காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும்
– “ஜஸ்டிஸ்” எழுதுவது
தோழர் சி.ஆர். ரெட்டி அவர்களிடம் நமக்கு அனுதாபம் இல்லை. அவரும் நமது அனுதாபத்துக்கு உரியவரல்ல. ஆனால் அவரால் வெளிப்படுத்தப்பட்ட கடிதப்போக்குவரத்தானது காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதாரின் கதியை நிச்சயிக்க மிகவும் முக்கியமான ஆதாரமாகும்.
நாம் வெகு காலமாகவே அதாவது நமது கட்சி ஆரம்பித்த காலம் முதல்கொண்டே நமது நாட்டில் பார்ப்பனர்கள் “தேசீயம்” “தேசாபிமானம்” “சுதந்திரப்போர்” என்று கூப்பாடு போட்டு வந்ததெல்லாம் பார்ப்பன சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அச்சமூகம் மற்ற சமூகத்தை அடக்கி ஆள்வதற்கும் மற்ற வகுப்பார் சமீப காலமாக அரசியலிலும் சமூகத்துறையிலும் அடைந்து வரும் நலங்களை ஒழித்து பழய பார்ப்பனீய ஆட்சியை ஏற்படுத்தவும் தானே ஒழிய வேறில்லை என்று கூறி வந்திருக்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியானது பார்ப்பனர்களின் இவ்வெண்ணங்கள் நிறைவேறாமலிருக்கும்படியும் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையை அழித்து அவர்களது ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுதலை அடையும்படியும் தன்னால் ஆனதையெல்லாம் செய்து வந்திருக்கிறது என்றாலும் அதற்கு பார்ப்பனரல்லாத மக்கள் போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து வரவில்லை. ஆகையால் தோழர் சி.ஆர்.ரெட்டி போன்ற மேதாவிகளும் நாட்டை நடத்தத் தக்க திறமைசாலிகளும் இம்மாதிரி பார்ப்பனர்களால் புறக்கணிக்கப்பட்டதும் வஞ்சிக்கப்பட்டதும் மிகவும் அவசியமானதும் தகுதியுடையதுமேயாகும்.
பார்ப்பனர்கள் வகுப்பு பூராவும் சூழ்ச்சிக்கும் தந்திரத்துக்கும் மிகவும் பேர்போன கெட்டிக்காரர்கள் என்பதும் பார்ப்பனரல்லாதார் வகுப்பு பூராவும் அதை பார்த்துக்கொண்டும் பார்ப்பன சூழ்ச்சியினுடையவும் தந்திரத்தினுடையவும் வஞ்சகத்தினுடையவும் சகல கெடுதிகளையும் அனுபவித்துக்கொண்டும் இருப்பதோடு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் தொண்டுகள் எல்லாம் பார்ப்பன ஆதிக்கத்திற்கே பயன்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்டும் இருக்கிறவர்களாய் இருக்கிறார்கள். மேலும் என்ன காரணத்தால் இவர்கள் காங்கிரசில் இன்னமும் இருந்து கொண்டு இருக்க வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
அது எப்படியோ போகட்டும். தோழர் சி.ஆர். ரெட்டியாரின் நிலைமையை சற்று கவனிப்போம். சென்னை காங்கிரசைப் பொறுத்தவரை தோழர் ரெட்டியாரின் அறிவுக்கும் திறமைக்கும் ஒப்பிடக்கூடியவர் வேறு ஒருவர் இருக்கிறார் என்று சொல்லமுடியாது. இது தோழர் ரெட்டியாருக்கும் தெரியும். இந்தக் காரணத்தினாலேயே மந்திரி பதவியான தகுதியையும் திறமையையும் புத்தியையும் கவனித்து தன் பாதத்தில் வந்து விழுகும் என்று கருதினார். பார்ப்பனரல்லாதாருக்கு புத்திசாலித்தனமும் கெட்டிக்காரத்தனமும் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் காங்கிரசுக்கு தகுதி அற்றவர்கள் என்று பார்ப்பனர்கள் செய்து கொண்டிருக்கும் தடைவிதி தோழர் ரெட்டியாருக்கு தெரியாமல் போய்விட்டது போலும். பார்ப்பனத் தலைவர்கள் பார்ப்பனரல்லாதார்களில் புத்தியும் திறமையும் யோக்கியதையும் உள்ளவர்களை ஏற்கமாட்டார்கள் என்பதும் ரெட்டியாருக்கு இதுவரை தெரியாமல் போய்விட்டது.
அப்படி இல்லையானல் தோழர் ரெட்டியாரை ஏன் காங்கிரசு தலைவர்கள் சட்டசபை தேர்தலுக்கு நிறுத்தவில்லை? தோழர் ரெட்டியார் உள்ளூர் அதாவது அந்த ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராய் இருந்திருக்கிறார், ஜஸ்டிஸ் கòயை வைவதற்கு ஆக தோழர் ரெட்டியாரின் முழு சேவையையும் காங்கிரசே உபயோகப்படுத்திக் கொண்டும் வந்திருக்கிறது.
