முஸ்லீம் ஜட்ஜி
சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு முஸ்லீம் ஜட்ஜியை நியமித்திருக் கிறார்கள். ஹைகோர்ட் மூடி திறக்கப்பட்டவுடன் உத்தியோகத்தை ஏற்றுக்கொள்ளுவார். சர். அப்துல் ரகீமுக்குப் பின் சுமார் 20-வருஷ காலமாக சென்னை ஹைகோர்ட்டுக்கு முஸ்லீம் ஜட்ஜி நியமிக்கப்படவே இல்லை. சுமார் 20-வருஷம் பொறுத்து இப்போதுதான் சர். அப்துல் ரஹிமான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது கேட்கப்பட்ட பின்பும் குறிப்பாக முஸ்லீம்கள் முஸ்லீம் லீக் ஆரம்பித்து அதன் மூலம் தாங்கள் சமூக உரிமைகளை வலியுறுத்த ஆரம்பித்த பிறகும் தான் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் அல்லாமல் இந்தியா எங்கும் முஸ்லீம்கள் அரசியலில் உரிமை பெற்று ஹைகோர்ட் ஜட்ஜி கவர்னர் முதலிய பதவிகள் பெற்று அதன் மூலம் நாட்டுக்கும் அச்சமூகத்திற்கும் சேவை செய்யும் சந்தர்ப்பம் பெறவும் தகுதி உள்ளவர்கள் பயன்பெறவும் சவுகரியம் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.
வகுப்பு உரிமை தேசீயத்துக்கு விரோதமென்றும் வகுப்பு உரிமையை ஒழித்தாலொழிய தேசீயம் உருப்படாதென்றும் பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகிறார்கள். காங்கிரசையும் வகுப்பு உரிமை எதிர்ப்புச் சங்கமாக ஆக்கிவிட்டார்கள்.
சிலர் அதாவது வகுப்புரிமையால் பயன்பெற முடியாத அடிவண்டல்களும், பார்ப்பன புகழ்ச்சியில் மயங்கின முடங்களும், ஆழ்ந்து அறிய முடியாதவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி வகுப்புரிமையை எதிர்த்து சொந்தத்தில் பயன் பெற்று வருகிறார்கள் என்றாலும் இவர்கள் சீக்கிரம் புத்தி கற்றுக்கொண்டு வகுப்புரிமைக்கு வாதாட வரிந்து கட்டிக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
குடி அரசு – கட்டுரை – 14.03.1937