காங்கரஸ் வாலாக்கள் திகைப்பு

 

“காங்கரஸே இந்தியா, இந்தியாவே காங்கரஸ்” எனப் பொக்கம் பேசும் காங்கிரஸ் வாலாக்களுக்கு 11- மாகாணங்களில் 6- மாகாணங்களில் தான் இந்த தேர்தலில் மெஜாரட்டி கிடைக்குமாம். அந்த மெஜாரட்டியுங்கூட மாய மெஜாரட்டிதான். மந்திரி சபை அமைக்கும் தருணம் வரும்போதோ அல்லது மந்திரிசபை அமைத்துச் சில காலத்துக்குப் பிறகோ அந்த மெஜாரட்டிகள் மைனாரட்டிகளாகி விடவும் கூடும். ஏனெனில் தற்கால காங்கரஸ் ஒரு நெல்லிக்காய் மூட்டை. தேர்தலில் பேப்பர் மெஜாரட்டி காட்டி நாட்டை ஏய்க்கும் பொருட்டு காங்கிரஸ் பற்றே அணுவளவும் இல்லாதவர்களை காங்கரஸ் பிரகஸ்பதிகள் காங்கரசில் சேர்த்திருக்கிறார்கள். புதுச் சட்ட சபைகள் உருவான பிறகு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு சட்டசபை மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று அகில இந்திய காங்கரஸ் காரியக் கமிட்டியார் உத்தரவு பிறப்பித்தால் தற்காலக் காங்கரஸ் பக்தர்களாக விளங்கும் மாஜி ராவ்பகதூர்களும், மாஜி திவான்பகதூர்களும் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படி வார்களா? அவர்கள் வீணாகவா திவான்பகதூர் பட்டங்களையும், ராவ்பகதூர் பட்டங்களையும் துறந்தார்கள்? அவ்வளவுக்கு அவர்கள் பைத்தியக்காரர்கள் என நாம் நம்பவில்லை. ஆகவே காங்கரசின் தற்கால மெஜாரட்டியைப் பார்த்து எவரும் அஞ்சவேண்டியதில்லை. அது மாய மெஜாரட்டியென எந்த மலையுச்சிமேல் நின்று கூறவும் நாம் தயாராக இருக்கிறோம்.

சென்னைத் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவர வில்லையாயினும், காங்கரஸ் மந்திரிசபை ஸ்தாபனத்தைப் பற்றி ஏற்கனவே ஆலோசனை ஆரம்பமாகி விட்டது. மந்திரிமார்கள் பெயருங்கூட அநேகமாக நிச்சயமாகி விட்டனவாம். வகுப்பு வாரியாகவே மந்திரிமார் பொறுக்கி எடுக்கப்படுவார் களாம். மந்திரி சபை அக்கிரகாரமாக இருக்கும் பக்ஷத்தில் காங்கரசுக்குள் புரட்சி ஏற்படும் என்பதை காங்கரஸ் பிரகஸ்பதிகள் நன்கு உணர்ந்து விட்டார்கள். எனவே, காங்கரஸ் மந்திரிசபை உருவானாலும் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையைத் தழுவியே உருவாகும் என்பது நிச்சயம். ஆகவே ஜஸ்டிஸ் லôயம் வெற்றி பெற்று விட்டது கண்கூடு. ஆனால், மாகாண மந்திரிமார் 500 ரூபாய் சம்பளம் வாங்குவது என்பது தான் பல மந்திரி பதவி மோகினிகளுக்குப் பிடிக்கவில்லையாம். எந்த உத்தியோகத்துக்கும் 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் இருக்கக்கூடாது என கராச்சியில் தீர்மானம் நிறைவேற்றியது முட்டாள் தனமென காங்கரஸ் தலைவர்களே இப்பொழுது ஒப்புக்கொள்கிறார்களாம். மந்திரிமாருக்குள்ள பூராச்சம்பளத்தையும் வாங்கி ஒரு பகுதியை தேச நிர்மாண வேலைக்கு வழங்குவதே உசிதமென்று மாஜி திவான்பகதூர்களும், ராவ்பகதூர்களும் கூறுகிறார்களாம். முடிவு எப்படியானாலும் சரி, சென்னை மாகாண காங்கரஸ் மந்திரிமார் 500 ரூபாய் சம்பளம் வாங்கமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். சென்னை நிலைமை இவ்வாறாக வடநாட்டு நிலைமையைக் கவனிப்போம்.

