தேர்தல் கொந்தளிப்பு முடிந்து விட்டது
சாகப்போகும் காயலாக்காரனுக்கு கோமாரி ஜன்னி கண்டால் பத்துப்பேர்கள் போட்டு அமிழ்த்தினாலும் திமிரிக்கொண்டு எழுந்திருக்கும் படியான பலம் ஏற்படுவதுண்டு. அதுபோல் காங்கிரஸ் கூப்பாட்டுக்கும் காலித்தனங்களுக்கும், பொய் பித்தலாட்டங்களுக்கும் போலி ஆணவங் களுக்கும் சாவுகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் பிணமாகி சுட்டுக்கொளுத்தப்பட்டு சாம்பலாக்கி கரைத்து விடப்படக்கூடிய நிலை காங்கிரசுக்கு எய்திவிட்டது. காங்கிரஸ்காரர்கள் தங்களால் ஆன சகல காரியங்களையும் செய்து பார்த்து விட்டார்கள். காங்கிரஸ் தேர்தல் கொந்தளிப்பு அடங்கி முடிவு தெரிவதற்கு முன்னாலேயே காங்கிரஸ் கொள்கையும் சவடால் வீரமும் செத்து அரசாங்கத்தின் காலுக்குள் நுழைந்து “வார்த்த அளவுக்குக் கஞ்சி வாருங்கள்” என்று இரு கை நீட்டிக் கெஞ்சும் நிலையைக் கொண்டுவந்து விட்டது என்பதில் யாரும் இனிச் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.
இதை ஆரம்ப காலத்திலிருந்தே நாம் எதிர்பார்த்ததே ஒழிய இந்த நிலை நாம் திடீரென்று மகிழ்ச்சி அடையத்தக்க சேதியல்ல. பட்டம் விடுதல், பள்ளி விடுதல், பதவி விடுதல், சட்டசபை விடுதல், சீர்திருத்தத்தைத் தகர்த்தல், அரசியலை உடைத்தல், ஏகாதிபத்தியத்தை ஒழித்தல் என்கின்றதான பகட்டுப் போர்வைகள் பறந்து விட்டன. காங்கிரசின் உண்மையான யோக்கியதை நிர்வாணமாய் விளங்கி விட்டது.
“மந்திரி வேலை ஏற்றால் அரசாங்கத்திற்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுத்தது போல் ஆகும், தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகத்துக்கு ஒப்பாகும்” என்றும் “காங்கிரசுக்காரர் மந்திரி பதவிக்காக எக்கட்சியுடனாவது சமாதானம் செய்து கொள்வது என்பது காங்கிரசின் வீழ்ச்சிக்கு அறிகுறி” என்றும் 2,3 மாதத்திற்கு முன் தமிழ்நாட்டில் ஏன்? இந்தியாவெங்கணும் சுற்றிச்சுற்றி “கர்ஜித்து”ப்போன காங்கிரஸ் தலைவர் “ஒப்பற்ற வீரர்” “சமதர்ம சாஸ்திரி” “பொது உடமை கனபாடி” பண்டிட் ஜவஹர் பார்ப்பனர் தன் மாகாணத்திலேயே இன்று மந்திரி வேலைக்குத் தன் தங்கையை நிறுத்தி காங்கிரஸ் விரோதிகளான முஸ்லீம்களிடம் அவர்களுக்கும் 2 மந்திரி வேலை கொடுப்பதாகக் கூறி உறவுகொள்ள சரண்புகுந்து சர்க்கார்முன் மண்டியிட்டு பிரார்த்திப்பதைப் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பரக்கக் காண்கின்றோம்.
ஆகவே “ஐயோ மானங்கெட்ட காங்கிரசே! பார்ப்பனரை நம்பி பரதேசியான காங்கிரசே! உன்னிலை இப்படியா ஆகவேண்டும்! உன் ஆரவாரம் எங்கே? ஆட்ட பாட்டம் எங்கே? ஆணவமெங்கே? ஆங்கிலேயரின் அறை இடுக்கில் புகுந்து போட்டி போடுகிறாயே வெட்கமில்லையா” என்று உலகோர் பரிகசிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
எனவே காங்கிரசின் வீரம் ஏமாற்று வீரம் என்பதையும் அதன் பஹிஷ்கார கொள்கைகள் என்பவைகள் பதவிகள் கிடைக்காத காரணத்தால் போடும் போலிக் கூச்சல் என்பதையும் காங்கிரசில் சேர்ந்தால் ஒரு மனிதனாவது யோக்கியதையாகவோ நாணயமுடையவனாகவோ இருக்க முடியாது என்பதையும் நமது 1937ம் வருஷ சீர்திருத்தமும் அதன் தேர்தலும் கல்லின் மேல் எழுத்துப் போல் எழுதிக் காட்டி விட்டன.
