ஜோலார்ப்பேட்டையில் மகுடாபிஷேகம், பள்ளிக்கூட ஆண்டு விழா, வரதராஜ முதலியார் படத் திறப்பு விழா

 

தலைவரவர்களே! தோழர்களே!

உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறும் படியான இந்த முக்கியமான நாளில் எனது அன்பிற்குரிய தோழர் வி. பார்த்தசாரதி அவர்களது தந்தையாரும் எனது மதிப்பிற்குரிய நண்பருமான காலம் சென்ற வரதராஜ முதலியார் அவர்களது உருவப்படத்தை இந்தப் பள்ளியில் அலங்கரிக்கும் பெருமையை பெற்றதற்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

இம்மாதிரியான உருவப்படங்களை வைப்பது என்பது பூஜைக்கு ஆகவோ பக்திக்கு ஆக நமது குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு ஆகவோ மோக்ஷமடைய ஒரு சுருக்கமான வழியை கடைப்பிடிப்பதற்கு ஆகவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மற்றென்னவென்றால் நம்மால் பாராட்டக் கூடியதும் நாம் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும்படியானதுமான பல அரும்பெரும் காரியங்களைச் செய்தவரும் பல அருங்குணங்கள் படைத்தவரும் என்று நாம் கருதும் திவ்விய புருஷர்களது உருவங்கள், பெயர்கள், நடத்தைகள் ஆகியவைகள் நம் முன் தோன்றும் போதெல்லாம் நம் ஞாபகத்துக்கு வரும்போதெல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாகவும் வழிகாட்டியாகவும் நம்பிக்கை தரத்தக்க ஊக்க மூட்டக்கூடியதாகவும் இருக்கும் என்று கருதியே நாம் அப்படிச் செய்து வருகிறோம். ஞாபகக்குறிப்பு உருவங்களுக்கும் ஆராதனை உருவங்களுக்கும் கருத்தில் பெருவாரியான வித்தியாசமுண்டு. ஆகையால் இப்படத்திறப்பு என்பது விக்கிரக ஆராதனைக் கருத்துடையதல்ல என்பதை முதலில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இந்த திருவுருவத்தை இப்பள்ளியில் அலங்கரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இக்காரியத்தைச் செய்ய அனுமதியளிக்கப்பட்ட நான் இக்காரியத்தைச் செய்யுமுன் தோழர் வரதராஜ முதலியார் அவர்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை சொல்லித் தொண்டாற்றுவது பொருத்த மானதெனக் கருதுவதால் நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வரதராஜ முதலியார்

தோழர் வரதராஜ முதலியார் அவர்கள் எனக்கு 10 வருஷங்களுக்கு மேல் தெரிந்தவராவார். அவர் மிக்க ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறு வயதில் கட்டிட வேலையில் தினம் அரையணா, முக்காலணா கூலிக்கு வேலை செய்தவர். அதிலிருந்து ரயிலில் கீழ்த்தர சிப்பந்தியாய் இருந்து அதையும் விட்டு காளவாய் வைத்து கொல்லத்துக்காரராகி சிறு கண்டிறாக்டராகி கடைசியாக பல லக்ஷத்துக்கு அதிபராகி மறைந்தவர். அவரது வாழ்நாளில் ஏழைகளிடத்தில் அதிக கருணை உடையவர். சாப்பாடு போடுவதில் சலிப்படையாதவர். மிக்க மத நம்பிக்கையும் பக்தியும் புராண மரியாதையும் உடையவர். அவர் கட்டின கோவில்கள் இதோ தெரிகின்றன. அப்படி எல்லாம் இருத்தாலும் என்னிடத்தில் அவருக்கு அதிக மரியாதையும் குடி அரசு பத்திரிகை இடத்தில் அதிக விசுவாசமும் உடையவர். சுமார் 10 வருஷத்துக்கு முன் திருப்பத்தூரில் என்னுடைய ஒரு பிரசங்கத்தை கேட்டார். அதில் அவர் மனம் மாறுதலடைந்தது எனக் கண்ட எனது நண்பர் ஒருவர் அவரை என்னிடம் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். உடனே தனது ஊருக்கு வரவேண்டுமென அழைத்தார். இரண்டொரு உபன்யாசம் நடத்தி வைத்தார். அடிக்கடி வந்து போக ஆசைப்பட்டார். பிறகு அவருடைய தருமங்கள் கோவில்களுக்கும் பாகவதர்களுக்கும், சன்னியாசிகளுக்குமாகப் போய்க்கொண்டிருந்ததானது மாறி இம்மாதிரி பள்ளிக்கூடங்களுக்கு பயன்படுத்தப்படுவதாயிற்று. அவர் அவ்வளவு பெரிய லக்ஷாதிபதியாய் இருந்தும் தன் ஆதி நிலையே அவருக்கு சகல நடவடிக்கைகளிலும் முன்னால் நிற்குமே ஒழிய ஆடம்பரமோ மமதையோ சிறிதும் அவரிடம் காணவில்லை.

இவரது சரித்திரத்திலிருந்து பெரியோர்களும் செல்வவான்களும் அறிவாளிகளும் நல்ல உள்ளமுடையவர்களும் பிறவியில் ஏற்பட வேண்டும் என்கின்ற வருண தர்மம் அடியோடு பொய் என்று உணர முடிந்தது. சட்டத்தின் மூலமாகவும் மத சமுதாய முறைப்படியும் சில விஷயங்களில் இருந்துவரும் நிர்பந்தம் தவிர மற்றபடி இயற்கையில் மனிதனுடைய முயற்சியும் சம்பவங்களுமே மக்களை நியமிக்கின்றன. ஆதலால் வரதராஜ முதலியார் அவர்கள் உருவப்படத்தை இந்த மாதிரி பள்ளிக்கூடங்களில் வைக்க ஏற்பாடு செய்ததானது உபாத்தியாயர் களினுடையவும் ஜில்லா போர்டார்களுடையவும் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதோடு அது மிகவும் பாராட்டத்தக்கதுமாகும். ஏனெனில் அவரது உருவப்படத்தைப் பார்த்து அவரது சரித்திரத்தை ஞாபகப் படுத்திக்கொள்ளும் மாணாக்கன் ஒவ்வொருவனுக்கும் தான் பெரிய செல்வவானாக பிறக்கவில்லையே என்கின்ற கவலையும் தனக்கு பெரிய பதவி, உத்தியோகம் கிடைக்க வேண்டுமே என்கின்ற பேராசையும் சிறிதுகூட ஏற்பட இடமிருக்காது என்பதோடு பணம், பதவி இல்லாமலே பெரியாராகலாம் என்கின்ற நம்பிக்கையும் ஊக்கமும் ஏற்படக்கூடும். ஆகையால் இந்தப் பெருமையான தொண்டை இந்த மகத்தான நாளில் ஆற்றும் பெருமையை எனக்களித்ததற்கு ஆக எனது மனமார்ந்த நன்றியை உங்கள் எல்லோருக்கும் அளித்துவிட்டு இவ்வுருவப் படத்தின் திரையை நீக்குகிறேன்.

குறிப்பு: 12.05.1937 ஆம் நாள் ஜோலார் பேட்டை வரதராஜ முதலியார் போர்டு ஹையர் எலிமெண்டரி பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 16.05.1937

You may also like...