நான் காங்கிரசில் இருந்தால் என்ன ஆகிவிடும்?

 

 

செருப்பு ஆண்ட நாடு இது!

காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் சொத்தே

பார்ப்பனரல்லாத தியாகிகள் எங்கே

தோழர்களே!

தோழர் விஸ்வநாதம் அவர்கள் பேசியதைக் கேட்டீர்கள். அது விஷயமாகவே நானும் பேசவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். அரசியல், சமூக இயல், சுயமரியாதை இயல் என்பவை எல்லாம் ஒன்றே ஒழிய இவை தனித்தனியாக பிரிக்கக்கூடியதல்ல. இவை ஒன்றை விட்டு ஒன்று தனித்து நிற்க கூடியதுமல்ல. சமூகத்துக்கு ஆகத்தான் அரசியலும் சுயமரியாதை இயலும் இருந்து வருகிறது. சமூகத்தை நீக்கி விட்டால் மற்ற இரண்டுக்கும் வேலையே இல்லை. சமூகத்தின் தேவைக்கு ஆகத்தான் அரசியல் ஏற்பட்டதே ஒழிய சமூக சம்பந்தமில்லாவிட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும் சமூக இயலையும் பிரித்துக்காட்டுவதானது சமூக குறைபாடுகளை – சமுதாயக் கொடுமைகளை பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர் களுடைய சூழ்ச்சியேயாகும்.

நமது நாட்டில்தான் அரசியலும் சமுதாய இயலும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத மாதிரியில் பிரிக்கப்பட்டும் பிரிவினையாகப் பேசப்பட்டும் வருகிறது.

உதாரணமாக நம் நாட்டில் காங்கிரஸ்காரர்களால் சமூக சீர்திருத்த சங்கங்களும் “அரிஜன” சேவை சங்கமும், கிராமப் புனருத்தாரண வேலை சங்கமும் போன்ற தனி சங்கமும் முயற்சியும் அரசியலில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணம் என்னவென்றால் சமூக சீர்திருத்தம் அரசியலில் கலந்திருந்தால் பழமை விரும்பிகள் அதாவது எதாப்பிரியன்மார்கள், வர்ணாச்சிரமிகள், பார்ப்பனர்கள், மதவாதிகள் சேரமாட்டார்கள். ஹரிஜனசேவை என்பதை அரசியலில் சேர்த்துக்கொண்டால் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழித்து விடுவார்கள். உண்மையான கிராமப் புனருத்தாரண வேலை என்பதை அரசியலில் சேர்த்தால் பணக்காரர்கள் சேரமாட்டார்கள். இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் பேசாவிட்டால் பாமர மக்கள் ஏமாறமாட்டார்கள். ஆதலால் அரசியலின் பேரால் பிழைக்க – வாழ்க்கை நடத்த – பெருமை பெற கருதும் ஒரு கூட்ட மக்கள் இம்மாதிரி இயல்களைப் பிரித்து பொது ஜனங்களை ஏமாற்றக் கண்டு பிடித்த முறையேயாகும் இது. மனித சமூகத்துக்கு விடுதலையோ “சுயராஜ்ஜிய”மோ அளிப்பதற்கு ஆக அரசியல் இருக்கிறதாக இருந்தால் சமூக சீர்திருத்தமும் ஜாதிக் கட்டுப்பாடும் ஜாதி அடிமைத்தன்மையும் கிராமவாசிகள் கொடுமையும் விலக்கப்படத்தக்க கொள்கைகள் – திட்டங்கள் இல்லாமல் வேறு எதைச் செய்ய சுயராஜ்யம்? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தக் குறைகள் அரசியலோடு சேர்க்கப்படாமல் அரசியல் சட்டங்களின் மூலம் நிவர்த்திக்க ஒப்புக்கொள்ளாமல் பிரித்து வைத்துக் கொண்டால் எந்த வழியில் நிவர்த்தி அடையக்கூடும்? என்று கேட்கிறேன். அல்லது இந்த கொடுமைகளும் குறைகளும் நீங்கத்தான் அரசியல் திட்டம் என்று சொல்லிவிட்டால் அவற்றை ஏன் அரசியலில் சேர்த்துக்கொள்ளக்கூடாது? சேர்த்தால் அரசாங்கம் அரசியல்காரர்களை தூக்கிலிட்டுவிடுமா என்று கேட்கின்றேன்.

