ஈணூ. நடேசன் நலிந்தார்
டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம்நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி விஸ்வாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலுமிருக்கமாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும்.
சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப்போட்டியில் ஒரு நாளும் வெற்றிபெறமாட்டான் என்கின்ற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள் தனது தொண்டிற்கும் ஆர்வத்திற்கும் உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல் போனதில் நமக்கு சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கு என வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார். சென்னை வாசிகள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்கின்ற வேண்டுகோளின் மீது ஒருவார்த்தை சொல்லுகிறோம். அதாவது நடேசன் நலிவால் சென்னை நகரத்தில் பார்ப்பனரல்லாதார் மக்கள் முன்னேற்ற விஷயத்தில் உண்மையான பற்றும் கவலையும் இருந்த மக்களில் தலைவர் குழாத்தில் முதன்மையானவர் மறைந்து விட்டார் என்று சொல்கிறோம். அது மாத்திரமா என்றால் இன்று அவருக்கடுத்த நிலையில் இரண்டாவதவர் மூன்றாவதவர் தான் யார் என்று தேடித்திரிய வேண்டிய நிலையில் தமிழ்மக்களை விட்டு மறைந்து விட்டார் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறதை நினைக்கும்போது நடேசன் நலிவால் தமிழ் மக்கள் உள்ளத்தில் துக்க தீப்பொறி குடிகொண்டு விட்டது என்றே கூறுவோம்.
ஒரு தனிப்பட்ட மனிதனை நம்பிவாழும் நாடோ சமூகமோ சுதந்திரமும் வீரமும் உள்ள நாடோ சமூகமோ ஆகாது. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நலி ஏற்படக்கூடாது என்பதே நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டுவிடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக. நாம் ஒவ்வொருவரும் நடேசனே ஆக நாடுவோமாக.
குடி அரசு – இரங்கல் கட்டுரை – 21.02.1937