தோழர் C.S.R.க்கு “5 வருஷம்”
காங்கிரஸ்காரர்கள் என்னும் நமது பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு ஆணவம் படைத்தவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அவர்கள் அடிக்கடி போடும் கரணங்களும் பித்தலாட்டங்களும் வஞ்சகங்களும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சிகளும் ஒருபுறமிருந்தாலும் தங்களை ஒரு கொடுங்கோன்மை பழிவாங்கும் தன்மையினராக நினைத்துக்கொண்டு அடக்கு முறைத் திட்டங்களையும் கடுமையான தண்டனைகளையும் கையாளுவதாக மக்களுக்குக் காட்டி மிரட்டி வருகிறார்கள். இதனால் மற்றவர்களைக் காங்கிரசுக்குள் – தங்களுக்குள் அடங்கி சரணாகதியாய் நடக்கச் செய்ய இது ஒரு சூழ்ச்சிமார்க்கம் என்று கருதிச் செய்கிறார்கள்.
இந்த சூழ்ச்சி எந்த அளவுக்குப் போய்விட்டது என்று பார்த்தால் கோயமுத்தூர் தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களை “5 வருஷகாலத்துக்குப் பொது வாழ்வில் காங்கிரசில் எவ்வித ஸ்தானத்துக்கும் தகுதி இல்லை” என்பதாகத் தீர்மானித்து விட்டார்களாம்.
இன்று காங்கிரசில் தலைவராயிருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தோழர் சி.எஸ்.ஆர். அவர்கள் வீட்டிற்கு நடையாய் நடந்து கடிதத்தின் மேல் கடிதம் எழுதி அவரை சட்டசபை அபேக்ஷகரிலிருந்து பின் வாங்கிக் கொள்ளும்படி கெஞ்சி அவர் வித்திட்றா செய்தவுடன் காங்கிரஸ் அபேக்ஷகர் வெற்றியும் பெற்று விட்டு அதுமாத்திரமல்லாமல் தோழர் சி.எஸ்.ஆர். அவர்களின் மேலான குணத்தைப் புகழ்ந்து சி.ரா. அவர்கள் மேடைகளிலும் பேசி அவருக்கு நன்றியும் செலுத்தி விட்டு இப்போது அவரை “5 வருஷம் தண்டித்து இருப்பதாய் தீர்ப்பு” எழுதி பகிரங்கப் படுத்துகிறார்கள் என்றால் “காரியத்துக்கு காலைக் கட்டுவதும் காரியம் தாண்டினால் காலைவாரிப் போடுவதும் பார்ப்பான் குணம்” என்கின்ற பழமொழி நிர்வாணமாய் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதா இல்லையா என்று கேட்கிறோம்.
தோழர் சி.எஸ்.ஆர். அவர்களுக்கும் இது வேண்டும் என்றுதான் கூறுவோம். “மகன் செத்தாலும் சரி, மருமகள் முண்டச்சி ஆகவேண்டும்” என்பதற்கிணங்க ஜஸ்டிஸ் கட்சி மீதுள்ள அதாவது அக்கட்சி தலைவர்கள் மீதுள்ள கோபத்தைக் காட்டுவதற்கு ஆக காங்கிரசைப் பணியப் போனவருக்கு இந்த நிலை ஏற்பட்டதானது இனியும் இவரைப்போன்ற மனப்பான்மை கொண்டவருக்கு இது ஒரு படிப்பினையாகும் என்றே கூறுவோம்.
பொதுவாக இந்த மாகாணத்திலேயே பொது வாழ்வில் தோழர் சி.எஸ்.ஆர். அவர்களைப் போன்ற நாணயமுள்ளவர் அதாவது தனது சுயநலத்துக்கு ஆக பொதுநல வாழ்வை சிறிதும் பயன்படுத்திக் கொள்ளாதவர் ஒருவர் உண்டு என்று சொல்லுவதென்றால் அது சுலபமான காரியமாக ஆகிவிடாது. பொதுநல வாழ்வு காரியமாகவே தனது செல்வம், தனது வாலிபம், ஊக்கம் ஆகியவைகளை தாராளமாய் செலவு செய்தவர். ஒரு காலத்தில் தாலூக்கா போர்ட் நாமினேஷனுக்கு ஆக 20000 ரூ கொண்டுவந்து ஒருவர் காணிக்கை வைத்ததை உதைத்துத் தள்ளிவிட்டு ஒரு பெரிய விரோதத்தை சம்பாதித்துக்கொண்டு போராடியவர். தனது முக்கிய நண்பர்களைக் கூட அலட்சியம் செய்து எதிரிகளுக்கு அனுகூலமாய் இருந்தவர். சிறப்பாக பார்ப்பனர்களுக்கு அந்தரங்க விசுவாசமாக நடந்து கொண்டவர். இப்படிப்பட்டவர் அதே பார்ப்பனர்களால் காலைவாரி விடப்பட்டதும் அவர்களே துணிகரமாய் “5 வருஷ தண்டனை” கொடுத்து இருப்பதும் காங்கிரசுக்கு பிற்கால வாழ்வில் பிரதிபலிக்காமல் வீணாகப் போகக்கூடியதாய் இருக்காது என்றே கருதுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 21.03.1937