என்றாலும் இதுவரை நடந்த 8, 9 மாகாணத் தேர்தல்களில் காங்கிரசுக்கு 5, 6 மாகாணங்களில் படுதோல்வி ஏற்பட்டு விட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஐக்கிய மாகாணத்திற்கு தேர்தல் நடந்து முடிவு வெளியாகத் தொடங்கிய முதல் தினத்திலேயே “காங்கிரஸ் நிறுத்திய 120 ஸ்தானங்களில் இதுவரை 8 ஸ்தானங்களில் தோல்வி அடைந்துவிட்டது” என்று வெளியாக்கிய பார்ப்பனப் பத்திரிக்கைகள் 17ந் தேதியில் 113 ஸ்தானம் காங்கிரசுக்கு கிடைத்தது என்று “மெயில்” “ஜஸ்டிஸ்” முதலிய பத்திரிக்கைகளில் அ.பி. சேதி வந்திருக்கும்போது 116 ஸ்தானங்கள் காங்கிரசுக்கு வெற்றி என்று எழுதினால் காங்கிரசின் நாணயத்துக்கும் அக்கட்சியின் பத்திரிகைகளின் யோக்கியதைக்கும் வேறு உதாரணம் என்ன வேண்டும் என்பதை வாசகர்களே ஒருவாறு உணரலாம்.
அன்றியும் ஐக்கிய மாகாணத்தில் மொத்தம் 288 ஸ்தானத்துக்கு மேல்குறிப்பிட்டபடி காங்கிரஸ்கட்சி நிறுத்தியதே 120 ஸ்தானம் என்று “இந்து” முதல் எல்லா பத்திரிகைகளும் 26-1-37ந் தேதியில் புள்ளி விபரங்கள் காட்டியிருக்க இன்று அதற்கு மாறாக 131 ஸ்தானம் அதாவது காங்கிரசால் நிறுத்தப்பட்ட 120 ஆள்களுக்கு மேல் 11 ஸ்தானங்கள் எப்படி கிடைத்தது என்று யோசித்தால் மந்திரி வேலை ஒப்புக் கொள்ளப்போவதாகவும் வேறு கட்சியின் பேரால் நின்றவர்களுக்கும் மந்திரி வேலை கொடுக்கப் போவதாகவும் அதுவும் காங்கிரசுக்கு எதிரிகளாய் நின்ற முஸ்லீம்களுக்கு 2 மந்திரி ஸ்தானம் கொடுப்பதாகவும் அப்படிப்பட்ட மந்திரிகளை தாங்கள் ஆதரித்து கடைசிவரை காப்பாற்றிக் கொடுத்து வருவதாகவும் பேரம் பேசி சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதல்லாமல் வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று கேட்கின்றோம்.
நாளைக்கு தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்கின்ற அய்யங்கார் பார்ப்பனரும் காங்கிரஸ் எண்ணிக்கை மெஜாரிட்டியாய் இல்லாமல் தோற்கடிக்கப்பட்டுப் போனால் மத்திய மாகாண வீரர் தோழர் ஜவஹர்லால் என்ற பார்ப்பனரைப் போலவே மற்ற கட்சியாரை அதாவது காங்கிரஸை எதிர்த்து நின்ற கட்சியாரை கெஞ்சி கூத்தாடி அவர்களுக்கும் மந்திரி வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஆள் சேர்த்து “காங்கிரசுக்கு ஜெயம்” என்று கணக்கு காட்ட முயற்சிக்கலாம்.
ஆனால் சென்னை கவர்னர் பிரபு அவ்வளவு சுலபத்தில் ஏமாறக்கூடிய பேர்வழியல்ல.