அரசியல் சூழ்ச்சி

இன்றைய அரசியலில் வெகு ஜாக்கிரதையாக சமூக சீர்திருத்த விஷயங்களையும் தாழ்த்தப்பட்ட “கீழ்ஜாதி” மக்கள் சமத்துவ விஷயத்தையும் விலக்கி வைத்து சூழ்ச்சி செய்திருப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அதாவது காங்கிரஸ்காரர்களின் இன்றைய அரசியல் திட்டம் என்று சொல்லப்படும் கராச்சித் திட்டத்தை எடுத்துக்கொண்டு நன்றாய் இரண்டு கண்களையும் திறந்து சுயபுத்தியோடு பார்ப்பீர்களானால் அரசியல் காங்கிரஸ்காரர்களின் புரட்டு இன்னது என்பது உங்களுக்கு நன்றாய்த் தெரியும்.

என்னவெனில் கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமை திட்டம் என்பதில் ஜாதி, மதம், தொழில், ஜாதிமத உரிமை, பழய சாஸ்திரம், பழக்க வழக்கம், நடைமுறை ஆகியவைகளை காப்பாற்றிக் கொடுப்பதாக உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கிறது. இதன் அருத்தம் என்ன என்று பாருங்கள். சமூக சம்மந்தமாக உள்ள குறைபாடுகளிலும், பல மக்களுக்கு இருந்துவரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும் சிறிதும் கை வைப்பதில்லை என்பது தான் இன்றைய அரசியல் தத்துவமாகும். இந்திய ஏழை மக்களுக்கும் பாமர மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூக இயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வர முடிகின்றது. அதுவுமல்லாமல் இந்தக் காரியங்களை அதாவது சமூகத்தை சீர்திருத்தவும் தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவப்படுத்தவும் வேறு இயக்கம் இருப்பதாகவும் தந்திரம்செய்து விட்டபடியால் சிலர் நம்பி ஏமாந்து விடுகிறார்கள். இவைகளைச் செய்ய சட்டத்தில் இடமில்லாதபோதும் இவைகள் செய்யப்படமாட்டாது என்று மேல்ஜாதியாருக்கும் செல்வவான்களுக்கும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுவிட்ட பின்பும் எவ்வளவுதான் சீர்திருத்தமும் “அரிஜன” சேவையும் பேசி என்ன பயன் என்று கேட்கின்றேன். உதாரணமாக ஒரு பித்தலாட்டத்தை வெளியாக்குகின்றேன் பாருங்கள்.

ஒரு பித்தலாட்டம்

எங்கேயோ ஒரு திருவாங்கூர் ராஜா கோவிலைத் திறந்துவிட்டார் என்று நமது காங்கிரஸ்காரர்கள் பாராட்டுகிறார்களே ஒழிய, எங்கேயோ ஒரு கொச்சி ராஜா கோவிலைத் திறக்கவில்லை என்று குறைகூறிக் குரைக்கின்றார்களே ஒழிய, பிரிட்டீஷ் இந்திய ராஜா கோவிலைத் திறக்கவில்லை என்று கூறுகிறார்களா? அல்லது கோவிலைத் திறந்துவிடும்படி பிரிட்டீஷ் இந்தியா ராஜாவைக் கேட்கின்றார்களா? கேட்பதாக தீர்மானம் போட்டார்களா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். காந்தியார் தீண்டாமை விலக்க கோடி ரூபாய் போல் வசூல் செய்து செலவழித்தாரே அல்லாமல், திருவனந்தபுரம் ராஜாவுக்கு புத்தி சொன்னாரே அல்லாமல், பிரிட்டீஷ் அரசரையோ, இந்திய அரசாங்க சட்டசபையையோ, இந்திய காங்கிரஸ் கொள்கையையோ கடுகளவாவது கேட்டாரா அணுகினாரா தீர்மானம் கொண்டு வந்தாரா என்று தேடிப்பாருங்கள். வரியைக் குறைக்க தைரியமுள்ளவர்களுக்கு, வரியைக் குறைக்கச் சட்டம் செய்ய தைரியமுள்ளவர்களுக்கு, தாங்கள் கொண்டுபோகும் தீர்மானத்தையும் நிறைவேற்றும் தீர்மானத்தையும் பிரிட்டீஷ் அரசாங்கத்தார் குப்பைத் தொட்டியில் போடுவதானாலும் தங்கள் கடமையைச் செய்து தீருவோம் என்று வீர கர்ஜனை செய்யும் அரசியல் கிளர்ச்சி கூட்டத்தாருக்கு சமூகக் கொடுமை சம்மந்தமாக இதுவரை ஒரு சிறு தீர்மானமும் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என்றால் இவர்கள் உண்மையாக மனித சமூகத்துக்கு உழைக்கின்றவர்களா, அல்லது தங்கள் சொந்த நலனுக்கு சொந்த ஜாதி நலத்துக்கு உழைக்க அரசியல் வேஷம் போட்டுக் கொண்டவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