வடநாட்டில் மந்திரி பதவி ஏற்பதுபற்றி பலமான அபிப்பிராய வித்தியாசம் இருந்து வருகிறது. இந்திய மாகாணங்கள் 11-ல் 6 மாகாணங்களில் காங்கரசுக்கு மெஜாரட்டி கிடைக்கப் போவதினால் அந்த ஆறு மாகாணமும் மந்திரி சபை ஸ்தாபிக்க மறுத்தால் சர்க்கார் ஸ்தம்பித்து விடும் என்று ஒரு சாரார் அபிப்பிராயப் படுகிறார்கள். அவர்கள் அபிப்பிராயப்படி ஆறு மாகாணங்களில் மந்திரி சபை ஸ்தாபிக்க காங்கரஸ் மறுத்தால், சர்க்கார் சட்டசபைகளைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு உத்திரவிடுவார்கள். அப்பால் நடக்கும் தேர்தல்களில் காங்கரஸ்காரருக்கு மீண்டும் வெற்றி கிடைக்குமென்பது நிச்சயமா என வேறொரு சாரார் கேட்கிறார்கள். தேர்தல் என்பது கேவலம் பாப்பா விளையாட்டல்ல. “மோட்டாரின்றி பணமும் இன்றி தேர்தல் ஒன்று வருகுது” என காங்கரஸ்காரர் அலங்காரமாகச் சொல்லிக்கொண்டாலும் காங்கரஸ்காரரின் வெற்றிக்கு மோட்டாரும், பணமும் ஒரு காரணமென்பதை எவராலும் மறுக்க முடியாது. காங்கரஸ் அபேக்ஷகர்களில் பலர் ஏழைகள் என்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும் புது காங்கரஸ் பக்தர்களான பணக்காரர் உதவி அவர்களுக்கு ஏராளமாகக் கிடைத்திருக்கத்தான் செய்கிறது. மற்றும் பல இடங்களில் பணக்காரரைப் பொறுக்கியெடுத்தே காங்கரஸ் அபேட்சகர்களாக நிறுத்தியிருக்கிறார்கள். இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் மொத்தமாகப் பார்த்தால் பல லக்ஷம் செலவாகி இருக்குமென்பது நிச்சயம். ஆகவே, மீண்டும் வெகு சீக்கிரம் ஒரு தேர்தல் வந்தால் தேர்தலுக்கு யார் தாலியை அறுப்பது என மந்திரி சபை ஆதரிப்புக் கட்சியார் கூறுகிறார்களாம். மந்திரி சபை ஸ்தாபித்து நிலவரி குறைத்தல் முதலிய பொது ஜனோபகாரமான காரியங்களை வற்புறுத்தி கவர்னர் முட்டுக்கட்டை போட்டால் அப்பொழுது காங்கரஸ் மந்திரிகளும், காங்கரஸ் மெம்பர்களும் ராஜிநாமாச் செய்து மறுதேர்தல் நடத்தும் நிலைமையை உண்டுபண்ணவேண்டுமென்றும், அக்காலத்து பொதுஜன ஆதரவு கிடைக்குமென்றும் மற்றொரு சாரார் கூறுகிறார்களாம். காங்கரஸ் சோஷியலிஸ்டுகள் மந்திரி பதவி ஏற்கவே கூடாதென்று கண்டிப்பாகக் கூறுகிறார்கள். மற்றும் மார்ச்சு முதல் வாரத்தில் கூடப்போகும் அகில இந்திய காங்கிரஸ் காரியக்கமிட்டியார் எவ்வாறு முடிவு செய்வார்கள் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. வரப்போகும் சீர்திருத்தத்தைக் கவிழ்ப்பதே இதுவரை காங்கிரசின் திட்டமான லôயமாக இருந்து வருவதினால் மந்திரி பதவி ஒப்புக்கொள்வது தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்பாகுமென விவேகிகளான காங்கரஸ் தலைவர்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது.