காங்கிரஸ்காரர் அடியோடு நிபந்தனை இல்லாத அடிமை முறிச்சீட்டு அதாவது காந்தியார் இர்வின் பிரபுவுக்கு “இனி மேல் சட்டம் மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை, சர்க்கார் உத்திரவுகளை மீறுவதில்லை, மறியல் செய்வதில்லை, வட்டமேஜை மகாநாட்டுக்கு மரியாதையாய் போய் வருகிறேன்” என்று சரணாகதி (காந்தி – இர்வின் ஒப்பந்த) பத்திரம் எழுதிக் கொடுத்தது போல் தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் தன் கைப்பட எழுதிக் கொடுத்து தலைவணங்கி கெஞ்சி பிரிட்டிஷ் அரசருக்கும் அவர் சந்ததிக்கும் அடிபணிந்து பக்தி விஸ்வாசம் செலுத்தி அவரது சட்டத்துக்கும் கட்டுபட்டு அடிமையாய் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை சீர்திருத்த சட்டத்துக்கு அடங்கி நடத்திக் கொடுக்கிறேன் என்று பூணுலையும் கீதை உபநிஷத்தையும் தொட்டு சத்தியம் செய்து கொடுத்தாலொழிய போர்ட் சென்ஜார்ஜ் கோட்டைக்குள் விடப்படமாட்டார் என்பதை ஒவ்வொரு ஓட்டரும் சமதர்ம சூரர்களும் வயிற்றுப்பிழைப்பு வீரர்களும் உணர்ந்திருக்க வேண்டும் என்று நாம் இப்போதே முரசடிப்போம். கொள்கையும், நாணையமும், உண்மையும் இல்லாவிட்டாலும் காங்கிரசுக்கு பிரசார பலமும், பார்ப்பனர்கள் ஒற்றுமை முயற்சியும் இருந்தால் காங்கிரஸ் எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் அதில் ஆச்சரியப்பட இடமில்லை.
ஜஸ்டிஸ் கட்சியோ சரியான பிரசாரமில்லாமல் பத்திரிகை இல்லாமல் தங்களில் ஒற்றுமை இல்லாமல் ஒருவரை ஒருவர் தாழ்த்தச் செய்து கொண்ட முயற்சியால் அது எண்ணிக்கையில் தோல்வி அடைந்தால் அதிலும் ஆச்சரியப்பட இடமில்லை. எப்படியானாலும் சரி, ஒரு விதத்தில் “குந்தினாயே குரங்கே உன் கொட்டம் அடங்க” என்பதுபோல் காங்கிரஸ் காலித்தனமும் தொல்லையும் ஒழிய நல்ல வசதி ஏற்பட்டது என்பதோடு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய நிலை சந்தேகமற ஏற்பட்டு இருக்கிறது.
நிற்க, இனி நம் காரியமென்ன என்பதை நாம் யோசிக்க வேண்டியதற்கு நாம் எதிர்பார்த்தபடியே தக்க தருணம் வந்துவிட்டது. இனி அரை வினாடியும் வீண் செலவழிப்பதற்கு இல்லாத அவ்வளவு சிக்கனத்தில் நேரத்தைக் கையாள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
இனி நாம் நமது சுயமரியாதைப் போர் முழக்கத்தை முன்னிலும் பன்மடங்கு அதிக வேகத்துடனும் ஊக்கத்துடனும் தொடங்க வேண்டியது தான் நாம் இனிச் செய்யவேண்டிய வேலையாகும். இனி காங்கிரசுக்கு – பார்ப்பனருக்கு மேடையில்லாமல் எங்கும் சுயமரியாதைச் சுடர், எங்கும் மனித சமூக சமத்துவ சுதந்திரம் என்கின்ற ஒளி கொண்டு பட்டணம் தோறும் கிராமம் தோறும் தெருக்கள் தோறும் சுயமரியாதை மேடையையும் மண்டபத்தையும் ஏற்படுத்த வேண்டியதே முக்கிய காரியமாகும். கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டில் செளகரியமுள்ள இடத்தில் ஒரு ஆரம்ப முஸ்தீபு கூட்டமும் சமீப காலத்தில் ஒரு தமிழ், ஆந்திரா, மலையாளம் ஆகிய பிரதிநிதிகள் கொண்ட சென்னை மாகாண 4-வது சுயமரியாதை மகாநாடும் கூட்டப்பட்டு இந்தியா முழுமைக்கும் நம் இயக்கம் பரவி ஸ்தாபனங்கள் ஏற்படும்படியான காரியங்களையும் செய்ய வேண்டியது கடமையாகும்.
தயாராகுங்கள்!
வாலிபர்களே போருக்கு தயாராகுங்கள்!!
கூட்டுத் தோழர்களே சுயமரியாதைப் போருக்கு தயாராகுங்கள்!!!
குடி அரசு – தலையங்கம் – 21.02.1937