புரட்சி உணர்ச்சி உள்ள இந்த காலத்தில் இன்னமும் அரசியல் திட்டத்தில் ஜாதியைக் காப்பாற்ற உரிமையை பிரத்தியேகமாய் குறித்து வைத்துக்கொண்டு அரசியல் மூலம் மக்களுக்கு சுதந்திரமும் விடுதலையும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்கின்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்குமானால் – இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் இந்நாட்டு மக்கள் மனிதத் தன்மை இன்னதென்று உணராத நடைப்பிணங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது என்று கேட்கின்றேன்.

நான் காங்கிரசில் இருந்தால் என்ன ஆகிவிடும்?

நான் காங்கிரசில் இருந்திருக்க வேண்டும் என்றும் காங்கிரசில் இருந்தால் காங்கிரசு இந்த மாதிரி ஒரு பித்தலாட்ட ஸ்தாபனமாகவும் இவ்வளவு பார்ப்பன ஆதிக்க ஆயுதமாகவும் ஆகி இருக்காது என்றும் நீங்கள் கருதுகிறீர்கள். அப்படியே இன்னம் சிலரும் கருதுகிறார்கள். என்னிடமும் பலர் சொல்லுகிறார்கள். இப்போதும் சிலர் காங்கிரசில் இருப்பவர்களே என்னை அங்கு அழைக்கின்றார்கள். அவ்வளவு தூரம் போவானேன்? தோழர்கள் கல்யாணசுந்திர முதலியார், வரதராஜúலு நாயுடு போன்றவர்களே இந்த அபிப்பிராயம் காட்டி காங்கிரசிலிருந்து பிரிந்தும் இருக்கிறார்கள். ஆனால் என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. மக்களுக்கு ஏதாவது ஒரு அவசியமான காரியம் செய்ய வேண்டும் என்று கருதுகிற எவனும் இன்றைய நிலையில் காங்கிரசில் இருக்க முடியாது என்பதே எனது அபிப்பிராயம். உண்மையாகவே உங்களை ஒன்று கேட்கின்றேன்.

இந்த 12 வருஷ காலமாய் தான் காங்கிரசில் இருந்திருந்தால் நீங்கள் இப்போது வாசித்துக்கொடுத்த வரவேற்புப் பத்திரத்தில் கண்ட வாக்கியங்கள் போல் ஒரு வரவேற்பு பத்திரம் எழுதிக் கொடுத்திருக்க முடியுமா? இந்த எண்ணங்களாவது உங்களுக்கு உண்டாகி இருக்க முடியுமா? அல்லது இந்த ஜனங்களாவது அதை பொறுத்துக்கொண்டிருப்பார்களா? நம் நாட்டில் ஒரு சிறு அளவுக்காவது சமூக சீர்திருத்த வேலையும் தீண்டாமை ஒழிப்பு உணர்ச்சியும் சமூகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரு கடுகளவு புரட்சி உணர்ச்சியும் ஏற்படச் செய்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

நான் தேசத்துரோகி என்றழைக்கப்படுவதிலோ நாட்டை அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுத்தவன் என்று அழைக்கப்படுவதிலோ நான் கடுகளவு கூட கவலைப்படவில்லை. எப்படிப்பட்டவர்களால் அப்படி அழைக்கப்படு கிறேன் என்பது எனக்குத் தெரியும். அயோக்கியர்களாலும் சுயநலக்காரர்களாலும் ஒரு வேலைக் கஞ்சிக்கு மானத்தை விற்றுப் பிழைக்கின்ற இழிநிலையில் உள்ளவர்களாலும் முட்டாள்களாலும் அழைக்கப்படுவதை எவனாவது லòயம் செய்வானா? அதற்கு ஆக தன்னுடைய முயற்சியை எவனாவது மாற்றிக்கொள்வானா என்று கேட்கின்றேன்.

