தோல்வி ஆனால் நன்மைக்கே

 

தேர்தல் தொல்லை ஒழிந்தது போலவே தேர்தல் முடிவுபற்றிய கவலையும் ஒழிந்தது. எண்ணிக்கையில் காங்கிரஸ் பெருமை அடித்துக் கொள்ளத்தக்க அளவுக்கு அதிகமாக அடைந்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கட்சிப் பிரசாரமில்லாமலும் எதிரிகளால் சுமத்தப்பட்ட ஈனப்பழிகளும் மனதறிந்து பொய்ப் பிரசாரங்களும் பாமரமக்கள் மனதைக் கெடுத்து விடுமே என்கின்ற கவலையே சிறிதும் இல்லாமல் அலட்சியமாயும் ஆணவமாயும் இருந்து வந்த பலனை அடைந்து விட்டார்கள் என்றாலும் நிலைமையில் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாக யாரும் சொல்ல முடியாது. ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எவ்வித கெடுதியும் வந்து விட்டது என்றோ, இனிமேலாகிலும் வந்துவிடும் என்றோ யாரும் யோசிக்கவேண்டிய அவசியமில்லாத நிலைமையிலேயே இருக்கிறோம்.

எப்படியெனில் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான கொள்கை எல்லாம் அரசியலில் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவமும் சமுதாயத்துறையில் சமத்துவமும் அடையவேண்டும் என்பதேயாகும். மற்றபடி அரசியல் சுதந்திர விஷயத்தில் சாத்தியமான அளவுக்கு எவ்வளவு அதிதீவிரமான கொள்கையானாலும் அடைய ஆவலாகத்தான் இருந்து வருகிறது.

ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் தக்க அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது என்பதில் எவ்வித ஆக்ஷேபணையுமில்லை. உதாரணமாக பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் எவ்வளவுதான் ஆக்ஷேபித்தும் இன்று 30 முஸ்லீம்களும் 30 தீண்டப்படாத மக்கள் என்பவர்களும் 6 கிறிஸ்தவர்களும் 6 பெண்களும் வந்துவிட்டார்கள். இந்த வகுப்பு உரிமை இல்லாவிட்டால் இந்தக் கூட்டத்தார் வரமுடியாது என்கின்ற நிலைமை இன்றும் இருக்கிறது என்பதை இன்றைய தேர்தலே பிரத்தியக்ஷத்தில் காட்டிவிட்டது. அதாவது பொதுத் தொகுதியில் நின்ற இரு பெண்களில் ஒரு பெண் தானாகவே பின் வாங்கிக் கொண்டதும் தேர்தலில் போட்டி போட்ட ஒரு பெண் தோல்வியடைந்ததும் பார்த்துவிட்டோம்.

அது போலவே பொதுத் தொகுதியில் போட்டிபோட்ட ஒரு முஸ்லீம் கோடீஸ்வரரும் காங்கிரசுக்கு மிக ஆதரவாளியும் வெற்றி பெற்றாலும் காங்கிரசையே ஆதரிக்க இருந்தவருமான ஒரு பிரபு அதுவும் அவர் எந்தத் தொகுதியில் நின்றாரோ அத்தொகுதி விஷயத்தில் நிபுணத்துவம் பொருந்தியவராயிருந்தும் ஒரு பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டதானது முஸ்லீமோ, ஆதிதிராவிடரோ, பெண்களோ பொதுத் தொகுதியில் வரமுடியாது என்பதையும் தனித்தொகுதி மூலம்தான் வரமுடியும் என்பதையும் நிதரிசனப்படுத்திக் காண்பித்து விட்டது. ஆதலால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது சரி என்பதையும் கேட்டது கிடைத்தது என்பதையும் இச்சீர்திருத்தம் மெய்ப்பித்துப் பலன் கொடுத்துவிட்டது. இது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு உண்மையான வெற்றியேயாகும்.

இனி உத்தியோக விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சி செய்திருக்கும் ஒரு சிறு ஏற்பாட்டைக் காங்கிரஸ் (பார்ப்பனர்கள்) அதிகாரத்துக்கு வந்தால் கெடுத்து விடும் என்கின்ற பயம் சிலருக்கு இருக்கலாம். அது அவ்வளவு சுலபமான காரியம் என்று நாம் கருதவில்லை. அப்படிக் கெடுக்கக் கூடுமானாலும் அதையும் நாம் உண்மையிலேயே வரவேற்கத் தயாராய் இருக்கிறோம். ஏனெனில் உத்தியோகத்தில் இப்போது முக்கியமாய் இரு சமூகத்தாருக்கு அளிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவானது. உதாரணமாக சட்டசபை எண்ணிக்கையில் முஸ்லீம்களுக்கு 29 ஸ்தானங்களும் ஆதி திராவிடர்களுக்கு 30 ஸ்தானங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உத்தியோகங்களில் முஸ்லீம்களுக்கு நூற்றுக்கு 16 ஸ்தானங்களும் ஆதிதிராவிடர்களுக்கு 100க்கு 8 ஸ்தானங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இம்முறை ஆதிதிராவிடர்கள் விஷயத்தில் மிகுதியும் அநியாயமானதாகும். அதுபோலவே பார்ப்பனரல்லாத இந்து ஜாதியார் என்பவர்களில் மொத்தத்தில் 100க்கு 3 வீதமே உரிமையுள்ள பார்ப்பனர்கள் 100-க்கு 16 வீதமும் 100க்கு கிட்டத்தட்ட 60 வீதமுள்ள ஜாதி இந்துக்களுக்கு 44 வீதமுமாய் இருந்துவருகிறது. இவ்விரு வகுப்பினர் ஸ்தானங்களை இன்று பார்ப்பனர்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆதலால் இந்த விகிதாச்சாரம் மாறுதலடைய வேண்டியது மிகவும் அவசியமானதால் இதில் பார்ப்பனர்கள் கை வைத்தவுடன் காங்கிரசின் பேரால் இருந்து வரும் பார்ப்பனரல்லாதாரும் ஆதிதிராவிடர்களும் இதைக் கவனித்து தங்கள் குறையை நிவர்த்திசெய்து கொள்ள ஒரு வசதி அளித்ததுபோலாகும். மற்றபடி முஸ்லீம்களும் காங்கிரஸ் இதில் கை வைக்க ஆரம்பித்தால் தக்க புத்தி கற்பிக்கத் தயங்க மாட்டார்கள். ஆதலால் அதைப்பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கூறுவோம்.

