எதிர்பாராத அபாயம்
ஈரோடு முனிசிபல் வாரச் சந்தை நடைபெறும் பேட்டையில் 10 அடி அகலத்தில் 200 அடி நீளத்தில் சில்லறை வியாபாரிகளுக்காக ஓட்டுக் கொட்டகை போடுவதற்கான வேலைகள் ஆரம்பித்து வேலை நடந்து கொண்டிருந்ததானது 21-4-37ந்தேதி தூண் நிறுத்தி வெட்டுக்கை போட்டு ரீப்பர் அடித்து ஓடுகள் மேலேற்றி மேயாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22-4-37ந் தேதி சந்தை கூட வேண்டிய நாள் ஆனதால் அன்று வழக்கம் போல் சந்தை கூடியது.
அன்று மாலை 5 மணிக்குப் பெரிய காற்றும் மழையும் வந்ததால் மேல் குறிப்பிட்ட சரிவர முடிவடையாத கொட்டகையின் கீழ் ஜனங்கள் போய் தங்கினார்கள். பூரா வேலை முடியாமல் ஒருபுறம் ஓடு பாரம் ஏற்றப்பட்டு மறுபுறம் பாரமில்லாமல் இருந்த கொட்டகை காற்றினால் சாய்ந்து விட்டது. அது சமயம் அதற்குள் இருந்த ஜனங்கள் அதில் அகப்பட்டுக்கொண்டார்கள். இதன் பயனாய் சுமார் 150 பேர்களுக்கு மேல் பலத்த காயமடைய வேண்டியதாகிவிட்டது. காயமடைந்தவர்களுக்கு முனிசிபல் கமிஷனரும், பொதுஜனங்களும், இவ்வூரில் சர்க்கஸ் நடத்திவந்த சர்க்கஸ்காரர்களும், முனிசிப்பல் சிப்பந்திகளும், போலீஸ்காரர்களும், ரெவரண்ட் எச்.எ. பாப்பிலி அவர்களும் உதவி செய்து அவர்களை கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கு காயமடைந்தவர்களுக்கு கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி டாக்டரும், மற்றும் ஈரோட்டிலுள்ள சில சொந்த டாக்டர்களும் வேண்டிய சிகிச்சை செய்தார்கள். காயமடைந்தவர்களில் சுமார் 15 பேர்கள் இறந்து விட்டார்கள்.
இந்த சம்பவத்தை காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் பத்திரிகைகளும் தப்பும் தவறுமாய் விஷமப்பிரசாரம் செய்து எலக்ஷனுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் இழிதகைமையான காரியம் செய்கிறார்கள்.
உதாரணமாக “சுதேசமித்திரன்” 23ந்தேதி பத்திரிகையில் நமது நிருபர் என்னும் பேரால் இழிவான பொய்கள் கூறப்பட்டிருக்கின்றன.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது:-
“200 அடி நீளத்துக்கு ஓட்டுக்கொட்டகை போட்டு ஒரு வாரம்தான் ஆகின்றது என்றும், “20 பேர்கள் அங்கேயே இறந்து விட்டார்கள்” என்றும், “கொட்டகை விழுந்ததற்கு காரணம் தெரியவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உண்மையில் கொட்டகை வேலை முடியாமல் இருந்திருக்கிறது. மழை காற்றுக்கு பயந்து மக்கள் அவசரத்தில் அதில் போய் ஒண்டி அனாமத்தாய் நிற்கும் தூண்களில் சாய்ந்ததும் கூரையின் மேல் ஒரு பக்கம் ஓடுகள் குவிக்கப்பட்டு மறு பக்கம் பாரமில்லாமல் இருந்தது காற்றுக்கு அனுகூலமாய் மக்கள் தூண்களில் சாய்ந்து இருந்ததும் சேர்த்து சுலபத்தில் கொட்டகையை சாயும்படி செய்துவிட்டதால் ஓடு குவிக்கப்பட்டிருந்த கூரைக்கு கீழ் இருந்தவர்களுக்கு பலமான அடியும் ஆபத்தும் ஏற்பட்டன. இது பரிதபிக்கத்தக்க விஷயம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஆனால் கொட்டகை முடிந்தது ஒருவாரமாயிற்று என்று எழுதினால் இது பலவீனமாகும். கொட்டகையால் ஏற்பட்டது என்று கருதவும் முனிசிபல் சிப்பந்திகள், கண்டிறாக்டர்கள், நிர்வாகிகள் ஆகியவர்களை குறை கூறவும் இடம் ஏற்பட கூடியதாய் இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறோம். இந்த மாதிரி விஷமப் பிரசாரத்தால் பாமர மக்களை ஏய்க்கும் இழி குணமானது ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இதுவரை அடிப்படையில் ஏமாற்றமும் தோல்வியுமே கொடுத்து வந்திருப்பதை ஞாபக மூட்டி இதை முடிக்கிறோம்.
நிற்க, அடிபட்டவர்களுக்கு கமிஷனர், சேர்மென், கவுன்சிலர்கள் ஆகியவர்களோடு பொதுஜன தொண்டர்களும் டாக்டரும் மற்றும் அதிகாரிகளும் மிஷனரிகளும் தங்களால் கூடிய உதவி செய்து ஆதரித்து வருகிறார்கள். பார்ப்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் சில டாக்டர்களும் இதையே ஒரு சாக்காக வைத்து ஆஸ்பத்திரியில் போய் எலக்ஷன் பிரசாரம் செய்ததால் போலீசு அதிகாரிகளும் டாக்டர்களும் மக்களையும், காங்கிரஸ்காரர்களையும் தாராளமாய் அனுமதித்து வந்ததை நிறுத்தி கண்டிப்பு செய்து விட்டார்கள்.
முனிசிபல் கெளன்சிலர் தோழர் எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் ஆஸ்பத்திரிக்குச் சென்று அடிபட்டவர்களைப் பார்த்துவிட்டு வந்தார்.
குடி அரசு – செய்திக் கட்டுரை – 25.04.1937