செருப்பு ஆண்ட நாடு இது

உண்மையிலேயே இந்த நாட்டை யார் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை. ஒரு காலத்தில் ஒரு ஆரியனின் ஒரு ஜதை செருப்பு 14 வருஷ காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையை பக்தி விஸ்வாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் ஒரு இழிவான மிருகம் நாய், கழுதை ஆண்டால் கூட அது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்த கொள்கையோடு எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது. அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை.

“அந்நிய ஆட்சி” புரட்டு

அந்நிய ஆட்சி என்கின்ற பேச்சே யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு என்று சொல்லுவேன். அல்லது அருத்தமற்ற துருப்பிடித்த பழம்பேச்சென்றே சொல்லுவேன். ஏனென்றால் இந்த நாடு எந்தக் காலத்தில் சுய ஆட்சி என்பதான ஆட்சியில் இருந்தது என்று கேட்கின்றேன். முஸ்லீம்களும் வெள்ளைக் காரர்களும் இந்த நாட்டை 1000 Mமாக ஆண்டு வந்திருக்கிறார்கள்.

அதற்கு முன் இந்த நாடு 56 தேசமாய் இருந்த காலத்தில் ஒரு தேசத்தான் மற்றொரு தேசத்தை அடிக்கடி கலவரத்தின் மூலம் ஆண்டிருக்கிறான். இவை தவிர புராணங்களின்படியும் சரித்திரங்களின் படியும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த ஆரியர்களே இந்தியர்களை குரங்காக மதித்து வர்ணாச்சிரமப்படி அரசாட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களது ஆட்சிமுறையை விட – ஆரியர் அந்நியர்களின் ஆட்சி முறையை விட முஸ்லீம்கள் – வெள்ளைக்காரர்கள் ஆகிய அந்நியர்களின் ஆட்சி முறை எந்த விதத்தில் மோசமானது என்று கேட்கின்றேன். இன்று கொஞ்சம் கூட பயமும் வெட்கமில்லாமல் ராமராஜ்யம் வேண்டுமென்றும் ராமராஜ்யத்துக்கு பாடுபடுகிறேன் என்றும் கூறும் காந்தியார் கோரும் ஆட்சியைவிட அந்நியர் ஆட்சி மோசமானதா என்று உங்களைக் கேட்கின்றேன்.

காங்கிரசு உண்மையாக நல்ல எண்ணத்தோடு மனித சமூகப் பொதுவுக்கு பாடுபடுகின்றது என்பதாக நான் உணர்ந்திருப்பேனேயானால் அதை விட்டு நான் எந்தக் காரணம் கொண்டும் வெளிவந்திருக்க மாட்டேன். அதற்கே என் பொருளையும் உயிரையும் தத்தம் செய்திருப்பேன்.

இன்றும் காங்கிரசில் சேர தயார்

இன்றும் நான் காங்கிரசில் சேர தயார். ஆனால் இன்று தானாகட்டும் காங்கிரசானது சமூக வாழ்வில் எல்லா சமூகங்களுக்கும் சட்டமூலமாக சமத்துவம் அளிக்கும் என்றும், ஜாதிப்பிரிவுகளும் கொடுமைகளும் ஒழிக்க சட்டம் செய்யப்படும் என்றும், சகல வகுப்புக்கும் அரசியலில் உத்தியோகமும், பிரதிநிதித்துவமும் விகிதாசாரத்துக்குக் குறையாமல் சட்டத்தின் மூலம் அளிக்கப்படும் என்றும் காங்கிரசில் தீர்மானம் போட்டு விட்டு “ஜாதி மத ஆச்சாரங்களையும் பழக்க வழக்க நடைமுறைகளையும் காப்பாற்றப்படும்” என்கிற கராச்சி காங்கிரஸ் உத்திரவாதத்தை எடுத்துவிட வேண்டும். அப்போது இந்த நாட்டில் காங்கிரசைத் தவிர வேறு ஸ்தாபனம் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் பார்ப்பனர்கள் ஸ்தாபனம் மாத்திரம்தான் இருக்க முடியும். சுயமரியாதை இயக்கத்துக்கு கூட அவசியம் இருக்காதென்று கூறுவேன்.