அப்படிப்பட்ட ஒருவரை அதாவது தகுதி, அறிவு, திறமை ஆகியவை கொண்டவரும், காங்கிரசுக் கமிட்டிக்குத் தலைவரும் பொதுத் தலைவர் களில் ஒருவராய் கருதப்பட்டு வந்தவரும் எதிரிகளை வைவதற்கு மிகவும் உற்சாகமாகவும் உரிமையாகவும் உபயோகப்படுத்திக்கொள்ளப்பட்டவரும் ஆன தோழர் ரெட்டியாரை ஏன் சட்டசபை ஸ்தானங்கள் ஒன்றிற்கு நிறுத்தப்பட்ட வில்லை என்பதற்குக் காரணம் வேண்டாமா என்று கேட்கின்றோம். தோழர் ரெட்டியார் விண்ணப்பம் போடவில்லை என்பது ஒரு குற்றமானால், அபேக்ஷகர்களை பொறுக்கி எடுக்கும் சபை அவரை தெரிந்தெடுக்க என்ன ஆட்சேபம் குறுக்கே இருந்தது என்பது தெரியவில்லை. அன்றியும் தோழர் சி. ராஜகோபலாச்சாரியார் விண்ணப்பம் போடாமலும் “இனிமேல் காங்கிரஸ் கமிட்டிகளில் யாதொரு சம்பந்தமும் வைத்துக் கொள்வதில்லை” என்று விளம்பரப்படுத்திவிட்டும் வெளியில் இருந்த பொழுதும் அவரைப்போய் எல்லோரும் கெஞ்சவும் அவர் ஒப்புக்கொண்டது ஒரு பெரிய தயவாகவும் கருதியவர்கள் தோழர் சி.ஆர்.ரெட்டியார் விஷயத்தில் ஏன் அவரை தெரிந்தெடுக்கவில்லை? என்பதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
ஒவ்வொருவரும் விண்ணப்பம் போட்டுத்தான் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்ற சட்டம் காங்கிரசில் இருந்திருக்குமானால் எல்லோர் விஷயத்திலும் அப்படியே நடந்திருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் தகுதி உடையவர்களை கேட்டுக்கொள்ளுவது என்று இருக்குமானால் மற்ற அநேகரை கேட்டது போலவே தோழர் ரெட்டியாரையும் கேட்டு விண்ணப்பம் போடச்சொல்லியாவது இருக்க வேண்டும்.
11ந் தேதி “ஹிந்து” பத்திரிகை விசாகப்பட்டினக் காங்கிரஸ் கமிட்டியில் தலைவருடைய பதிலையும் ஒரு நிருபருடைய செய்தியையும் வெளியிட்டிருக்கிறது. அவைகளைப் பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் தோழர் ரெட்டியாரை அஜாக்கிரதையாகவோ அல்லது தவறுதலாகவோ இக்காரியத்தை செய்ததாக நினைப்பதற்கு இல்லை. அதற்கு மாறாக வேண்டுமென்றே காங்கிரஸ் அங்கத்தினர் லிஸ்டிலிருந்து விலக்கியதாக கருத இடமிருக்கிறது. தோழர் ரெட்டியார் தன்னை காங்கிரஸ்காரர்கள் என்னமோ பகிஷ்கரித்து விட்டார்கள் என்று நினைக்கக்கூடும். ஆனால் நன்கு பரிசீலனை செய்தால் அவரை விலக்கியது வேண்டுமென்றே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதற்கு ஒப்பாகும். ஏன் இவ்வாறு செய்தார்கள் என்றால், தோழர் ரெட்டியார் முதன் மந்திரி ஸ்தானத்திற்கு தோழர் ஆச்சாரியாருடன் போட்டி போடுவார் என்ற ஒரே எண்ணத்தால் தான் என்று சொல்ல வேண்டும். ஆரம்பத்திலே ஒரு சிறு தவறிழைத்தால் பின்னால் பல ஆபத்துகளுக்கு ஆளாக வேண்டுமென்று கருதியும் தங்கள் சமூகமாகிய பிராமண சமூகத்தின் நன்மையை நாடியுமே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகிய தலைவர் ரெட்டியாரை தியாகஞ்செய்து விட்டார்கள். ஏன்? அவர் பார்ப்பனரல்லாதாரானால் தோழர் வல்லபாய்பட்டேல் சொன்னபடி “தந்திரமுள்ள அரசியல் வாதி”யாகிய தோழர் ராஜகோபாலாச்சாரியாரை அவருக்குப் பதிலாகத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். பிராமண முதன் மந்திரியாயிருந்தால் அவர்களுடைய (பிராமண சமூகத்தாருடைய) வாழ்க்கையானது சரியாகப் பாதுகாக்கப்படும் எனக் கருதியே இச்சதி செய்திருக்கிறார்கள்.
