ஆரம்பமுதல் ஜஸ்டிஸ் கட்சி

 

நாட்டின் முன்னேற்றத்திற்கே உழைத்திருக்கிறது

ஒருநாளும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை

மந்திரி கனம் செட்டிநாட்டுக் குமாரராஜா அவர்களின் வீரமுழக்கம்

~cmatter

தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் வகுப்புச் சலுகை வெளியான மர்மம்

காந்தியாரையும் காங்கிரசையும் தாக்கியவருக்கு ஓட்டுக்கொடுக்கவேண்டுமாம்

காங்கிரஸ் வாக்கும் தற்கால போக்கும்

காங்கிரஸ் இதுவரை தேசத்திற்கோ அல்லது குறிப்பாக நம் மக்களுக்கோ உருப்படியான காரியம் இன்ன செய்திருக்கிறது, செய்யப்போகிறது, அதற்கு திட்டங்கள் இன்னின்னவைகள் என்று பொது மக்களுக்கு எடுத்துக்காட்டி தங்கள் கட்சி அபேட்சகர்களுக்கு ஆதரவு தேடுவதற்கு பதிலாக ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோக கட்சியென்றும், அதைச் சேர்ந்த பிரமுகர்கள் சுயநலமிகள், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லியும் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களில் சிலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் புதிய சீர்திருத்தத்தை தகர்த்துவிடப் போவதில்லை. சபையில் நுழைந்தவுடன் ராஜவிஸ்வாசப்பிரமாணம் செய்துகொண்டு சர்க்காரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கி இருக்கப்போகிறார்கள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? தோழர் சத்தியமூர்த்தியாரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இந்திய சட்ட சபையில் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்யவில்லையா? ஏமாளிகளாகிய நம் பொது மக்களை வாயாடியான சத்தியமூர்த்தியார் சுயராஜ்யம் வந்து விட்டால் வெள்ளையர்களை விரட்டியடித்து விடுவோம் என்று சொல்லுவதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும். பண்டித மோதிலால் நேரும் இந்நாட்டுக்கு விடுதலையைக் கொண்டு வந்துவிடுவேன் என்று சட்ட சபைக்கு சென்றார். பின்னால் ஏமாற்றமடைந்ததால் கடைசியாக அதைவிட்டு ராஜிநாமா செய்து வெளியேறிவிட்டார். இந்திய சட்டசபையில் மெஜாரிட்டியாக இருப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். இவர்களும் எத்தனையோ தீர்மானங்கள் பாஸ் செய்தார்கள். அவை என்ன கதியாயிற்று! எல்லாம் சர்க்கார் குப்பைத் தொட்டியில் போய் சேர்ந்தனவேயன்றி வேறு என்ன அவர்களால் சாதிக்க முடிந்தது? காங்கிரஸ்காரர்களால் என்ன சாதிக்க முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ அவர்கள் படிப்பணம் வாங்கிக்கொள்ளுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? அவர்கள் கோடி கோடியாக நிதிதிரட்டினார்கள். அவைகள் எல்லாம் எதற்காக உபயோகப்படுத்தப்பட்டன? தங்கள் சுயநலத்திற்கும், பிரச்சாரத்திற்குமே உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. காந்தி இர்வின் ஒப்பந்தப்படி இனி சட்ட மறுப்பு போர் ஆரம்பிப்பதில்லை யென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அவ்வியக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களின் ஏருக்குமாறான செய்கைகளினாலும், தந்திரோபாயங்களினாலும் நாட்டை பாழ்படுத்தியதல்லாமல் என்ன பயனை உண்டுபண்ண முடிந்தது? ஜஸ்டிஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், உள்ள