“சைத்தான் அரசாங்கம்”

காங்கிரஸ்காரர்கள் இந்த அரசாங்கத்தை சைத்தான் அரசாங்கமென்றும் கொடுங்கோல் அரசாங்கம் என்றும் கூறி மக்களை ஏய்த்து ஓட்டு பெற்று ஸ்தானம் அடைந்து விட்டு இன்று கொஞ்சம் கூட வெட்கமும் நாணையமும் இல்லாமல் ராஜவிஸ்வாசப் பிரமாணமும் ராஜ சந்ததி விஸ்வாசப் பிரமாணமும், அரசாங்க சட்டதிட்ட விஸ்வாசப் பிரமாணமும் செய்கிறவர்கள் நம்மை ராஜபக்தர்கள் என்றும் சர்க்கார் தாசர்கள் என்றும் சொல்லுவார் களானால் உலகில் இவர்களை விட மோசமான மக்கள் உண்டா என்று கேட்கின்றேன். நாம் மக்களுக்குச் செய்த துரோகம் இன்னது என்றாவது இந்த காங்கிரஸ்காரர்கள் இந்த 50 வருஷ காலமாய் மக்களுக்குச் செய்த நன்மை இன்னதென்றாவது யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். காங்கிரஸ் தனது கொள்கையிலோ, திட்டத்திலோ எதிலாவது இந்த 20 வருஷகாலமாய் நிலையாய் நின்றதா? அல்லது எதிலாவது வெற்றி பெற்றதா என்றும் கேட்கின்றேன். அது ஒரு பொதுஜன ஸ்தாபனம் என்று சொல்வது சுத்த முட்டாள்தனமேயாகும். அது ஒரு வருணாச்சிரம தர்ம ஸ்தாபன சபையேயாகும்.

பார்ப்பன காங்கிரஸ்

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க சபையேயாகும்.

அதாவது பொதுவாழ்வில் பார்ப்பனர்களை கைதூக்கிவிடவும் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்படி செய்யவும் வக்கீல், டாக்டர், அர்ச்சகர், குருக்கள், புரோகிதர், காப்பிக்கடை ஐயர் முதலிய பார்ப்பனர்களுக்கு தொழில் பெருகவும், அதன்மூலம் வரும்படி பெருகவும் செய்துகொண்ட ஸ்தாபனமாகும். பார்ப்பனர்களைத் தவிர காங்கிரஸ் மூலம் இன்று வரை ஒரு பார்ப்பனரல்லாதாராவது முன்னுக்கு வந்ததாகக் கூற முடியுமா? காங்கிரசுக்கு முன் பார்ப்பனர்கள் நிலை எப்படி இருந்தது? காங்கிரசுக்குப் பின் எப்படி ஆய்விட்டது? அரசியலும் உத்தியோகமும் பார்ப்பன மயமாய்விடவில்லையா?

பார்ப்பனரல்லாத தியாகிகள் எங்கே?

தோழர்கள் ஆரியா எங்கே? சர்க்கரை எங்கே? வரதராஜúலு எங்கே? கல்யாணசுந்தரம் எங்கே? தண்டபாணி எங்கே? பவானிசிங் எங்கே? தர்மலிங்கம் எங்கே? எல்லோரும் காங்கிரஸ் ஜாதிவிட்டு நீக்கப்பட்டாய் விட்டது. சிதம்பரம்பிள்ளை கதி என்ன ஆயிற்று? கள்ளு சாராயம் குடித்து கொண்டு, கஞ்சா அபினி அடித்துக்கொண்டு திரிந்த ஒரு சுப்பிரமணிய அய்யருக்கு பாரதி பட்டம் கொடுத்து இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. அவரின் ஆரிய ஆதிக்கப் பாட்டு புஸ்தகம் விளம்பரம் செய்து அவர் குடும்பத்துக்கு பதினாயிரக்கணக்கான ரூபாய் சம்பாத்தியம் செய்து கொடுக்கப்பட்டாய்விட்டது. அவரைவிட யோக்கியமாக நாட்டுக்கு உழைத்த மற்ற குடும்பம் பல இன்று சோத்துக்கு வழியில்லாமல் திண்டாடுகின்றன. மாகாண காங்கிரஸ் தலைவர் முத்துரங்க முதலியார் விலாசம் யாருக்காவது தெரியுமா? இன்றைய காங்கிரஸ் ஆதிக்கத்தில் அவருக்கு ஏதாவது மரியாதையோ விளம்பரமோ இருக்கிறதா? எலக்ஷனுக்கு நாலு நாளைக்கு முன் தொப்பென்று குதித்த தோழர் ராஜகோபாலாச்சாரியார் திடீரென்று ராஜாஜியாகி இன்று மாகாணத் தலைவராக கவர்னரை அடிக்கடி பார்க்கவும், கவர்னர் அடிக்கடி கூப்பிடவுமான பதவி அடைந்து விட்டார். முதல் மந்திரி ஆக தவம் கிடக்கிறார்; ஆனாலும் ஆவார்.