ஆகவே சென்னையில் சர்வாதிகாரர்களாக விளங்கும் கும்பல்கள், சுயமரியாதையும், சுயபுத்தியும் கொண்ட காங்கிரஸ் பார்ப்பனரல்லாத தோழர்களாகிய சி.ஆர். ரெட்டியார், டாக்டர் பி. வரதராஜúலு போன்ற தலைவர்களை காங்கிரசிற்கு புறம்பே நிறுத்தினதோடுமட்டுமல்லாமல் அசம்பளியில் பார்ப்பனர் தொகையையும் அதிகரிக்கச் செய்து கொண்டனர். இதற்கு முன் சட்டசபையில் வீற்றிருந்த பிராமண அங்கத்தினர் தொகையையும் இப்பொழுது அச்சட்டசபைக்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அங்கங்களின் தொகையையும் பார்த்தால் வகுப்பு விகிதாச்சாரப்படி எந்த வகுப்பாரும் இவ்வளவதிகமான அங்கங்களை பெறவில்லை யென்று நன்கு விளங்கும். ஏனெனில் ச ட்ட சபைக்கு தமிழ் நாட்டில் பொதுத் தொகுதியில் 23 பிராமணர்களும் 50 பிராமணரல்லாதாரும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். ஆந்திர நாட்டில் 20 பிராமணர்களும் 28 பிராமணரல்லாதாரும் அங்கம் பெற்றிருக்கின்றனர். அதேவிதமாக மேல் சபைக்கு தமிழ்நாட்டில் 5 பிராமணர்களும் 5 பிராமணரல்லாதாரும் ஆந்திர தேசத்தில் 7 பிராமணரல்லாதாரும் 5 பிராமணர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். ஆக கீழ் சபையில் செல்வாக்கு மிகுந்த 53 பிராமணர்களும் 106 பிராமணரல்லாதாரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்கள். மேல் சபையில் 12 பிராமணர்களும் 14 பிராமணரல்லாதாரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 100-க்கு 3 வீதம் ஜனசங்கிகையுள்ள பிராமண சமூகம் அசம்பிளியில் 100-க்கு 50 வீதம் சரி பகுதி ஸ்தானங்களைப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
இந்த கணக்கு விகிதங்களை பொது மக்களுக்கு ஏன் எடுத்துக் காட்டுகிறோமென்றால் காங்கிரஸ் போர்வையை மூடிக்கொண்டு வகுப்புவாதம் எவ்வளவு தூரத்திற்கு பெரிய பாதகத்தை விளைவிக்கக் கூடியதாக நடந்து வருகிறது என்பதோடு காங்கிரசில் உள்ள பிராமணரல்லாத தோழர்கள் விழித்துக் கொண்டு மக்களின் பொது நலத்திற்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமையை எச்சரிப்பதற்காகவேயாகும். காங்கிரசின் பேரால் வெற்றி பெற்றவர்களில் பெரும்பான்மையோர் சுயநல யதேச்சாதிகாரிகளாக விளங்கும் கும்பல்களுக்கு கட்டுப்பட்ட அடிமைகள் என்பது நமக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் சிலர் சுத்த இரத்தமும், சுயமரியாதையும், சுயபுத்தியும், சுயேச்சைத் தன்மையும் உடையவர்கள் இல்லாமலில்லை. அத்தகையவர்கள் பிராமணர் யதேச்சாதிகாரத்தை தலையெடுக்க வொட்டாமல் அழிக்க வேண்டுமென்பதுதான் எங்களுடைய விருப்பம். வெகு சீக்கிரத்தில் காங்கிரஸ் கட்சி மந்திரி பதவி, செக்ரட்டரி பதவி, தலைவர் பதவி முதலானவைகளை பங்கு போடப் போகிறார்கள். தோழர் ஆச்சாரியார் தம்முடைய சமூகத்தாருக்கு எத்தனை ஸ்தானங்கள் கிடைக்க வேண்டுமோ அத்தனையும் கிடைக்க வழி செய்வதில் ஒரு நாளும் மறந்துவிட மாட்டார். இது சமயத்தில் பார்ப்பனரல்லாதார் உறுதியாக நின்று தங்கள் கடமையை ஆற்றுவார்களேயானால் உண்மையிலே அவர்கள் நாட்டிற்கு பெரிய பணி செய்தவர்களாவார்கள். நம்மைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியிலிருந்தாவது பார்ப்பனரல்லாதார்கள் முன்னேற்றமடைந்தால் அதுவே நமக்கு மிகுந்த திருப்தியளிப்பதாகும்.
குடி அரசு – கட்டுரை – 14.03.1937