வித்தியாசம் யாதெனில் முன்னவர்கள் கட்டுப்பாடான ஒரு அரசியல் முறையைக் கொண்டு நாட்டுக்கு நன்மை புரிந்து வந்தார்கள். பின்னவர்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையான பல முறைகளைக் கையாண்டு நாட்டைக் கெடுத்து வைத்துவிட்டார்கள். காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக இருந்தார்களே; அங்கு அவர்களால் வரிகுறைக்க என்ன செய்ய முடிந்தது? காங்கிரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிகளையும் ஜில்லா போர்டுகளையும் இதுவரை கைப்பற்றினார்களே, அவைகளில் எங்கெங்கே காங்கிரஸ்காரர்கள் தாங்கள் சொன்னபடி காங்கிரஸ் கொடியைப் பறக்க விட முடிந்தது? இது தவிர காங்கிரஸ்காரர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் என்று சொல்லி ரெவின்யூ ஆபீசரை 500 ரூ சம்பளத்தில் நியமித்ததை, சர்க்கார் அவ்வளவு குறைந்த சம்பளம் அந்தப் பதவிக்கு போதுமானதல்லவென்றும், ஆளும் தகுதியுடையதல்லவென்றும் நிராகரித்துவிட்டார்கள். ஆகவே எக்கட்சி எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் தாங்கள் நினைக்கிறபடி ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் யாவும் நடைபெற முடியும். ஏதாவது அதிக நன்மை பெறவேண்டுமானால் சர்க்காரோடு ஒத்துப்போனாலொழிய ஒன்றும் சாதிக்க முடியாது. காங்கிரஸ்காரர்களுக்கு இன்னும் சுயராஜ்யமென்றால் என்ன என்பது புரியாமல் இருந்து வருகிறது. ஏன் தோழர் விஜயராகவாச்சாரியார் கூட சுயராஜ்யத்தின் கருத்து இன்னதென்று தனக்குத் தெரியாதென்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் கிராமங்களில் சென்று பாமர மக்களிடம், சுயராஜ்யம் வந்துவிட்டால் நாட்டில் வரியிருக்காதென்றும், ரயில்வேக்களில் டிக்கட் கட்டணம் இருக்காதென்றும் கூறி வருகிறார்கள். சுயராஜ்யம் வந்துவிட்டால் நாட்டில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிந்துப்போகும் என்று தோழர் ஜவஹர்லால் கூட சமீபத்தில் கூறியிருக்கிறார். ஒரு “ஜனநாயக” ஆட்சியை கொண்ட நாட்டில் இவைகளை எப்படி ஒழிக்க முடியும்? இதற்கு இவர்களிடத்தில் என்ன வழியிருக்கிறது? மேல் நாடுகளில் “ஜனநாயக” ஆட்சி நடைபெறுகிறது. எந்த நாட்டிலாவது, தரித்திரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிக்கப்பட்டிருக்கின்றனவா? இன்னும் அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளில் இன்றும் ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான பேர்கள் வேலை யில்லாமல் துன்பப்படுகிறார்கள். இதனால், சுயராஜ்யம் பெறுவதாலே வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கிவிட முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு பெரிய பிரச்சனை. இதை சுலபமாகத் தீர்க்க முடியாது. இப் பிரச்சனை பலகாலம் நீடித்திருக்கும். இந்நாட்டிலே ஜஸ்டிஸ் கட்சி ஒன்றுதான் எல்லா வகுப்பாருக்கும் நீதியை வழங்கி வந்திருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்கள் ஒவ்வொருவரும் இக்கட்சி தோன்றுவதற்கு முன் என்ன நிலைமையில் இருந்து வந்தோம் என்றும் இக்கட்சி தோன்றிய பின் தங்கள் நிலை மனித சமூகத்தில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதும் யோசித்துப்பார்க்க வேண்டியதாகும்.