தக்க அந்தஸ்தும் பொது வாழ்வில் நாணையமும் உள்ள தோழர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் காங்கிரசில் சேர்ந்து எலக்ஷனில் விலகிக்கொண்டதன் பயனாய் 5 வருஷகாலம் தண்டிக்கப்பட்டு விட்டார். ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸúக்கு எதிராக நவாப் அப்துல் ஹக்கீம் சாயபுக்கு ஓட்டுப்போடச் சொன்னவரும் காங்கிரசுக்கு மாறான தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாருக்கு ஓட்டுப் பிரசாரம் செய்தவரும் காங்கிரஸ் உத்திரவு இல்லாமல் கவர்னர் வீட்டுக்கும் கவர்னருடன் விருந்துக்கும் போன ராஜாஜியாச்சாரியாரை ஏன் என்று கேட்கக்கூட ஆள் இல்லை. இந்த யோக்கியதையில் அவரே தலைவராகி விட்டார்.

மற்றும் காங்கிரஸ் பேரால் வெற்றிபெற்று காங்கிரசுக்கு ஓட்டுப் போடாமல் காங்கிரசுக்கு விரோதமாய் ஓட்டுச் செய்து காங்கிரஸ் அபேக்ஷகரை தோற்கடித்த திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்களை காங்கிரஸ்காரர்கள் ஏன்? என்று கூட கேட்கவில்லை. அவரால் வந்த அவமானம் சகிக்கமாட்டாமல் தான் ராஜகோபாலாச்சாரியார்கூட காங்கிரஸ் நடவடிக்கையில் இருந்து “விலகினார்.” அப்படிப்பட்ட அவருக்கு ஒரு நாள் தண்டனை கூட இல்லை; அவரை யாரும் அடங்காப்பிடாரி என்றோ காங்கிரஸ் துரோகி என்றோ கூப்பிடவுமில்லை. இந்த லக்ஷணத்தில் போதாக்குறைக்கு மாகாணத் தலைவர் ராஜகோபாலாச்சாரியும் எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவும் அவர் வீட்டுக்குப் போய் அரசியல் நேசம் பாராட்டி சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அதையும் யாரும் கேட்பார் இல்லை.

இ.கு.கீ.

தோழர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரை அபேக்ஷக ஸ்தானத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி அவர் வீட்டுக்கே ஆச்சாரியார் போய் கெஞ்சிக் கேட்டு விலகிக்கொள்ளச் செய்து விட்டு அதற்கு ஆக அவரைப் பாராட்டி பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் அவரை 5 வருஷத்துக்கு விலக்கி வைத்திருப்பதாக உத்திரவு போட்டிருக்கின்றார்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் ஆணவத்திற்கும் சூழ்ச்சிக்கும் வேறு என்ன அத்தாò வேண்டும்?

ராமலிங்க செட்டியார்

திவான்பகதூர் பட்டத்தை விட்ட தோழர் டி.எ. ராமலிங்கம் செட்டியார் இன்று காங்கிரசில் சீந்துவாரற்று மறைந்துவிட்டார். அவர் விலாசம் கூட மக்களுக்கு மறைந்து போய்விட்டது. மகாநாடுகளுக்கு தலைமை வகிக்கவோ, திறக்கவோ, கொடியேற்றவோ கூட பெயருக்கு பிரேரேபிப்பவர்களைக் கூடக் காணமுடியவில்லை. லòமி அம்மாள், ருக்குமணி அம்மாள், பாஷ்யம் அய்யங்கார், ஆலாசியம் அய்யர் என்பதாக எங்கு பார்த்தாலும் பார்ப்பனர்கள் பெயர்கள் தான் சந்து பொந்தெல்லாம் அடிபடுகின்றன. இவ்வளவு விஷயங்கள் அறிந்தும் நம்மவர்களுக்கு புத்தியோ சொரணையோ வரவில்லை யென்றால் யார் மீது குற்றம் கூறுவது என்பது விளங்கவில்லை.