மற்றபடி இன்று நம் எதிரிகளான பார்ப்பனர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியெல்லாம் இப்போது நடந்த தேர்தலில் பார்ப்பனர்கள் 215 ஸ்தானங்களுக்கு தங்கள் இனத்தவர்களாகிய பார்ப்பனர்களில் 40, 50 பேர்களை எப்படி எப்படியோ தந்திரம் செய்து உள்ளே புகுத்தி விட்டார்கள் என்பது தவிர வேறு ஒன்றுமேயில்லை.

அதற்கு ஏற்றாற்போல் பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட வெற்றி என்னவென்று பார்ப்போமானால் ஆணவமும் அகம்பாவமும் பிடித்து கòயையும் கòக் கொள்கையையும் பற்றி லòயமில்லாமல் பார்ப்பனரல்லாதாராய்ப் பிறந்து பணக்காரர்களாகவும் சமய சஞ்சீவிகளாகவும் தந்திரசாலிகளாகவும் இருக்கின்ற காரணத்தாலேயே அதிகாரமும் பதவியும் தங்கள் காலடியில் வந்து கிடந்துவிட்டது, இனியும் அப்படியே கிடந்துவிடும் என்று கருதி இருந்த இறுமாப்பு ஒழிந்து படுதோல்வி அடையவும் தலைகளை மறைத்துக்கொள்ளவும் புறமுதுகிட்டு ஓடி ஒளியவுமான நிலை ஏற்பட்டு உண்மையான உழைப்பாளிகளும் கவலையாளர்களும் வெளிக்கிளம்பி வேலை செய்ய முன் வரும்படியான நிலைமை ஏற்பட்டதாகும்.

காங்கிரசும் பார்ப்பனரும் நல்ல நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. அவர்களது கட்டுப்பாடானதும் தொடர்ச்சியானதுமான விஷமப் பிரசாரத்துக்கு எப்போதாவது ஒரு அழிவுகாலம் வரவேண்டுமானால் அது இப்போது வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் என்பது போல் பார்ப்பனர்களது புளுகுகளும் பித்தலாட்டங்களும் புராண பிரசாரங்களும் வெட்ட வெளிச்சமாகி கொஞ்சநஞ்சம் பாக்கி இருந்த பாமர மக்களும் உணர்ந்து ஜாக்கிரதையாகிக் கொள்ளத்தகுந்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பதை அறிவாளிகள் வரவேற்பார்கள் என்றே கருதுகிறோம்.

இனிமேல் தான் மந்திரிகளின் 500 ரூ. சம்பளம் பெறும் தியாகமும் சீர்திருத்தத்தை தகர்க்கும் வீரமும் வரிகளைக் குறைத்துவிடும் தயாள குணமும் “பாரதத்தாயின்” விலங்கை உடைத்துச் சிறையிலிருந்து வெளியாக்கும் தேசபக்தியும் நன்றாய் விளங்கப் போகின்றன.

ஆதலால் இன்றைய நிலைமை பார்ப்பனரல்லாத மக்கள் நலனுக்குச் சிறப்பாக ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு மதிப்பிடற்கரிய மகத்தான அநுகூலமான நன்மை என்றே சொல்ல வேண்டும். மற்றபடி சென்ற வாரம் குறிப்பிட்டது போல் சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கும் பாதை வழி திறக்கப்பட்டது போல் முன்னிலும் தீவிரமாய்ச் செய்ய வசதி ஏற்பட்டிருப்பதை வீணாக்கிவிடாமல் இயக்கத்தில் உண்மைப்பற்றுக் கொண்டவர்களும் சுயநலமற்றவர்களுமான தோழர்கள் ஒன்று சேர்ந்து கட்டுப்பாடாகவும் தொடர்ச்சியாகவும் வேலை செய்யவேண்டியது கடமையாகும். அதற்கான காரியங்கள் செய்யவும் சுயநலம் காரணமல்லாமல் திட்டத்தில் தப்பபிப்பிராயம் கொண்டு விலகி இருக்கும் தோழர்களை ஒன்று சேர்த்து வேலை துவக்கவும் தோழர்கள் செளந்திரபாண்டியன், ஈ.வெ.ராமசாமி முதலியவர்கள் முயற்சி செய்து வருவது பாராட்டத்தக்கதாகும்.

குடி அரசு – தலையங்கம் – 28.02.1937

You may also like...