இப்பொழுது ஜனங்களுக்கு ஓட்டுரிமை அதிகரித்திருப்பதற்கு மூல காரணம் ஜஸ்டிஸ் கட்சியேயல்லவா? இந்தியாவிலே ஏனைய மாகாணங்களில் பெண்களுக்கு கிடைத்துள்ள ஓட்டுரிமைகளுக்கும் இந்த ஜஸ்டிஸ் கட்சியே ஜவாப்தாரியல்லவா?

இச்சமயத்தில் கூட்டத்தில் யாராவது கேள்வி கேட்க விரும்பினால் தாம் பதில் சொல்லத் தயாராயிருப்பதாகவும், காங்கிரஸ்காரர்களைப் போல் மேடையை விட்டு ஓடப்போவதில்லை யென்றும் அறை கூவினார். ஆனால் ஒருவரும் முன்வரவில்லை.

ஜஸ்டிஸ் கட்சியின் பெரு முயற்சியில் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்களில் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இக் கட்சியார் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் சொன்ன வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது பொது மக்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நான் விளக்கிக் கூற வேண்டியதில்லை. காங்கிரஸ்காரர்களுக்கும், ஜஸ்டிஸ்காரர்களுக்கும் அரசியல் திட்டங்களில் வித்தியாசம், வகுப்பு விகிதாச்சாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. காங்கிரஸ்காரர்கள் வகுப்பு விகிதாச்சாரத்தை ஒப்புக்கொண்டுவிட்டால் நாம் அவர்களோடு ஒத்துப்போவதில் யாதொரு தடையுமில்லை. நமது நாட்டில் பல வகுப்பார்கள் இருந்து வருகிறார்கள். அவர்கள் யாவருக்கும் வருங்கால அதாவது இவர்கள் நினைக்கும் சுயராஜ்ய அரசியலில் சகல அரசியலுரிமையும் கிடைப்பதாக வாக்குறுதியளிப்பார்களானால் எங்களுக்கு அதில் சேர்ந்து உழைக்கத் தடையொன்றுமில்லை. காங்கிரசையும், காந்தியாரையும் எதிர்த்துப் பேசிவந்த தோழர் வெங்கடராம சாஸ்திரியாரை தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஆதரித்து வருவது வகுப்புச்சலுகை எவ்வளவு தூரம் காங்கிரசில் இருந்து வருகிறது என்பதை விளக்கி காட்டிவிட்டார். கடைசியாக பார்ப்பனரல்லாத மக்கள் காங்கிரசுக்கு முழுத் தோல்வியைக் கொடுக்க ஒரு நாளும் பின் வாங்கக் கூடாது.

(அடுத்து, ராமநாயக்கன் பேட்டை பஞ்சாயத்து போர்டாரும் உபசாரப் பத்திரங்கள் தலைவர்களுக்கு வாசித்து அளித்தார்கள். உபசாரப்பத்திரங்களுக்குப் பதில் சொல்லுகையில் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் சொன்னதாவது)

காங்கிரஸ்காரர்கள் போடும் கூச்சலைக் கண்டோ, ஆரவாரத்தைக் கண்டோ ஒருவரும் ஏமாந்துவிடக்கூடாது. காங்கிரஸ் தோன்றி 50 வருஷங்கள் ஆனது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் நாட்டுக்கு ஏதாவது காதொடிந்த ஊசியளவாவது நன்மை உண்டாயிருக்கிறதா? இல்லை. அதற்கு பதிலாக சர்க்கார் போலீஸ் படையை அதிகரித்து, சம்பளங்களை உயர்த்தினார்கள். இது தான் நாம் இன்று கண்ட பலன். ஏதாவது நில வரியில் ரூபாய்க்கு 3 அணாவாவது வஜா செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது ஜஸ்டிஸ் கட்சியின் திறமையால்தான். இன்னும் இது தவிர கிராமங்களில் கிணறுகள் வெட்டுவித்தல், பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தல், கிராமங்களில் போக்குவரத்து ரஸ்தாக்கள் உண்டு பண்ணுதல் போன்ற காரியங்கள் செய்தது ஜஸ்டிஸ் கட்சியேயாகும். விவசாயிகளின் கடன் தொல்லையை நில அடமான பாங்குகளை ஏற்படுத்தி ஓர் அளவுக்கு குறைத்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியை மட்டும் பணக்காரர் கட்சி ஜமீன்தார்கள் கட்சி என்று சொல்லுவதெல்லாம் வெறும் புரட்டு. வாஸ்தவத்தில் காங்கிரசில்தான் பெரிய முதலாளிகளும், ஜமீன்தார்களும் நிறைந்திருக்கிறார்கள். உங்களுக்கு இன்னும் ஏதாவது நன்மை அடைய விரும்பினால் ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்தவர்களை ஆதரியுங்கள். இல்லையானால் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் தாங்களே தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளுவதாகும். காங்கிரசின் தலைநகரமாகிய வங்காளத்தில் காங்கிரஸ்காரர்களுக்கு படுதோல்வி. இதையே நம் மாகாணமும் பின்பற்ற வேண்டும்.

குறிப்பு: 14.02.1937 ஆம் நாள் திருப்பத்தூரில் (வேலூர்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 21.02.1937

You may also like...