இவ்வண்ணம் காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்து வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கில்லை. பாமர மக்களை ஏமாற்றி வோட்டுப்பறிக்கும் பொருட்டு அசாத்தியமான காரியங்களையெல்லாம் சாதிக்கப் போவதாக பொறுப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் வாய்வீச்சு வீசினார்கள். இப்பொழுது சில மாகாணங்களில் குருட்டாம்போக்கில் அவர்களுக்கு மெஜாரட்டி கிடைத்துவிட்டது. அவர்களுடைய வாய்வீச்சுகளை கிரியாம்சையில் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது. எனவே, காங்கிரஸ்காரர் பேந்தப் பேந்த விழிக்கிறார்கள். இந்த தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வதென்று சஞ்சலப்படு கிறார்கள். சந்திக் கூட்டங்களில் வாய் வீச்சு வீசுவதற்கும் மந்திர பீடத்திலமர்ந்து காரியங்கள் நடத்துவதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுண்டு. மறியல் செய்வதில், உப்புக் காய்ச்சுவதில், தடியடி படுவதில் சிறை புகுவதில், பொதுப் பணங்களை ஸ்வாஹா செய்வதில், வாக்குறுதிகளைக் காற்றுவாக்கில் பறக்க விடுவதில் காங்கிரஸ் கொள்கைகளுக்குப் புதுப்புது வியாக்கியானங்கள் செய்வதில், சமயோசிதமாக பொய்யும் புளுகும் வாரி வீசுவதில், விஷமப் பிரசாரம் செய்வதில், நாடகக்காரிகளையும், சினிமாக்காரிகளையும் காட்டி வோட்டு வேட்டையாடுவதில், தேர்தல் தினத்துக்குத் தலைநாள் உலகம் திடுக்கிடக்கூடிய புரளியுண்டுபண்ணுவதில், காங்கிரஸ்காரர்கள் வெகு சமர்த்தர்களாக இருக்கலாம். ஆனால், அரசியலில் காங்கிரஸ்காரர் பச்சைக் குழந்தைகளிலும் கேவலமானவர்களே. அரசியல் அரிச்சுவடியை இனித்தான் அவர்கள் கற்கவேண்டும். ஆகவே, சில மாகாணங்களில் காங்கிரஸ்காரருக்கு மெஜாரட்டி கிடைத்திருப்பதைப் பார்த்து நாம் கவலைப்படவில்லை. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மெஜாரட்டி ஏற்பட்டாலும் நாம் வருந்தப் போவதில்லை. மாறாக காங்கிரஸ்காரர்களின் யோக்கியதையை அறிய சென்னை மாகாணத்தாருக்கு ஒரு தருணம் கிடைத்தால் அதைப்பற்றி நாம் பெரும் மகிழ்ச்சியே அடைவோம்.

கடைசியாக நம்மவர்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறோம். தற்காலிக வெற்றியில் காங்கிரஸ்காரர் தலைகால் தெரியாமல் கூத்தாடுவதைப் பார்த்து நீங்கள் அஞ்சவேண்டாம். வெகு விரைவில் அதாவது சுமார் 6 மாதங்களுக்குள் காங்கிரஸ்காரர் மிரட்டல்கள் வெட்ட வெளிச்சமாகப் போகின்றன. அப்பொழுது ஒரு பிரம்மாண்டமான நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியை நம்மவர்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள இப்பொழுதே நீங்கள் முயற்சி செய்யுங்கள். உலக வாழ்வில் போலவே அரசியல் வாழ்விலும் மேடும் பள்ளமும் உண்டாகத்தான் செய்யும். எனவே எவரும் அஞ்சவேண்டாம்.

– “24-2-37 விடுதலை”

குடி அரசு (மறு பிரசுரம்) – கட்டுரை – 28.02.1937

You may also like...