ப்பன அதிகாரிகளும் சிப்பந்திகளும் நடந்து கொண்ட விஷயத்தைப்பற்றி அரசாங்கம் ஏன் என்று கூட கேட்கவில்லை. அதிலும் குறிப்பாக பார்ப்பன போலீசு நடந்து கொண்ட விஷயம் மிகமிக மோசமானதாக இருந்தது.
சர்க்கார் காரியதரிசிகள் ஜஸ்டிஸ் கòயை பரிகாசம் செய்வதிலேயே தாங்கள் நேரப்போக்கைக் கழித்தார்கள். சர்க்காருக்கு சிறிதாவது நன்றி விசுவாசம் அல்லது பொறுப்பு இருந்திருக்குமானால் தேர்தல் முடிவு இந்த மாதிரியாக ஏற்பட்டிருக்காது என்பதோடு காங்கிரசின் பேரால் சட்டசபைக்கு வந்த ஆட்களின் பெரும்பான்மை எண்ணிக்கை உள்ளவர்கள் இவ்வளவு மோசமான ஆட்களாக வந்திருக்க முடியாது. சட்டசபை பிரதிநிதித்துவம் என்பதும் ஒரு நாட்டின் பிரதிநிதித்துவம் என்பதும் இவ்வளவு மோசமான ஆட்களைக் கொண்டது என்று ஏற்படுமானால் இதன் குற்றம் சர்க்காரைச் சேர்ந்ததாகுமே தவிர மக்களைச் சேர்ந்ததாக ஆகாது.
பாமர மக்கள் ஏமாற்றுக்கும் சூழ்ச்சிக்கும் ஆளாகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டியது யோக்கியமான சர்க்கார் கடமையாகும். இதற்கு ஆக சர்க்கார் ஒரு காரியமும் செய்ததாகத் தெரியவில்லை.
தங்களுக்கு இருக்கும் ராணுவ பலத்தையும் ஏராளமான பணத்தை சம்பளமாக அள்ளிக்கொடுப்பதின் மூலம் அமர்த்திக் கொண்டிருக்கும் உத்தியோகஸ்தர்களின் அடிமைத் தனத்தையும் காவலாக வைத்து ஆளுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சியும் மற்றும் பல கட்சியும் தேர்தலில் தோல்வியுற்றதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் மற்ற கட்சிகளை யெல்லாம் சர்க்கார் அடிமைக்கட்சி என்றும் சர்க்காருக்கு அனுகூலமாய் நடந்து கொள்ளுகிறார்கள் என்றும் பழிகூறி செய்த விஷமப் பிரசாரம் என்பது சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்கிறோம். இதற்கு ஆக சர்க்கார் என்ன பரிகாரம் செய்தார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் தான் இருந்தார்கள்.
ஆதலால் இந்த சர்க்காரின் சாயம் வெளுக்க வேண்டியது மிகவும் அவசியமேயாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் செய்ய வேண்டியதெல்லாம் அரசியலில் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசாங்கத்துக்கும் மந்திரி சபைக்கும் உதவி செய்யக்கூடாது என்பதோடு சட்டசபை கூட்டம் கூட சந்தர்ப்பம் ஏற்பட்டால் கண்டிப்பாய் சர்க்காருக்கு எதிர்க்கட்சியாய் உட்கார வேண்டியதேயாகும். எப்படியாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்கும்படி செய்ய வேண்டும். இந்த இரண்டு காரியத்தின் மூலம்தான் இனி ஜஸ்டிஸ் கட்சி தலையெடுக்க முடியும். அதில்லாவிடில் கட்சியைக் கொஞ்ச காலத்துக்கு அடைத்து வைப்பதே மேல் என்று சொல்லுவோம்.
ஜஸ்டிஸ் சுயமரியாதை தோழர்கள் மந்திரிகள் வரவேற்புகளில் எங்கும் கலந்துகொள்ளக்கூடாது என்பது நமது விண்ணப்பமாகும். மந்திரிகள் வரவுக்கு காங்கிரஸ்காரர்கள் எங்காவது பஹிஷ்காரங்கள் நடத்தினால் அதை ஜஸ்டிஸ் சுயமரியாதை தோழர்கள் எந்த வகையிலும் தடுக்காமல் இருக்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.
ஏனெனில் மந்திரிகள் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் அல்ல வென்பதை பொது ஜனங்கள் அறியும்படியாய்ச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். இல்லாதவரை அது ஜஸ்டிஸ் கட்சியின் எதிர்கால வேலைக்கு தொல்லையாக வந்து சேரும் என்பதை எச்சரிக்கை செய்கிறோம். இதிலிருந்து காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் சுயமரியாதை கட்சிகளுக்கும் உள்ள நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது. காங்கிரசானது இன்றைய நிலையில் ஜஸ்டிஸ் கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் விரோதமாகவே இருந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு காங்கிரஸ் எதிரியாகவே இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் சமூக சீர்திருத்த முறைகளுக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு முறைகளுக்கும் வர்ணாச்சிரம முறை ஒழிப்பு முறைகளுக்கும் காங்கிரஸ் நேர் விரோதமானதேயாகும். ஆதலால் இந்த முறைகளில் நாம் வெற்றி பெறும் வரையிலுமோ அல்லது காங்கிரஸ் தனது எதிர்ப்பை மாற்றிக்கொள்ளும் வரையிலுமோ காங்கிரசு நமக்கு எதிர் ஸ்தாபனமேயாகும். காங்கிரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதையும் காங்கிரசின் பித்தலாட்டங்களை வெளிப்படுத்துவதையும் நாம் எந்தக் காரணம் கொண்டும் நிறுத்திக்கொள்ள முடியாது என்பதை வாசகர்கள் உணரவேண்டுமாய் ஆசைப்படுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியானது இந்த அனாமத் மந்திரிகளை ஆதரிக்கிறது என்று ஏற்படுமானால் சுயமரியாதைக்காரர்கள் தங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள சம்மந்தத்தை திருத்தி அமைப்பதைப்பற்றி யோசிக்க வேண்டியவர்களாவார்கள்.
குடி அரசு – தலையங்கம் – 04.04.1937