ஆர்.கே. ஷண்முகம்

தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் கொச்சி திவானானபோது நமது நாட்டு தேசீயப்பத்திரிகைகள் “கொச்சி திவான் வேலைக்கு கொச்சியில் ஒரு ஆள் கிடைக்கவில்லையா? கொக்சிக்காரர்களே உங்களுக்கு மானமில்லையா” என்று எழுதி கலகம் செய்து மக்களைக் கிளப்பி விட்டன.

தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யருக்கு திருவாங்கூர் திவான் வேலை ஆனவுடன் “திருவாங்கூருக்கு நல்ல திவான் கிடைத்தார்” என்று திருவாங்கூரைப் பாராட்டினவேயல்லாமல் “திருவாங்கூர் திவான் வேலைக்கு திருவாங்கூரில் ஒரு ஆள் இல்லையா” என்று கேட்கவே இல்லை.

மைசூர் சிவில் சர்வீஸ் பரீட்சையில் பெயில் ஆகி “இந்து” பத்திரிகை தயவாலும், “சுதேசமித்திரன்” பத்திரிகை தயவாலும், ரிவினியூ போர்டு மெம்பரான பார்ப்பனர் ஒருவர் உத்தியோகத்தில் இருக்கும் வரை 3000 ரூபாய் சம்பளம் வாங்கி மூட்டை கட்டிக்கொண்டு இருந்துவிட்டு உத்தியோகம் விட்டுப்போகும் போது இந்தியனுக்கு உயர்ந்த சம்பளம் மாதம் 1000 (ஆயிரம்) ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லி அடுத்த நாளே N 5000 ரூபாய் சம்பளத்துக்கு காஷ்மீர் மந்திரியாகப் போய்விட்டார். ஒரு தேசீயப் பத்திரிகையாவது “காஷ்மீர் மந்திரி வேலைக்கு காஷ்மீரில் ஒரு ஆளில்லையா” என்று கேட்கவில்லை. ஒரு தேசீய பத்திரிகையாவது நேற்று மாதம் ரூ.1000 போதும் என்று சொல்லிவிட்டு அவரே இன்றைக்கு 5000ரூ. சம்பளம் வாங்குகின்றாரே இது யோக்கியமா என்று எழுதவேயில்லை.

பரோடா சமஸ்தானத்தில் தோழர் சர்.வி.டி. கிருஷ்ணமாச்சாரி என்கிற அய்யங்கார் பார்ப்பனர் கிட்டத்தட்ட 10 M காலமாய் N 4000, 5000 சம்பளம் கொள்ளை அடிக்கிறார். அதைப்பற்றி கேட்பவர்களோ குறை சொல்பவர்களோ காணவில்லை. சர்.ஆர்.கே. ஷண்முகத்தைப் பற்றி பார்ப்பனர்கள் தினமும் தொல்லை விளைவிக்கிறார்கள்; ஆபாசமான கட்டுக்கதைகள் கட்டிவிட்டு தொல்லை விளைவிக்கிறார்கள். மற்றவர்கள் விஷயமாய் நிஜமாகவே நடக்கும் ஆபாசங்களைப் பற்றி பெருமை பேசிக்கொள்ளும்படி செய்கிறார்கள். எனவே நம் பார்ப்பனர்கள் நம் மக்களுக்கு செய்துவரும் தொல்லைகளையும், கொடுமைகளையும் நீங்கள் உணர்ந்து இருந்தும் பார்ப்பனர்கள் பின் வாலைப் பிடித்துக்கொண்டும், கொடியைப் பிடித்துக்கொண்டும் திரிவதென்றால் நம் நிலையைப்பற்றி என்னதான் நினைப்பது என்று கேட்கின்றேன்.

குறிப்பு: 01.06.1937 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 06.06.1937

You may also like...